என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
    பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று போற்றுகிறது புராணம். இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

    இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.

    சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

    ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் வெகு குறைவு. சப்தகன்னியரில் மிக முக்கியமான தெய்வமாக வராஹி போற்றப்படுகிறாள். அதேபோல், கெளமாரியும் வணங்கப்படுகிறாள். கெளமாரியம்மனுக்கு கிராமங்களில் தனிச்சந்நிதியும் தனிக்கோயிலுமே அமைக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
    ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான நாளை(சனிக்கிழமை) கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம் :

    ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான நாளை(சனிக்கிழமை) கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை அதிகாலை 2.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 4 மணி வரையிலும் ஸ்படிக லிங்க தரிசனமும், தொடர்ந்து வழக்கமான காலபூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் காலை 6 மணி அளவில் கோவில் நடை சாத்தப்படும்.

    இதைதொடர்ந்து கோவிலிலிருந்து சுவாமி, அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவிலின் ரதவீதி சாலை மற்றும் நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு மாலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்று மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணியளவில் சாமி, அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைவர்.

    நாளை கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் செல்வதை ஒட்டி காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லால்குடியை அடுத்த அன்பில் சுந்தரராஜபெருமாள் கோவிலில் மாசி மாத தங்க கருட சேவை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
    லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கீழ் செயல்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தங்க கருட சேவை திருவிழா நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுஜனசேவையும் நடைபெற்றது.

    மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, அரியூர், செம்பரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    மண்டைக்காட்டில் மாசிக்கொடை விழாவில் மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து மண்டைக்காட்டிற்கு சந்தன குட பவனி சென்றது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.

    மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து சந்தனகுட ஊர்வலமானது பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 6.45 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 9 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடந்தது.

    விழாவின் 6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜை நடைபெறுகிறது.

    இந்த பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், மாசித் திருவிழாவின் ஆறாம் நாள் அன்றும், மீன பரணி கொடைவிழா அன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும்.
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.

    விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி- தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மூலகணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சன்னிதிகள் உள்ளன.

    இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.

    சுருட்டு நிவேதனம் :

    குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை, வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர் இந்த தீவிர முருக பக்தர்.

    வழக்கம் போல் முருகப்பெருமானை தரிசிக்க ஒரு நாள் விராலிமலை வந்தார் கருப்பமுத்துப் பிள்ளை. வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தது மழை விட்டபாடில்லை.

    நீண்ட நேரமாக காத்திருந்ததில் அவருக்கு பசிக்கத் தொடங்கியது. பசியைப் போக்க உணவில்லை. முருகப்பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. புகைக்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என வருந்தினார் அவர்.

    பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர் முன் தோன்றினார். அவருக்கு சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு.

    அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது விருப்பப்படி அன்று முதல் மாலை பூஜையின் போது சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்த பின் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர்.

    அருணகிரி நாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரி நாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.

    தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது.

    மன்னரின் வயிற்று வலி :

    சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு.

    புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை.

    ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைக்க மன்னரின் வயிற்று வலி குணமானது.

    திருவிழாக்கள் :

    பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது.

    கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.

    ஜனவரி முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.

    திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியில்இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை.
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது அவதார தினவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது அவதார தினவிழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெற்றது. இரவில் பணிவிடைக்கு பின்னர் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

    விழாவின் சிகர நாளான நேற்று அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வந்தனர். அப்போது கடற்கரையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ அரகரா அரகரா’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவதார விழா பணிவிடைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

    முன்னதாக அய்யா வைகுண்டர் அவதாரபதியில் புதிதாக அமைக்கப்பட்ட கல்நிலை வாயிலை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    அய்யா வைகுண்ட மூர்த்தியின் 189-வது அவதார தின விழாவையொட்டி இரட்டை குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட சாரட்டு வண்டியில் அய்யா அருளிய அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.
    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் அய்யா வைகுண்ட மூர்த்தியின் 189-வது அவதார தின விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரட்டை குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட சாரட்டு வண்டியில் அய்யா அருளிய அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.

    அதன்பின்னால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநாமக்கொடி ஏந்தி பாதயாத்திரையாக மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலம் தர்மபதியை அடைந்ததும் பகல் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

    அதேபோல் சென்னை அம்பத்தூர் ஓரகடத்தில் உள்ள அய்யா ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் அவதாரதின விழாவையொட்டி பாடி எஸ்.பி.சி.திருமண மண்டபத்தில் இருந்து அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தொடங்கி வைத்தார். இதில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
    த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
    அநந்தபூமா மம ரோகராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

    – ஸ்ரீமத் நாராயணீயம்

    பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
    பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி நடக்க உள்ள தூக்க திருவிழாவில் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் தூக்க திருவிழா வருகிற 9-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதியன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை பள்ளி உணர்த்தல் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், சோபன சங்கீத பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

    திருவிழாவின் முதல் நாளன்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்புபூஜை, அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேலதாளம் முழங்க அம்மன் எழுந்தருளி கண்ணநாகம் பகுதி வழியாக கோவில் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு கோவில் தந்திரி பிரம்ம ஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது. 2-ம் நாள் விழாவில், மதியம் ஓட்டன் துள்ளல், மாலை திரு விளக்கு பூஜை, இரவு இன்னிசை, நடனம் நடக்கிறது. 3-ம் நாளன்று காலை 8 மணிக்கு தூக்ககாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை, மதியம் ஓட்டன் துள்ளல், இரவு இன்னிசை, நாட்டிய நாடகம் நடைபெறும். தொடர்ந்து வரும் விழா நாட்களில் சமய சொற்பொழிவு, தூக்க நேர்ச்சைக்கான குலுக்கல், காப்பு கட்டு, சமய வகுப்பு, மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு மாநாடு நடக்கிறது.

    6-ம் நாள் திருவிழாவில் இரவு பண்பாட்டு மாநாடு நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாள்(17-ந் தேதி) மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் வெள்ளோட்டம் நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. அதாவது, பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தரிசனம் செய்தவுடன் உடனே அங்கிருந்து வெளியே செல்லவேண்டும். கூட்டம் கூடக்கூடாது. தூக்ககாரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தூக்க நேர்ச்சை நடத்தமுடியாமல் பதிவு செய்திருந்தவர்களுக்கு தூக்க நாளில் நடையில் நிறுத்தி நேர்ச்சை நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம் குமார், துணை செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ண குமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்? என்று அறிந்து கொள்ளலாம்
    யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்?இயேசு கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி கோவிலில் அமர்ந்து புறா விற்பவர்களையும், நாணயம் மாற்றுவோரையும் அடித்து வெளியேற்றுக்கின்றார்.இதில் நாம் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவெனில்.இயேசு தானே தன் கைகளால் ஒரு சாட்டை பின்னுவதாக நற்செய்தி நமக்கு கூறுகிறது. அத்தோடு நில்லாமல் அந்த சாட்டையைகொண்டு கடவுளுக்கு ஒவ்வாத செயல்களை செய்பவர்களை அடித்து துரத்துகிறார்.

    இயேசு கடினமான சொற்களை பயன்படுத்தி வியாபாரிகளை கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம் அல்லது அன்பாக எடுத்துக்கூறி அறிவுரை சொல்லி கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம்.இப்படி எல்லாம் செய்ய முடியாமல் கடினமான முறையை ஆண்டவர் இயேசு பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்த செயலில் இருந்து தவக்காலத்திற்கான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சாட்டை அடக்கும் கருவிகளுள் ஒன்று. தறிகெட்டு ஓடும் கட்டுக்கு அடங்காத குதிரைகளையும்,காளைகளையும் அடக்க பண்படுத்தும் கடினமான கருவியாகும்.

    இதேபோல ஒரு சாட்டையைத்தான் ஆண்டவர் இயேசு இந்த தவக்காலத்தில் நம்மை பின்னச்சொல்கிறார். எதற்காக?தறிகெட்டு ஓடும் நம் மன குதிரையை இந்த சாட்டையை கொண்டு அடக்குவதற்காக,நீண்ட நாட்களாக உள்ளத்தில் குடியிருந்து உள்ளம் என்னும் கோவிலின் புனிதத்தை கெடுத்து. நம்மை வாட்டி வதைக்கும் பாவ செயல்களை இந்த சாட்டையைக்கொண்டு விரட்ட வேண்டும். உதாரணமாக கோபம் என்னும் பாவத்தை எடுத்துக்கொள்வோம்.இது நம் உள்ள ஆலயத்தில் தூய்மையை கெடுக்கின்ற ஒரு பாவம். இந்த பாவத்தை எந்த சாட்டை கொண்டு விரட்டுவது?பொறுமை என்னும் சாட்டையைக்கொண்டு கோபம் என்னும் பாவத்தை அடித்து விரட்டுவோம். பொறுமை என்னும் சாட்டையை பின்ன என்னென்ன கயிறுகள் நமக்குத்தேவை?

    1)நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து தியானம் செய்யும் கயிறு.2)ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது மவுனமாக இருத்தல் என்னும் கயிறு.3) பிறரின் சொல்லுக்கு கவனம் என்னும் கயிறு.4)தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தல் என்னும் கயிறு.5) கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு அகலுதல் என்னும் கயிறு.இந்த கயிறுகளை கொண்டு பொறுமை என்னும் சாட்டையை நாம் பின்னிவிட முடியும்.பிறகென்ன?கோபம் என்னும் மனக்குதிரை தானாக அடங்கி பொறுமை என்னும் வளையத்திற்குள் வந்துவிடுவோம்.

    இதுபோன்று ஒவ்வொறு பாவத்திற்கும் ஒவ்வொரு சாட்டையை பின்னுவோம். இந்த தவக்காலத்தில் நம் மனதை மிகவும் வருத்தும் ஏதாவது ஒரு பாவத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை விரட்ட என்னென்ன கயிறுகள் கொண்டு சாட்டை பின்னலாம் எனயோசிப்போம். ஏனெனில் தவக்காலம் பாவத்திற்கு எதிராக சாட்டை பின்னும் காலமாகும். ஆமென்.

    போதகர் லூயிஸ், அந்தியூர்.
    பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவத்தின் போதும், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற மார்ச் 10-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்குகிறது. 11-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம்,இரவு 7 மணி்க்கு யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, இரவு 10 மணிக்கு முகப்பள்ளயம், மயான பூஜை நடக்கிறது. 12-ந்தேதி காலை 7 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம்,மாலை 5 மணிக்கு மாவிளக்கு, 5.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல், இரவு 7 மணிக்கு அம்மை அழைத்தல், 8 மணிக்கு திருக்கல்யான உற்சவம் நடக்கிறது.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல், 8.30 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல், 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா நடைபெறவுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை உற்சவம் முடிந்ததும் தரிசனம் செய்ய முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கபடவுள்ளனர்.

    குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு பின் காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த விழாவின் போது பால்குட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது தனிச்சிறப்பாகும். இதையொட்டி இந்தாண்டு விழா வருகிற 9-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் நடக்கிறது.

    அத்துடன் அன்று காலை 4.15 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து 6.30 மணிக்கு மேல் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதையடுத்து பால்குடம், காவடி, வேல் போடுதல், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுக்க உள்ள பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்குவார்கள். தொடர்ந்து வரும் 16-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மறுநாள் 17-ந் தேதி காலையில் கரகம் எடுத்தல், பால்குடம், பறவை காவடி, வேல் போடுதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பால்குட திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கூட்டம், கூட்டமாக பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது தனிச்சிறப்பாக இருக்கும்.

    அன்று மாலை 5 மணிக்கு கரகம் மற்றும் முளைப்பாரி ஆகியவை பருப்பூரணியில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 18-ந் தேதி அம்பாள் திருவீதி உலாவும், மறுநாள் 19-ந் தேதி மாலை 4 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கர், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×