என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madras Eye"
- மற்ற சமயங்களை விட கோடை காலத்தில் கண் நோய் அதிகமாக பரவக்கூடும்.
- மெட்ராஸ் ஐ மற்றும் அலர்ஜி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
கோடை காலங்களில் சுட்டெரிக்கும் சூரிய கதிர்வீச்சுகளால் உமிழப்படும் வெப்பம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கும் வித்திடும். அவற்றுள் கண் நோய்களும் ஒன்று. மற்ற சமயங்களை விட கோடை காலத்தில் கண் நோய் அதிகமாக பரவக்கூடும்.
இந்த கண் நோய் எதனால் ஏற்படுகிறது? எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்? கண் நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? பாதிப்பு ஏற்பட்டால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி? கண் நோய்களை தடுக்கும் உணவு முறைகள், சுகாதார நடைமுறைகள் என்னென்ன?
கண் சிவத்தல்
''கோடை காலத்தில் மெட்ராஸ் ஐ மற்றும் அலர்ஜி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். சூரியனில் இருந்து புற ஊதாக்கதிர்கள் அதிகமாக வெளிப்படுவது, சுற்றுச்சூழல் மாறுபாடும், மாசுபாடும் ஒத்துக்கொள்ளாதது, பூக்களில் இருந்து வெளிப்படும் நுண் மகரந்த துகள்கள் காற்றில் கலந்து கண்களுக்குள் விழுவது போன்ற காரணங்களால் அலர்ஜி சார்ந்த கண் நோய் ஏற்படும். கண்களில் அரிப்பு, எரிச்சல், கண் சிவத்தல், கண் வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். கண்களில் இருந்து நீர் வடியும்.
அதில் வைரஸ், பாக்டீரியா கிருமிகள் கலந்திருக்கும். அப்போது கண்களை கைகளால் துடைத்தால் அந்த கிருமிகள் கைகளில் படிந்துவிடும். அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிருமியின் தன்மையை பொறுத்து நோயின் வீரியம் அமைந்திருக்கும். பாக்டீரியா கிருமிகள் என்றால் சொட்டு மருந்து போன்ற முறையான சிகிச்சை மூலம் ஓரிரு நாட்களில் குணப்படுத்தி விடலாம். வைரஸ் கிருமியாக இருந்தால் இரண்டு வாரங்களாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை முறைகளை பின்பற்றினால் போதும்.
கண்களை பார்ப்பதால் பரவாது
மெட்ராஸ் ஐ அல்லது அலர்ஜியால் கண் நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்களின் கண்களை பார்ப்பதால் மற்றவர்களுக்கு பரவாது. கைகள் மூலம்தான் மற்றவர்களுக்கு பரவும் என்பதால் சானிடைசர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண்களை தொடக்கூடாது. கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை தொடுவதை தவிர்க்க முடியும்.
சிலருக்கு கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் அரிப்பு, கண் சிவத்தல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும். இத்தகைய அலர்ஜி வராமல் தடுக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் சன் கிளாஸ் அணிய வேண்டும். ஏனெனில் கண்புரை, விழித்திரையில் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு சூரிய கதிரில் வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள்தான் காரணம்.
சன் கிளாஸ் அணிவதன் மூலம் அத்தகைய பாதிப்புகளை தடுக்கலாம். கண்ணாடி அணிபவர்கள் கோடை காலங்களில் மட்டுமாவது 'பவர் சன் கூலிங் கிளாஸ்' அணியலாம். 'போட்டோ குரோமோடிக் சன் கிளாஸ்' அணிவதும் நல்லது.
ஜில் ஒத்தடம்
சளி, இருமல் காரணமாக தொண்டையில் வலி ஏற்படும். அப்போது தொண்டையில் சேரும் சளி மூலமும் சிலருக்கு கண் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் அரிப்பு, எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். 'ஜில் ஒத்தடம்' கொடுப்பதன் மூலம் அலர்ஜியை தடுக்கலாம். ஐஸ் கட்டி அல்லது குளிர்ந்த நீரை துணியில் நனைத்து கண்களை சுற்றியுள்ள பகுதியில் 5 முதல் 10 விநாடிகள் வரை காலை, மாலை இருவேளை ஒத்தடம் கொடுக்கலாம். அப்படியும் அலர்ஜி குறையவில்லை என்றால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கண் கட்டி
கோடை காலத்தில் சிலருக்கு கண் மீது கட்டி உருவாகும். வெயிலில் வியர்க்கும்போது உடலில் எண்ணெய் சுரப்பு அதிகமாகும். இமை முடி அருகிலும் எண்ணெய் கசியும். அது வெளியே வராமல் உள்ளேயே தேங்கும்போது கண்களில் கட்டி உருவாகிவிடும். மாத்திரை, ஆயில்மெண்ட் மூலம் சரி செய்துவிடலாம். சுடு நீரை துணியில் நனைத்து வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுப்பதும் பலன் தரும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காட்டன் பட்ஸ், பேபி ஷாம்பு கொண்டு கண் இமை பகுதிகளை சுத்தம் செய்வதன் மூலமும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
அழுத்தம் கொடுக்கக்கூடாது
குழந்தைகள் சாக்லெட், மிட்டாய் சாப்பிட்டுவிட்டு கைகளை முறையாக கழுவவில்லை என்றாலும் நோய்த்தொற்று உண்டாகும். வெளியே சென்று விளையாடும்போது மலர்களில் உள்ள நுண் துகள்கள் காற்றில் கலந்து கண்களில் விழும்போது கண் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அந்த சமயத்தில் கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகும் வலி இருந்தால் கண் மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரோக்கியம் காக்கும் உணவுகள்
கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், கண் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்களை உட்கொண்டாலே போதுமானது. கூடுமானவரை வீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் கலர் பொடி சேர்த்து சாப்பிடுவதால் சிலருக்கு கண் அலர்ஜி வரக்கூடும்.
குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் பப்பாளி, கேரட், மாம்பழம் உள்பட எல்லா வகையான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. அவற்றில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கைகளையும், முகத்தையும் அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்திருப்பதன் மூலமே நோய்த்தொற்று வராமல் தடுத்துவிடலாம்.
- கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது ஒரு வைரஸ் தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று உள்ளவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கண்களில் உறுத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் கருவிழி பாதிப்படையக்கூடும். கண்களில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.
செய்ய வேண்டியவை:
* மெட்ராஸ் ஐ அறிகுறிகள் வெளிப்படத்தொடங்கினால் கைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கண்களை அழுத்துவது, மென்மையாக விரல்களால் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
* கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும். அதனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
* கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. அது விரைவில் நோய் தொற்றுவில் இருந்து விடுபட உதவும்.
* வைட்டமின் ஏ, சி போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* மெட்ராஸ் ஐ கண்கள் பார்ப்பது மூலம் பரவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் தங்கி இருக்கும் வைரஸ்கள் மூலமே பரவும் என்பதால் சுத்தத்தை தீவிரமாக பேண வேண்டும்.
* நோய் பாதிப்புக்கு ஆளானவர் கருப்பு வண்ண கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.
* குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை:
குடும்ப உறுப்பினர்களை தொட்டு பேசுவது, கைகளை சுத்தம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது.
* சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது. உரிய பரிசோதனை செய்த பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* மருந்து போட்ட பின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாக பரவும். அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர் தனி அறையில் அமர்ந்து பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
* குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைரஸ் தொற்றின் தாக்கம் மாறுபடக்கூடும். அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளையே உபயோகப்படுத்த வேண்டும்.
- நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எழும்பூர் சி.டி.நாயகம் பள்ளியில் மெட்ராஸ் ஐ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
பருவமழைக்கு முன்பு கண் நோய் வருவது இயல்புதான். அதே நேரம் இயல்பைவிட குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
சென்னையில் பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் குழந்தைகளுக்கும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை நடத்தப்படும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கடந்த 2 மாதங்களாக குஜராத், கோவா, ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவி வருகிறது. இதற்காக அச்சப்பட தேவையில்லை.
சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
திருவாரூரில் இறந்த மருத்துவருக்கு டெங்கு, டைபாய்டு காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து பரவும் நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.
- நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.
பொன்னேரி:
பொன்னேரி மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மெட்ராஸ் ஐ கண்நோய்க்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த கண்நோயாால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் 2 வாரத்துக்கும் மேல் இதனால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-
மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று ஆகும். கண்ணின் விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது எளிதில் பரவக்கூடியது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்து வாங்கி ஊற்ற வேண்டாம்.
மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் கூசும் பொருட்களை பார்க்க வேண்டாம். நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. வெளியில் வெயிலில் அதிகம் செல்ல வேண்டாம். செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், குளிர்ச்சியான நீர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று வந்தால் கைகளை உடனடியாக கழுவ வேண்டும. இதுபற்றி பயப்படத் தேவையில்லை. இதற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
- மெட்ராசை மெட்ராஸ்-ஐ வைரஸ்கள் போட்டு தாக்கி வருவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
- எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது.
விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு குறைந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் பரவ தொடங்கி இருக்கிறது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக செல்கிறார்கள். தானாக சரியாகி விடும் என்று இருப்பவர்களும் அதிகம் உண்டு. எனவே பரவல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கண் எரிச்சல், விழிப்பகுதி சிவப்பாக மாறியிருப்பது. எப்போதும் நீர் சுரப்பது. தூக்கத்தில் இமைகள் ஒட்டிக்கொள்வது இதன் அறிகுறியாகும்.
மெட்ராஸ்-ஐ காற்றின் மூலமும், மாசு மூலமும் பரவலாம். அதேபோல் கண்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினாலும் நோய் தொற்று ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மெட்ராசை மெட்ராஸ்-ஐ வைரஸ்கள் போட்டு தாக்கி வருவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, மெட்ராஸ்-ஐ வந்தால் 5 நாட்களில் குணமாகி விடும். இதற்கு தேவையான மருந்துகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் கையிருப்பில் உள்ளது.
இவை எளிதில் மற்றவர்களுக்கு பரவும் தன்மையுடையது என்பதால் கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த நோய் எளிதில் குணமாக கூடியது. அதே வேளையில் அலட்சியப்படுத்தினால் பார்வையிழப்பை கூட சந்திக்க நேரிடும் என்றனர்.
- கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
- நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
திருப்பூர் :
தமிழகத்தில் தற்போது மெட்ராஸ் ஐ பரவி வருகிறது.திருப்பூரில் பாதிப்பு இல்லை. இந்நிலையில், விழிப்புடன் இருந்தால் மெட்ராஸ் ஐ பாதிப்பை தவிர்க்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, பாதிப்பு வேகமாகப் பரவும். இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.
இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும் சரியான முறையில் டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஞ்சள், சொட்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.பாதிக்கப்பட்டவரின் துண்டு, தலையணை, கவர்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.
எனவே நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்
- குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
- 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
சென்னை:
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் இருக்கிறது.
எழும்பூர் கண்நோய் மருத்துவமனையை போன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 10 இடங்களில் கண் மருத்துவம் பார்க்கும் மையங்கள் இருக்கிறது.
இதில் எழும்பூரில் இருக்கிற மண்டல கண் மருத்துவயியல் நிலையம் என்பது கண் மருத்துவத்தில் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தினமும் 4000 முதல் 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
சென்னையில் 10 கண் நோய் மருத்துவ மையங்கள் இருப்பதை போலவே தமிழ்நாடு முழுவதிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், சில வட்டார அரசு மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு கண் மருத்துவ மையங்கள் இயங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 1.50 லட்சம் பேரில் யாருக்கும் பார்வை இழப்பு என்ற பாதிப்பு இல்லை.
இந்த பாதிப்பு கண்ணின் முன் பகுதியான வெள்ளைப்படலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு கண்நோய் ஆகும். இந்த வைரஸ் என்பது மண்டல கண் மருத்துவவியல் நிலையத்தின் சார்பில் அதன் மாதிரிகளை எடுத்து கிண்டியில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பிறகு அடினோ மற்றும் என்ரோ என்று சொல்லக்கூடிய வைரஸ் தாக்குதலினால் மெட்ராஸ் ஐ வருகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இது எப்படி உறுதி செய்யப்படுகிறது என்றால் கண்ணில் உறுத்தல் இருக்கும். சிவந்த நிறமாக மாறும். அதிக கண்ணீர் சுரக்கும். அரிப்பு ஏற்படும். கண் வீங்கும். கண்ணில் அடிக்கடி அழுக்கு சேரும். கண் இமைகள் ஒட்டிக்கொள்ளும். இவைதான் மெட்ராஸ் ஐ அறிகுறிகள் ஆகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கைகளினால் தொடுவது கூடாது. கண்களை தொட்டு விட்டு அக்கம் பக்கம் இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் அந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும்.
எனவே குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
இது விரைவாக பரவும் தன்மையுடையது என்பதால் மற்றவர்களுக்கும் இந்நோய் பாதிப்பு உடனடியாக வரும். எனவே இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண் சொட்டு மருந்தை தாங்களாகவே கடையில் வாங்கி போட்டுக்கொள்ளக்கூடாது.
சுய சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. முறையாக கண் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையினை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
கண்நோய்க்கு போடப்படும் மருந்தின் தன்மை, வீரியம் போன்றவைகள் ஒவ்வொரு மருந்துக்கும், நோயின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும் மாறுபடும். எனவே கடையில் போய் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி போட்டுக் கொள்வதன் மூலம் தங்களுடைய கருவிழிகள் பாதிப்புக்கு உள்ளாகும். பார்வை இழப்பும் ஏற்படும்.
எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டால் அவர்களுக்காக வாங்கும் சொட்டு மருந்து பாட்டிலை வேறு ஒருவருக்கு பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் மெட்ராஸ் ஐ கண்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
- தற்போது தினமும் சராசரியாக 50 நோயாளிகள் வருகிறார்கள். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் அதிகமான நோயாளிகள் வருகிறார்கள்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெண் படல சுழற்சி எனப்படும் 'மெட்ராஸ் ஐ' கண்நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் வரை இந்த நோய் மிகவும் குறைவாக காணப்பட்ட நிலையில் தற்போது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக் கூடியது. மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு அந்த நோய் தொற்று பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும்.
பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ கண்நோய் ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மெட்ராஸ் ஐ பாதிப்பு பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் மெட்ராஸ் ஐ கண்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் சராசரியாக 50 நோயாளிகள் வருகிறார்கள். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் அதிகமான நோயாளிகள் வருகிறார்கள்.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது:-
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு எளிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை.
மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இது 5 நாட்களில் குணமாகக்கூடியது தான். அதே நோரத்தில் அலட்சியப்படுத்தினால் பார்வை இழப்பு கூட நேரிடும். எனவே அலட்சியம் காட்டாமல் கண் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.
மேலும் மருந்துகளை சுயமாக வாங்கி அவற்றை பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இலவசமாக சிகிச்சை கிடைக்க கூடிய எழும்பூர் கண் மருத்துவமனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்தல், கண்கள் அருகே கைகளை கொண்டு செல்லாமல் இருக்கும் பட்சத்தில் மெட்ராஸ் ஐ தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-
'மெட்ராஸ் ஐ' தொற்று தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், டவல் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகக் தான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வெளியேறும் நீரை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொற்று ஏற்படும் போது பயன்படுத்திய கான்டாக்ட் லென்சுகளை பயன்படுத்தக் கூடாது. டாக்டர்கள் பரிந்துரைப்படி புதிய கான்டாக்ட் லென்சுகளை மட்டுமே அணிய வேண்டும்.
'மெட்ராஸ் ஐ' கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தங்களது தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவும் என்பதால் கண்களில் இருந்து வெளியேறும் நீர் போன்ற திரவ சுரப்பு முற்றிலும் நிற்கும் வரை வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்ணில் அரிப்பு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு கண் வலி ஏற்பட்டால் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் பருவ கால மாற்றத்தால் 'மெட்ராஸ்-ஐ' என்ற கண் வலி வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
இதையடுத்து எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்படுகிறது. திங்கள் கிழமை முதல் இந்த வார்டு செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்ணில் அரிப்பு ஏற்படும். கண்ணில் இருந்து வெளியேறும் ஒரு வகை திரவத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரவும். ஆரம்பத்தில் நாள்தோறும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இப்போது அது மேலும் அதிகரித்துள்ளது.
கண் நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் வைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு கண் வலி ஏற்பட்டால் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கண் நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த வழி. வெளியே செல்லும்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மூக்கு கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- காலையில் தூங்கி எழும்போது கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி இமைகளை பிரிக்க முடியாதபடி ஒட்டி கொள்ளும்.
- கண் வலி வந்தவர்கள் பயன்படுத்தும் டவல், போர்வை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
சென்னை:
சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற கண் நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த வெண்படல அழற்சி நோய்க்கு கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர்வடிதல், கண் சிவந்து இருத்தல், வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை அறிகுறியாகும்.
காலையில் தூங்கி எழும்போது கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி இமைகளை பிரிக்க முடியாதபடி ஒட்டி கொள்ளும்.
உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிரமான பிரச்சினையாகி விடும். இதற்கு சுயமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மெட்ராஸ்-ஐ வைரஸ் தாக்கிய கண்களில் இருந்து சுரக்கும் திரவங்களின் வழியே மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே கண்நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்களில் இருந்து வெளியேறும் திரவத்தை துடைக்க 'டிஷ்யூ' பேப்பரை உபயோகப்படுத்தலாம் அல்லது மிகவும் மெல்லிய துணிகளை பயன்படுத்த வேண்டும்.
கண் வலி வந்தவர்கள் பயன்படுத்தும் டவல், போர்வை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
- கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக கைக்குட்டை வைத்து கண்ணில் இருந்து வடியும் நீரை துடைக்க வேண்டும்.
- கண்களை விரல்களால் அழுத்தக்கூடாது என்று கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
'மெட்ராஸ் ஐ' என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுகிறது. கண் உறுத்தல், சிகப்பு நிறமாக மாறுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை கண் நோயின் அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள், அதிகளவில் காணப்படுகின்றனர். பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்தோ, டியூப் மருந்தோ வாங்கி பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இது ஒரு வகை தொற்றாகும். அவற்றின் மூலம் கண்ணில் கிருமி தொற்றுகிறது. இது மற்றவர்களுக்கு பரவக்கூடியது.
அதனால் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக கைக்குட்டை வைத்து கண்ணில் இருந்து வடியும் நீரை துடைக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்களை விரல்களால் அழுத்தக்கூடாது என்று கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்