என் மலர்
நீங்கள் தேடியது "Miscarriage"
- சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
- இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் உமா மகேஸ்வரி என்பவர், சேம்பூர் கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ், மனைவி பரிமளா (வயது 38) என்பவருக்கு, கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதில் பரிமளா உடல் நலம் மோசமடைந்தால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று கருமந்துறைக்கு சென்று, அந்த தனியார் மருந்தகத்தை ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காக முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியன், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தார். இதுகுறித்து மருத்துவத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
- காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு கேடு விளைவிப்பதோடு ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் மாசடைந்த காற்றை சில நிமிடங்கள் சுவாசிக்க நேர்ந்தால் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உத்தா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுவை ஏற்படுத்தும் வாயுக்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு முக்கியமானது. அந்த வாயுவை சுவாசிக்க நேரிடுபவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட மேத்யூ புல்லர் கூறுகையில், "காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. நாளுக்கு நாள் காற்று மாசுவின் வீரியம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்கிறார்.
இந்த ஆய்வுக்கு 1,300 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் 28 வயதுக்குட்பட்டவர்கள். கர்ப்பிணிகளும் இதில் இடம் பெற்றனர். காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மட்டுமின்றி எப்போது வெளியே சென்றாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும்.
கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.
முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.
கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.
“பெண்களின் கரு எதிர்பாராதவிதமாக கலைந்துபோவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் கர்ப்பிணி மட்டுமல்லாமல், அந்தக் கருவுக்குக் காரணமான ஆணுடைய விந்துவின் ஆரோக்கியமும் கருச்சிதைவுக்கு சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம். இதில் ‘Anatomical Factors’ என்று சொல்லப்படும், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்ரீதியான பாதிப்புகள், 10-லிருந்து 15 சதவிகித கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை இதில் அடங்கும்.
அடுத்தது, ‘Auto-immunal Factors’. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருவளர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது. 10-லிருந்து 15 சதவிகிதக் கருச்சிதைவுகளுக்கு இந்த ‘ஆட்டோ இம்யூனல் ஃபேக்டர்ஸ்’ காரணமாக இருக்கலாம். தொற்று காரணமாக 0.5-லிருந்து 5 சதவிகிதக் கருச்சிதைவுகள் நேரலாம். ஹார்மோன் சமச்சீரின்மை, தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்டவை 20 சதவிகிதக் கருச்சிதைவுகள் உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட 50 சதவிகிதக் கருச்சிதைவுகள் காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் இருக்கின்றன.
பொதுவாக, கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சிக்கலில்லாத பிரசவத்துக்கும், பெண்ணின் வயதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொய்வுநிலையை எட்டும். இதனால்தான் 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு என்பது சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, உட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால், கருமுட்டையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். லண்டனில் நடந்த ஆய்வு ஒன்று, கருச்சிதைவுக்கும் வயதுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அட்டவணை இங்கே…
கருச்சிதைவும் கருக்கலைப்பும் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கக்கூடியவை. ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே கருத்தரிப்பு நிகழ வேண்டும்.
ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின்னர் கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தம்பதியில் இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனை (Endocrinology Test) செய்துகொள்ள வேண்டும். கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்பதை `Karyotyping Test’ மூலம் அறிந்துகொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும் அச்சுறுத்தல்களையும் குடும்பமும் சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.