என் மலர்
பொது மருத்துவம்
- ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று.
- வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது.
உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் கூடியது இது.
மணத்தக்காளி கீரையின் காய், பச்சை மணியைப் போல இருப்பதால், மணித்தக்காளி என்றும் அழைப்பார்கள். இதன் பழம் மிளகு போல உள்ளதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும்.
மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படும். கொஞ்சம் கசப்புத்தன்மை கொண்டதாகும் இக்கீரை. மணத்தக்காளி கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவைதான். இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள் நிறைந்துள்ளன. இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் வருமாறு:-
வாய்ப்புண்: மணத்தக்காளி கீரையை சாறு எடுத்து வாயிலிட்டு சிறிதுநேரம், தொண்டையில் வைத்து கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.
வயிற்றுப்புண்: தீராத வயிற்றுப் புண்ணை மணத்தக்காளி ஆற்றும். மணத்தக்காளி கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது இவ்வாறு பருக வேண்டும்.
இதய பலவீனம்: இதய பலவீனம் உடையவர்கள் வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும். பொதுவாக மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் நலம் பெறும். ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகும். சிறந்த மருத்துவ உணவாக பயன்படும் மணத் தக்காளி கீரையை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.
- டீ, காபி இவை பழங்கால தமிழர் கலாசாரத்தில் இல்லை.
- அடிக்கடி டீ, காபி குடிப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல.
பரபரப்பான, தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துள்ள வாழ்க்கையை இன்றைய மனித சமுதாயம் அனுபவித்து வருகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யக்கூடிய `மல்டி டாஸ்கிங்' என்ற வளையத்துக்குள் இன்றைய இளைய சமுதாயம் சிக்கிக்கொண்டுள்ளது. எதிலும் வேகம், அதிரடியான செயல்பாடுகள் போன்றவை தான் முன்னேற்றமான வாழ்க்கையை தரும் என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் தீவிரமாக காணப்படுகிறது.
இந்த ஓட்டத்திற்கு தங்களை தயார்படுத்த பல்வேறு சத்து பானங்கள், புத்துணர்ச்சி தரும் பானங்கள் போன்றவற்றை உணவு இடைவேளைகளுக்கு இடையில் பருகும் வழக்கம் பலரிடம் உள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் இதுபோன்ற புத்துணர்ச்சி தரும் பானங்கள் செயற்கையானவை. ரசாயனம் மற்றும் செயற்கை இனிப்புகள் மூலம் தயாரிக்கப்படுபவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் வயிற்றுக்கோளாறு தொடங்கி பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
நவீனத்தில் வாழ்ந்தாலும் இயற்கையை நோக்கி திரும்புவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்ற எண்ணமும் உலக அளவில் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. இதில் சீன மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கையாளுவதில் முன்னிலை வகிக்கின்றனர்.
நமது நாட்டிலும் இயற்கைக்கு வழிகாட்டும் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இயற்கையாக வீட்டில் உள்ள சமையல் அறை பொருட்களை பயன்படுத்தி புத்துணர்ச்சி தரும் பானங்களை எப்படி தயாரிக்கலாம் என்பதை காண்போம்.
தினமும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கம் பழக்கம் பலரிடம் உள்ளது. அன்றைய தமிழர்கள் அதிகாலையில் எழுந்து வேப்பங்குச்சி வைத்து பல் துலக்கிவிட்டு, நீராகாரம் குடித்து விட்டு தங்கள் வேலையை தொடங்கினார்கள். கடுமையான வயல் வேலைகளை அவர்கள் எளிதாக செய்தார்கள். டீ, காபி இவை பழங்கால தமிழர் கலாசாரத்தில் இல்லை. தேயிலை சீனர்களின் பானம்.
காபி அரேபியர்களின் பானம். இவை காலப்போக்கில் தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது. அடிக்கடி டீ, காபி குடிப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல. நம்முடைய முன்னோர்கள் டீ, காபிக்கு பதிலாக ஏராளமான பானங்களை புத்துணர்ச்சிக்காகவும், உடல் நலனுக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவை இயற்கையானது. நமது வீட்டின் சமையல் அறையில் உள்ள பொருட்களில் எளிதாக தயாரிக்கக்கூடியது.
நமது தாத்தா-பாட்டிகள் காலத்தில் இந்த பானங்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இவை உடலுக்கு ஆரோக்கியமும், புத்துணர்வும் தரக்கூடியவை. உடலுக்கு எந்த பாதிப்பையும் தராதவை.
காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் நாம் பல்வேறு வகையான பானங்களுக்கு அடிமையாகி விட்டோம். அவை பெரும்பாலும், அதிக செயற்கை இனிப்புகள், செயற்கை ரசாயன சேர்மங்கள். உணர்வுகளை செயற்கையாக தூண்டும் சேர்மானங்கள் நிறைந்தவை. இவை அந்த நேரத்தில் உற்சாகம் தந்தாலும் காலப்போக்கில் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை தரக்கூடியவை.
செயற்கைக்கு `குட்பை' சொல்லிவிட்டு இயற்கைக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது. இயற்கையான பொருட்கள் மூலம் உற்சாகமும், ஆரோக்கியமும் தரும் பானங்கள் பற்றி பார்ப்போம்.

சுக்கு மல்லி காபி
சுக்கு, மல்லி விதை, மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து, இவைகளை நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது 200 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி குடிக்கலாம். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும், செரியாமை நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி தரும்.

செம்பருத்தி டீ
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து சுவைக்கலாம். இது இதய நோயைத் தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும், இதயப் படபடப்பு வலி குறையும்.

ஆவாரம் பூ தேநீர்
காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

மாம்பூ பானம்
மாம்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகி வர சீதபேதி குணமாகும். வயிற்றுக்கு நன்மை தரும். தேன் சேர்க்காமல் குடித்தால் இதிலுள்ள துவர்ப்பு சுவை நீரிழிவை சிறிது கட்டுப்படுத்தும்.

துளசி இலை பானம்
சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து, தேன் சேர்த்தால் துளசி இலை பானம் ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியம் தரும். நெஞ்சுச் சளி, கபம் போக்கும். கொத்தமல்லி தழை பானம் கொத்தமல்லித் தழையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள், வெல்லம், எலுமிச்சை பழச்சாறு கலந்து பருகவேண்டும். சுவையான இந்த கொத்தமல்லி டீ பித்தம் தொடர்பான நோயைப் போக்கும்.

புதினா இலை பானம்
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும், வயிற்றுப்போக்கை நிறுத்தும். சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய் ஒழுங்காகும், வயிற்றில் தங்கும் வாயுவை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். ரத்தக் குழாய்கள் பலமடையும்.

கொய்யா இலை பானம்
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும்.

வேப்பம் பூ பானம்
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்ப மலர்களை நீரில் காய்ச்சி குடித்து வர குடல் கிருமி நீங்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், நீரிழிவு கட்டுப்படும்.
நத்தைச்சூரி விதை பானம்
சிறிதளவு நத்தைச்சூரி விதையை வறுத்து பொடி செய்து, காய்ச்சி குடித்து வந்தால் உடல் பருமன் நீங்கும், இதைக் காபிக்கு பதிலாக குடித்து வரலாம்.

கருவேப்பிலை, முருங்கை இலை பானம்
கருவேப்பிலை, முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக பொடி செய்து வைக்கவும், இதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வர நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்தம் அதிகரிக்கும், உடல் சோர்வு நீங்கும்.

சங்குப்பூ தேநீர்
சங்கு புஷ்ப மலர்களை காக்கட்டான் என்றும் சொல்வார்கள். இதனுடன் ஏலக்காய், தேன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மனதிற்கு நல்லது. நல்ல ஞாபக சக்தி உண்டாகும். செரிமான சக்தியை அதிகரிக்கும், குடலுக்கு நன்மை தரும்.
வெண் தாமரை மலர் பானம்
வெண் தாமரை மலர் இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும். வெண் தாமரை மலருடன், ரோஜா இதழ்கள், சிறிது லவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் காய்ச்சி, சுவைக்காக தேன் கலந்து குடித்தால் இதயத்திற்கு நல்லது.

குங்குமப்பூ பானம்
வெந்நீரில் சிறிதளவு குங்குமப்பூ போட்டவுடன் அழகிய செஞ்சிவப்பு நிறமாகி விடும். இதை தொடர்ந்து பருகி வர மனதிற்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரும்.
- காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.
- சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.
நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நாம் உணவருந்தும்போது சில தவறுகளை நமக்கு தெரியாமலே செய்கிறோம். சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்க் கூடாது. எனவே தான் உடலில் சில உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. நாம் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ளாத போதும் நம் உடல் பலவீனமாகின்றன.
எனவே தான் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மதிய உணவுகளை 1 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நமது உணவுலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உணவுகளில் சிலவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.
* பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ள ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.
* தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.
* முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக்கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும்.
* எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
* வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.
* பழங்களை தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமான கோளாறை ஏற்படுத்திவிடும்.
* மேலும் கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் 'வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
* பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது.

* பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.
* பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
* சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.
* இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து சாப்பிடுவது தவறு. ஏனென்றால் அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.
* பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையை சேர்த்து சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
* பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
* ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* நெய்யுடன் தேனை கலந்து சாப்பிட கூடாது. ஒரே நேரத்திலும் சாப்பிட கூடாது. ஏனெனினில் இரண்டும் சேர்ந்தால் நஞ்சாகி விடும்.
* மோர், தயிர், பால் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிட கூடாது.
* பழங்களை எப்பொழுதும் கடித்து சாப்பிட வேண்டும். அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது.
* காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட கூடாது.
* சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.
* மீன் சாப்பிடும்போது தயிர் சாப்பிட கூடாது.
* முள்ளங்கி கீரை வகைகள் சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.
மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றுவதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உணவினால் வரும் நஞ்சு நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- பார்லியை சூப்பாகவோ அல்லது கஞ்சியாகவோ கொடுக்கலாம்.
- கர்ப்ப காலங்களில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் இருந்து பார்லியை சூப்பாகவோ அல்லது கஞ்சியாகவோ எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கங்கள் வராது.
கர்ப்ப காலங்களில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். மேலும் பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குறிப்பாக மூளையில் செரோடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோன் அதிகமாக சுரக்கும் இதனால் பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க பார்லி உதவுகிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் ஓட்சை விட பார்லி 13 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறது என கூறப்படுகிறது.
மேலும் பார்லியை இரவே ஊறவைத்து செய்வது தான் நல்லது. பொதுவாக எந்த ஒரு பொருளையும் அதிகமாக சூடு செய்தாலோ கொதிக்க வைத்தாலோ அதன் சத்துக்கள் வெளியேறும், ஆனால் பார்லியை அதிகமாக கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அதிகமாகும் என ஆய்வில் கூறப்படுகிறது.
கை கால் வலி ,வீக்கம் இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளுக்கு பதில் பார்லியையை தினமும் ஒரு டம்ளர் கஞ்சியாகவோ சூப்பாகவோ எடுத்துக்கொள்ளவும்.
பார்லியை ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் அளவு குடிப்பது போதுமானது அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது இது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். மேலும் கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்களுக்கு மேல் தான் பார்லியை சேர்த்துக்கொள்ளவும். பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பார்லி -6 ஸ்பூன்
பூண்டு -4
கேரட் -சிறிதளவு
பீன்ஸ் -சிறிதளவு
சீரகம் -1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை
மிளகு தூள் -1 ஸ்பூன்
எண்ணெய் -4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -6
செய்முறை:
பார்லியை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் பீன்ஸ், கேரட் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி, எடுத்துவைத்துள்ள இரண்டு ஸ்பூன் பார்லியையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள பார்லியையும் சேர்த்து மீண்டும் அந்த காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விடவும் பிறகு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும். இப்போது உங்களது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பார்லி சூப் ரெடி.
- உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
- உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம்.
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது…. உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8 டிகிரி முதல் 99 டிகிரி இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒருவருக்கு உடல் சூடு அதிகம் இருப்பதால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. மூலம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடலில் சூடு அதிகரித்தாலும் பிரச்சனை தான். குறைந்தாலும் பிரச்சனை தான். எப்பொழுதும் சமமான அளவில் உடல் வெப்பநிலை இருக்க வேண்டும். உடல் சூட்டை குறைக்க டிப்ஸ் இதோ உங்களுக்காக…
உடல் சூடு ஓரளவுக்கு மேல் அதிகரிப்பதால் முடி உதிருதல், சரும பிரச்சனைகள், உள் மூலம், வெளி மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் வாகன ஓட்டுனர்கள், உட்கார்ந்து பணிபுரிபவர்கள், அதிக நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் ஆகியவர்களுக்கே உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன.

உடல் சூட்டை எப்படி தடுப்பது?
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி அதில் வெந்தயத்தை 20 நிமிடம் ஊற வைத்து அதனை உலர்த்தி நன்கு காய்ந்ததும் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
மேலும் கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு சேர்த்து இறக்கி ஆறியதும் அந்த எண்ணெய்யை கட்டை விரலில் வைக்கவும். 2 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து மன அழுத்தமும் ஏற்படாமல் இருக்கும்.
இரவில் தூங்கும் முன் தொப்புளில் நல்லெண்ணெய்யை விட்டு தூங்க வேண்டும்.
தினமும் காலையில் பால் குடித்து வரலாம். சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் நீச்சதண்ணீர் குடித்தால் உடல் சூடு குறையும். வெள்ளரிக்காய், தர்பூசணி, போன்றவற்றை சாப்பிட்டாலும் சூடு குறையும்.
நீர்மோர், பழைய சாதம், கஞ்சி போன்றவற்றை குடித்தாலும் குடித்தால் உடல் சூடு குறையும்.
அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
தர்பூசணி பழம் சுமார் 91.45 சதவீதம் தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
- உடல் எடை குறைக்க உதவும் விதைகள்.
- உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை.
பொதுவாக உடல் எடை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை காரணமாக பெரும்பாலானோர் பல்வேறு டயட் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே. எனவே ஆரோக்கியம் தரும் இந்த மூன்று விதைகளை உணவில் சேர்க்கும் போது அது நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க உதவுகிறது.

சியா விதைகள்
சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது.
இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவுகிறது. மிக முக்கியமாக இது உடல்நிலை இருக்கும் கலோரிகளை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆளி விதைகள்
ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.
100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடும் போது இதில் இருக்கும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதை
சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.
இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
சூரியகாந்தி விதையை பயன்படுத்தி நாம் டீ அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைகளை நீக்கி குடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உடலை பிட்டாக வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
- ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
- மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.
பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

வியர்க்குரு
உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.
எப்படி தடுப்பது...?
* உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
* முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.
* பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.
* அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
* பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.
* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
- கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
- தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
வெர்டிகோ என்பது இயக்கம் அல்லது சுழலும் உணர்வு. இது பெரும்பாலும் தலைச்சுற்றல் என்று விவரிக்கப்படுகிறது. வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, பார்வை மங்கல், நடை தளர்வு போன்றவை இருக்கும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்த நோய்க்கான காரணங்கள் வருமாறு:

1) ப்ராக்ஸிமல் பொசிஷனல் வெர்டிகோ:
இந்த நிலையில் சுழல்வது அல்லது நகர்வது போன்ற தவறான உணர்வை ஏற்படுத்துகிறது. இது தலையின் இயக்கத்தில் ஏற்படும் விரைவான மாற்றத்தால் தூண்டப்படுகின்றன, அதாவது படுக்கையில் திரும்பும் போது, உட்காரும்போது அல்லது தலையில் அடிபடுவது இந்த வெர்டிகோவிற்கு மிகவும் பொதுவான காரணமாகும்.
2) வெஸ்டிபுலர் நியூரைடிஸ்:
வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படும் வைரஸ் தொற்றின் போது, தீவிரமான வெர்டிகோ நிலையை ஏற்படுத்தும்.

3) மெனியர் நோய்:
உள் காதில் அதிகப்படியான திரவம் நிரம்புவதால் இந்த நோய் வருகிறது. இது பல மணிநேரம் நீடிக்கும், தலைசுற்றல், காது கேளாமை, காதில் ஒலித்தல், காது இரைச்சல் போன்றவை காணப்படும்.

4) மைக்ரேன்:
ஒற்றைத் தலைவலி எனப்படும் இந்த பாதிப்பு உள்ள நபர்களுக்கு வெர்டிகோ அல்லது பிற வகையான தலைச்சுற்றல் சில நேரங்களில் ஏற்படும். இது சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்.

5) மூளையில் ஏற்படும் கட்டிகள், ரத்த அழுத்தம் குறைதல், ரத்த சர்க்கரை அளவு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு போன்ற நிலைகளிலும் தலைசுற்றல் ஏற்படும். இதை வெர்டிகோ பாதிப்பில் இருந்து வேறுபடுத்த வேண்டும்.
சித்த மருத்துவம்:
1) துளசிச் சூரணம் ஒரு கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. ஆகியவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும்.
2) கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
3) ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மல்லி விதை, மிளகு, கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
4) தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
5) கிராம்பு 1, அன்னாசிப்பூ 1, இஞ்சி, எலுமிச்சை இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
6) படுக்கையை விட்டு திடீரென எழும்பக் கூடாது.
- தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
- சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம்.
வாய் துர்நாற்றம் என்பது மூச்சு விடும் போது வாயில் இருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை அல்லது உணர்வாகும். இதற்கு பெரும்பாலும் வாய் அசுத்தம் காரணமாக இருந்தாலும் சில சமயங்களில் நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் இடுக்குகளில் அதிக உணவுத் துகள்கள் தங்குதல், மோசமான வாய் சுகாதாரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நீர்ச்சத்து குறைபாட்டால் வாய் வறட்சி ஆகியவை பொதுவான காரணங்களாகும்.
சர்க்கரை நோய், குடல் புண், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (ஈறு தொற்று, சீழ்) பல் சிதைவு, தொண்டை அழற்சி, செரிமானக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, மன அழுத்தம் ஆகியவை மருத்துவக் காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக மசாலா கலந்த உணவுகளை (பூண்டு, வெங்காயம்) உண்ணும் போது அவை வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் தொற்று மற்றும் வாய் வறட்சி ஏற்படுவதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் குளுக்கோஸ் ஆற்றலை பயன்படுத்தாமல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்த முயற்சிக்கும் போது கீட்டோன்ஸ் அதிகரிப்பதாலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாயில் பாக்டீரியா தொற்று அதிகரித்து வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகள் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்:

தினமும் இரண்டு முறை (காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்) பல் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது, தினமும் நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று குளோர்ஹக்ஸிடின் கொப்பளிப்பான் பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன.
- டென்ஷன் தலைவலி தான் நிறைய பேருக்கு இருக்கிறது.
எரிச்சலடைந்த, சினமடைந்த, சேதமடைந்த, வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன. சுமார் 150-க்கும் மேலான தலைவலி வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான தலைவலிகள் ஆபத்தானதல்ல. ஆனால், சில தலைவலிகள் நமது உடலிலுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளினால் வருவதாக இருக்கலாம்.
டென்ஷன் தலைவலி:
இந்த வகை தலைவலி தான் அதிகமாக நிறைய பேருக்கு இருக்கிறது.

கடுமையான ஒற்றைத் தலைவலி:
இதைத்தான் `மைக்ரேன்' என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. தினம் தினம் புதுப்புது பிரச்சினைகளினால் உண்டாகும் தலைவலி. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்துள்ள நைட்ரேட் பொருள், மதுவகைகளில் குறிப்பாக சிவப்பு ஒயின், சிகரெட்டிலுள்ள நிகோட்டின், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் அதிக நீரிழப்பு ஏற்பட்டவர்கள், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், போதுமான நேரம் தூங்காதவர்கள், எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், டி.வி. உபயோகிப்பவர்கள், கண் பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி போடச் சொல்லியும் போடாதவர்கள், அடிக்கடி தொடர்ந்து தும்முபவர்கள், இருமுபவர்கள், இவர்களுக்கெல்லாம் தலைவலி அடிக்கடி வரலாம்.
இதுபோக, தினமும் தூங்கும் நேரம் மாறிவிட்டால், திடீரென கடின உடற்பயிற்சி செய்தால், சரியான வேளைக்கு உணவை உண்ணாமல் விட்டுவிட்டால், தொடர்ந்து அதிக நேரம் சிரித்தால், அதிக நேரம் அழுதால், அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருந்தால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தொந்தரவால், தினமும் தலைக்கு குளித்தால், தலைக்கு குளித்தபின் தலையை சரியாக துவட்டவில்லை என்றால், மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து அதிகமாக உபயோகப்படுத்தினால், வயிறு சரியாக முழுவதும் காலியாகவில்லை என்றால், சென்ட் வாசனை, நாற்றம் முதலியவைகளை முகர்ந்தால், பிடிக்காதவர்களை பார்த்தால் கூட சிலருக்கு தலைவலி வந்துபோக வாய்ப்புண்டு.

சிறுநீரகம், மூளை முதலியவைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி ஏற்படும். உங்களுடைய அன்றாட வேலைகளை, உங்கள் மனநிலையை தலைவலி பாதிக்கிறதா என்பதை உங்களுடைய குடும்ப டாக்டரிடம் விவரமாகச் சொல்லவும்.
அடிக்கடி வரும் தலைவலி, தொடர்ந்து இருக்கும் தலைவலி, தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றாலும் சரி, கடின வேலையினால் தலைவலி வந்தாலும் சரி உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்க வேண்டும்.
பிடிக்காத சென்ட், உணவு, பிற பொருட்கள் முதலியவற்றை ஒதுக்கினாலே தலைவலி தானாகவே பறந்துவிடும். தலைவலி என்பது ஒரு நோயல்ல. உடலில் மறைந்திருக்கும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே. மனதில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறியே.
எனவே எது உடலுக்கும், மனதுக்கும் ஒத்துவரவில்லை என்பதை முடிந்தவரை நீங்களே கண்டுபிடித்து அதைத் தவிர்த்துவிடுங்கள். தலைவலி பறந்துவிடும்.
- கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.
- நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் லேப்டாப், கணிணி முன்னிலையில் உட்கார்ந்து வேலை செய்யும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் கூட நிறைய பேருக்கு முதுகுவலி, கைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்த கணினி கைவலி பிரச்சனை பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில் இது ஒரு நபரின் வாழ்க்கையை பொருத்தது. அவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறார் என்பதையெல்லாம் பொருத்து அமைகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த கணிணி கைவலியின் முதல் அறிகுறியாக முள்ளெலும்பு உணர்வுகள் முதல் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உணர்வு இழப்பு மற்றும் உணர்வின்மை வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

கம்பியூட்டரிலேயே உட்கார்ந்து டைப் பண்ணுவது, மவுஸ் கிளிக் செய்வது சில மணி நேரம் வேண்டும் என்றால் சவுகரியமாக தோன்றலாம். ஆனால் நேரம் ஆக ஆக கைவலிக்க ஆரம்பித்து விடும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரே மாதிரியான உடல் அசைவுகளை செய்து கொண்டே இருக்கும் போது அந்த பகுதி தசைகள் வலிக்கத் தொடங்கி விடுகின்றன.
இந்த வலி அப்படியே அவர்களின் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வரை பரவ ஆரம்பித்து விடுகிறது. வலியால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க நீங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

என்னசெய்யலாம்...?
வேலை பார்க்கும் சமயங்களில் சிறிது ரிலாக்ஸ் மற்றும் கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம். தசைகள் ஓய்வெடுக்க சிறிது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம். அதே நேரத்தில் கைவலியை குறைக்க குளிர் ஒத்தடமும் கொடுக்கலாம்.
இதைத் தவிர்த்து நீங்கள் வேலை செய்யும் இடம், மேஜை உங்களுக்கு செளகரியமாக இல்லை என்றால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள கீபோர்டு, ஹேண்ட் ரெஸ்ட், கம்ப்யூட்டர் மவுஸ், ஜாய்ஸ்டிக் போன்றவற்றை உங்க பயன்பாட்டிற்கு வசதியாக எந்த இடத்தில் சவுகரியமாக இருக்குமோ அங்கே வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் தொடர்ந்து கைகளை பயன்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள். சிறிது நேரம் கை தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள். அதே மாதிரி நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும். நீங்கள் உட்காரும் விதத்திற்கு ஏற்றவாறு சரி செய்யக்கூடிய நாற்காலியை பயன்படுத்துங்கள். நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள்.
அதே மாதிரி உங்க கம்ப்யூட்டர் மானிட்டரும் உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்யக் கூடிய வகையில் அமைந்திருப்பது நல்லது. அப்பொழுது தான் உங்க கோணத்திற்கு ஏற்ப திருப்பிக் கொள்ள முடியும். கைகளுக்கான தன்னியக்க தசைபயிற்சி போன்றவைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- தைராய்டு உணவுமுறையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.
தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்னர் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சனையால் பத்து பெண்களில் ஒரு பெண்ணாவது கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ ஆய்வின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் உள்ளது.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தைராய்டு நோய் நமக்கு உள்ளது என்பது பல பெண்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு இந்த நோய் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமலேயே தாக்குதலை ஏற்படுத்தும். திருமணம் ஆகி கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் என வளர்ச்சி ரீதியாக தைராய்டு நோய் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்த தைராய்டு பிரச்சனையை சரி செய்ய பல பெண்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து மருத்துவர்களை அணுகி தினசரி மாத்திரைகளை போட்டு சலித்து போய் இருப்பார்கள்.

தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், அது நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், அதில் தொந்தரவு ஏற்பட்டால், சோர்வு, முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, சளி போன்ற பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.
தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தான மற்றும் சமச்சீரான உணவு தைராய்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவாது, ஆனால் சரியான மருந்தை எடுத்துக் கொண்டால், அறிகுறிகளை கண்டிப்பாக குறைக்கலாம். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இதன் அறிகுறிகளைக் குறைக்க உதவும். தைராய்டில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் பானம் பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டு வைத்தியம்
தைராய்டு பிரச்சனையை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது. இதை நீங்கள் சரியான அணுகு முறையில் செய்து வந்தால் தைராய்டு நோய் பிரச்சனைகளில் இருந்து சில காலங்களில் விடுபடலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
மாதுளை- 1
கேரட்- 1
பூசணி விதைகள்- 1 டீஸ்பூன்
சூரியகாந்தி விதைகள்- 1 டீஸ்பூன்
செய்முறை:
200 மிலி தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். விதைகளைத் தவிர அதாவது கொத்தமல்லி, கேரட், மாதுளை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது விதைகளை மேலே போட்டு அரைக்க வேண்டும். தைராய்டு ஜூஸ் தயார். இதை தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் தாராளமாக தினமும் குடிக்கலாம்.

மற்றொரு ஜூஸ்
தேவையான பொருட்கள்
தண்ணீர்- 1 கிளாஸ்
கொத்தமல்லி விதைகள்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 8-10
உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் தண்ணீர், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும் அல்லது வெதுவெதுப்பானதும் வடிகட்டி எடுத்து சாப்பிடலாம்.






