என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கொரோனா சான்றை கொண்டு வர வேண்டும், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருமலை :

    திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.

    பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அகர்பத்தி, சோப்புகள் போன்ற 15 தயாரிப்புகளையும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 15 தயாரிப்புகளையும் திருப்பதி தேவஸ்தான பஞ்ச காவ்யா பிரிவு விரைவில் தயாரிக்கும். இதற்காக தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, அலிபிரியில் 2 இடங்களில் 2 ஆயிரம் வாகனங்களையும், திருமலையில் 2 இடங்களில் 1,500 வாகனங்களையும் நிறுத்த, வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களின் குத்தகை காலத்தை 3 முதல் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

    திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 150 மின்சாரப் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டுள்ளது. தேவஸ்தான அதிகாரிகளுக்கும் மின்சார வாகனம் வழங்கப்படும். தர்மகிரியில் 25 ஏக்கரில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 14 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.90 கோடியே 45 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ரூ.3 கோடியே 51 லட்சம். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ரூ.12 லட்சம் ஆகும். ஸ்ரீவாரி லட்டுக்கள் 76 லட்சத்து 61 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாத் சாப்பிட்ட பக்தர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 7 ஆயிரம் பேர். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான அவர் அரச குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். துறவியான விசுவாமித்திரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ராஜரிஷி பட்டம் பெற்ற அவர் ஒருமுறை கடக நாச்சிமலை என்ற இடத்திற்கு சென்று மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார்.

    ஆனால் கடக நாச்சிமலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் ராவணனின் அபாய சக்திகளை பெற்றவள். பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அந்த மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து அரக்கியை சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு ஏற்ப ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினார். அரக்கியை அழிக்கப்போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்துவிட வேண்டும் என்றார்.

    அதை ஏற்று பூஜை செய்த ராமர் அதை அழிக்க மறந்துவிடுகிறார். அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவத்தை அழிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரில் உள்ளது. அவ்வாறு அமைத்த தெய்வமே மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வமாக, கொங்கு நாட்டு காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவில் தோன்றிய வரலாறு பின் வருமாறு:-

    சங்க காலத்தில் உப்பற்காடான ஆனைமலை பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த மன்னன் ஆழியாற்றங்கரையில் இருந்த அரசு தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து வந்தான். அந்த மாமரத்தின் காய், கனிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு இருந்தான். ஒரு நாள் இளம் பெண் ஒருத்தி தோழிகளுடன் உப்பாற்றங்கரையில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றங்கரை யோரத்தில் இருந்த மாமரத்தில் இருந்து விழுந்த ஒரு மாம்பழம் ஆற்று நீரில் மிதந்து வந்தது. அரச கட்டளையை அறியாத அந்த இளம் பெண் மாங்கனியை எடுத்து தின்று விட்டாள். இந்த செய்தியை அறிந்த மன்னன் நன்னன் அரச கட்டளையை அவமதித்த இளம் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து உத்தர விட்டான்.

    இதற்கு அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் எடையளவுக்கு தங்கப்பாவை ஒன்றும், 81 ஆண் யானை களையும் அபராதமாக தருவதாக மன்னனிடம் கெஞ்சினார். மேலும், அந்த இளம் பெண்ணும் ‘நான் ஆற்று நீரில் மிதந்து வந்த மாங்கனியை தான் எடுத்து தின்றேன். மன்னன் உத்தரவை மீறவில்லை’ என்று வாதாடினாள். ஆனால் அந்த பெண் கூறிய கருத்தை ஏற்காத மன்னன் நன்னன், அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி காவலர்களும் மரண தண்டனையை நிறை வேற்றினர்.

    பின்னர் அந்த பெண்ணின் உடல் உப்பாற்றங்கரையில் சமாதி படுத்தப்பட்டது. பெண்ணை கொலை செய்த மன்னன் நன்னனை கொங்கிளங்கோவர்கள் படை யெடுத்து சென்று கண்டித்து, அவனது காவல் மாமரத்தையும் வெட்டி வீழ்த்தினர். பெண் சமாதி படுத்தப்பட்ட இடத்தில் நாளடைவில் தெய்வீக சக்தி இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சமாதி மீது, அந்த பெண் படுத்து இருப்பது போன்ற உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். மயானத்தில் சயன கோலத்தில் இருந்த பெண்ணின் உருவம் ‘மாசயன அம்மன்’ என்று அழைக்கப்பட்டது.

    பின் காலத்தில் பெயர் மருவி ‘மாசாணியம்மன்’ என்றழைக்கப்பட்டு வருகிறது. மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு.
    கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தங்க தேரோட்டத்திற்காக கட்டளைதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரரின் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தங்க தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இதனிடையே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தேரோட்ட நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் கட்டளைதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நேற்று தங்க தேரோட்டத்திற்காக கட்டளைதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரரின் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இனிவரும் காலங்களில் தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் தேரோட்டம் நடைபெறும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
    ஒரே ஒரு கணம், ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
    ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. 'கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

    சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
    முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
    காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
    தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)
    திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
    திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
    கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
    உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!
    பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
    கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
    கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
    விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக
    மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
    காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
    சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
    தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!
    பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
    தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
    சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
    எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!
    சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
    இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
    குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
    கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
    தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
    வருகிற 7-ந் தேதி நடக்க உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
    சக்தி தலங்களில் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 7-ந்தேதி பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கோவில் இணை ஆணையரும் செயல் அலுவலருமான கல்யாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னேற்பாடு குறித்து கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    பூச்சொரிதல் விழாவையொட்டி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    அத்துடன் தற்காலிக மற்றும் மினி பஸ் நிலையங்களை அமைக்கவேண்டும். பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கவேண்டும்.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் எண்ணிக்கையில் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். எனவே காவல்துறையினர் 7-ந் தேதி அதிகாலை முதல் 8-ந் தேதி மாலை வரை பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். கோவிலில் கூட்ட நெரிசலை சமாளிக்க, காவல் பணியில் குறைந்த பட்சம் 10 காவலர்கள் ஷிப்ட் முறையில் பணி நியமனம் செய்யவேண்டும்.

    வருகிற 7-ந் தேதி காலை 8 மணிக்கு கோவில் பூத்தட்டு கொடிமரம் அருகிலிருந்து ஊர்வலமாக யானையின் மேல் புறப்பாடாகும். அதற்கு இடையூறு ஏற்படா வண்ணம் வாகனங்களை பிரித்து பக்தர்களை மட்டும் கோவிலுக்குள் அனுப்புதல் வேண்டும். தேவைக்கேற்ப ஒரு வழிப்பாதை அமைத்து கண்காணிப்பு கோபுரம் மூலம் ஷிப்ட் முறையில் கண்காணித்தல் மற்றும் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.

    பொதுப்பணித்துறையினர் பூச்சொரிதல் திருவிழாவின் போது ஒன்று திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்துவிட்டு குளிப்பதற்கு பெருவளைவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முக்கொம்பு மேலணை ரெகுலேட்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவத் துறையினர் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் கடைவீதி, பஸ் நிலையம் அருகில், கோவில் திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் மருத்துவ முகாம் ஏற்படுத்துதல், தேவையான அளவில் ஆம்புலன்ஸ் வசதியும், இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைக்க வேண்டும்.

    போக்குவரத்துத் துறை சார்பில் சமயபுரத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடுகள் செய்தல்.

    கோவில் நிர்வாகம் தரப்பில் 7-ந் தேதி காலை 5 மணி முதல் 8-ந் தேதி மதியம் 12 மணி வரை கட்டணமில்லா தரிசனமாக பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். பூச்சொரிதலை முன்னிட்டு அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா 3-ந்தேதி தொடங்கியது.

    வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.

    இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.

    இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
    கல்குளத்தை சுற்றியுள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் "கோபாலா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 10-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர் அரசுடன் இணைந்திருந்தது. அப்போது தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகியவற்றை வேணாடு என்றும் அழைத்தனர்.

    வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது. கல்குளத்தை சுற்றி திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.

    இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் "கோபாலா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார். அங்கிருந்து மேலாங்கோடு சிவன்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இவ்வாறு நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 10-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது. 10-ந் தேதி முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 11-ந் தேதி நட்டாலம் கோவிலில் நிறைவு பெறுகிறது.
    உலகப் பிரசித்தி பெற்ற வாயு தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
    காளஹஸ்தி :

    உலகப் பிரசித்தி பெற்ற வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

    அதன்படி முதல் நாளான நாளை பகல் 3 மணிக்குமேல் கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலைமீது கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்குமேல் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் வீதிஉலா நடக்கிறது.

    மூன்றாவது நாளான 8-ந் தேதி காலை 10 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வருகிறார்கள். இரவு 10 மணிக்கு பூத வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சூக (கிளி) வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வருகிறார்கள். தொடர்ந்து 11-ந் தேதிவரை தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.

    7-வது நாளான 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மிகவும் உகந்ததாக பக்தர்களால் கருதப்படும் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு 9 மணிக்கு காளஹஸ்தியில் உள்ள நாரதர் (புஷ்கரணி) குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறும். 8-வது நாளன்று காலையிலும், இரவிலும் வீதி உலா நடக்கிறது.

    9-வது நாள் அதிகாலை 3 மணிக்கு ஆதி தம்பதியர்களான சிவன்- பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணிக்கு ருத்ர அம்பாரிகளில் சாமி, அம்பாள் புதுமண தம்பதிகளாக நான்கு மாட வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சபாபதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. 16-ந் தேதி பகல் 12.30 மணிக்கு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ கொடி இறக்குதல் நடைபெறும்.

    17-ந் தேதி இரவு 9 மணிக்கு பல்லக்கு சேவையும், 18-ந் தேதி காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், 19-ந் தேதி காலை 10.30 மணி முதல் கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது.

    இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.

    அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

    திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரத்தில் உள்ள சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் அமைந்து உள்ள சீயோன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்த பண்டிகையை ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெயம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூய லூக்கா ஆலயத்தின் ஆயர் வில்சன் தாசன் கலந்து கொண்டார். அருட்திரு அறிவர் மோகன்ராஜ் திருச்சபையில் தேவசெய்தியை வழங்கி பேசியதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம், சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். சீயோன் ஆலயம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

    மக்களாகிய நாம் அனைவரும் தேவனுடைய கரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்துவார். இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் தேவன் பார்த்து கொள்வார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விவேகத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவன் தான் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நிறுத்துகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்பின்னர் அவர் 31-வது ஆண்டு பிரதிஷ்டை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    இதனை தொடர்ந்து சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் பேசியதாவது:-

    31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடும் உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். அசனம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து சாப்பிடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நமது ஆலயத்தில் நடக்கும் அசன பண்டிகை இணைந்து சாப்பிடுதல் மற்றும் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாளம். அசன விருந்து சமய வேறுபாடுகளை கடந்ததாக மாற வேண்டும்.

    இந்த விருந்து திருச்சபையின் பிரிவினைகளை கலைந்து ஒரே குடும்பமாக வாழ வழிவகுக்கிறது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட பணமும், பொருளும் தந்து உதவி செய்த அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன். கொரோனா காலத்திலும் நம்மை பாதுகாத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு அசன பண்டிகை நடைபெற்றது. அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சபையில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் இடம்பெற்று இருந்தன.

    ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்பவர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஞாயிறு பள்ளி, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். மேலும் பண்டிகையில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஆயர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.
    குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார்.
    சோழ மன்னர்களின் குலதெய்வமும் திருச்சி மாநகர எல்லை காவல் தெய்வமுமான புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் மாசி தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி மறு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் இருந்து குழுமாயி அம்மனை பக்தர்கள் மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை சுத்த பூஜை நடைபெற்றது. பின்னர் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளிய குழுமாயி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக தேரில் வலம் வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நேற்று காலை நடைபெற்றது. புத்தூர் மந்தையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய குழுமாயி அம்மனுக்கு அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளான அளவில் வந்து தேங்காய், பழம் படைத்தும், மா விளக்கு பூஜைகள் நடத்தியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

    நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) கொம்பு வாத்தியங்கள் முழங்க விழாக்குழுவினர் அழைத்து வந்தனர். 4 பக்தர்கள் அவரை தோள்மேல் அமர வைத்து தூக்கி வைத்துக்கொண்டு மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு ஏராளமான ஆட்டுக்குட்டிகளுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகள் வரிசையாக பலியிடப்பட்டன. ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த மருளாளி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது.

    அதன்பின்னர் புத்தூர் அக்ரஹாரம், முத்துராஜா தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் வெள்ளத்தில் குழுமாயி அம்மன் தேர் அசைந்து வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அந்த பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ராட்டினம் உள்பட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை கெங்கல் மகேஸ்வரம் பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் 111 அடி உயர சிவலிங்கம் உள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை கெங்கல் மகேஸ்வரம் பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் 111அடி உயர சிவலிங்கம் உள்ளது.

    அதனை சுற்றி லட்சக்கணக்கான சிறிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. உலகிலேயே உயரமான இந்த சிவலிங்கத்தை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தற்போது அங்கு சிவராத்திரி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ×