என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    முக காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகரித்து கொண்டே வரும் பொது சுகாதார சவாலாகும்.
    முக காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகரித்து கொண்டே வரும் பொது சுகாதார சவாலாகும்.

    காரணிகள்: சாலை விபத்துகள், தாக்குதல்கள்.

    விளையாட்டுகளில் ஏற்படும் காயங்கள் மற்றும் விழுதல்.

    இவற்றால் முக காயங்கள் ஏற்படுகின்றன.பொதுவாக இவை ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றன.

    சாலை விபத்துகள் இந்தியாவில் மரணத்திற்கான முக்கிய காரணமாக இருக்கின்றன. குடிப்பழக்கம் இதனோடு நெருங்கிய தொடர்புடையது. அதிக வேகம், சாலை விதிகளை மதிக்காமல் செல்வது. நெடு நேர பயணத்தில் ஏற்படும் சோர்வு, மோசமான சாலைகள் இவையே இதற்கான முக்கிய காரணங்களாகும். பொதுவாக முகக்காயங்கள் மற்ற உயிருக்கு ஆபத்தான தலைக்காயங்கள், கழுத்து நரம்பு காயங்கள், நெஞ்சு மற்றும் வயிற்றுக்காயங்களுடன் சேர்ந்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கின்றது. இவற்றை பரிசோதனை மூலமும் , OPG X-Ray, 3D CT Scan முதலான ஆய்வுகள் மூலமும் கண்டறிந்து உடனடி சிகிச்சை செய்யவேண்டும்.

    அறிகுறிகள்: முக வீக்கம், கண்களை சுற்றி மற்றும் கண்களுக்குள் இரத்தக்கட்டு, முக தோற்றத்தில் மாற்றம், கண் பார்வையில் மாறுபாடு, காது கேட்பதில் மாற்றம், தலை சுற்றல், மூக்கு மற்றும் காதுகளில் இருந்து இரத்தம் மற்றும் திரவங்கள் வடிதல், சுவாச தடை, முகத்தின் கீழ் பாகத்தில் உணர்வு நிலையில் மாற்றம், பற்களை கடித்து மெல்லுவதில் சிரமம், வாய் திறப்பதில் கஷ்டம் இவை முக எலும்பு முறிவிற்கான அறிகுறிகளாகும்.

    முகப்பகுதி உடலின் முக்கியமான செயல்பாடுகளான பார்வை, முகர்தல், சுவாசம், உண்ணுதல் மற்றும் பேசுதல் ஆகியவை சம்பந்தப்பட்டிருப்பதால் இக்காயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாடை எலும்பு (Mandible) (40%), மேல் தாடை எலும்பு (Maxilla) (25%) ஜைகோமா (Xygoma) (20%) மற்றும் மூக்கு (Nasoethmoid) (5%) ஆகியவை முக்கியமான எலும்புகளாகும்.

    இந்த காயங்களை தாடை எலும்புகளை கம்பிகளை கொண்டு கட்டுதல் (Inter Maxillary Fixation) , சிறு உலோக தகடுகள் மற்றும் திருக்குகள் கொண்டு பொருத்துதல், நீராகாரம் மற்றும் மென்மை யான உணவுகள் உட்கொள் ளுதல், வாய் சுகாதாரம் (Oral Hygiene) மற்றும் மருந்துகள் (Antibiotics) மூலம் சரி செய்ய முடியும்.

    முக காயங்களின் பின்விளைவுகள் : (Complications)

    மூச்சு திணறல், புரை ஏறுதல், இரத்தப்போக்கு மற்றும் சீழ் பிடித்தல் இவை உடனடி விளைவுகளாகும்.

    நாள் பட்ட விளைவுகள்: முகத்தழும்புகள் மற்றும் விகாரங்கள் நாள்பட்ட சுவாச அடைப்புகள், பார்வை இழப்பு, இரட்டை பார்வை, மணங்களை நுகர்வதில் சிரமம், முக உணர்வு மாற்றம், பற்களை கொண்டு உணவு மெல்வதில் சிரமம் ஆகியவை நாள்பட்ட விளைவுகளாகும்.

    Dr. T.செந்தில் சிவமுத்து M.S., M.Ch.(Platic Surgery) Consultant Plastic Surgeonகாந்திமதி நர்சிங் ஹோம், டவுன்.
    கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.
    பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்வு ஆகும். இந்த பிரசவத்திற்கு பிறகான முடி உதிர்வு பிரச்சனை என்பது பல பெண்கள் சந்திக்க கூடியது தான். கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.

    கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கிய சப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.

    முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.

    சால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு, பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாமல் வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும். முடி உதிர்வதை தடுக்கும்.

    மாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
    தினமும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முதியோர்கள் உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள முடியும்.
    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் முதலில் வரக்கூடிய பிரச்சனை Imbalance என்கிற நடையில் தடுமாற்றம். நடக்கும்போது நாம் தடுமாற்றம் இல்லாமல் நடக்க நம் சிறுமூளையின் செரிபெல்லம்தான் உதவுகிறது. வயதாக ஆக சிறுமூளை பகுதி தளர்வடையும் போதுதான் சிலர் மிகவும் மெதுவாக நடக்கிறார்கள். சிலரால் சரியாக நடக்க முடிவதில்லை. பெரும்பாலானவர்கள் தனித்து நடக்க முடியாமல், எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள். சி

    இது தவிர வயதாகும்போது மூட்டுத் தேய்மானம், கணுக்கால் மூட்டு இறுகுதல், கண் பார்வை பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல், உடலில் ரத்த ஓட்டம் குறைதல் போன்ற பிரச்னைகளும் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.

    மேற்கண்ட பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் முதியவர்களுக்கான உடற்பயிற்சிகளை வரையறுக்க முடியும். உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு வகை உண்டு. நின்றுகொண்டே செய்யும் பயிற்சிகள், நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள்.

    நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள். குதிகாலில் நிற்பது, முன்னங்கால் அல்லது விரல்களில் நிற்பது, முன்னங்காலை வைத்து அதன் பின்பகுதியைத் தொடுமாறு நேர்க்கோட்டில் மற்றொரு காலின் விரலை வைத்து நின்றுகொள்ளுதல், நின்ற இடத்திலேயே காலை மாற்றி மாற்றி தூக்குதல், நின்ற இடத்திலேயே தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போன்ற பயிற்சிகள் இவற்றில் அடங்கும்.

    நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள் நேராக நடப்பது, பக்கவாட்டில் நடப்பது, பின்புறமாக நடப்பது ஒரு கோடு கிழித்து அதன் மேல் நடப்பது, நடந்துகொண்டே கழுத்தை மேலேயும் கீழேயும் அசைத்தல், கைகளை ஆட்டிக்கொண்டே நடப்பது, முன்னங்காலில் நடப்பது, குதிகாலில் நடப்பது போன்ற பயிற்சிகள் இந்த வகையில் அடங்கும்.

    இந்த பயிற்சிகளை டிரெயினர் ஒருவரின் ஆலோசனையின்படி ஒருமுறை கற்றுக் கொண்டுவிட்டு, பிறகு வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம். சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்டால் அதற்குரிய இயன்முறை மருத்துவ மையங்களில் சென்று சில சிறப்பு சாதனங்கள் / உபகரணங்களின் உதவியுடன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

    இவை தவிர உடலை உறுதியாக்கும்(Strengthening) பயிற்சிகளும் உள்ளன. 1 கிலோ அல்லது 500 கிராம் எடையுள்ள டம்புள்ஸ் எனும் எடைகளைப் பயன்
    படுத்தி இப்பயிற்சிகளைச் செய்யலாம். மேலும், டெர்ராபேண்ட்/ எலாஸ்டிக் பேண்ட்களைப் பயன்படுத்தி தசை நார்களை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

    நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள எலும்புகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளும் தசைகளின் நெகிழ்த்துத் தன்மையை அதிகப்படுத்தும் பயிற்சிகளும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்படும். இவை போன்ற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முதியோர்கள் உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

    மேலும், நடக்க முடியாத முதியவர்கள், ரத்த ஓட்டம் குறைந்த முதியவர்கள், பிற காரணங்களுக்காக மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்று முடிந்த பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மாறும்போது இதுபோன்ற உடற்பயிற்சிகள் மிகுந்த பலன் அளிக்கும். இவற்றை தினமும் காலை ஒரு மணிநேரமும் மாலை ஒரு மணி நேரமும் செய்வது நல்லது.
    தினமும் சிறுதானியங்கள், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று தினை கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - ஒரு கப்
    கோதுமை ரவை - அரை கப்
    அரிசி மாவு - கால் கப்
    தயிர் - ஒரு கப்
    தண்ணீர் - 2 கப்
    மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    சீரகம் - அரை தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 2

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 2

    தினை கோதுமை ரவா தோசை

    செய்முறை :


    இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த தினை அரிசி மாவு, வறுத்த கோதுமை ரவை, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

    தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

    சத்தான டிபன் தினை கோதுமை ரவா தோசை ரெடி.

    இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எல்லா இடங்களிலும் பரவலாக, எல்லாரையும் கவர்ந்து இழுப்பதாக இருக்கிறது -‘டிஜிட்டல்’ தொழில் நுட்பம். நவீன உலகில் வாழ்க்கையின் தவிர்க்க இயலாத அங்கமாக தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.
    சமூக வலைதளம், மின்னஞ்சல், கணினி வழிப் பணப்பரிமாற்றம் ஆகியன  உலகம் முழுதையும் தொழில் நுட்பத்தின் பக்கம் தள்ளி விட்டது. அதிலும் இளைஞர்கள் அத்தனை பேரும் ‘டிஜிட்டல்’ வாழ்க்கை முறையைத்தான் பெரிதும் விரும்புகின்றனர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ நல்லது தானே..? அந்த எண்ணத்தில்தான் ‘டிஜிட்டல் கல்வி’  பற்றிப் பேசுகிறது வரைவு அறிக்கை.

    ‘Digital Literacy and Computational Thinking’ என்கிற தனித் தலைப்பின் கீழ்,  டிஜிட்டல் கல்வி பற்றி அறிக்கை இவ்வாறு கூறுகிறது: ‘அடித்தள நிலையில் கல்வி கற்கும் எல்லாருக்கும் டிஜிட்டல் கல்வியை பாடத்திட்டம் ஒருங்கிணைக்கும்’. புரிந்தும் புரியாததும் போல் இருக்கிறதா..? ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம் ஆங்கிலத்தில் இதை விடவும் மோசமான முறையில் தரப்பட்டு இருக்கிறது.

    ‘கள நிலைமையில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு’ செயல்பட இருப்பதாக அறிக்கை சொல்கிறது. நமக்குத் தெரிந்த வரையில் ‘கள நிலைமை’ அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு ஏதுவாக இதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்பாக, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

    பள்ளி, கல்லூரிக் கட்டிடங்கள், வகுப்பறைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன..? மேற்கூரை இல்லாமல், அப்படியே இருந்தா லும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிற ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் எத்தனை..? போதிய அளவுக்கு மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல், அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மாணவர்களைத் தவிக்க விடுகிற கல்வி நிறுவனங்கள் நாடெங்கும் உள்ளன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்..?

    அவ்வப்போது நிதி ஒதுக்கீடு, கட்டு மானப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மறுப்பதற்கு இல்லை. ஆனாலும்  இவை எல் லாம் நிரந்தரமாக சரி செய்யப்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுளனவா...? பாதுகாப்பற்ற மோசமான பள்ளிச்சூழலில் இருந்து பிள்ளை களைக் காப்பாற்றுகிற வேலையை முழுவதுமாக நிறை வேற்றி விட்டுப்பிறகு டிஜிட்டல் கல்வி பற்றி சிந்திப்பதுதானே முறை யானதாக இருக்கும்..?

    இந்தக் கேள்வி டிஜிட்டல் கல்விக்கு எதிரானது அல்ல; மாறாக பிள்ளைகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடு; அவ்வளவு தான். இது மட்டுமல்ல மற்றொரு கேள்வியும் எழுகிறது. - புதிதாக தொழில் நுட்பம் சார்ந்த கல்வி முறைக்கு மாறுவதானால் அதற் கேற்ப நிதி ஒதுக்கீடு பாரபட்சம் இன்று செய்யப்படுமா..?
    அறிக்கையின் அம்சம் 4.6.7.1 கூறுகிறது ‘இன்னும் முன்னேறிய நிலையில், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படைத்திறன் ஆகிய ‘கணினிச் சிந்தனை’ ஏற்படுகிற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்’.

    ‘கணினிச் சிந்தனை’ என்றால் என்ன...? அடைப்புக் குறிக்குள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. கணினிகள் திறம்பட செயல்படுத்த முடிகிற வகையில் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை வடிவமைக்கிற சிந்தனை. (The though process involved in formulating problems and solutions in ways that computers can effectively execute)  

    மிகவும் கடினமாக இருக்கிறதா...? மன்னிக்கவும். இதுதான் வரைவு அறிக்கையின் மிகப்பெரும் குறை. எந்தத் திட்டமும், எளிதில் புரிந்து கொள்கிறாற்போல், தெளி வாகச் சொல்லப்பட வில்லை. இது தொடர்பான பாடங்கள், உயர் தொடக்கப்பள்ளி மற்றும் செகண்டரி பள்ளிகளில் பரவலாக வழங்கப்படும்.
    அறிக்கையில் தரப்பட்டுள்ள உறுதிமொழி இது. பார்ப்போம். நல்லது நடக்கலாம்.

    அடுத்ததாக வருகிறது - நெறி சார்ந்த, தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள். இது வேறு ஒன்றும் இல்லை; நல்ல குணங் கள், நல்ல ‘பழக்க வழக்கங்கள்’.  முன்பெல்லாம் பள்ளி வகுப்பறைகளில், நன்னடத்தை பற்றிய வகுப்புகள் அதிகம் நடைபெறும். கதைகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் என்று எது வாக இருந்தாலும், அதன் மூலம் நல்ல குணங்களும் நல்ல நெறி முறைகளும் சொல்லித்தரப்பட்டன.

    கடந்த தலைமுறையினர் மிகவும் ரசித்த ஒரு பகுதி இது. அதனால்தான் படிப்பு, கல்வியறிவில் என்னதான் பின் தங்கி இருந்தாலும் வாழ்க்கையின் நெறி முறைகளைப் பின்பற்றுவதில் முந்தைய தலைமுறையினர் தனித்து விளங்குகின்றனர். ‘பொய் சொல்லக்கூடாது; பிறர் பொருள் மீது ஆசை வைத்தல் கூடாது; பெரியவர்களை மதித்து நடத்தல் வேண்டும்;  துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் வேண்டும்‘ என்றெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பட்டது. நாம் அறிவோம். இயன்றவரை வாழ்க்கையில் பின்பற்றவும் செய்கிறோம்.

    ஆனால் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை பட்டி யல் இடுகிற நெறி முறைகளே வேறு. அரசமைப்பு சட்ட நெறிமுறைகள்; தனிநபர் சுதந்திரம் ஆகியன ‘புதிய நெறிமுறைகள்’ ஆகின்றன. இவை எல்லாம் மாணவர்களை நெறிப்படுத்துமா...? தறி கெட்டுப் போகச்செய்யுமா...? எவை எல்லாம் சிறுவயதில் சொல்லித்தரப்பட வேண்டும்; எவை எல்லாம் மனித குலத்துக்கு நன்மை பயக்கும்; எவை எல்லாம் ஒரு மனிதனை நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் என்பதிலேயே வரைவுக் குழுவுக்குக் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது.

    திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியன சட்ட நெறிமுறைகளைச் சொல்வது இல்லை. மனிதனை நல்லவனாக மாற்றி அமைக்க வல்லன. புதிய கல்விக்கொள்கை இந்தத் திசையில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ‘நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுப் பாடங்கள் நேரடி மற்றும் மறைமுக வகைகளில் பாடத்திட்டத்தில் மேம்படுத்தப்படும். மரபு சார்ந்த இந்திய நெறிமுறைகள் மாணவர்களுக்கு ஊட்டப்படும்‘.

    பொதுவாகவே திறன் மேம்பாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம்  குண நலன்களை வளர்ப்பதற்குத் தரப்படவில்லை. இது போன்ற குறைபாடுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. வரைவு அறிக்கை சொல்கிற ‘விழுமியங்கள்’ முற்றிலும் வேறு வகை.

    தொடர்புக்கு: - baskaranpro@gmail.com
    உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் ஆகியவை வெளியிடப்படும். பொதுவாக, நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்வி தொழில்துறையினருக்கு இருக்கும். இன்றைய சூழலில், இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சற்று மந்த நிலையில் இருப்பதால் கூடுதலான முதலீடுகள் சந்தையில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

    அதன் அடிப்படையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட் 0.35 சதவிகிதம் குறைக்கப்பட்டு, 5.40 சதவிகிதமாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த முடிவால் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த மூன்று முறை தலா 0.25 சதவிகித வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி தற்போது 0.35 சதவிகிதம் குறைத்துள்ளது.

    உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. இந்த சூழலில், ரெப்போ விகிதம் 5.75 சதவிகிதத்திலிருந்து 5.40 சதவிகிதமாகவும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ விகிதம் 5.50 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாகவும் ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    இந்திய உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம்.
    இந்திய உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம்.

    நம்முடைய அம்மா காலத்தில் எல்லாம் பூப்படைந்த பிறகு திருமணமாகும் வரை பெண்கள் அணிந்த ஆடை என்றால் அது பாவாடைத் தாவணிதான். காலங்கள் மாற மாற பாவாடைத் தாவணி என்பது கல்யாணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளும் ஆடையாக மாறியது. இப்பொழுது சிறு குழந்தைகளுக்குக் கூட பாவாடைத் தாவணி அணிவித்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது.

    பாவாடைத் தாவணியே அழகுதான். அதிலும் பட்டுப் பாவாடைத் தாவணி என்றால் கேட்கவா வேண்டும்.

    பாவாடைகளில் சிறிய ஜரிகை பார்டர், கையகல ஜரிகை பார்டர், ஒரு முழ ஜரிகை பார்டர் என்று இருந்தால் தாவணியில் ஜரிகைக் கரையும் அளவுகளில் மாறுபடும். சில பட்டுப் பாவாடைகளில் ஜரிகை பார்டர்கள் மட்டும் இருக்கும் மற்ற இடங்கள் பிளெயினாக இருக்கும். இன்னும் சிலவற்றில் ஜரிகை கட்டங்கள், புட்டாக்கள், யானை, குதிரை, அன்னப்பட்சி டிசைன்கள் பட்டு நூல்களில் டிசைன் செய்யப்பட்டோ அல்லது ஜரிகையிலேயே டிசைன் செய்யப்பட்டோ பார்டர்களுடன் இருக்கும்.

    இதில் வைர ஊசி டிசைன் பாவாடைகள், பாவாடை முழுவதும் கொடியும் பூக்களும் வருவது போல் ஜரிகைகள் நெய்து அவற்றுடன் சிறிய மற்றும் பெரிய பார்டர்கள், கான்ட்ராஸ்ட் நிறத்தில் பார்டர்கள், செல்ஃப் டிசைன் பாவாடைகள், போச்சம்பள்ளி டிசைன் பாவாடைகள், மென்பட்டுப் பாவாடைகள் இவற்றுடன் பட்டுத் தாவணியோ அல்லது கரைகளுடன் வரும் ஜ்யார்ஜெட் தாவணியோ அணியும் பொழுது அழகோ அழகு என்று சொல்லத் தோன்றுகின்றது.

    இப்பொழுது திருமண வரவேற்பிற்கு மணப்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய டிசைனர் பாவாடைத் தாவணி மிகவும் பிரபலம் என்று சொல்லலாம். மணப்பெண் அணிந்து கொள்ளும் பாவாடைத் தாவணி பெரும்பாலும் பனாரஸ் பட்டு மற்றும் டிசைனர் பாவாடைகளாகவே இருக்கின்றன.

    பாவாடையும், ஜாக்கெட்டும் ஒரே துணியில் தைக்கப்பட்டு அதற்கு வேறு ரகத்துணியில் தாவணி அணிவது ஒரு ஸ்டைல் என்றால் பாவாடை, தாவணி, ஜாக்கெட் மூன்றும் வேறு வேறு துணிகளில் அணிந்து கொள்வதும், ஜாக்கெட்டும் தாவணியும் ஒரே மாதிரி கலர் மற்றும் டிசைனில் இருக்க பாவாடையானது செல்ஃப் டிசைன் மற்றும் கலரில் இருப்பது போன்றும் அணிந்து கொள்கிறார்கள்.

    நம்முடைய பாவாடைத் தாவணி என்பது வடக்கில் காக்ரா சோளி, சனியா சோளி லெஹங்கா என்று சிறு மாற்றங்களுடன் அணியப்படுகின்றது. பாவாடை மற்றும் ஜாக்கெட்டில் அதிகப்படியான எம்ப்ராய்டரி மற்றும் ஜர்தோஷி, குந்தன் வேலைப்பாடுகள் அதற்கு அணியும் தாவணியானது ஜ்யார்ஜெட் துணியில் எளிமையாக அணிந்து கொள்வது போல் வடிவடைக்கப்பட்டு வந்திருப்பதும் பெண்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது.

    லினென் மற்றும் கிரேப் துணிகளிலும் பாவாடைத் தாவணி செட் வருகின்றது. ஷிஃபான் மற்றும் நெட் துணிகள், காட்டன் துணிகள், வெல்வெட் மற்றும் நெட் துணிகள், உப்பாடா பட்டு, ஷேடின் க்ரேப் மற்றும் ப்ராஸோ, நெட் மற்றும் ஜ்யார்ஜெட் துணிகள் இணைந்து வரும் பாவாடைத் தாவணி செட்டுகளும் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன.

    சிறுவயது குழந்தைகளுக்கு வரும் ரெடிமேட் பாவாடைத் தாவணி செட்டை அணிந்து பெண் குழந்தைகள் இங்கும் அங்கும் நடப்பதைப் பார்ப்பதற்கு அழகிய வண்ணத்துப்பூச்சி இங்கும் அங்கும் நடப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

    சிறு குழந்தைகளின் பாவாடைத் தாவணி செட் மிகவும் க்யூட்டாக இருக்கின்றது. பாவாடைத் தாவணியை செட்டாக வாங்காமல் நம் ரசனைக்கேற்ப ரன்னிங் மெட்டீரியல்கலில் எடுத்துத் தைத்துக் கொள்ளலாம்.

    ரன்னிங் மெட்டீரியல்களிலேயே விலை அதிகமாக வேண்டுமானால் அது போலவும், விலை மீடியமாக வேண்டுமானால் அதற்கேற்றாற் போலவும் கிடைக்கின்றது. துணிகளைத் தைத்த பிறகு நம் ரசனைக்கேற்ப மேற்கொண்டு கைவேலைப்பாடுகளுடன் அணிந்து கொள்ளலாம். அல்லது கைவேலைப்பாடுகளை துணிகளிலே செய்த பிறகும் தைக்கக் கொடுக்கலாம்.

    பாவாடைத் தாவணி என்பது பெண்களுக்கு மேலும் அழகைத் தரும் ஆடை என்று சொல்லலாம்.
    காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்,
    சோயா உருண்டைகள் - அரை கப்,
    கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
    பட்டாணி - சிறிதளவு
    வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    சோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.

    அடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும்.

    சத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    இதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம்.
    ப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண் இனவிருத்தி உறுப்புகளில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சிறு நீர்க்குழாயைச் (Urethra) சூழ்ந்து இருப்பதால் இந்திரியத்தில் பெரும்பான்மையான திரவம் இதிலிருந்து தான் வருகிறது. உடல் உறவின் போது உறுப்பு விரைப்பாக இருப்பதற்கு இச்சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இச்சுரப்பி வீங்குவதால் பல குழப்பங்கள் வர வாய்ப்புண்டு. இதனை ஆங்கிலத்தில் Benign Prostatic Hyperplasia (BPH) என்பர். BPH ஆல் சிறுநீர்க் குழாய் நெருக்கப்பட்டு, குழாய் அளவு (விட்டம்) குறைகிறது.

    50 வயதுக்கு மேலான ஆண்களுக்கு BPH வர வாய்ப்புண்டு. ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வால் இச்சுரப்பி பெரிதாகலாம். சிறுவயதிலேயே விந்துக் கொட்டைகள் அகற்றப்பட்ட ஆண்களுக்கு BPH ஏற்படுவதில்லை.

    அறிகுறிகள்

    ஆரம்பத்தில் அதிகளவு பாதிப்பு இல்லாவிடினும் போகப்போக கவனிக்காவிட்டால் எல்லையில்லாத தொல்லையாக மாறிவிடும்.

    1. சிறுநீர் கழித்தலில் நிறை வின்மை. 2. இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல். 3.சிறுநிர் கழித்தபின் சொட்டு சொட் டாக சிறுநீர் ஒழுகுதல். 4.சாதாரணமாகவே சிறுநீர் வடிதல். 5.சிரமத்துடன் சிறுநீர் கழித்தல். 6.அவசர அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. 7.மிகத் தாமதமாக சிறுநீர் வெளியா தல். 8.வேதனையோடு சிறுநீர் கழித்தல். 9.சிறுநீரில் இரத்தம் போதல்.

    சோதனை செய்தல்

    1.உட்பரிசோதனைகள், 2. சிறுநீர் பையில் மீதியிருக்கும் நீர் அளவு. 3. PSA (எதிர் அணு பரிசோதனை). 4. Urodynamic Test 5.சிஸ்டாஸ்கோபி - சிறுநீர்ப்பையின் உள்நோக்கி. 6. IVP படம் எடுத்துப் பார்த்தல். 7. CT Scan. மனநோய் மருந்துகள், சிறுநீர் அதிகம் போக எடுக்கும் மருந்துகள், தூக்க மாத்திரைகள் இன்னபிற மருந்துகள் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு அல்ல.

    சிகிச்சை முறைகள்

    இயற்கை வைத்தியங்கள் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் அடக்காமல் இருக்க வேண்டும், தானகவே மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணாதிருத்தல், மது, காபி, புகைபிடித்தல் வேண்டாம், மனஅழுத்தம் வேண்டாமே, உடற்பயிற்சி அவசியம். எப்போதும் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்.

    சில மருந்துகள் (மருத்துவர் ஆலோசனையோடு) (ஆல்பா I Blockers ) உட்கொள்ளலாம்.

    ஹார்மோன் வைத்தியம்:- டெஸ்டோஸ்டிரானைக் குறைக்கும் வைத்திய முறைகள். ப்ராஸ்டேட் சுரப்பி அளவைத் குறைக்கும் ஆனால் இயலாமை (Impotence) வரலாம்.

    அறுவை சிகிச்சை முறைகள்

    TUMA கதிர்வீச்சால் ப்ராஸ்டேட் சுரப்பியைச் சுருங்க வைத்தல். TUMT மைக்ரோவேவ் முறை. WIT சுடுநீரால் திசுக்களை அழித்தல். HIFLL நுண்ணொலி அலைகளால் அபரிமித ப்ராஸ்டேட் திசுக்களை அழித்தல்.

    இவை தவிர மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துச் செய்யக்கூடிய சிகிச்சைகள்:-

    1. TURP சிறுநீர் போகும் துளைவழியே உள்நோக்கியைச் செலுத்தி ப்ராஸ்டேட் திசுக்களை எடுத்தல்.

    2. அறுவை சிகிச்சை மூலம் ப்ராஸ்டேட் எடுத்தல்.

    ப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம். தகுந்த மருந்துகள் மூலம் சுழற்சியைச் சுகப்படுத்தலாம்.

    Dr. அம்ரித், MBBS, M.S., M.CH. Urosurgery சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ஆண் மலட்டுத்தன்மை நிபுணர் (Urinary Bladder) புற்றுநோய் Dr.ஆக்னஸ் ஜோசப் மருத்துவமனை, பாளையங்கோட்டை
    கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். இந்த கோல்டன் ஃபேஷியல் கிட்டை கடைகளிலும் பெற்று கொள்ளலாம். இருப்பினும் வீட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழி.

    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்ஜ் - கற்றாழை - முல்தானிமட்டி - காட்டன் துணி - தண்ணீர்

    முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக அறுத்துக்கொள்ளவும். பின்பு 1 கற்றாழையை எடுத்து அதனில் உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். அதன்பிறகு இந்த 3 முறையை கடைபிடிக்கவும்.

    மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.

    அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும். பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த தண்ணீரில் கழுவி விடவும்.

    அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.
    காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்.
    உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள். அவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அதில் இருக்கும் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் நேரம் ஒதுக்க வேண்டும். பொழுதை கழிக்கக்கூடிய அம்சங்களில் ஆர்வம் காட்டினால் யாருக்கும் பயனில்லை. காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்:

    * முடிந்தவரை தகவல் தொடர்புக்காகவும், படிப்புக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்துங்கள்.

    * வீடியோ விளையாட்டுகளில் முடங்கிப்போதல், சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடத்தல், நண்பர்களுடனும், தோழிகளுடனும் அரட்டை அடித்தல் போன்றவற்றில் பொழுதை கழிக்கவேண்டாம்.

    * ஒரு நொடி நம்மை கடந்தாலும், அது திரும்ப கிடைக்காது. நாம் கைவிட்ட ஒவ்வொரு மணித்துளிகளும் நம்முடைய பயனுள்ள வாய்ப்புக்கான இழப்பாகும். அதனால் காலவிரயத்தை தவிருங்கள்.

    * பள்ளி, கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் படிப்பு தொடர்பானவற்றில் மனதை செலுத்துங்கள்.

    * விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுங்கள். அப்போது கல்வி தொடர்பான நூல்களை படிப்பது அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், பொது அறிவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

    * இந்த காலகட்டத்தில் செல்போன்களிலேயே நாட்டு நடப்புகள் வந்துவிடுகிறது என்பதால் மாணவ-மாணவிகளிடம் பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகங்களுக்கு சென்று நாளிதழ்களை கற்பதே நலம்.

    * படிக்கும் பாடத்தை தவிர்த்து பொது அறிவு, வரலாறு, அரசியல், விளையாட்டு, சமூக நிகழ்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கற்கவேண்டும். இது சிவில் சர்வீசஸ் தேர்வு, பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் எழுதும்போது மிகுந்த பயனளிக்கும். இதற்கு வெறும் செல்போனால் மட்டும் பயன்பெற்றுவிடமுடியாது. கண்டிப்பாக நூல்கள், நாளிதழ்களை கற்க வேண்டும்.

    * எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, தேசிய தகுதிகாண் தேர்வு என்று வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் அதற்கு உதவிவிடாது. அதற்கு தேவையான பயிற்சி பெறுவதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும்.

    * வெற்றிக்கான இலக்கை முதலில் மனதில் நிறுத்தி, அதை அடைவதற்கு தேவையான நேரம், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை இந்த மாணவ பருவத்தில் சரியாக கொடுத்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
    காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெஞ்செலும்பு - 1/2 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம், மிளகு - சிறிது
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
    உப்பு - சிறிது
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 2
    மஞ்சள்பொடி - சிறிது

    தாளிக்க :


    இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

    மட்டன் நெஞ்செலும்பு சூப்

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.

    இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×