search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் சண்டை
    X
    மாணவர்கள் சண்டை

    பாதை மாறும் மாணவர்கள்- பரிதவிக்கும் பெற்றோர்கள்

    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
    மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியான பருவம், மகத்துவம் நிறைந்த பருவம். தான் நினைத்ததை சாதிக்கும் பருவம். கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் என்று எதிலும் சாதிக்கக்கூடிய தன்னம்பிக்கை நிறைந்த பருவம். இந்த பருவத்தில் சாதிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் உண்டு. ஆனால் பல மாணவ-மாணவிகள் இந்த பருவத்தை ஏதோ, ஜாலியாக இருக்க வேண்டிய தருணம் என நினைத்து விடுகிறார்கள்.

    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். இது கல்லூரி அளவில் என்று மட்டுமல்ல... பள்ளி மாணவ-மாணவிகளிடமும் இந்த மோகம் அதிகரித்துவிட்டது.

    அதனால்தான் பள்ளி, கல்லூரி வேலை நாட்களில்கூட சீருடை அணிந்த பல மாணவ-மாணவிகள் சுற்றுலா இடங்களிலும், தியேட்டர்களிலும் கண்களில் தென்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்விச்சாலையில் திறம்பட பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதுதான் வேதனைக்குரியது.

    அவ்வாறு மாணவ பருவத்து வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறிக்கொண்டு பல மாணவர்கள் சிகரெட், புகையிலை, மதுப்பழக்கம் என்று உயிர்க்கொல்லிகளுக்கு அடிமையாகி தங்களது உடலையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள். பல சமயங்களில் மாணவர்கள், ஏன்..? மாணவிகள்கூட மது குடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவது இதற்கு சான்று. மதுக்கடைகளுக்கு மது வாங்க வரும் மாணவர்கள் மத்தியில் கேட்டால், மதுப்பழக்கம் என்பது எங்களிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏதாவது விழா, விருந்து என்றால் மட்டுமே அது இருக்கும் என்று அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

    மது அரக்கன்

    மது அரக்கன் என்பவன் தன்னை பிடித்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவானா? ஒருபோதும் கிடையாது. குடிப்பழக்கத்தில் வீழ்பவர்களின் எண்ணிக்கையைவிட, அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியிருக்கும்போது தற்போதைய மாணவ சமுதாயம் அதை நோக்கி செல்வது, அவர்களுக்கு மட்டுமல்ல... நாட்டின் எதிர்காலத்திற்கே கேடு விளைவிப்பது ஆகும். இதை கருத்தில் கொண்டுதான் கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அத்தகையதுபோன்று தமிழகத்திலும் வந்தால் மதுக்கடைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கும்.

    இதுஒருபுறமிருக்க மாணவர்கள் மத்தியில் மற்றொரு போதையாக ராகிங் உள்ளது. கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வது சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்கள் செய்யும் ராகிங் கொஞ்சம் வெட்டவெளிச்சமாகிறது என்றால், மாணவிகளின் ராகிங் விடுதிகளில் அவ்வப்போது அரங்கேறுகிறது. பல கல்லூரி நிர்வாகங்கள் ராகிங் பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை இடைநீக்கம் செய்துவிடுகின்றன.

    ஆனால் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் படிக்கும் ‘சர்வதேச’ தர கல்லூரிகளில் ராகிங் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவு ராகிங்கினால் பாதிக்கப்படும் சில மாணவர்களின் உயிரை கூட தற்கொலை என்ற பெயரில் பறித்துவிடுகிறது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் தற்கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

    மோதல்

    அதேபோல் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினைகள் அடிக்கடி மோதலாக வெடிப்பதும் கல்லூரிகளில் நடக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ரூட் தல’ பிரச்சினை. இரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ஒருவரையொருவர் விரட்டி தாக்கிக் கொண்ட காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை கலங்க வைத்தன.

    இந்த கலாசாரம் தலைநகரத்தோடு நின்றுவிடவில்லை. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலும் சில நாட்களுக்கு முன்பு இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கம்புகள், உருட்டுக் கட்டைகள், பீர் பாட்டிலால் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசு கல்லூரி மாணவி ஒருவர் விடுதியில் இருந்து தனது காதலன் ஒருவருடன் வெளியேறி சில நாட்களாக அவருடன் சுற்றி உள்ளார். அப்படி வந்த இடத்தில் போலி போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் அந்த காதலனை தாக்கிவிட்டு, மாணவியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார். பெற்றோர்களின் நெஞ்சை பதை,பதைக்க செய்யும் இந்த சம்பவம் திருச்சி மாநகருக்கே ஒரு கரும்புள்ளியாகி இருக்கிறது.

    ஒரு மாணவி தான் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வார்டனுக்கு தெரியாமல் எப்படி வெளியேற முடியும்? அப்படியே வார்டனின் அனுமதி பெற்று வெளியே வந்தால்கூட அன்றைய தினமே இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிடவேண்டுமே? இரண்டொரு தினங்கள் விடுதிக்கே வராமல் எப்படி இருக்க முடியும்? கற்பழிப்புக்கு ஆளான அந்த மாணவியை விடுதி பொறுப்பாளர்கள் யாருமே கண்காணிக்க வில்லையா? அல்லது அங்கும் லஞ்சம் புகுந்து தனது வேலையை காண்பித்துவிட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தலைநகரமாம் சென்னை கலாசாரத்தைபோன்று திருச்சி மாறிவிட்டதா? என்ற ஐயப்பாடு பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. மாணவர்களின் பாதை கல்வி என்பதை விட்டு, வேறு திசைக்கு மாறிவிட்டதோ என்று பெற்றோர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல்துறை, கல்லூரி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    கல்லூரி நிர்வாகங்களை பொறுத்தவரை மாணவ-மாணவிகளுக்கு கல்வியை மட்டும் கற்றுத்தருவது மட்டுமின்றி, சமுதாய பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள், நன்னெறி ஒழுக்கங்கள் போன்ற அவசிய தேவைகளையும் கற்றுத்தரவேண்டும். வெறும் கல்வி மட்டும் ஒரு மனிதனை சிறந்தவனாக்கிவிடாது. கல்வியோடு சிறந்த நாகரிகம், உயர்ந்த பண்பாடு, தெளிந்த சிந்தனைகள் போன்றவையும் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். மாணவர்கள் கல்விப்பாதையில் இருந்து விலகுவதாக தெரியவரும்பட்சத்தில் அவர்களின் பெற்றோரை அழைத்து தெரியப்படுத்தி அவர்களை நல்வழிகாட்ட கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும். ஆனால் இதை பெரும்பாலான நிறுவனங்கள் செய்வதில்லை. அதேபோல் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க காவல்துறையும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தி தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். ஏதாவது பிரச்சினைகள், மாணவர்களிடையே மோதல் வரும் சூழல் தெரியவந்தால் அதுபற்றி முன்கூட்டியே காவல்துறைக்கு கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்கள் என்று யாராவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

    நல்லொழுக்கம்

    இவற்றிற்கெல்லாம் மேலாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் பெரும் கடமை உண்டு. அவர்களுக்கு நல்லொழுக்கங்களை பெற்றோர்கள் சொல்லித்தந்து வளர்க்கவேண்டும். தங்களது பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு முறையாக செல்கிறார்களா? படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா? என்பன போன்ற பல விஷயங்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள், முதல்வர்களை அவ்வப்போது சந்தித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் இருந்து விலகிச் செல்வதைப்போல் தெரிந்தால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு நல் ஆலோசனைகள் வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றால் இதயமே மாணவ சமுதாயம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றைய மாணவர்கள் நாளைய பாரதத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருப்பவர்கள்.

    அந்த தூண்களில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சட்டமேதைகள், சிறந்த அரசியல் வாதிகள், சாதனையாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கு இப்போதைய மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    Next Story
    ×