என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இம்மாற்றங்களால் பெண்களின் உடல் பலவித மாற்றங்களை, வடிவங்களை அடைகிறது; பெண்களின் மனமோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாற்றத்தை எட்டுகிறது. இந்நிலையில் பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.

    பெண்களே! உங்கள் இதயம் சாதாரண அளவை விட 12% பெரிதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய ஏற்படும்; உங்களுக்காக, உங்கள் குழந்தைக்காக..! இருதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் 9-வது மாதத்தில் நிகழும்..

    உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இருமடங்கு இரத்தத்தை பம்ப் செய்து, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட அதிகரிக்கின்றன; சாதாரண நிலையை விட. ஆரோக்கியான நிலையை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள இந்த அதிகரிப்புகள் அவசியமே!

    இந்த கருத்துக்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், இவை உண்மையே! ஆகையால், கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் கவனம் காட்டி, உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். 
    இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
    நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.

    இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.

    சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

    இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

    அதிகாலையில், வெறும் வயிற்றில் தான் எளிய பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.
    குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல்படுங்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். இவையே வெற்றியின் மூலமந்திரங்கள் ஆகும்.
    போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில் இளைஞர்களின் வெற்றிக்குத் தேவை வேகமும் விவேகமும் ஆகும். தன்னம்பிக்கையின் தனித்த அடையாளமாகத் திகழும் விவேகானந்தர், “குறிக்கோளை அடையும் வரைப் போராடி வெற்றிபெற வேண்டும்” என்கிறார். வெற்றிப்பாதையில் செல்வோருக்குத் தன்னம்பிக்கையே துணை புரியும். இன்றைய இளைஞர்களிடத்தில் எல்லா ஆற்றலும் நிறைந்துள்ளன. எனினும், அந்த ஆற்றல்களைக் கையாளும் திறமை இல்லாமல் இருக்கின்றனர். நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக ஒருநிலைப்பட்ட மனதுடன் எண்ணும் போது வெற்றி நிச்சயப்படுகிறது. அவ்வாறான வெற்றி கிடைப்பதற்குச் சில காரணிகள் இன்றியமையாததாகின்றன.

    அவை, உயர்ந்த குறிக்கோள். நாம் வெற்றிபெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அக்குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். எச்செயலும் நம்மால் முடியுமா? என்று குழம்புவதைவிட நம்மால் முடியும் என உறுதி கொள்வது உயர்ந்த குறிக்கோளின் முதற்படியாகும். நம்முன்னோர்கள் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வை இல்லறம் என்றனர். இல்லறத்தில் வாழ்பவன் பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும் என்பதற்காக ‘இல்லறம்’ என்றனர். போர்க்களத்தில் கூட அறத்தைக் கடைபிடித்தனர். பகைவனிடத்தில் போர் செய்யும்போது கூட நேர்மையையும் பல விதிமுறைகளையும் பின்பற்றிப் பல உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்ந்தனர். அதனால்தான் உலகம் போற்றும் பண்பாட்டை நாம் கொண்டுள்ளோம். எனவே நம் குறிக்கோள் உயர்ந்ததாக அமையும்போது வெற்றி கைவசமாகும்.

    “ஒருமையுள் ஆமைபோல்

    ஐந்தடக்கல் ஆற்றின்

    எழுமையும் ஏமாப் புடைத்து”

    என்கிறார் வள்ளுவர். மனக்கட்டுப்பாடு என்பது ஒரு கலை. உறுதியுடன் நாம் நம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயமே. “இந்த உலகம் ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர்”. நாம் இந்த உலகத்தை ஒரு போர்க்களமாகப் பார்த்தல் வேண்டும். ஆம், நன்மை, தீமை ஆகிய இரண்டிற்கும் உரிய போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் தீமையை வெற்றி கொண்டு நன்மையை மட்டும் கடைபிடிக்க வேண்டும்.

    எனவே தீமையை வெல்வதற்கும், நன்மையைக் கடைபிடிப்பதற்கும் மனக்கட்டுப்பாடு என்னும் மகாசக்தி மிக அவசியமானதாகும். இடைவிடாத பழக்கம், கடுமையான உழைப்பு இவற்றால் மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பெறலாம். பிறகு எச்செயலைச் செய்தாலும் திறமையோடு செய்ய இயலும். எத்துறையிலும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.

    நாம் முதலில் நம்மீது நம்பிக்கை உடையவர்களாய் இருத்தல் வேண்டும், “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்கிறார் திருநாவுக்கரசர். நமக்குரிய கடமைகளைத் தன்னம்பிக்கையோடு சரிவரச் செய்வதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. உரிய கடமைகளைச் செய்தபின்பு வரக்கூடிய விளைவுகளுக்காக கவலை கொள்ளுதல் கூடாது. செய்வதைத் திருந்தச் செய்தாலே வெற்றியாகும். எதையும் எண்ணிக் கவலைகொள்வதால் எச்செயலும் மாறிவிடப்போவதில்லை. “நான் எனது முழுத்திறனோடு செயலாற்றுகிறேன். பின்விளைவுகளுக்காக கவலைப்படுவதில்லை” என்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் இன்றைய இளைஞர்கள் எச்சூழலிலும் தோல்வியடையாமல் வெற்றியடையலாம். முதலில் தன்னை நம்புதல் வேண்டும். தன்னைத்தானே நம்பினால் பின் ஊர் உன்னை நம்பும் என்பது இயல்பே.

    திறமைகள் அனைவரிடத்திலும் ஒளிந்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி முன்னேறும் அறிவு ஒரு சிலரிடமே இருக்கிறது. மனதில் பயம் ஏற்படும்போது தாழ்வு மனப்பான்மை தலைதூக்குகிறது. நுட்பமான அறிவுத்திறன் கொண்டு தாழ்வு மனப்பான்மையை நீக்குதல் வேண்டும். இன்று இளைஞர்களிடத்தில் வெளிநாகரிக மோகம் அதிகரிக்க காரணம் தாழ்வுமனப்பான்மையே ஆகும். நம் நாகரிகம் பெரிது எனவும், நம்மொழி, நம் உணவு, நம் நாடு, நம் ஊர் பெரிது எனவும் எண்ணம் வளரும்போதுதான் நம் மீது நமக்கு உயர்வான எண்ணம் வளரும். அவ்வாறு ‘நாம் உயர்வு’ என்ற எண்ணம் வளருமானால் நம்மிடம் உள்ள தாழ்வுமனப்பான்மை அகன்று வெற்றிக்கு வழிவகுக்கும்.

    விழிப்புணர்வின் வழிகாட்டியாக அமைவது நுண்ணறிவு திறனாகும். எச்செயலையும் நுட்பமான அறிவுடன் செய்தாலே வெற்றி நிச்சயம். பல கலைகளை அறிந்திருந்தாலும் நம்மால் எதில் வெல்ல இயலும்? என்று கண்டறிதலே நுட்பமான அறிவாகும். எத்துறையில் நாம் வெல்ல இயலும் என்று கண்டறிந்து அத்துறை எதுவோ? அதில் முழு ஈடுபாட்டுடன் மனம்ஒன்றி செயல்பட்டால் வாழ்வில் உயரலாம். “வில்லில் இருந்து புறப்படாத எந்த அம்பும் இலக்கை அடையாது” என்பார்கள். அதற்கு ஏற்றார் போல இளைஞர்கள் விழிப்புணர்வு கொண்டு வில்லில் இருந்து புறப்படும் அம்புகளாகச் செயல்பட வேண்டும்.

    இளைஞர்களே... ஒவ்வொரு மனிதனிடமும் தனித்துவமிக்கத் தலைமைப்பண்பு என்பது இயற்கையாகவே அமைந்துள்ளது. அர்த்தமற்ற பயமும், அவநம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் பலரையும் அடிமைகளாய் வைத்திருக்கின்றன. எனவே, குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல்படுங்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். இவையே வெற்றியின் மூலமந்திரங்கள் ஆகும்.

    முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார் கல்லூரி, காரைக்குடி.
    இட்லி, தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நாட்டுகோழி குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - ஒரு கிலோ
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - ஒரு ஸ்பூன்
    தேங்காய் - அரை மூடி
    கசகசா - ஒரு ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    நாட்டு கோழி குருமா

    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

    மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

    உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான நாட்டு கோழி குருமா தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இந்த நோய் வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

    மூல நோய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

    மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவையால் ஏற்படுகின்றன.மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.

    மேலும் மூல நோயின் அறிகுறிகள் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கை, கால்களுக்கு வலு கிடைக்கும். கை,கால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கிறது.
    செய்முறை : கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்த நிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

    பலன்கள் : தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைப்பதால் மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கிறது. உடலுக்கு உற்சாகம் கிடைக்கிறது. கைகளும் தோள்பட்டைகளும் இணையும் இடங்களில் உண்டாகும் உராய்வினால் வரும் வலிகள் நீங்குகிறது. கையின் மணிக்கட்டு, தசைநார்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன.

    கை, கால்களுக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு எலும்புகள், கணுக்கால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குகிறது. கை,கால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கிறது.
    தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும்.
    'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது.
     
    நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
     
    இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
     
    இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது.
    உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தரும் கஞ்சி இது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - ஒரு கப்,
    மோர் - இரண்டு கப்,
    சின்ன வெங்காயம் - 5,
    உப்பு - தேவையான அளவு.

    அரிசி மோர் கஞ்சி

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைத்து கொள்ளவும்.

    இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும்.

    பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
    புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மனை வாங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    பஞ்சமி நிலம்

    பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்பது நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் ஆகும். அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டன.

    சட்ட நடைமுறை

    ஆங்கில அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களைத் தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால் அந்த விற்பனை செல்லாது என்ற கண்டிசன் இன்றும் சட்ட நடைமுறையில் உள்ளது. 1950-க்கு பின்னர் வினோபாவின் பூதான இயக்கத்தின் கீழ் நிறைய நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டது. அத்தகைய நிலங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளன.

    பட்டாவில் உள்ள தகவல்கள்


    பஞ்சமி நிலம் பற்றி அறிய அதன் பட்டா பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் அமைந்துள்ள பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பட்டா சம்பந்தப்பட்ட மேனுவல் அ-பதிவேடுகளை பார்வையிட்டு கண்டறியலாம். அதில், கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலம், டி.சி நிலம் என்று குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படலாம்.

    கூடுதல் கவனம்

    இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட மனை உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்று கவனிக்க வேண்டும். அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக செயல்படலாம். ‘ரீ-செட்டில்மெண்டு லேண்டு ரிக்கார்டு’ (RSLR) என்பது இப்போது பயன்பாட்டில் உள்ள அ-பதிவேடான யு.டி.ஆர்-க்கு (Updating Registry Scheme UDR) முந்தைய பழைய கிராம கணக்கு ஆகும்.

    நான்கு வித ஆவணங்கள்


    நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கவனிக்க வேண்டும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட மனை அல்லது நிலத்தை வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
    மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியான பருவம், மகத்துவம் நிறைந்த பருவம். தான் நினைத்ததை சாதிக்கும் பருவம். கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் என்று எதிலும் சாதிக்கக்கூடிய தன்னம்பிக்கை நிறைந்த பருவம். இந்த பருவத்தில் சாதிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் உண்டு. ஆனால் பல மாணவ-மாணவிகள் இந்த பருவத்தை ஏதோ, ஜாலியாக இருக்க வேண்டிய தருணம் என நினைத்து விடுகிறார்கள்.

    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். இது கல்லூரி அளவில் என்று மட்டுமல்ல... பள்ளி மாணவ-மாணவிகளிடமும் இந்த மோகம் அதிகரித்துவிட்டது.

    அதனால்தான் பள்ளி, கல்லூரி வேலை நாட்களில்கூட சீருடை அணிந்த பல மாணவ-மாணவிகள் சுற்றுலா இடங்களிலும், தியேட்டர்களிலும் கண்களில் தென்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்விச்சாலையில் திறம்பட பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதுதான் வேதனைக்குரியது.

    அவ்வாறு மாணவ பருவத்து வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறிக்கொண்டு பல மாணவர்கள் சிகரெட், புகையிலை, மதுப்பழக்கம் என்று உயிர்க்கொல்லிகளுக்கு அடிமையாகி தங்களது உடலையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள். பல சமயங்களில் மாணவர்கள், ஏன்..? மாணவிகள்கூட மது குடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவது இதற்கு சான்று. மதுக்கடைகளுக்கு மது வாங்க வரும் மாணவர்கள் மத்தியில் கேட்டால், மதுப்பழக்கம் என்பது எங்களிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏதாவது விழா, விருந்து என்றால் மட்டுமே அது இருக்கும் என்று அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

    மது அரக்கன்

    மது அரக்கன் என்பவன் தன்னை பிடித்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவானா? ஒருபோதும் கிடையாது. குடிப்பழக்கத்தில் வீழ்பவர்களின் எண்ணிக்கையைவிட, அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியிருக்கும்போது தற்போதைய மாணவ சமுதாயம் அதை நோக்கி செல்வது, அவர்களுக்கு மட்டுமல்ல... நாட்டின் எதிர்காலத்திற்கே கேடு விளைவிப்பது ஆகும். இதை கருத்தில் கொண்டுதான் கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அத்தகையதுபோன்று தமிழகத்திலும் வந்தால் மதுக்கடைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கும்.

    இதுஒருபுறமிருக்க மாணவர்கள் மத்தியில் மற்றொரு போதையாக ராகிங் உள்ளது. கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வது சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்கள் செய்யும் ராகிங் கொஞ்சம் வெட்டவெளிச்சமாகிறது என்றால், மாணவிகளின் ராகிங் விடுதிகளில் அவ்வப்போது அரங்கேறுகிறது. பல கல்லூரி நிர்வாகங்கள் ராகிங் பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை இடைநீக்கம் செய்துவிடுகின்றன.

    ஆனால் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் படிக்கும் ‘சர்வதேச’ தர கல்லூரிகளில் ராகிங் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவு ராகிங்கினால் பாதிக்கப்படும் சில மாணவர்களின் உயிரை கூட தற்கொலை என்ற பெயரில் பறித்துவிடுகிறது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் தற்கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

    மோதல்

    அதேபோல் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினைகள் அடிக்கடி மோதலாக வெடிப்பதும் கல்லூரிகளில் நடக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ரூட் தல’ பிரச்சினை. இரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ஒருவரையொருவர் விரட்டி தாக்கிக் கொண்ட காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை கலங்க வைத்தன.

    இந்த கலாசாரம் தலைநகரத்தோடு நின்றுவிடவில்லை. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலும் சில நாட்களுக்கு முன்பு இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கம்புகள், உருட்டுக் கட்டைகள், பீர் பாட்டிலால் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசு கல்லூரி மாணவி ஒருவர் விடுதியில் இருந்து தனது காதலன் ஒருவருடன் வெளியேறி சில நாட்களாக அவருடன் சுற்றி உள்ளார். அப்படி வந்த இடத்தில் போலி போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் அந்த காதலனை தாக்கிவிட்டு, மாணவியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார். பெற்றோர்களின் நெஞ்சை பதை,பதைக்க செய்யும் இந்த சம்பவம் திருச்சி மாநகருக்கே ஒரு கரும்புள்ளியாகி இருக்கிறது.

    ஒரு மாணவி தான் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வார்டனுக்கு தெரியாமல் எப்படி வெளியேற முடியும்? அப்படியே வார்டனின் அனுமதி பெற்று வெளியே வந்தால்கூட அன்றைய தினமே இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிடவேண்டுமே? இரண்டொரு தினங்கள் விடுதிக்கே வராமல் எப்படி இருக்க முடியும்? கற்பழிப்புக்கு ஆளான அந்த மாணவியை விடுதி பொறுப்பாளர்கள் யாருமே கண்காணிக்க வில்லையா? அல்லது அங்கும் லஞ்சம் புகுந்து தனது வேலையை காண்பித்துவிட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தலைநகரமாம் சென்னை கலாசாரத்தைபோன்று திருச்சி மாறிவிட்டதா? என்ற ஐயப்பாடு பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. மாணவர்களின் பாதை கல்வி என்பதை விட்டு, வேறு திசைக்கு மாறிவிட்டதோ என்று பெற்றோர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல்துறை, கல்லூரி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    கல்லூரி நிர்வாகங்களை பொறுத்தவரை மாணவ-மாணவிகளுக்கு கல்வியை மட்டும் கற்றுத்தருவது மட்டுமின்றி, சமுதாய பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள், நன்னெறி ஒழுக்கங்கள் போன்ற அவசிய தேவைகளையும் கற்றுத்தரவேண்டும். வெறும் கல்வி மட்டும் ஒரு மனிதனை சிறந்தவனாக்கிவிடாது. கல்வியோடு சிறந்த நாகரிகம், உயர்ந்த பண்பாடு, தெளிந்த சிந்தனைகள் போன்றவையும் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். மாணவர்கள் கல்விப்பாதையில் இருந்து விலகுவதாக தெரியவரும்பட்சத்தில் அவர்களின் பெற்றோரை அழைத்து தெரியப்படுத்தி அவர்களை நல்வழிகாட்ட கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும். ஆனால் இதை பெரும்பாலான நிறுவனங்கள் செய்வதில்லை. அதேபோல் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க காவல்துறையும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தி தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். ஏதாவது பிரச்சினைகள், மாணவர்களிடையே மோதல் வரும் சூழல் தெரியவந்தால் அதுபற்றி முன்கூட்டியே காவல்துறைக்கு கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்கள் என்று யாராவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

    நல்லொழுக்கம்

    இவற்றிற்கெல்லாம் மேலாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் பெரும் கடமை உண்டு. அவர்களுக்கு நல்லொழுக்கங்களை பெற்றோர்கள் சொல்லித்தந்து வளர்க்கவேண்டும். தங்களது பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு முறையாக செல்கிறார்களா? படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா? என்பன போன்ற பல விஷயங்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள், முதல்வர்களை அவ்வப்போது சந்தித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் இருந்து விலகிச் செல்வதைப்போல் தெரிந்தால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு நல் ஆலோசனைகள் வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றால் இதயமே மாணவ சமுதாயம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றைய மாணவர்கள் நாளைய பாரதத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருப்பவர்கள்.

    அந்த தூண்களில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சட்டமேதைகள், சிறந்த அரசியல் வாதிகள், சாதனையாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கு இப்போதைய மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    தலைமுடியின் நிறம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதாக கருதுகிறோம். இந்த கூந்தலின் நிறமாற்றங்கள் என்பது மரபணுக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மறக்கக் கூடாது.
    ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு பிரத்யேக முக அமைப்பு இருப்பதை போலவே, ஒவ்வொரு நாட்டினரின் தலைமுடி நிறத்திலும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இது எதனால் தெரியுமா?

    நமது தோலில் சுரக்கும் மெலனின் எனும் நிறமியே, தோலின் நிறம் முதல் தலைமுடியின் நிறம் வரை சகலத்தையும் தீர்மானிக்கிறது. இன்னும் கொஞ்சம் நுட்பமாக சொன்னால் தலையில் மயிர்க்கால் பகுதியில், பியோமெலனின் மற்றும் யூமெலனின் எனும் இரண்டு வகை மெலனின் நிறமிகள் சுரக்கின்றன. பழுப்பு நிறத்திலிருந்து கருமை நிறம் வரை பல்வேறு நிறங்களை யூமெலனின் செறிவு ஏற்படுத்தும்.

    தங்க நிறம், செம்பட்டை நிறத்தை பியோமெலனின் செறிவு ஏற்படுத்தும். இதுபோல், இந்த இரண்டு மெலனின்களின் விகித செறிவே பல்வேறு தலைமுடி நிறங்களை உண்டாக்குகிறது. இந்த நிறமிகள் செறிவு வெகுவாகக் குறையும்போது, நரை விழுதல் ஏற்பட்டு விடுகிறது. இதுபோல் குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்களின் தலைமுடி நிற மரபணுக்கள் கூடுதல் விகிதத்தில் இருப்பதால், தலைமுடியின் நிறம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதாக கருதுகிறோம்.

    இதில் முரண்பாடாக, ஐரோப்பாவில் கருப்பு தலைமுடி கொண்டவரும், இந்தியாவில் செம்பட்டை தலைமுடி உள்ளவரும் உண்டு. முக்கியமாக, இந்த கூந்தலின் நிறமாற்றங்கள் என்பது மரபணுக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மறக்கக் கூடாது. இதைப் பற்றி இன்னும் தீவிரமான ஆராய்ச்சியில் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - ஒரு கட்டு
    கடலை மாவு - 100 கிராம்
    சோள மாவு - 50 கிராம்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - கால் கிலோ
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை போட்டு அதனுடன் கடலைமாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாவாக சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×