என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
    • வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் `கிளாப்பிங் தெரபி' என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

     * இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.

    * மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.

    * மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.

    * குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.

    * வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

    * குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும்.

    * உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தைகுறைப்பதற்கும் உதவும்.

    * உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.

    • மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம் தூக்கம்.
    • தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம்.

    தூக்கம் என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். அதை பற்றிய முக்கியமான சில தகவலை நாம் அறிந்து கொள்ளலாம்.

    ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இந்த குறிப்பிட்ட நேர தூக்கம் கிடைப்பதில்லை. படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதும், தூக்கத்தின் இடையில் விழிப்பதுமாக நேரம் கடந்து விடுகிறது.

    ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு இருக்கும் பணிச்சுமையால் சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களது உடலிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் ஒரு மனிதர் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால் தேவையற்ற மன உளைச்சலும், சோம்பேறித்தனமும் தான் அதிகரிக்கிறது. தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

    தூக்கத்தின் நன்மைகள்

    ஒருவர் நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்குவதன் மூலம் மன அழுத்தம், உடலில் உள்ள சோர்வு முற்றிலுமாக குறைகிறது.

    சரியாக தூங்குவதால் உடலில் சீரான ரத்த ஓட்டம், புத்துணர்ச்சி, மூளையின் செயல்படும் திறன் அதிகரித்தல் போன்றவை நமக்கு இயல்பாகவே கிடைக்கும்.

    தினமும் 8 மணி நேரம் தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம் என மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    ஆரோக்கியமான தூக்கத்தால் இதய சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

    எவ்வளவு நிம்மதியாக தூங்குகிறோமோ அந்த அளவிற்கு நம் மனதில் உள்ள அழுத்தங்கள், கவலைகள் குறையும் என ஆய்வில் கூறப்படுகிறது.

    • திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
    • நியாபக மறதி டிமென்சியா, அம்னீஷியா என இரு வகைகளில் அடங்கும்.

    நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.

    நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதை கவனிக்காமல் தேடிக் கொண்டே இருப்பது, அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை செல்லும் இடங்களில் வைத்து விட்டு, வந்த பின் எங்கு வைத்தோம் என்று தேடுவது.

    முன்பு அறிமுகமான நபரைத் திடீ ரென பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாமல் சமாளிப்பது, பேனா, சாவி, கண்ணாடி, பர்ஸ் இவைகளை கைகளிலோ அல்லது அருகிலோ வைத்து விட்டு தேடுவது. ஒருவருக்கு போன் செய்வதற்கு நினைத்து விட்டு மறந்துவிடுவது இவையாவும் இந்த திடீர் நியாபக மறதியில் வந்து விடும்.

     பொதுவாக நியாபக மறதி 'டிமென்சியா' மற்றும் 'அம்னீஷியா' என இரு வகைகளில் அடங்கும். நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:

    1) பிரமி நெய் 5 மி.லி வீதம் காலை, இரவு சாப்பிடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கும்.

    2) வல்லாரை மாத்திரை 1-2 மாத்திரை காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) அமுக்கரா லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) நெல்லிக்காய் லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

    6) செம்பருத்திப் பூ, குங்குமப்பூ இவைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் மூளை, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

    7) உணவில் வைட்ட மின் பி1, பி6, பி12 சத்து, செலீனியம், துத்தநாகம் குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    8) வல்லாரை, பிரமி, துளசி இலைகள் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகள். இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி பெருகும்.

    9) வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, சிறுகீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகை பழங்கள், பூசணி விதைகள், வேர்க்கடலை இவைகளில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன.

    10) தினமும் 10-15 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும்.

    11) சீரான தூக்கம் இன்றியமையாதது, டி.வி, வீடியோ கேம்ஸ் இவைகளை தவிர்ப்பது நல்லது.

    • வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது.
    • இரவுநேர தூக்கத்தைவிட சிறந்த வரம் வேறு இருக்க முடியாது.

    நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது. நமது தூக்கத்தின் தரத்தைப் பொறுத்தே, மீதமிருக்கும் வாழ்க்கையின் தரம் அமைகிறது. நல்ல இரவு நேரத் தூக்கத்தைவிடச் சிறந்த வரம் வேறு இருக்க முடியாது. தூக்கம் நமக்கு அளிக்கும் நன்மைகள் அப்படி. தூக்கம் நம் உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் மனத்துக்கும் ஓய்வை அளிக்கிறது. மறுநாளைப் புத்துணர்வோடு எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றலையும் தருகிறது. சொல்லப்போனால், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் இரவுத் தூக்கமே அடிப்படை.

    நமது வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிக தூக்கம் தேவை. குழந்தையாக இருக்கும்போது நீண்ட நேரத் தூக்கம் தேவை. குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரமும் குறைகிறது. ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஏழு முதல் எட்டரை மணிநேரத் தூக்கம் தேவைப்படும். சராசரியாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு:

    0 - 3 மாதங்கள் 14 -17 மணிநேரம்

    4 - 12 மாதங்கள் 12-16 மணிநேரம்

    1 - 2 வயது 11-14 மணிநேரம்

    3 - 5 வயது 10-13 மணிநேரம்

    6 - 12 வயது 9-12 மணிநேரம்

    13- 18 வயது 8-10 மணிநேரம்

    19 - 64 வயது 7- 9 மணிநேரம்

    65 வயதுக்கு மேல் 7-8 மணிநேரம்

    புத்துணர்வையும் ஓய்வையும் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 தூக்க சுழற்சிகள் நமக்குத் தேவை. இதில் 4 நிலைகள் உள்ளன. முதல் 3 நிலைகளில் விரைவற்ற கண் அசைவு தூக்கமும், 4-ம் நிலையில் விரைவான கண் அசைவு தூக்கமும் இருக்கின்றன.

    நாம் தூங்கும் அளவைப் பொறுத்து ஒவ்வொரு நிலையிலும் தூங்கும் நேரம் மாறுபடும். பொதுவாக, முதல் நிலை 5 முதல் 10 நிமிடங்களும், 2-ம் நிலையில் 25 நிமிடங்களும், 3-ம் நிலையில் 20 முதல் 40 நிமிடங்களும், 4-ம் நிலையில் 10 நிமிடங்களும் நீடிக்கும்.

     முதல் நிலையில் நாம் தூக்கத்தை உணரமாட்டோம். ஆனால் உடல், மூளையின் செயல்பாடுகள் குறையும். 2-ம் நிலையில் இது நம்மை ஆழ்ந்த தூக்கத்துக்குத் தயார்படுத்தும். இந்நிலையில் தசைகள் தளர்வடையும். உடல் வெப்பநிலை குறையும். இதயத் துடிப்பும் சுவாசமும் குறையத் தொடங்கும். 3-ம் நிலையில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.

    இந்த கட்டத்தில் நம்மை எழுப்புவது மிகவும் கடினம். நாம் ஒருவேளை விழிக்க நேர்ந்தால், என்ன நடக்கிறது என்று தெரியாத ஒருவிதக் குழப்ப நிலையில் இருக்க நேரிடும். 4-ம் நிலை என்பது நாம் கனவு காணும் நிலை. இந்தநிலையில் மூளையின் செயல்பாடுகள் பெருமளவில் அதிகரிக்கும். கண்கள் வேகமாக நகரும். சுவாசம் வேகமடையும். இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

    வெந்நீர் குளியல், புத்தகம் வாசிப்பு, ஓய்வெடுத்தல், தூங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்துதல், விளக்குகளை அனைத்து அறையை இருட்டாக்குதல். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் விழித்துப் பழகுதல் போன்றவை நமது தூக்கத்துக்கு உதவுபவை.

    • நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
    • நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு.

    நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் இதனை உணவில் அதிகமாக யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இதில் தான் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் உள்ளது. இதில் இருக்கக்கூடிய வேர் மற்றும் இலை இரண்டையும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனை பல பேர் உணவில் ஒதுக்கி வைக்கிறார்கள். இதில் உள்ள நன்மைகள் தெரிந்தால் இனிமேல் யாரும் ஒதுக்கி வைக்கமாட்டீர்கள். இந்த நூல்கோல் காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    நூல்கோல் மண்ணுக்குள் விளையும் காய் வகையாகும். நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம்.

    நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாகவும் பயன்படும்.

    செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது. பருவ கால மாற்றங்கள் ஏற்படும் போது முதலில் நம்மை பாதிப்பது மூச்சு தொடர்பான பிரச்னைகள்தான்.

    குறிப்பாக, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும். நூல்கோலின் மேல் உள்ள தண்டும் அதன் மேல் உள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகின்றது.

    நூல்கோலில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையை குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் சம்பந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    நூல்கோலின் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால் இதயத்தை பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    பொட்டாசியம் சத்து நூல்கோலில் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் அளவுடன் எடுத்துக்கொண்டால் நல்லது.

    • புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு.
    • ஆந்திரா பகுதியில் `கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்றது.

    புளிச்சக்கீரை... புளிப்புச்சுவை நிறைந்தது என்பதால், இந்த கீரை புளிச்சக்கீரையானது. புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு. இது ஆந்திரா பகுதியில் `கோங்குரா' என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை.

    இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த இந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக புளிச்சக்கீரையுடன் மிளகாய் சேர்த்து வேக வைத்து உப்பு சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிடுவார்கள்.

    நினைத்தாலே நாவில் நீரூற வைக்கும் புளிப்பு சுவை கொண்ட இயற்கையின் அருட்கொடையான புளிச்சக்கீரை ரத்த சோகை நோயைத் தடுப்பதுடன், உடல் நலனுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. புளிச்சக்கீரையின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.

    புளிச்சக்கீரையை ஹிந்தியில் கொங்குரா, பிட்வா என்றும், ஆங்கிலத்தில் கெனாஃப் அல்லது ரோசெல்லே என்றும் சொல்வார்கள். புளிச்சக்கீரையில் பச்சை தண்டு வகை, சிவப்பு தண்டு வகை என இரு வகைகள் உண்டு.

    பெரும்பாலும் நாம் பச்சைத்தண்டு வகையையே பயன்படுத்துகிறோம். நீளமான தண்டுடன் மூன்று இதழ்களைக் கொண்டு வளரும் இதன் இலைகளை மட்டுமே நாம் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இதன் தண்டுகளை அப்படியே மண்ணில் நட்டாலும் மீண்டும் துளிர்த்து வளரும் என்பது சிறப்பு.

    புளிச்சக்கீரையில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுடன் பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரிபோஃப்ளோவின் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

    இதனால் இது இருதய வாஸ்குலர் பாதிப்புகளைத் தடுக்கிறது. புளிச்சக்கீரையில் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    இந்த கீரையின் இரண்டு நிற வகைகளிலும் அற்புதமான ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் முடியின் பாதிப்புக்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கிறது.

    பெண்களை அதிகம் தாக்கும் ஒரு உடல் நலப் பிரச்னை இரத்த சோகை. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் ரத்த சோகையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தக் கீரை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

    புளிச்சக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்த சோகை பிரச்னையை எளிதில் தீர்க்கலாம். அது மட்டுமின்றி, இரத்த சோகையின் விளைவுகளான முடி உதிர்தல், சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளையும் இது தடுக்கிறது.

    புளிச்சக்கீரையில் குறைந்த கலோரிகள் உள்ளன. 100 கிராம் புளிச்சக்கீரையில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி உணர்வைக் குறைத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் பல செரிமானப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமான மலச்சிக்கலைத் தடுக்க முடியும். புளிச்சக்கீரையில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதன் சாறு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

     வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். இதேபோல், மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில்  புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.

    புளிச்சக்கீரையை காய வைத்து அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு (பச்சைப்பருப்பு), ஜாதிக்காய், சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்து பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான குழந்தையின்மை குறைபாடு விலகும். இந்த பொடியை காலை மற்றும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு சரியாகும். பெண்களும் இதை சாப்பிடுவதால் தாம்பத்திய உறவு பலப்படும்.

    இத்தனை மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். ஏற்கெனவே உடல் நலக் கோளாறுகள், ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை உணவில் சேர்த்துகொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது.

    • எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
    • புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

    பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

     கீரை

    கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

     பருப்பு

    பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

     ஓட்ஸ்

    ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

     பால்

    பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

     ப்ரோக்கோலி

    பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

     பீட்ரூட்

    பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

     பாதாம்

    பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    • இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
    • வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

    தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...

     இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.

    இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

    இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

     இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

    இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

    • அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
    • வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    காலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியபோதும் சரி குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரத்தில் ருசிக்கப்படும் ஸ்நாக்ஸ்களிலும் வாழைப்பழத்தை பலரும் சேர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சாப்பிடும் பழமாக வாழைப்பழம் இருக்கிறது.

    வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். அதிலிருக்கும் பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அவசியமானவை. அதன் நன்மைகளை கருத்தில் கொண்டு சிலர் காலை உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்கிறார்கள்.

    அன்றைய நாளில் மிக முக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் எல்லா நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறந்த தேர்வாக வாழைப்பழம் இருப்பதில்லை. அதில் இருக்கும் உயர் சர்க்கரைதான் அதற்கு காரணம்.

    இது அமில வகை (அசிடிக் புரூட்) பழமாகும். இதனை சரியான வேளையில் உட்கொள்ளாவிட்டால் செரிமானத்தை சீர்குலைக்கும் அசிடிக் மூலக்கூறுகளை வெளியிடும். அது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றொரு குறைபாடு, இதில் கார்போஹைட்ரேட் 25 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுத்துவிடும்.

     வாழைப்பழத்தை காலை உணவுடன் சாப்பிட விரும்பினால், அதனுடன் ஏதேனும் ஒரு உணவுப்பொருளை சேர்த்து சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வாழைப்பழத்தை தனியாக சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?

    இதுகுறித்து மும்பையை சேர்ந்த இயற்கை மருத்துவர் சந்தோஷ் பாண்டே கூறுகையில், ''அன்றைய நாளின் எந்த நேரத்திலும் வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். இருப்பினும் உடலில் வளர்ச்சிதை மாற்றம் இரவு நேரத்தில் மிகவும் குறைவாக இருக்கும்.

    அந்த சமயத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது தூக்க சுழற்சியை சீராக்கும். டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது உடலுக்கு இன்றியமையாதது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் உற்பத்திக்கு வழிவகுக்கும். எனவே இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது'' என்கிறார்.

    • காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு.
    • ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

    சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

     காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த குழு, 2009 முதல் 2022 வரை சீன தலைநகரில் வசித்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

     "கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும்கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், `இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை' என்று கூறியுள்ளார்.

    காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

    ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    ×