என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம்.
    • வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும்.

    தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

    தலைவலி ஏன் வருகிறது?

    நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

     கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?

    மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவை சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

     ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?

    தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

    தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?

    இரவில் அதிகம் கண் விழிப்போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், `வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், `டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும். மயக்கம் வரும். இத்தகைய பாதிப்பு உடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.

    விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?

    தாழ்வான கட்டிடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, `ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

     தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?

    இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக்கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

     மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?

    தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப்போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப்போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடைஇடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.

    சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?

    சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்தியேக பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    • அதிகரித்து விட்ட திருமண வயது தான் இதற்கு காரணம்.
    • வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும்.

    குறைபாடு உள்ள குழந்தை உருவாவது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கரு உருவாகும் போதே குறைபாடுகள் இருந்தால், அல்ட்ரா சவுண்டு கருவிகளால், எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. கருவின் இதயத்தில் உள்ள குறை, கரு உருவான, 13-வது வாரத்திலும், கரு வளர்ச்சியில் ஏதேனும் பெரிய அளவில் குறைபாடு இருந்தால், 18-வது வாரத்திலும் கண்டுபிடிக்க இயலும். நுணுக்கமாக இருக்கும் குறைகளை, 22-வது வாரத்தில், கண்டுபிடித்த விடலாம்.

    குறைபாடுகளுடன் கரு உருவாவதற்கு முக்கிய காரணம், அதிகரித்து விட்ட திருமண வயது. பெண் பிறக்கும் போதே, அவளுடன் இருக்கும் கரு முட்டையின் திறன், வயது ஆக ஆக மாறும். கரு முட்டையில் உள்ள குரோமோசோம்களிலும், இயற்கையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு ஆணின் குரோமோசோமும், பெண்ணின் குரோமோசோமும் சேர்ந்து தான், கரு உருவாகிறது.

    வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும். 20 வயதில் இருப்பதைப் போன்ற திறனுடன், 35 வயதில் இருக்காது.

    வயதான குரோமோசோம்கள் கொண்ட கரு, குறைபாடுகளுடன் உருவாகலாம். குறிப்பாக, டவுன் சிண்ட்ரோம் உட்பட, பல மன நல குறைபாடுகள் வரலாம். சில சமயங்களில், 46 குரோமோசோம்களுக்கு பதிலாக, 45 அல்லது 47 என்று சேரும். நிச்சயம் இது குறையுள்ள குழந்தையாகவே பிறக்கும். வாழ்வது இயலாத காரியம் எனும் போது, பல சமயங்களில், இயற்கையே அந்த கருவை அழித்து விடும். கருச்சிதைவிற்கு இதுவும் ஒரு காரணம்.

    அடுத்தது, மரபியல் ரீதியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். மூன்றாவதாக, வயதாகி குழந்தை பெறும் போது, வயது காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வரலாம். கர்ப்பம் தரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருந்தால், கருவிலேயே இதய, நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். அடுத்தது, சுவாசிக்கும் காற்றில் இருந்து, நீர், உணவு என்று அனைத்திலும், தற்போது வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவையெல்லாம் கருவின் வளர்ச்சியை பாதிப்பதால், குறையுள்ள கருவாக உருவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில வைரஸ் தொற்றுகள், கருவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    நவீன அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில், கருவில் உள்ள நுணுக்கமான குறைகளை கண்டறிவதில், எவ்வளவு துாரம் நன்மை உள்ளதோ, அதே அளவிற்கு சமயங்களில் பிரச்சினையும் உள்ளது. குழந்தைக்கு பாதங்கள் சற்றே வளைந்து இருக்கிறது போன்ற சிறிய குறை இருப்பது தெரிந்தாலும், இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லி, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துபவர்களும் உண்டு.

    சிக்கலான பிரச்சினைகளை கருவிலேயே சரி செய்ய முடியும் போது, சிறிய பிரச்னைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.

    • டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
    • உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது.

    மரபணுக் குறைபாட்டுடன் குழந்தை பிறப்பது என்பது மிக அரிதான ஒன்று. `லட்சத்தில் ஒருவருக்கு வரும் மரபணு வியாதியைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு வரக்கூடிய தலைவலி முதல் நெஞ்சுவலி வரையிலான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவே நேரம் இல்லை' என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், மரபணுக் குறைபாடு எங்கேயோ யாரோ ஒருவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு வருவது அல்ல.

    அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு, புகை, மாறிவரும் உணவுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தூக்கமின்மை, மதுப்பழக்கம் போன்ற நம்முடைய வாழ்க்கைமுறைத் தவறுகள் காரணமாக, இன்று டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் (23 ஜோடிகள்) இருக்க வேண்டும். சிலருக்கு, 21-வது ஜோடி குரோமோசோமில், கூடுதலாக ஒரு குரோமோசோம் சேர்த்துவிடுவதால், அவர்களுக்கு 46-க்கு பதில் 47 குரோமோசோம்கள் இருக்கும்.

    இதனால், இந்த குழந்தைகள் மரபணுக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. இந்த குறைபாட்டை முற்றிலும் குணமாக்க முடியாவிட்டாலும் முறையான சிகிச்சை மூலம் எதிர்கால பாதிப்பைக் குறைக்கலாம்.

     பிறவிக்குறைபாடு

    கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திலேயே குழந்தை டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க இயலும். சில பெற்றோர் டவுண் சிண்ட்ரோம் கருவைக் கலைத்துவிடுகின்றனர். ஆனால், இன்றைய சூழலில் கல்வியறிவு மற்றும் மருத்துவ விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்துள்ளதால், பல பெற்றோர்கள் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பது ஆரோக்கியமான விஷயம்.

     ஐ.க்யூ அளவு

    சராசரி மனிதர்களின் ஐ.க்யூ அளவானது 70 முதல் 130 ஆகும். டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளின் ஐ.க்யூ அளவு 50 முதல் 70 வரை இருக்கும். மிக தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி ஐ.க்யூ 50 ஆக இருக்கும். வாழ்நாள் முழுதும் எட்டு வயது குழந்தைக்குரிய அறிவே இவர்களுக்கு இருக்கும். ஐ.க்யூ அளவு 70 உள்ளவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் சராசரியாக இருப்பார்கள்.

    ஆனால், இவர்களுக்கு டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கான தோற்றம், உடல்நலக் குறைபாடுகள் இருக்கும். இவர்களுக்கு, தங்களுக்குள் இப்படி ஒரு குறைபாடு இருப்பதும், மற்றவர்களிடம் இருந்து தாங்கள் வேறுபடுகிறோம் என்பதும் தெரியும்.

    முன்பு, ஐ.க்யூ அளவு மிகக்குறைவாக உள்ள டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் ஏழு வயது வரை சாதாரணப் பள்ளியில் பயின்று, அதற்குப் பின்னர் அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இப்போது, இந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    அறிகுறிகள் பெரும்பாலும் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பிறக்கும்போதே அடையாளம் காண இயலும். பெரிய கண்கள் அல்லது மாறுகண், அகலமான முன்நெற்றி, வாய் பாதி மூடியதுபோல இருக்கும். சிறிய தாடை, கண் இமைகள், ஒழுங்கற்ற பல் வரிசை ஆகியவை மற்ற குழந்தைகளிடம் இருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சங்கள். பெரும்பாலானோர், ஐந்து அடிக்கு மேல் வளர மாட்டார்கள். கண் பார்வை மற்றும் செவித்திறன் கோளாறுகள் வர வாய்ப்புகள் அதிகம்.

     குணாதிசயங்கள்

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான குணாதிசயங்களோடு இருக்க மாட்டார்கள். சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும், சிலர் மந்தமாகவும் இருப்பார்கள். வாலிபப் பருவத்தில் தங்களுக்கு இதுபோன்ற ஒரு குறை இருப்பது தெரிந்ததும், சிலர் மூர்க்கமாக மாறுவர். அதேசமயம் அனைவரிடமும் இன்முகத்துடனும் புன்சிரிப்புடனும் நட்பாகப் பழகுபவர்களும் உள்ளனர்.

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைத் தாக்கும் நோய்கள்

    இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், பலவகையான நோய்களும் குறைபாடுகளும் தாக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதால், மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான தைராக்ஸின் ஹார்மோன் தடைப்படுகிறது. இதனால், இதயக்குழாய் அடைப்பு, இதயச் சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்

    இந்தக் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை, வருடத்துக்கு ஒருமுறை கண் பார்வை மற்றும் செவித்திறன் பரிசோதனை மிகவும் அவசியம். மேலும், குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கப்படுத்தவேண்டியது அவசியம்.

    பாலுணர்வு

    மிதமான டவுண் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள டீன்ஏஜ் வயதினருக்கு பாலுணர்வு சராசரி மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயல்பாகவே உள்ளது. அமெரிக்க இளைஞர்கள் டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள பெண்ணைக் காதலித்து மணந்துகொள்கின்றனர். டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இயல்பான தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். டவுண் சிண்ட்ரோம் பரம்பரை வியாதி கிடையாது என்பதால், டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, இந்த குறைபாடு இருக்க வாய்ப்பு இல்லை.

    மேலைநாடுகளில் டவுண் சிண்ட்ரோம் தம்பதிகளின் விவாகரத்து எண்ணிக்கை, சராசரி தம்பதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இந்த தம்பதிகள் அனைவரும் தங்களுடைய குறையை நன்கு அறிந்தவர்களாக உள்ளதால், இவர்களுக்குள் நல்ல பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது.

    • எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு.
    • ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

    உடலுக்கு சிறிது உபாதை வந்தாலும், மருத்துவர்களை நாடி செல்லத் தொடங்குகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு நலம் பெற்றாலும், அம்மருந்துகளால், என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்று, நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதற்கு மாற்றாக, வீட்டு வளாகத்திலேயே, மூலிகை செடிகளை வளர்த்தால், சிறு, சிறு உபாதைகளுக்கு, சிறந்த மருத்துவமாக பயன்படும்.

    அருகம்புல் சாறு:

    எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.

    அருகம்புல் பச்சையம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து எடை குறையும்.

    தூதுவளை இலைச்சாறு:

    மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.

    துளசி இலைச்சாறு:

    காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

    மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு:

    பார்வை பலம் பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

    பொன்னாங்கண்ணி இலைச்சாறு:

    உடலுக்கு வலு ஊட்டுவதோடு, பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும். கண் பார்வை அதிகரித்து, வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

    வல்லாரை இலைச்சாறு:

    நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.

    முசுமுசுக்கை இலைச்சாறு:

    தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

    வில்வ இலைச்சாறு:

    காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும்.

    புதினா இலைச்சாறு:

    வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

    நெல்லிக்காய் சாறு:

    தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். பசியை, நன்கு தூண்டும். நீரழிவு நோய், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

    வாழைத்தண்டுச் சாறு:

    சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், ரத்த அழுத்தம் குறையும். அமிலத்தை குறைத்து, உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்பு, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும்.

    சாம்பல் பூசணிக்காய் சாறு:

    பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.

    கேரட் சாறு:

    கண்பார்வை ஒளி பெறும், கண்நோய், பல நோய்கள் குறையும். அமிலத்தைக் குறைக்கும்.

    கொத்தமல்லிசாறு:

    பசியை நன்கு தூண்டும். பித்தம் மற்றும் வாத நோய் குறையும். மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

    • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடிய உணர்வாகும்.
    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

    நீர் கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசவுகரியம், எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகிறது.

    சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் தொற்று, இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ், சிறுநீரக, சிறு நீர்ப்பை கற்கள், சில மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை, சிறுநீர்ப்பை புற்றுநோய், சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை. இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூ கோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

    சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆகையால் உங்களுக்கு நீர் கடுப்பு பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

    • நரம்பை ஒட்டியே இந்த கட்டி பெரும்பாலும் உண்டாகும்.
    • ஆய்வுகள் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    உடம்பில் ஆங்காங்கே சிறுசிறு கட்டிகளாக வரும் கொழுப்புக் கட்டிகளை, நியூரல் பைப்ரோலைப்போமா' என்று மருத்துவ உலகில் சொல்லுவார்கள். கொழுப்பும் நார்த்தன்மையும் சேர்ந்த திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சியே இந்த கட்டியாகும். உடம்பில், நரம்புகளின் ஓடுபாதையில், நரம்பை ஒட்டியே இந்த கட்டி பெரும்பாலும் உண்டாகும். இந்தக்கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும். இந்தக் கட்டி ஏன் வருகிறது, எதனால் வருகிறது என்ற ஆய்வுகள் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    கொழுப்பை அதிகமாக சாப்பிட்டதால் தான், அது மொத்தமாக உடலின் பல இடங்களில் திரண்டு கொழுப்புக் கட்டிகளாக உருவாகிறது என்று சொல்வதுண்டு. உடலில் காயங்கள் ஏற்பட்ட பிறகுதான் இந்த கட்டி உருவாகிறது என்ற பேச்சும் உண்டு. தோலுக்கு அடியில் இருக்கும் இந்த கொழுப்புக்கட்டியை அப்படியே விட்டுவிட்டால், புற்றுநோய் கட்டியாக மாறிவிடும் என்றும் சொல்வ துண்டு. இவையெல்லாம் உண்மையில்லை.

     பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்ட வர்களுக்கே வரும் இந்த கட்டி சில நேரங்களில், சில பேருக்கு கட்டியைச் சுற்றி வலியும், மரத்துப்போவதும் உண்டு. உடலுக்கு எதுவும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக இருக்கும் வரை அப்படியே விட்டுவிடுவது நல்லது. கட்டி பெரிதானாலோ, வலி உண்டானாலோ, அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான் இதற்கு இறுதித் தீர்வு.

    ஒன்று, இரண்டு என்று இருந்தால் அகற்றி விடலாம். உடல் முழுக்க இருந்தால் எப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று நீங்கள் யோசிக்கலாம். தொந்தரவு பண்ணுவதை மட்டும் அகற்றுங்கள். மீதியை அப்படியே விட்டுவிடுங்கள். மாற்று மருத்துவத்தில் சில நேரங்களில், சில பேருக்கு பலன்கள் கிடைப்பதுண்டு. ஆனால் அதை உறுதியாகக் கூற முடியாது.

    கட்டியைச் சுற்றி மரத்துப்போனாலோ, வலி எடுத்தாலோ, உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    • பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே தசைபிடிப்பு ஏற்படும்
    • சில மணி நேரங்கள் முதல் நாள் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும்.

    தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது, தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக்கணக்கில் நீடிக்கும். தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாள் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும்.

    தசைபிடிப்பானது தானாகவே சரியாகி விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு, வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

    கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி உழைக்கும் போது தசைபிடிப்பு ஏற்படும். வியர்வை மூலம் உடலில் திரவங்களை இழப்பது அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமருவது தசைபிடிப்பிற்கான காரணிகளாக அமைகின்றன. இவை மட்டுமே காரணங்கள் என்றும் கூற முடியாது.

    தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு ரத்தத்தை கொண்டும் வரும் தமனிகள் குறுகலாகி தசைபிடிப்பு ஏற்படும். அப்போது உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் தசைபிடிப்பு போய்விடும்.

     முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளின் அதிக அழுத்தம் ஏற்படும் போதும். அப்போது நீங்கள் நடந்தால் வலி மேலும் மோசமாகிவிடும். சற்று முன்னோக்கி வளைந்து நடப்பதன் மூலம் தசைபிடிப்பை குறைக்கலாம்.

    உண்ணும் உணவில் பொட்டாசியம், மெக்னீஸியம், கால்சியம் மிகக் குறைவாக இருந்தால் தசைபிடிப்பு ஏற்படும். அதே நேரத்தில் அதிக ரத்த கொதிப்பிற்கு நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும். இதன் மூலமாகவும் உடலில் உள்ள கணிமங்கள் குறையலாம். இயல்பாகவே மனிதர்கள் வயதான காலத்தில் தசையை இழப்பார்கள். அப்போது தசைகளின் செயல்பாடு கடினமாகி அதிக அழுத்தம் உண்டாகும்.

    ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான முழு வடிவத்தில் இருப்பது அவசியம். அப்படி இல்லையென்றால் தசைகள் எளிதாகத் தளர்ந்து விடும்.

    • மசாஜ் செய்வதால் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.
    • மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான்.

    மன அழுத்தத்தை போக்கும் மசாஜ்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் உடல் நலமும், மன நலமும் மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

    அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவசர உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சினை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது.

    இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான்.

    மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை. இந்தியாவில் ஆயுர்வேத மசாஜ் மிகவும் பிரபலமானது.

    மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், ஒருசில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும். மேலும் மன அழுத்தத்தைப் போக்க செய்யப்படும் ஒவ்வொரு மசாஜும் ஒவ்வொரு விதமான நன்மைகளை கொண்டுள்ளது. இத்தகைய மசாஜ்களை தொடர்ந்து செய்துவந்தால், மன அழுத்தம் குறைவதோடு, உடல் வலியின்றி உடலும் ரிலாக்சாக இருக்கும்.

     தாய் மசாஜானது தாய்லாந்தின் பண்டைய உடலின் நடுக்கோட்டின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு மசாஜ் ஆகும். இந்த மசாஜின் போது உடலின் நடுக்கோட்டில் அமைந்துள்ள அனைத்து எனர்ஜிகளையும் சீராக உடல் முழுவதும் பரவச் செய்து, மன அழுத்தத்தைப் போக்கும் தன்மையுடையது.

     ஆயுர்வேத மசாஜில் மூலிகைகளும், இயற்கை எண்ணெய்களையும் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படும். மேலும் இதில் கையளவு வேகவைத்த அரிசியை, மஸ்லின் துணியில் போட்டு கட்டி, அதனை இயற்கை எண்ணெயில் நனைத்து உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படும். இதை செய்யும் போது உடலின் நரம்புகள் அனைத்து நன்கு சீராக இயங்கி, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

    அக்குபிரஷர் என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழுத்தத்தைக் கொடுத்து நிவாரணம் அளிக்கும் முறையை அடிப்படியாக கொண்டது. இந்த மசாஜை கைகளாலோ அல்லது அதற்கான ஒரு கருவி மூலமாகவோ செய்யலாம்.

    ஸ்வீடிஸ் மசாஜிலும் பல்வேறு வகையான இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு, ஒருசில டெக்னிக்கில் மசாஜ் செய்யப்படுவதால், மன அழுத்தத்திற்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

     அரோமாதெரபி என்பது வெறும் மசாஜ் மட்டுமல்ல, இது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு முறை எனலாம். இதில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்திகள், அனைத்து உணர்வுகளையும் தூண்டி, மசாஜின் இறுதியில் உடலுக்கும், மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சியைத் தரும்.

    • அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.
    • மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

    சிரிப்பின் மகிமையை நாம் அனைவரும் அறிவோம். அது கவலையை போக்கும் சிறந்த மருந்துகளில் ஒன்று என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். முழுமனதுடன் சிரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுவது போல, அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.

    அழுவது எப்படி உடலுக்கு நன்மை சேர்க்கும்? என்று நீங்கள் யோசிக்கலாம். சிரிப்பதால் மட்டும் அல்ல, அழுவதாலும் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிரிப்பு எந்த அளவிற்கு நம் மனதுக்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கிறதோ, அதற்கு சமமான அளவிற்கு அழுகையும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனித உணர்வுகளில் சிரிப்பு ஒரு முனை என்றால், அழுகை மறு முனையாகும். மனிதர்கள் ஏன் அழ மறுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பலரது பதிலாக இருப்பது அழுகை பலகீனத்தின் அடையாளம் என்பதே. உலகில் கண்ணீரை பலகீனத்துக்குரியதாகவும், வெட்கத்துக்குரியதாகவும் மற்றும் குழந்தைத் தனத்துக்கும் அடையாளப்படுத்து கின்றனர். அழுகை, பலகீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் அது நன்மையை அளிக்கக் கூடியதுதான்.

    அழுகை பலகீனத்தின் அடையாளம் அல்ல:

    பல சினிமாக்களில் `ஆண்கள் அழக்கூடாது' என்றும், `நான் அழவில்லை, கண்ணு வேர்க்குது' என்று சொல்வதை கேட்டிருப்போம். எவ்வளவு பிரச்சினைகளும், கஷ்டங்களும் வந்தாலும் சிலர் அழ மாட்டார்கள். அப்படி அழக்கூடிய தருணங்கள் வரும்போது, நாம் அழுகையை கட்டுப்படுத்தினால் அதனால் வரும் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். மனம் தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வரும் சமயங்களில் அழுதால் அந்த பிரச்சினையினால் உண்டாகும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

     மன அழுத்தம் அதிகமாக உள்ளபோது, மனம் விட்டு அழுவோமானால், மனம் மிகவும் அமைதியாகி தூக்கம் வருவதை உணரலாம். பின்னர் தூங்கி எழுந்தவுடன், நம் மனச்சோர்வு அனைத்தும் நீங்கியிருப்பதை உணரலாம். அழுவது நிலைமையை மாற்றாது என்றாலும், அது உடனடியாக நிவாரணத்தையும், தற்காலிகமாக ஆறுதலையும் தருகிறது.

    அழுகையை ஒருபோதும் அடக்கக்கூடாது என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். அப்படி அடக்கும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப்படலாம். மேலும் அழுகை உணர்வை கட்டுப்படுத்துவதால், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். அழுகையை மறைக்க முயற்சிப்பவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

    நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதுதொடர்பாக 30 நாடுகளை சேர்ந்த 4,300 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அழுகைக்கு பிறகு அவர்களின் மன மற்றும் உடல்நலம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வில், அழுகை 88.8 சதவீத மக்களின் மனநிலையை மேம்படுத்தியது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

     அழுகை - ஆரோக்கியமான செயல்பாடு:

    அழுகை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர், மனம் விட்டு உடனேயே அழுதால், அவரின் ரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உருவாக்குகிறது. கண்களை ஆரோக்கியமாக வைக்கவும் அழுகை உதவுகிறது.

    கண்ணீரில் லைசோசைம் என்ற திரவம் உள்ளது. இது பாக்டீரியாவை கொல்லும் சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உதவும்.

    வியர்வை, சிறுநீர் உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றும். மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகாமலும் பாதுகாக்கும். இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும்.

    சரி அழுவது நல்லது தான் என்றாலும், எதற்கெடுத்தாலும் அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர். இனி உங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பிரச்சினை காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள். அழுது விடுங்கள்!

    • வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
    • பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.

    வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.

    1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:

    வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:

    வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

    3. செரிமானத்தை தூண்டும்:

    செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.

    4. நச்சுக்களை நீக்கும்:

    உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.

     5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:

    வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

    6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

    வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

     7. சரும ஆரோக்கியம் காக்கும்:

    பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.

     8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:

    உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.

    • மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது.
    • மன நலனை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. சில உணவு வகைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் மன நலனை சீராக பராமரிப்பதில் உண்ணும் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மனநிலையிலும் அதன் தாக்கம் வெளிப்படும். மனம் தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருக்கும். காளான், முட்டை, சோயா பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

     கார்போஹைட்ரேட் கலந்த உணவு வகைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவை மன அழுத்தத்துடனும் தொடர்புடையவை. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிரம்பி இருக்கும். அவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், சோயா, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. மன நலனை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. திராட்சை, பெர்ரி பழங்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

     ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கவும் உதவும். அதனால் அதனோடு தொடர்புடைய மீன் வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வதும் சிறப்பானது. அதில் உள்ளடங்கி இருக்கும் நல்ல கொழுப்பு, மூளை சீராக செயல்பட துணைபுரியும். காளான்களும் மன நலனுக்கு நன்மை சேர்ப்பவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

    நல்ல மனநிலைக்கு வித்திடும் உணவு பட்டியலில் வெங்காயம் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் சமையலில் சேர்ப்பது புற்றுநோயில் இருந்து காக்கவும் உதவும்.

    தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. அதனால் தினமும் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ் இதயத்திற்கும், மனநலனுக்கும் நன்மை சேர்க்கும். அதுவும் தவறாமல் உணவில் இடம்பெற வேண்டும்.

    • டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும்.
    • வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

    தூக்கம்…! மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

    ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான். நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்…

    நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.

    பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி' வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்கச் செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

     பசலைக்கீரையை பொறுத்தவரையில் அதில் இரும்புச் சத்து அதிகம். தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

     பாதாம்

    பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிபடுத்தி மூளையின் சக்தியை அதிகரித்து, உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதேநேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் உட்கொண்ட பிறகு நன்றாக தூங்குங்கள்.

     டார்க் சாக்லேட்

    பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

     வாழைப்பழம்

    ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டசத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை வழங்குகிறது.

     சூடான பால் அருந்துதல்

    ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு நல்ல பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

    ×