என் மலர்
பொது மருத்துவம்
- ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.
காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

1. வாழைப்பழம்:
வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2. தர்பூசணி:
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

3. பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

4. ஆரஞ்சு:
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

5. ஆப்பிள்:
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

6. அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

7. மாம்பழம்:
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

8. பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

9. கிவி:
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

10. திராட்சை:
திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.
- நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது.
- பியூரிபையர் தேவை இல்லை வாழைப்பழத்தோல் இருந்தால் போதும்.
இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத்தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!
ஆச்சரியமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...
''சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதற்கு பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன.
வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவீதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்" என்று முடிகிறது ஆய்வறிக்கை.
- காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமானதாக போற்றப்படுகிறது.
- சில உணவுகள் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகப் போற்றப்படுகிறது. இது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான வலிமையான பாதையை அமைக்கிறது. இருப்பினும், எல்லா உணவுகளும் காலை உணவுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் காலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிரம்பி இருந்தாலும், அவற்றின் அதிக அமிலத்தன்மை வெறும் வயிற்றில் அசவுகரியத்தை ஏற்படுத்தும். சிட்ரஸ் பழங்கள் சில நபர்களுக்கு அமில ரிஃப்ளக்ஸ் அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கும். திடமான காலை உணவுக்குப் பிறகு அவற்றை உட்கொள்வது நல்லது.

காபி
வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டுகிறது, இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான அசவுகரியத்திற்கு வழிவகுக்கும். ஒரு கப் காபிக்கு முன் ஒரு சிறிய சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.

காரமான உணவுகள்
மிளகுத்தூள் அல்லது அதிக மசாலா கலந்த உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது பல அசவுகரியங்களை ஏற்படுத்தும். காரமான உணவுகள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் எரிச்சலைத் தூண்டி, வயிற்றை சீர்குலைக்க வழிவகுக்கும். காலையில் லேசான உணவுகளை சாப்பிட்ட பின், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.
சோடா மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் கார்பனேற்றப்பட்ட பானங்கள் செரிமான அமைப்பில் வாயுவை அறிமுகப்படுத்துகின்றன, இது வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, சோடாக்களில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம், அதைத் தொடர்ந்து ஆற்றல் இழந்து நீங்கள் மந்தமாக உணர்வீர்கள்.

வேகவைக்காத காய்கறிகள்
காய்கறிகள் ஆரோக்கியமானவை என்றாலும், பச்சை காய்கறிகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமானத்திற்கு சவால்களை ஏற்படுத்தலாம். வேகவைக்காத காய்கறிகளில் கடினமான நார்ச்சத்து உள்ளது, அவை உடைக்க கடினமாக இருக்கும், இது வீக்கத்தை ஏற்படுத்தும். காலை உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வதே நல்லது.

கேக் வகைகள்
சர்க்கரை பேஸ்ட்ரிகள், டோனட்ஸ் மற்றும் காலை உணவு பொருட்கள் விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கலாம், ஆனால் அவை பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளால் நிரப்பப்படுகின்றன. இந்த சர்க்கரை உணவுகள் ரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான உயர்வை ஏற்படுத்தும், இது அடுத்தடுத்த செயலிழப்பு மற்றும் சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?
நீரேற்றம் மற்றும் செரிமானத்திற்கு உதவ ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது முக்கியம். அடுத்து, நீடித்த ஆற்றலுக்காக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முட்டை, தயிர் அல்லது மெலிந்த இறைச்சிகள் அதிக சர்க்கரை இல்லாமல் புரதத்தை அதிகரிக்கும். ஓட்ஸ் அல்லது முழு தானிய ரொட்டி போன்ற காலை உணவுகள் நீடித்த ஆற்றல் வெளியீட்டை வழங்குகின்றன.
- கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை சரிசெய்கிறது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் ஆரோக்கிய சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!
பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினை களையும் குணப்படுத்த உதவுகிறது.

பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது. மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
பலாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.
- சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
- அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.

மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
- 50 சதவிகிதம் பேருக்கு இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினை உள்ளது.
இரவில் பல முறை சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேர், இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிக திரவ உணவுகள், காபி, மது ஆகியவற்றை உட்கொண்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். மேலும், வயதானவர்களுக்கு இரவில் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் வெளியீடு குறைவதால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடலாம்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத காரணங்களில், கீழ்கண்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.
1) புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (புரோஸ்டேட்ஹைபர்பிலேசியா),
2) வயது முதிர்வின் காரணமாக சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்,
3) நீர்பை அழற்சி, கற்கள் அல்லது தொற்று,
4) சிறுநீர் பாதையில் தொற்று அல்லது கற்கள்,
5 மன அழுத்தம் அல்லது மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,
6) இதய செயலிழப்பு,
7) கல்லீரல் செயலிழப்பு.
நீங்கள் ரத்த கொதிப்பிற்கு காலை மற்றும் இரவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதன் பக்க விளைவாக கூட சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடலாம். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டையூரிட்டிக்ஸ் (தையாசைடு), கால்சியம் சானல் பிளாக்கர்ஸ் (அம்லோடிப்பின்), அஞ்ஜியோடென்சின் கன்வர்டிங் என்சைம் இன்ஹிப்ட்டாஸ் (எனலாப்பிரில்) ஆகிய மருந்துகளின் பக்கவிளைவுகளால் கூட சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடும்.
இதற்கு தீர்வாக தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், திரவ உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் பக்க விளைவுகளால் இது ஏற்படுவதாக இருப்பின், மருத்துவரை அணுகி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மாற்றம் செய்யலாம். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து அல்ட்ரா சவுண்ட் மற்றும் யூரின் கல்ச்சர் போன்ற பரிசோதனைகளை செய்து, உரிய காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.
- சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும்.
தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 7 கலோரிகளே உள்ளன. இது மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் செரிமான தொந்தரவு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சீரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரித்து உடல் பருமன் பிரச்சினையை போக்கும் தன்மையையும், புற்றுநோயை தடுக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடியது. அதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும்.
கர்ப்பிணி பெண்களும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று சீரக நீர் பருகலாம். அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். அதிக பால் சுரப்புக்கும் வழிவகுக்கும்.
உடல் நலனுக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. அதன் குறைபாட்டை போக்க தொடர்ந்து சீரக தண்ணீர் பருகி வருவது நன்மை பயக்கும். மாதவிடாய் காலத்தில் சீரக தண்ணீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கவும் சீரக தண்ணீர் துணைபுரியும். உடல்நலக் குறைவின்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரக நோயாளிகளும் சீரக தண்ணீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் அதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க போராடும். சளியை குணப்படுத்தவும் சீரக தண்ணீர் உதவும்.
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் செய்யும். பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதனால் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும்.
சரும பளபளப்புக்கும் சீரக தண்ணீர் வித்திடும். சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. அவை சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை.
சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவி வரலாம். அது முகத்துக்கு பொலிவு சேர்க்கும். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும். முடி உதிர்தலையும் தடுக்கும்.
- உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும்.
- அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.
எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.
சூரிய ஒளி இல்லாத காரணத்தாலோ அல்லது தவறான உணவு முறையாலோ கூட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்கிடைக்காமல் போனாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் வைட்டமின் டியை எப்படி, எதன் மூலம் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை கொண்டு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.
உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வழி வகுக்கும்.

சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:
1. காளான் (மஷ்ரூம்கள்): சைவ உணவுகளில் அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.
2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பது போல் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி மீன் வகைகள்.
3. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
4. ஆரஞ்சு ஜூஸ்: மேற்கத்திய நாடுகளில் வைட்டமின் டிக்கு ஆரஞ்சு ஜூசை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவுகள் வைட்டமின் டியை பெற முடியும்.
5. பசும்பால், பாதாம் பால், சோயா பால்: பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் டியையும் ஓரளவு பெற முடியும்.
6. ஓட்ஸ் மற்றும் செரல் வகைகள்: ஓட்ஸ் மற்றும் செரல் வகைகளில் நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. ஓட்மீலில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவு வைட்டமின் டி கிடைக்கும்.
7. காட் லீவர் ஆயில்: சைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிட முடியாது. இவர்கள் காட் லீவர் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். இவை மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.
இவை தவிர, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், சீஸ் வகைகளிலும் வைட்டமின் டி உள்ளது. மேலும், கீரைகள், வெண்டைக்காய், கேரட், புரோக்கோலி, தயிர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.
- விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும் உணவு வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.

உணவுகள்:
நாட்டுக்கோழி முட்டை,இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்தி, சாளை மீன்கள், பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சை, திராட்சை பழம், பொரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளைப்பழம், சின்ன வெங்காயம், பூண்டு, கீரைகளில் பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, காய்கறிகளில் தக்காளி, புடலங்காய், அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, முருங்கைக் காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கிழங்குகளில், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை சிறிதளவு சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.
இளநீர், மோர், முலாம் பழம், கிர்ணிப்பழம் இவைகளை எடுத்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். இந்த பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

கீழ்க்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
1) அமுக்கரா சூரணம் ஒரு கிராம், பூனைக்காலி விதை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை பாலில் கலந்து குடிக்கலாம்.
2) சாலாமிசிறி லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) பூரண சந்திரோதயச் செந்தூரம் 100 மி.கி. நாகப்பற்பம் 100 மி.கி. வெள்ளி பற்பம் 100 மி.கி. இவைகளை ஒரு கிராம் அமுக்கரா சூரணத்தில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும்.
- வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
- தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.
கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.
தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.
சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.
கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.
கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.


பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.
- ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- `கார்-டி’ புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.
இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அதன் சிகிச்சை முறைகளும் மிகவும் வலி நிறைந்தவை. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் பெயர் கார்-டி (சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி டி-செல்) செல் சிகிச்சை. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும். இந்தியாவில் கார்-டி சிகிச்சைக்கு மத்திய மருந்து நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது.
கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு குணமாகாத புற்று நோயாளிகளுக்கு கார்-டி (CAR-T) செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்து போராட, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கிறது.
கார்-டி சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை தாக்குவதற்கு நோயாளியின் டி-செல்களை பயன்படுத்துவதாகும். டி-செல்கள் என்பது ஒரு வகை ரத்த வெள்ளை அணுக்களாகும். இவை உடலில் தொற்றுநோய் ஏற்படும்போது அதை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்காக டி-செல்கள் நோயாளியின் ரத்தத்தில் (ரத்த வெள்ளை அணுக்கள்) இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் மரபணு மாற்றம்
செய்யப்படுகின்றன. இந்த மரபணு மாற்றப்பட்ட செல்கள் மீண்டும் நோயாளிக்குள் செலுத்தப்பட்டு, அவை புற்றுநோய் செல்களைத் தாக்கி கொல்லும்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார்-டி சிகிச்சையின் பெயர் நெக்ஸ்கார்-19. இது இந்தியாவில் இன்மியூனோ ஆக்ட் என்ற நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சம். லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையை வெளிநாட்டில் செய்தால் ரூ. 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சத்தில் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது அளிக்கப்படுகிறது. பி-செல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ரத்த புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளது.
புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் பலருக்கு ரத்தத்தில் புற்று நோய் செல்கள் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சை பயனுள்ளாதாய் இருந்தாலும், கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.
ஆனால் கார்-டி செல் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
2017-ம் ஆண்டில், அமெரிக்கா கார்-டி சிகிச்சையை முதன் முதலில் அங்கீகரித்தது. ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. முதலில் இந்தியா இந்த சிகிச்சை முறையை வெளிநாடுகளில் இருந்து தான் பெற வேண்டி இருந்தது.
இங்குள்ள நோயாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும்போது மருத்துவமனை கட்டணம், மருத்துவர், உணவு மற்றும் பிற செலவுகளை ஒப்பிடும்போது விலை அதிகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் விளைவாக, விலை குறையும் என்பதால் பலராலும் இந்த சிகிச்சையை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கார்-டி செல் சிகிச்சை மூலம் முதல் நோயாளியாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது பெயர் வி.கே. குப்தா. டெல்லியை சேர்ந்த இவர் இரைப்பை குடல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்-டி செல் சிகிச்சையை பயன்படுத்தி மருத்துவர் ஒருவரே புற்றுநோயில் இருந்து குணமாகி இருப்பதால் இந்த சிகிச்சை புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. எந்தவொரு சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் அடையாத ரத்த புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாகவே இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.
- நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது.
- ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது.
நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சினைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த நோயை கண்டுபிடிக்கிறார்கள்.

நீரிழிவு நோயினால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, அதிலும் குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை `மைக்ரோ அல்புமின்யூரியா' என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது `டயாபடிக் நியூரோபதி'.

இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவ்ஜிவ் என்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள் ஆகும்.






