search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும்...
    X
    வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும்...

    வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும்...

    குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல்படுங்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். இவையே வெற்றியின் மூலமந்திரங்கள் ஆகும்.
    போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில் இளைஞர்களின் வெற்றிக்குத் தேவை வேகமும் விவேகமும் ஆகும். தன்னம்பிக்கையின் தனித்த அடையாளமாகத் திகழும் விவேகானந்தர், “குறிக்கோளை அடையும் வரைப் போராடி வெற்றிபெற வேண்டும்” என்கிறார். வெற்றிப்பாதையில் செல்வோருக்குத் தன்னம்பிக்கையே துணை புரியும். இன்றைய இளைஞர்களிடத்தில் எல்லா ஆற்றலும் நிறைந்துள்ளன. எனினும், அந்த ஆற்றல்களைக் கையாளும் திறமை இல்லாமல் இருக்கின்றனர். நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக ஒருநிலைப்பட்ட மனதுடன் எண்ணும் போது வெற்றி நிச்சயப்படுகிறது. அவ்வாறான வெற்றி கிடைப்பதற்குச் சில காரணிகள் இன்றியமையாததாகின்றன.

    அவை, உயர்ந்த குறிக்கோள். நாம் வெற்றிபெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அக்குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். எச்செயலும் நம்மால் முடியுமா? என்று குழம்புவதைவிட நம்மால் முடியும் என உறுதி கொள்வது உயர்ந்த குறிக்கோளின் முதற்படியாகும். நம்முன்னோர்கள் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வை இல்லறம் என்றனர். இல்லறத்தில் வாழ்பவன் பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும் என்பதற்காக ‘இல்லறம்’ என்றனர். போர்க்களத்தில் கூட அறத்தைக் கடைபிடித்தனர். பகைவனிடத்தில் போர் செய்யும்போது கூட நேர்மையையும் பல விதிமுறைகளையும் பின்பற்றிப் பல உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்ந்தனர். அதனால்தான் உலகம் போற்றும் பண்பாட்டை நாம் கொண்டுள்ளோம். எனவே நம் குறிக்கோள் உயர்ந்ததாக அமையும்போது வெற்றி கைவசமாகும்.

    “ஒருமையுள் ஆமைபோல்

    ஐந்தடக்கல் ஆற்றின்

    எழுமையும் ஏமாப் புடைத்து”

    என்கிறார் வள்ளுவர். மனக்கட்டுப்பாடு என்பது ஒரு கலை. உறுதியுடன் நாம் நம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயமே. “இந்த உலகம் ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர்”. நாம் இந்த உலகத்தை ஒரு போர்க்களமாகப் பார்த்தல் வேண்டும். ஆம், நன்மை, தீமை ஆகிய இரண்டிற்கும் உரிய போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் தீமையை வெற்றி கொண்டு நன்மையை மட்டும் கடைபிடிக்க வேண்டும்.

    எனவே தீமையை வெல்வதற்கும், நன்மையைக் கடைபிடிப்பதற்கும் மனக்கட்டுப்பாடு என்னும் மகாசக்தி மிக அவசியமானதாகும். இடைவிடாத பழக்கம், கடுமையான உழைப்பு இவற்றால் மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பெறலாம். பிறகு எச்செயலைச் செய்தாலும் திறமையோடு செய்ய இயலும். எத்துறையிலும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.

    நாம் முதலில் நம்மீது நம்பிக்கை உடையவர்களாய் இருத்தல் வேண்டும், “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்கிறார் திருநாவுக்கரசர். நமக்குரிய கடமைகளைத் தன்னம்பிக்கையோடு சரிவரச் செய்வதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. உரிய கடமைகளைச் செய்தபின்பு வரக்கூடிய விளைவுகளுக்காக கவலை கொள்ளுதல் கூடாது. செய்வதைத் திருந்தச் செய்தாலே வெற்றியாகும். எதையும் எண்ணிக் கவலைகொள்வதால் எச்செயலும் மாறிவிடப்போவதில்லை. “நான் எனது முழுத்திறனோடு செயலாற்றுகிறேன். பின்விளைவுகளுக்காக கவலைப்படுவதில்லை” என்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் இன்றைய இளைஞர்கள் எச்சூழலிலும் தோல்வியடையாமல் வெற்றியடையலாம். முதலில் தன்னை நம்புதல் வேண்டும். தன்னைத்தானே நம்பினால் பின் ஊர் உன்னை நம்பும் என்பது இயல்பே.

    திறமைகள் அனைவரிடத்திலும் ஒளிந்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி முன்னேறும் அறிவு ஒரு சிலரிடமே இருக்கிறது. மனதில் பயம் ஏற்படும்போது தாழ்வு மனப்பான்மை தலைதூக்குகிறது. நுட்பமான அறிவுத்திறன் கொண்டு தாழ்வு மனப்பான்மையை நீக்குதல் வேண்டும். இன்று இளைஞர்களிடத்தில் வெளிநாகரிக மோகம் அதிகரிக்க காரணம் தாழ்வுமனப்பான்மையே ஆகும். நம் நாகரிகம் பெரிது எனவும், நம்மொழி, நம் உணவு, நம் நாடு, நம் ஊர் பெரிது எனவும் எண்ணம் வளரும்போதுதான் நம் மீது நமக்கு உயர்வான எண்ணம் வளரும். அவ்வாறு ‘நாம் உயர்வு’ என்ற எண்ணம் வளருமானால் நம்மிடம் உள்ள தாழ்வுமனப்பான்மை அகன்று வெற்றிக்கு வழிவகுக்கும்.

    விழிப்புணர்வின் வழிகாட்டியாக அமைவது நுண்ணறிவு திறனாகும். எச்செயலையும் நுட்பமான அறிவுடன் செய்தாலே வெற்றி நிச்சயம். பல கலைகளை அறிந்திருந்தாலும் நம்மால் எதில் வெல்ல இயலும்? என்று கண்டறிதலே நுட்பமான அறிவாகும். எத்துறையில் நாம் வெல்ல இயலும் என்று கண்டறிந்து அத்துறை எதுவோ? அதில் முழு ஈடுபாட்டுடன் மனம்ஒன்றி செயல்பட்டால் வாழ்வில் உயரலாம். “வில்லில் இருந்து புறப்படாத எந்த அம்பும் இலக்கை அடையாது” என்பார்கள். அதற்கு ஏற்றார் போல இளைஞர்கள் விழிப்புணர்வு கொண்டு வில்லில் இருந்து புறப்படும் அம்புகளாகச் செயல்பட வேண்டும்.

    இளைஞர்களே... ஒவ்வொரு மனிதனிடமும் தனித்துவமிக்கத் தலைமைப்பண்பு என்பது இயற்கையாகவே அமைந்துள்ளது. அர்த்தமற்ற பயமும், அவநம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் பலரையும் அடிமைகளாய் வைத்திருக்கின்றன. எனவே, குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல்படுங்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். இவையே வெற்றியின் மூலமந்திரங்கள் ஆகும்.

    முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார் கல்லூரி, காரைக்குடி.
    Next Story
    ×