
இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்த கோவில் மாமல்லபுரத்தை போல இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பெரியகோவிலில் உள்ள 216 அடி விமான கோபுரம், அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளும், ராஜராஜன் கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், மராட்டி நுழைவு வாயில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
மால்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இரவு நேரத்தில் ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்து வருகின்றன.
அதே போன்று தஞ்சை பெரியகோவிலும் தற்போது ஜொலிக்க உள்ளன. தற்போது விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் விளக்குகளை எறிய விட்டு சோதனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து தொல்லியல்துறை வட்டாரங்கள் கூறுகையில், தஞ்சை பெரியகோவிலை ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் காணும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தற்போது இரவு நேரங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற 11-ந்தேதி மகாசிவராத்திரி முதல் இந்த விளக்குள் நிரந்தரமாக எரியவிடப்படும். இரவு நேரங்களில் ரம்பியமான விளக்கு வெளிச்சத்தில் பெரியகோவிலை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.