search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறையூர் கமலவல்லி நாச்சியார்"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா எனப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை வெளிக்கோடை திருநாள் ஆகும்.

    இந்த நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உள்கோடை திருநாள் ஆகும். இந்த நாட்களில் தாயார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்படும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொது ஜன சேவைக்கான நேரம் ஆகும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை வசந்த உற்சவம் ஆகும். இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தாயார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தை அடைவார். இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 
    திருச்சி உறையூர் கோவிலில் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உற்சவரே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கும் உற்சவராக இருக்கிறார். எனவேதான், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மட்டும் உற்சவ விக்ரகம் இருக்கிறது. பெருமாளுக்கு உற்சவ விக்ரகம் இல்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை கமலவல்லி நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான(பிறந்தநாள்) பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் ஆதிபிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் ரெங்கநாதர்(நம்பெருமாள்) உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கு வந்து அவருடன் திருமண கோலத்தில் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு ‘சேர்த்தி சேவை’ அளித்து காட்சியளிப்பது வழக்கம்.

    திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று கமலவல்லி நாச்சியாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் அழகிய மணவாளனான நம்பெருமாள், கோவில் கண்ணாடி அறையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டியை கடந்து மதியம் 12 மணிக்கு கமலவல்லி நாச்சியார் கோவில் மண்டபத்தை அடைந்தார்.

    நம்பெருமாள் சேர்த்தி சேவையை காண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    அப்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு, உறையூரின் மாப்பிள்ளையான நம்பெருமாளுக்கு வரவேற்பு கொடுத்தனர். கோவிலுக்கு வந்த நம்பெருமாள், மூலஸ்தானம் எதிரே நின்று கமலவல்லி நாச்சியாரை அழைத்து, பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு சென்றார்.

    பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொண்டார். பின்னர் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் திருமணக்கோலத்தில் சேவை சாதித்தனர். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் சேர்த்தி சேவையாற்றினார். இந்த சேர்த்தி சேவை காட்சியை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் செல்கிறார். அங்கு அதிகாலை 4 மணிக்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலைமாற்றிக்கொண்டு கண்ணாடி அறையில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. கோவிலில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் தீர்த்த கோஷ்டி நடந்தது.

    இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை இதேபோன்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு தாயார் தெப்பம் கண்டருளுகிறார்.

    வருகிற 2-ந்தேதி பந்தக்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவடி சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விழாவின் 5-ம் நாளான நேற்று தாயார் திருவடி சேவை நடந்தது. மாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபத்தை வந்தடைந்தார்.

    தாயார் கிளி மாலை, சவுரி கொண்டையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    தாயார் திருவடி சேவை என்பது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். அதுவும் நவராத்திரி விழாவில் தான் இந்த சேவை நடைபெறும். தாயாரின் பாதங்களை திரளான பக்தர்கள் மனமுருக வேண்டி தரிசித்தனர். வருகிற 18-ந்தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடையும். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 14-ந்தேதி மாலை 4.15 மணிக்கு தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 18-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை பட்டர்கள் கோவிலில் இருந்து வெள்ளி குடங்களுடன் காவிரி கரைக்கு புறப்பட்டனர். காவிரி நீர் அடங்கிய குடங்களை யானைமீது வைத்து அமர்ந்த படி கோவிலுக்கு வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க திருமஞ்சன குடங்கள் கோவிலை அடைந்ததும் காலை 10.30 மணி அளவில் அங்கில் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்து. மாலை 3 மணி அளவில் அங்கில் சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டது.

    இதனையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு மேல் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பொதுஜன சேவைக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    ×