என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அழகர் மலை உச்சியில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.
    அழகர் மலை உச்சியில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில். இந்த கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.

    விழாவில் மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு இரவு 8 மணி முதல் கால பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 2-ம் கால பூஜை இரவு 10.30 மணிக்கும், 3-ம் கால பூஜை 12 மணிக்கும் நடை பெறுகிறது.

    பின்னர் 4-ம் கால பூஜை 1.30 மணிக்கும் அர்த்த சாம பள்ளியறை பூஜை அதிகாலை 3 மணிக்கும் நடைபெற்று நடை சாத்தப்படுகிறது. இதில் முன்னதாக பல்வேறு பூஜைகளும் அலங்கார பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறுகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிப் பெருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தில் அன்னதானம் வழங்க அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 2-ந்தேதி வரை பங்குனிப் பெருவிழா நடக்கிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி திருக்கல்யாணமும், மறுநாள் 1-ந்தேதி மகா தேரோட்டமும் நடக்கிறது.

    முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் முடிந்ததும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இதேபோல கிரிவலப்பாதையில் மகா தேர்வலம் வரும்போதும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பலர் மண்டபங்களில் பக்தர்களை வரவழைத்து அன்னதானம் வழங்குவார்கள்.

    மகாதேரோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரை சோந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் தேருக்கு முன்னும், பின்னுமாக செல்லுவார்கள். குறிப்பாக எம்.எல்.ஏ, எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. என்று பலர் கலந்துகொள்வார்கள். அவர்களுடன் அவரவர் கட்சி நிர்வாகிகளும் தேர்நிலைக்கு வரும்வரை அணி, அணியாக கலந்துகொள்வார்கள். இத்தகைய நிகழ்வு காலம்காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    எனவே அரசியல் கட்சியினர் தேரோட்டத்தில் பங்கேற்பதில் நிபந்தனைகள் உண்டா என்பது தெரியவில்லை. கிராம திருவிழா என்பதாலும், கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உருவான ஊரடங்கால் பங்குனி பெருவிழா தேரோட்டம் ரத்தானது.

    இந்த நிலையில் தேர்தலும், தேரோட்டமும் ஒரே சமயத்தில் வருவதால் அரசியல் கட்சியினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல தேரோட் டத்தில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்த பிறகு தேர்தல் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    இதுதொடர்பாக இன்று (6-ந்தேதி) ஆர்.டி.ஓ. சவுந்தரியா தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதில் தேர்தல் நன்டைத்தை விதிக்கு உட்பட்ட முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி  :

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சந்திரசேகரஆசாத் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்து, முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்கள், வீதிஉலாவில் பயன்படுத்தப்படும் தங்க வாகனங்கள், தேர், கோவிலின் மேற்கூரை உள்பட பல்வேறு சன்னதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவிலில் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தா்களுக்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறுகிறது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.

    அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 30-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்புவனம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றப்பட்டது.

    திருப்புவனம் புதூரில் மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.பின்னர் மாரியம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு கொடிமரம், மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன், மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.

    இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று காலை முதல் இரவு வரை விரதம் இருந்து வரும் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, உருவபொம்மை எடுத்தல், கரும்புள்ளி- செம்புள்ளி குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.
    காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் காப்பு அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக சுமார் 51 ஆயிரம் காப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 9-ந்தேதி காலை கொடியேற்றம் திருவிழா தொடங்குகிறது. 16-ந்தேதி முளைப்பாரி எடுத்தல், 17-ந்தேதி பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு அணிந்து திருவிழா தொடங்கும் நாளில் இருந்து விரதம் இருப்பார்கள்.

    இதை தொடர்ந்து சுமார் 51 ஆயிரம் காப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    கோவில் சாமி சிலை முன்பு வைக்கப்பட்ட மஞ்சளை எடுத்து காப்பு தயாரிக்கும் பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டனர். திருவிழா தொடங்க இருப்பதை தொடர்ந்து பெண்கள் மஞ்சள் ஆடையுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
    சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் மூன்று தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பாண்டவர்களின் முதல்வரான தர்மனுக்கு ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்கிரபாத மகரிஷி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.

    பீமனின் அகந்தையை அடக்க வியாக்கிரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார். மகாவிஷ்ணு. பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார். அத்துடன் 12 உத்திராட்சங்களையும் பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றைக் கீழே போட்டு விடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் ருத்ராட்சங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது. அப்போது பீமன் "கோவிந்தா, கோபாலா" என குரல் எழுப்பியபடி பால் பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம் விஷ்ணுவாக தெரிய தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்தி சென்று பிடித்து கொண்டது. உடனே பீமன் உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.

    சிறிது நேரம் கழித்து மீண்டும் "கோவிந்தா, கோபாலா" என குரலெழுப்பி பால் பெற முயன்றபோது புருஷமிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு ஓடி விட்டான். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவ தலங்களாக உருவாகி விடுகின்றது.

    பன்னிரண்டாவது உத்திராட்சம் போடும்போது பீமனின் ஒருகால் வியாக்கிரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன் தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷ மிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியாக யாகம் நிறை வேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் இன்று பக்தர்கள் கோவில் களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.

    மற்றொரு கதை

    சுண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன் நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விடவேண்டும் என்ற வரத்தை கேட்டான். சிவனும் அந்த வரத்தை கொடுத்தார்.

    உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா என்பதை அறிய சிவனின் தலையை தொட முயன்றான். உடனே சிவன் அங்கிருந்து "கோபாலா, கோவிந்தா" என்று அழைத்துவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார் விஷ்ணு.

    இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.
    திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி தங்க பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் நாச்சியார்களுடன், சவுரிராஜப்பெருமாள், தெப்பத்தில் எழுந்தருளினார்.கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது.

    தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது. இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், திருமருகல் ஒன்றியக்குழு தலைவருமான ராதாகிருட்டிணன், தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பூண்டி மாதா பேராலயத்தில் தவக்கால 3-ம் வெள்ளி திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மேலும் சிலுவைப்பாதை ஊர்வலமும் நடந்தது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருேக உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த ஆலயத்தில் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சிறப்பு திருப்பலியும் சிலுவை பாதையும் நடைபெற்று வருகின்றன. தவக்காலத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கிய சாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண்சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பலிக்கு பின்னர் மக்களின் நன்மைக்காக ஏசுநாதர் பட்ட துயரங்களை விளக்கும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரை சிலுவையில் அறைய தீர்ப்பளிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, சிலுவையில் அறையப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரையான 14 நிலைகள் பூண்டிமாதா பேராலயத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் மூலம் ஏசுநாதர் மக்களுக்காக பட்ட துயரங்களை 14 நிலைகளையும் அருட்தந்தையர்கள் விளக்கி கூறினர்.

    திருப்பலியில் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

    இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நண்பகல் 12 மணிக்கு பருத்திவிளை மற்றும் உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தனகுடம் பவனி, 1 மணிக்கு உச்சிகால பூஜை, 4.15 மணிக்கு களிமார் கணேசபுரத்தில் இருந்து சந்தன குடம் பவனி, மாலை 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. இதனையொட்டி பூஜையில் பொரி, அவல், கற்கண்டு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் உள்பட பழவகைகள், மண்டையப்பம், அப்பம், அரவணை, திரளி (கொழுக்கட்டை) போன்ற வழிபாட்டு பொருட்கள் இளநீர், கரும்பு, தேங்காய் போன்றவைகள் அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அலங்கார பூஜை நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    9-ம் நாளான இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி உடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், 10-ம் நாள் அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு நடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குதியோட்டம், இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனியும், தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
    தஞ்சை பெரியகோவில் மாமல்லபுரத்தை போல மின்னொளியில் ஜொலிக்கிறது. விளக்குகளை எறிய விட்டு சோதனை செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவராத்திரி முதல் இதனை பக்தர்கள் கண்டு களிக்கலாம்.
    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். கலை மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் 1987-ம் ஆண்டு யுனஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்தது. இது சோழர்களின் கட்டிடக்கலையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இந்த கோவில் முதலாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இந்த கோவில் கி.பி. 1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.

    இந்த கோவில் மாமல்லபுரத்தை போல இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பெரியகோவிலில் உள்ள 216 அடி விமான கோபுரம், அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளும், ராஜராஜன் கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், மராட்டி நுழைவு வாயில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

    மால்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இரவு நேரத்தில் ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்து வருகின்றன.

    அதே போன்று தஞ்சை பெரியகோவிலும் தற்போது ஜொலிக்க உள்ளன. தற்போது விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் விளக்குகளை எறிய விட்டு சோதனை செய்து வருகிறார்கள்.

    இது குறித்து தொல்லியல்துறை வட்டாரங்கள் கூறுகையில், தஞ்சை பெரியகோவிலை ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் காணும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தற்போது இரவு நேரங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற 11-ந்தேதி மகாசிவராத்திரி முதல் இந்த விளக்குள் நிரந்தரமாக எரியவிடப்படும். இரவு நேரங்களில் ரம்பியமான விளக்கு வெளிச்சத்தில் பெரியகோவிலை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
    கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
    கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவது மிகவும் புண்ணியம் சேர்க்கும். ஏனெனில் மாசி மகம் அன்று, இங்கு புண்ணிய நதிகளும் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    * வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.

    * கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.

    * பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்.

    * யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.

    * குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.

    * கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.

    * ஈசான்ய தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.

    * நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.

    * இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.

    * சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.

    * அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    * காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.

    * எம தீர்த்தம் - மரண பயம் நீங்கும்.

    * குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்.

    * நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீங்கும்.

    * பயோஷினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.(பாலாறு)

    * அறுபத்தாறு - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.கோடி தீர்த்தம்

    * வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.

    * சரயு தீர்த்தம் - மனக்கவலை தீர்க்கும்.

    * தேவ தீர்த்தம் - சகல பாவங்களையும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.
    ×