என் மலர்
பொது மருத்துவம்
- வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் சாப்பிடலாம்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், வாயுத்தொல்லை ஏற்படும் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் இருக்கின்றன. ஆம்...! சர்க்கரைவள்ளிக்கிழங்கில், வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவும். இதனை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். அதேசமயம் இயற்கையாகவே கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரஞ்சு, ஊதா, சிவப்பு, வெளிர் மஞ்சள், வெள்ளை நிறம் போன்றகளில் காணப்படுகிறது. இந்த நிற வேறுபாடுகளுக்கு அதிலுள்ள பீட்டா கரோட்டினே காரணமாகும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் எலக்ட்ரானை இழந்த செல்களுக்கு எலக்ட்ரானை அளித்து எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்க உதவுகிறது.
- தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்து சமைக்க கூடாது.
- தேங்காய் எண்ணெயில் எந்த பொருளையும் பொறிக்கக்கூடாது.
கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலில் இருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது. இப்படி எடுக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும்.

இந்த எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டாம். வீட்டிலேயே தேங்காயை ஆட்டி நீங்களே தயாரிக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்து சமைப்பதோ அல்லது பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது.
வயிறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களும், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்களும் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.
அதேபோல ஆயில் புல்லிங் செய்யவும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப் பரிந்துரைப்போம். அது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இது உதவும்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கூந்தலை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். தினசரி சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பொரியல் போன்றவை செய்ய பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதுதான்.
- ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும்.
- பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும்.
ஒற்றைத் தலைவலி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன அழுத்த நிலைகள், கல்வி, வேலை மற்றும் தனிப்பட்ட மன அழுத்தங்கள், ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக நேரம் மொபைல், டி.வி., கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் செலவிடுதல், இரவு அதிக நேரம் கண் விழிப்பது, தூக்க முறைகள் மாறுபடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒற்றைத் தலைவலிக்கான தூண்டுதல்களாக உள்ளது.
இன்னும் மரபியல் ரீதியாக ஒரு குடும்ப உறுப்பினர் ஒற்றைத் தலைவலியால் பாதித்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த நிலை வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு, குறிப்பாக பருவமடைதல், மாதவிடாய் மற்றும் இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.
நோய் அறிகுறிகள்:
ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும். கூடவே சிலருக்கு குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலி உணர் திறன் மற்றும் சில சமயங்களில் பார்வைக் கோளாறுகள் இருக்கும். ஒற்றைத் தலைவலி இருக்கும் காலம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும்.
சித்த மருத்துவம்:
1) திரிகடுகு சூரணம் 1 கிராம், கௌரி சிந்தாமணி 200 மி.கி. ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
2) அமுக்கரா சூரணம் அல்லது லேகியம் 1 அல்லது 2 கிராம் வீதம் இருவேளை சாப்பிடவேண்டும்.
3) ஒற்றைத் தலைவலி உள்ள இடத்தில் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் உரசிபற்றிட வேண்டும்.
4) மஞ்சள் அல்லது நொச்சி இலை வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.
5) மன அழுத்தம் நீங்க பிரம்மி நெய் இரவு 5 மி.லி. வீதம் சாப்பிட வேண்டும்.
- உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்படும் உணவு சீஸ்.
- உணவு தயாரிப்புகளில் கூடுதல் சுவைக்காக சீஸ் சேர்க்கப்படுகிறது.
சீஸ் என்னும் பாலாடைக்கட்டியை உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒரு பிரபலமான மற்றும் சுவையான உணவுப் பொருளாகும். தோசை, பீட்சா என திரும்பும் திசையெல்லாம் இப்போது சீஸ் தூவ ஆரம்பித்து விட்டனர். அந்தளவிற்கு உணவுப்பிரியர்களின் விருப்பமாக இருக்கும்.
பாலாடைக்கட்டி லேசான கிரீமி முதல் கசப்பானது வரை என பல்வேறு வகையான சுவைகளில் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. அதன் மாறுபட்ட சுவை தன்மையின் அடிப்படையில், பல சமையல் உணவு தயாரிப்புகளின் கூடுதல் சுவைக்காக இது சேர்க்கப்படுகிறது.
கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு சீஸ் ஒரு நல்ல உணவாகும். எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியம்.
சீஸ் என்றாலே உயர்தர புரதத்தின் மூலம் எனலாம். இது அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது, இது ஒரு மதிப்புமிக்க உணவு புரத ஆதாரமாக அமைகிறது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு. இதில் அதிகளவு புரோட்டீன்கள் உள்ளது.
பாலாடைக்கட்டி கால்சியத்தின் உணவு ஆதாரங்களில் ஒன்றாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க உதகிறது. சீஸ் சாப்பிடுவது உங்கள் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
சாலடுகள் மற்றும் சாண்ட்விச்கள் முதல் பீட்சாக்கள் மற்றும் பாஸ்தா வரை பலவகையான உணவுகளில் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. அதன் உருகும் பண்புகள் உணவுகளின் அமைப்பு மற்றும் சுவையை மேம்படுத்துவதற்கு உதவுவதால் சீஸ் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது.
சீஸில் அதிக புரதம் மற்றும் கொழுப்பு உள்ளதால், அவற்றை உண்ட பிறகு எல்லோருக்கும் ஒரு முழுமை உணர்வு கிடைக்கச் செய்யும். இது பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையினை நிர்வகிக்கவும் உதவும்.
தயிர், கேஃபிர் போன்ற சில பாலாடைக்கட்டிகள் மற்றும் கவுடா போன்ற சீஸ்கள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளைக் கொண்டிருக்கின்றன.
சில உணவுப்பொருள்கள் மற்றவருடன் இணைக்கும் போது அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சீஸ் இதுக்கு விதி விலக்கு. ஒயின், பழங்கள் மற்றும் ரொட்டி போன்றவற்றுடன் சீஸ் சேர்ப்பது சுவையினை அதிகரிக்குமே தவிர கெடுக்காது.
பாலாடைக்கட்டியை (சீஸ்) மிதமாக உட்கொள்வது முக்கியம், ஏனெனில் அதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சீஸை தங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது அவசியம்.
- சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.
- சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு.
நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். அந்த அளவிற்கு சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் என சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது.
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. பூண்டை சமைத்து உண்பது மற்றும் பச்சையாக அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும், பூண்டை தண்ணீரில் சேர்த்து பானமாக குடிப்பதால் அதிக பலனைப் பெற முடியும். இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தினந்தோறும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.

பூண்டு தேநீரின் நன்மைகள்
பொதுவாகவே பலருக்கு காலையில் விடிந்த உடன் டீ காபி பாலுடனே நாள் தொடங்கும். அது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அப்படி பூண்டு டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா வாங்க பார்க்கலாம்.
* உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பூண்டு டீ உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
* சரும ஆரோக்கியத்திற்கும் பூண்டு டீ பயன்படுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பூண்டு டீயை வெறும் வயிற்றில் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
* வைரஸ் நோய்கள் இருக்கும் சமயத்தில் பூண்டு கலந்த நீரை குடிக்க வேண்டும். ஏனென்றால் பூண்டில் உள்ள வைட்டமின் பி1, பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடும் திறனைப் பெற்றுள்ளது.
* செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு கலந்த தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் நல்லமுன்னேற்றம் காணலாம்.
* அஜீரணம், வயிற்று வலி, வாயுப் பிடிப்புகள், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும்.
* மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பொதுவாக அதிகமான வயிற்றுவலி இருக்கும். இது போன்ற நேரங்களில், காலையில் பூண்டு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
- தயிர் ஒரு குளிரூட்டியாக அறியப்படுகிறது.
- மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...

மாம்பழம்:
மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.

பால்:
பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.

மீன்:
மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.

எண்ணெய் உணவுகள்:
பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வெங்காயம்:
மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
- நம் உடல் ஓர் உயிரணுவில் இருந்துதான் உருவாகிறது.
- உடல் உறுப்புகளைப் பேணிப்பாதுகாக்க முயலுங்கள்.
பல ஆயிரம் கோடி அணுக்கள் உள்ள நம் உடல் ஓர் உயிரணுவில் இருந்துதான் உருவாகிறது என்றால் எவ்வளவு வியப்பாக உள்ளது. ஓர் உயிரணு இரண்டாகப் பிரிந்து பிறகு நான்கு, எட்டு, பதினாறு எனப் பிரிந்து திசுக்கள், உடல் உறுப்புகள், ரத்தக் குழாய்கள், தோல், தசை, கொழுப்பு எனப் பல கூறுகளாகப் பிரிகின்றன. நம் உடலுக்குள் கண்டுபிடிக்கப்பட முடியாத, இன்னும் சரியாக விவரிக்கப்பட முடியாத விந்தைகள் பல உள்ளன.
நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடலின் இயல்புகள் பற்றியோ அல்லது, ஓர் உறுப்பு, செயல்படாமல் போனால் என்ன ஆகும் என்பது பற்றியோ புரிந்துக் கொள்ள முயல்வதில்லை, அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதுமில்லை.
``சிறுநீரகத்தின் மதிப்பு", அது பழுதுபட்டு, நினைத்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் துயரப்படும் நோயாளிகளுக்குத்தான் தெரியும். "இதயத்தின் மதிப்பு" அதனால் இடராகிச் சிறிது தொலைவு நடந்தால் கூட மூச்சு வாங்கும் நோயாளிக்குத்தான் தெரியும், கை கால்கள் நடக்க முடியாமல் தடுமாறும் நோயாளிக்குத்தான் தெரியும் "மூளையின் அருமை". எனவே கீழ்வரும் பட்டியலின் வாயிலாக

நம் உடல் உறுப்புகளின் மதிப்பை தெரிந்துகொள்ளலாம்.
1. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குரூ.10-20 லட்சங்கள்
2. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.25-30 லட்சங்கள்
3. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 25-30 லட்சங்கள்
4. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 20-25 லட்சங்கள்
5. கணைய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15-20 லட்சங்கள்
6. மூச்சுக்குழாய் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சங்கள்
7. விழித்திரை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்
8. தோல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம்
உடல் உறுப்புகளின் மதிப்பை இப்போது உணர்ந்து விட்டீர்களா? இவ்வளவு லட்சங்கள் நம் கையில் இருந்தால் மட்டும் போதும், இந்த உறுப்புகளை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இந்த உறுப்புகள் ஒருவருக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதே கடினம்.
நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியவை விலைமதிப்பில்லா நம் உடல் உறுப்புகளையே, பணத்தையல்ல. பணம் தேவைதான்...! பணமே வாழ்க்கை அல்ல. நாம் சம்பாதித்த பணத்தால், உடல் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதைபுரிந்து கொள்ளுங்கள், உடல் உறுப்புகளைப் பேணிப்பாதுகாக்க முயலுங்கள். உடலின் இயல்புகள் பற்றித் தெரிந்து கொண்டால்தான், சிக்கல்கள் ஏற்படும்போது அதை எளிதாகக் கண்டறியலாம்.

இதயம் துடிக்கும் அளவு
ஆண்களுக்கு இதயத்துடிப்பு, சராசரியாக நிமிடத்திற்கு 70 முதல் 80 முறை இருக்கிறது, அதேபோல் பெண்களுக்கு நிமிடத்திற்கு 72 முதல் 82 முறை துடிக்கிறது. பொதுவாக, ஓய்வு நேரத்தில் குறைந்த அளவும், ஏதேனும் பயிற்சிகள் அல்லது வேலை செய்யும்போது அதிகமாகவும் இதயம் துடிக்கிறது. உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
மனிதன் மூச்சிழுக்கும் அளவு
ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முதல் 20 முறை மூச்சிழுத்து விடுகிறோம். நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு இதன் அளவும் வேறுபடுகிறது. மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும், வெளியேற்றவும் உதரவிதானம், மார்பக எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் உதவுகின்றன.
உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
குழந்தை, பிறக்கும்போது பொதுவாக 270 எலும்புகளுடன் பிறக்கிறது. பருவத்திற்கு வரும்போது 206 முதல் 213 எலும்புகளாக ஒன்றோடொன்று இணைந்து அவை எண்ணிக்கையில் மட்டும் குறைகின்றன. சிலருக்கு விலா எலும்புகளும், முதுகெலும்புகள் மற்றும் அதன் இலக்கங்களும் மாறுபடுவதே இந்த மாறுபாட்டிற்கான முக்கியக்காரணம்.

உடலில் கண்களின் பங்கு
மனிதன் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்து வாழ்கையை வாழ இயற்கை நமக்கு வழங்கிய கொடை கண்கள். இந்த கண்களை நம் முன்னோர்கள் மிகவும் பக்குவத்தோடு பாதுகாத்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அந்த கண்களை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பது இல்லை.
அதிகப்படியான செல்போன் பயன்பாடு, கணினி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி முறையற்ற உணவுப் பழக்கத்தால், கண்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது இல்லை. இதனால் இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் தொடர்பான நோய்கள், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
மனித உடலை இயற்கை கட்டமைத்து இருப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை சரியான நேரத்தில் முறையாக செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள். நாம் ஓய்வெடுக்கும் பொழுதும், உடல் அதன் பணியைத் தலையாய கடமை என நினைத்துக் கண்ணியத்துடன் பணியாற்றுகிறது.
அந்த உடல் உறுப்புகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய வெகுமதி அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதுதான். அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ நீங்கள் எதையாவது பரிசாக வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பரிசாக வழங்குங்கள். அதுவே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்யும்.
- ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை.
- ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது.
உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைன்டு ஆயில் ஆகியவற்றை குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவுகள் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம்.
காபி, டீக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயை குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், உடல் எடையையும் குறைக்கும்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தை உடலில் சீராக வைத்திருக்க உதவும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக்கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக்குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.
தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.
குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப்பழக்கம் மூலம் சமாளிக்க முடியும்.
அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் என பிற உறுப்புகளை பாதிக்கும் தன்மையானது, உயர் ரத்த அழுத்த நோய்க்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.
- ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
- கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.
ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?
1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.
2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.
சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.
சித்த மருத்துவம்:
1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
- மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது.
உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ ஏற்படும் உடல் அல்லது மனரீதியான தாக்கங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையே மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) ஆகும். இது கடுமையான மன அழுத்தம், எபிசோடிக் மனஅழுத்தம், நாள்பட்ட மன அழுத்தம் என்று மூன்று வகைப்படும்.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்றாலும் இதற்கு முக்கிய காரணங்களாக கீழ் கண்டவை கருதப்படுகின்றன:

பணிச்சுமை அல்லது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சர்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள், கடன், உறுதியற்ற வருமானம், அதிர்ச்சிகரமான விபத்துக்கள், குடும்ப பிரச்சினைகள், பொதுவாக மனிதர்களுக்கு தினமும் 9 முதல் 11 மில்லி கிராம் அளவு கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரக்கிறது.
மன அழுத்தம் ஏற்படும் போது இது 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது. மேலும், மன அழுத்தத்தினால் அட்ரினலின், நார்அட் ரினலின் போன்ற ஹார்மோன்களும் அதிக அளவு சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் அனைத்தும், இன்சுலின் எதிர்மறை நிலையை அதிகரித்து, இன்சுலின் செயல் திறனை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது.

தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம். யோகா அல்லது தியானம் போன்ற மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், மருத்துவரின் உளவியல் ஆலோசனைகள் ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றினால் மன அழுத்தத்தினால் ரத்த சர்க்கரை அதிகமாவதை குறைக்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்:
* மன அழுத்தத்தை நிர்வகிக்க நீரிழிவு நோயாளிகள் 20 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ளுதல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம்.
* முகத்தில் உள்ள கவலையை போக்க அடிக்கடி சிரித்து மகிழுங்கள்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சமூக ஆதரவை பெறுங்கள்.
* தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.
எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள். என்னால் இந்த செயலை செய்ய முடியும் என்று நம்புங்கள். உங்கள் பிரச்சனையை அடுத்தவர் மீது திணிக்க முயற்சி செய்யாதீர்கள். யாரையும் எதற்காகவும் கட்டாயப் படுத்தாதீர்கள். மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியோடு இருங்கள்.
- அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.
- காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
பனிக்காலங்களில் அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பனிப்புகையும், மனித செயல்கள் மூலம் உருவாகும் காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மூச்சுத் திணறல், பெருமூச்சுவிடுதல், சுவாசிக்கும் போது விசிலடிப்பது போன்ற சப்தம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்?

வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கலந்த புகை, தீங்கான விஷம் கலந்த தொழிற்சாலை புகைகள் மற்றும் சில ரசாயனக் கரைசல்களின் புகைகள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிப்போம். இந்த நச்சுப் புகைகள் தான் சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
மற்ற காலங்களை விட பனிக்காலங்களில் நமது உடல் வெப்ப அளவை விட மிகக்குறைவாக. குளிர்ந்த வெளிக்காற்று இருக்கும். சுவாசப் பிரச்சினை ஏற்பட இது ஒரு காரணம் ஆகும். மருத்துவரையோ அல்லது நுரையீரல் சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.
மருந்தகத்தில் மருந்து- மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் மூச்சுத் திணறல் அதிகமாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது ஒரே நாளில் கிடைக்காது. சில காலங்களுக்கு சில விஷயங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
1) தீங்கு விளைவிக்கக் கூடிய துகள்கள் கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க வேண்டும்,
2) பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகள், இனிப்பு உணவுகள், இறைச்சி உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
3) நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்ந்த உணவுகள், குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
4) மன நிம்மதியின்மை, மன அழுத்தம் முதலியவைகளும் மூச்சுத் திணறலை அதிகமாக்கும்.
5) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள் குளிரையும், குளிர்ப் பிரதேசங்களையும் தவிர்க்க வேண்டும்.
6) தினமும் உங்களால் முடிந்த ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்து உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.
7) ஊதுவத்தி, கொசு வத்தி, கற்பூரம் போன்றவற்றின் புகை அருகில் இருக்க வேண்டாம்.
8) சிகரெட் புகைப்பவரின் அருகில் நிற்கக்கூட செய்யாதீர்கள். நச்சுக்காற்றின் அபாயங்களைத் தவிருங்கள். நலமுடன் வாழுங்கள்.
- புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
- அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். இதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வருவது நமக்கு ஒருவித அசவுகரித்தை ஏற்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு திருப்பி அனுப்பப்படும் பொழுது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இதனை அலட்சியமாக கருதும் பொழுது, அது நமக்கு அசவுகரியம் மற்றும் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நமது உடலில் ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். வயிற்றின் ஒருவித இயல்பு மாற்றம் காரணமாக ஆசிட் ரிஃப்ளக்ஸ் உருவாகிறது. நமது நெஞ்சு பகுதியையும் கீழ் வயிறு பகுதியையும் டயாபிராகம் என்ற தசை பிரித்து வைக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலே நகராதவாறு பாதுகாப்பது இந்த தசை. எனினும் ஹெர்னியா காரணமாக இந்த அமிலம் உணவுக் குழாய் வரை பயணிக்கிறது.

புளித்த ஏப்பம் வருபதற்கு காரணம்
* அதிகப்படியாக சாப்பிடுவது உடல்பருமனாக இருப்பது அதிக உணவு சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது
* இரவு தாமதமாக உணவு உண்பது
* சாக்லேட், புதினா, தக்காளி, பூண்டு, வெங்காயம், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது.
* கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது டீ குடிப்பது
*புகையிலை பொருட்களை உட்கொள்வது
* அதிக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சில மருந்துகள்
அறிகுறிகள்:
அடிவயிற்றில் தொடங்கிய எரிச்சல் உணவுக் குழாய், கழுத்து மற்றும் நெஞ்சு பகுதி வரை பரவும்.
பின் வாயில் கசப்பான அல்லது புளித்த சுவை ஏற்படுதல்
வயிற்றில் இருந்து திரவங்கள் அல்லது உணவு மீண்டும் வாய்க்கு வருதல்
நாள்பட்ட இருமல்
குமட்டல் அல்லது வாந்தி
வீட்டு வைத்தியம்:
* உணவுக்குப் பிறகு சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். சோம்பு விதைகள் பொதுவாக பாதுகாப்பானவை, எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
* பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டையும் மிதமான அளவு சாப்பிடுவது கேஸ்ட்ரிக் அமிலத்தை நடுநிலைப்படுத்த உதவும்.
* ஒரு டீஸ்பூன் அளவு ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது நெஞ்சு எரிச்சலை போக்கும்.
* ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க உதவும்.
* மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் புளித்த ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பதற்கு நீங்கள் ஆன்டாசிட்களை பயன்படுத்தலாம்.
உடல் பருமன் காரணமாக ஏற்படக்கூடிய ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை தடுப்பதற்கு நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். அசிடிட்டி பிரச்சனையை சமாளிப்பதற்கு நீங்கள் அதிக அளவு உணவை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம். மாறாக சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட பிறகு லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது செரிமானத்தை அதிகரிக்கும்.






