search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டிஜிட்டல் கல்வி
    X
    டிஜிட்டல் கல்வி

    ‘டிஜிட்டல் கல்வி’ - வரவேற்கலாமா..?

    எல்லா இடங்களிலும் பரவலாக, எல்லாரையும் கவர்ந்து இழுப்பதாக இருக்கிறது -‘டிஜிட்டல்’ தொழில் நுட்பம். நவீன உலகில் வாழ்க்கையின் தவிர்க்க இயலாத அங்கமாக தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.
    சமூக வலைதளம், மின்னஞ்சல், கணினி வழிப் பணப்பரிமாற்றம் ஆகியன  உலகம் முழுதையும் தொழில் நுட்பத்தின் பக்கம் தள்ளி விட்டது. அதிலும் இளைஞர்கள் அத்தனை பேரும் ‘டிஜிட்டல்’ வாழ்க்கை முறையைத்தான் பெரிதும் விரும்புகின்றனர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ நல்லது தானே..? அந்த எண்ணத்தில்தான் ‘டிஜிட்டல் கல்வி’  பற்றிப் பேசுகிறது வரைவு அறிக்கை.

    ‘Digital Literacy and Computational Thinking’ என்கிற தனித் தலைப்பின் கீழ்,  டிஜிட்டல் கல்வி பற்றி அறிக்கை இவ்வாறு கூறுகிறது: ‘அடித்தள நிலையில் கல்வி கற்கும் எல்லாருக்கும் டிஜிட்டல் கல்வியை பாடத்திட்டம் ஒருங்கிணைக்கும்’. புரிந்தும் புரியாததும் போல் இருக்கிறதா..? ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம் ஆங்கிலத்தில் இதை விடவும் மோசமான முறையில் தரப்பட்டு இருக்கிறது.

    ‘கள நிலைமையில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு’ செயல்பட இருப்பதாக அறிக்கை சொல்கிறது. நமக்குத் தெரிந்த வரையில் ‘கள நிலைமை’ அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு ஏதுவாக இதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்பாக, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

    பள்ளி, கல்லூரிக் கட்டிடங்கள், வகுப்பறைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன..? மேற்கூரை இல்லாமல், அப்படியே இருந்தா லும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிற ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் எத்தனை..? போதிய அளவுக்கு மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல், அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மாணவர்களைத் தவிக்க விடுகிற கல்வி நிறுவனங்கள் நாடெங்கும் உள்ளன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்..?

    அவ்வப்போது நிதி ஒதுக்கீடு, கட்டு மானப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மறுப்பதற்கு இல்லை. ஆனாலும்  இவை எல் லாம் நிரந்தரமாக சரி செய்யப்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுளனவா...? பாதுகாப்பற்ற மோசமான பள்ளிச்சூழலில் இருந்து பிள்ளை களைக் காப்பாற்றுகிற வேலையை முழுவதுமாக நிறை வேற்றி விட்டுப்பிறகு டிஜிட்டல் கல்வி பற்றி சிந்திப்பதுதானே முறை யானதாக இருக்கும்..?

    இந்தக் கேள்வி டிஜிட்டல் கல்விக்கு எதிரானது அல்ல; மாறாக பிள்ளைகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடு; அவ்வளவு தான். இது மட்டுமல்ல மற்றொரு கேள்வியும் எழுகிறது. - புதிதாக தொழில் நுட்பம் சார்ந்த கல்வி முறைக்கு மாறுவதானால் அதற் கேற்ப நிதி ஒதுக்கீடு பாரபட்சம் இன்று செய்யப்படுமா..?
    அறிக்கையின் அம்சம் 4.6.7.1 கூறுகிறது ‘இன்னும் முன்னேறிய நிலையில், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படைத்திறன் ஆகிய ‘கணினிச் சிந்தனை’ ஏற்படுகிற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்’.

    ‘கணினிச் சிந்தனை’ என்றால் என்ன...? அடைப்புக் குறிக்குள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. கணினிகள் திறம்பட செயல்படுத்த முடிகிற வகையில் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை வடிவமைக்கிற சிந்தனை. (The though process involved in formulating problems and solutions in ways that computers can effectively execute)  

    மிகவும் கடினமாக இருக்கிறதா...? மன்னிக்கவும். இதுதான் வரைவு அறிக்கையின் மிகப்பெரும் குறை. எந்தத் திட்டமும், எளிதில் புரிந்து கொள்கிறாற்போல், தெளி வாகச் சொல்லப்பட வில்லை. இது தொடர்பான பாடங்கள், உயர் தொடக்கப்பள்ளி மற்றும் செகண்டரி பள்ளிகளில் பரவலாக வழங்கப்படும்.
    அறிக்கையில் தரப்பட்டுள்ள உறுதிமொழி இது. பார்ப்போம். நல்லது நடக்கலாம்.

    அடுத்ததாக வருகிறது - நெறி சார்ந்த, தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள். இது வேறு ஒன்றும் இல்லை; நல்ல குணங் கள், நல்ல ‘பழக்க வழக்கங்கள்’.  முன்பெல்லாம் பள்ளி வகுப்பறைகளில், நன்னடத்தை பற்றிய வகுப்புகள் அதிகம் நடைபெறும். கதைகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் என்று எது வாக இருந்தாலும், அதன் மூலம் நல்ல குணங்களும் நல்ல நெறி முறைகளும் சொல்லித்தரப்பட்டன.

    கடந்த தலைமுறையினர் மிகவும் ரசித்த ஒரு பகுதி இது. அதனால்தான் படிப்பு, கல்வியறிவில் என்னதான் பின் தங்கி இருந்தாலும் வாழ்க்கையின் நெறி முறைகளைப் பின்பற்றுவதில் முந்தைய தலைமுறையினர் தனித்து விளங்குகின்றனர். ‘பொய் சொல்லக்கூடாது; பிறர் பொருள் மீது ஆசை வைத்தல் கூடாது; பெரியவர்களை மதித்து நடத்தல் வேண்டும்;  துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் வேண்டும்‘ என்றெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பட்டது. நாம் அறிவோம். இயன்றவரை வாழ்க்கையில் பின்பற்றவும் செய்கிறோம்.

    ஆனால் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை பட்டி யல் இடுகிற நெறி முறைகளே வேறு. அரசமைப்பு சட்ட நெறிமுறைகள்; தனிநபர் சுதந்திரம் ஆகியன ‘புதிய நெறிமுறைகள்’ ஆகின்றன. இவை எல்லாம் மாணவர்களை நெறிப்படுத்துமா...? தறி கெட்டுப் போகச்செய்யுமா...? எவை எல்லாம் சிறுவயதில் சொல்லித்தரப்பட வேண்டும்; எவை எல்லாம் மனித குலத்துக்கு நன்மை பயக்கும்; எவை எல்லாம் ஒரு மனிதனை நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் என்பதிலேயே வரைவுக் குழுவுக்குக் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது.

    திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியன சட்ட நெறிமுறைகளைச் சொல்வது இல்லை. மனிதனை நல்லவனாக மாற்றி அமைக்க வல்லன. புதிய கல்விக்கொள்கை இந்தத் திசையில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ‘நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுப் பாடங்கள் நேரடி மற்றும் மறைமுக வகைகளில் பாடத்திட்டத்தில் மேம்படுத்தப்படும். மரபு சார்ந்த இந்திய நெறிமுறைகள் மாணவர்களுக்கு ஊட்டப்படும்‘.

    பொதுவாகவே திறன் மேம்பாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம்  குண நலன்களை வளர்ப்பதற்குத் தரப்படவில்லை. இது போன்ற குறைபாடுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. வரைவு அறிக்கை சொல்கிற ‘விழுமியங்கள்’ முற்றிலும் வேறு வகை.

    தொடர்புக்கு: - baskaranpro@gmail.com
    Next Story
    ×