search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசாணியம்மன் கோவில்"

    • எச்சில் சோறை பக்தர்களுக்கு வழங்கினார்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோவை மாவட்டம் ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயனநிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்ந்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை, சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். பின்னர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்குதல் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி மாசாணியம்மன் முன் உருட்டிய விழிகளுடன் உட்கார்ந்த நிலையில் காவல் தெய்வமாக உள்ள மகாமுனிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை முதல் மகாமுனி பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி மகாமுனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாமுனி அருளாளி சுப்பிரமணியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள் வந்த நிலையில் வீட்டில் இருந்த மகாமுனி அருளாளி சுப்பிரமணியை மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண், முறைதாரர்கள் மற்றும் அருளாளிகள் அழைத்தனர். தொடர்ந்து அருள் வந்த நிலையில் ஆக்ரோஷமாக இருந்த அருளாளி சுப்பிரமணியை சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதையடுத்து மகாமுனி அருளாளி சுப்பிரமணி படையல் சாப்பாடை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி எச்சில் வலம் வந்தார். மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் எச்சில் சோறுக்கு கண்ணீருடன் காத்திருந்தனர். 9.35-க்கு எச்சில் சோறை பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் ஒரு சிலருக்கே மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தது.

    மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்கினர். கிடைக்காத பெண்கள் சோகத்துடன் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.

    மகாமுனி பூஜையை காண கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • இன்று மஞ்சள் நீராடுதல், மகாமுனி பூஜை நடக்கிறது.
    • நாளை மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தை அமாவாசையான கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மயான பூஜையில் எடுத்து வரப்பட்ட பிடிமண் மூலம் 4-ந் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி மற்றும் விரதம் இருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, மகா பூஜை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பொள்ளாச்சி-சேத்துமடை சாலையில் உள்ள குண்டம் மைதானத்தில் 47 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சித்திரதேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணிக்கு குண்டம் மைதானத்தை வந்தடைந்தது.

    இரவு 10 மணிக்கு செண்டை மேளம் முழங்க வாணவேடிக் கையுடன் குண்டம் பூ வளர்க்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆபரண பெட்டியில் சூலாயுதம் மற்றும் பூஜை பொருட்கள், அக்னி கலசத்துடன் அர்ச்சகர்கள், முறைதாரர்கள், அருளாளிகள், விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு புனித நீராடி சிறப்பு பூஜை செய்து விட்டு குண்டம் நடைபெறும் இடத்திற்கு அரளிப்பூ மாலை அணிந்து கொண்டு வந்தனர்.

    குண்டத்தில் காலை 7.10 மணிக்கு மல்லிகை பூவினால் செய்யப்பட்ட பூ பந்தை, அம்மன் அருளாளி குப்புசாமி உருட்டி விட்டார். பூ வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து தலைமை முறைதாரர் மனோகரன் எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டார். தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி ஆகியோர் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பக்தர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.

    குண்டத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாசாணியம்மன் வீற்றிருந்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் தேரில் வீற்றிருந்த மாசாணியம்மனை நோக்கி, மாசாணித் தாயே! காப்பாற்று! என்று கூறியபடி ஓடி வந்தனர். ஒரு சில பக்தர்கள் குண்டத்தில் நடந்து வந்து கூடியிருந்த பக்தர்களை பரவசப்படுத்தினர். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண் பக்தர்கள் கையில் குண்டம் பூவை அள்ளி மீண்டும் குண்டத்தில் போட்டு, அம்மனை தரிசித்தனர்.

    குண்டம் விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் குண்டம் திருவிழா பக்தர்கள் காணும் வகையில் மைதானத்திற்கு வெளியே பெரிய திரையில் நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்பட்டன. குண்டம் விழாவையொட்டி போலீசார், ஊர்க்காவல் படையினர் என 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குண்டம் திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன.மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    மாசாணியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • செவ்வாய்க்கிழமை கொடி இறக்குதல், மகா முனி பூஜை நடக்கிறது.
    • 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று அதிகாலையில் ஆழியாற்றங்கரையில் நடந்தது.

    தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் முறைதாரர்கள் திருஆபரண பெட்டியில் பூஜை பொருட்களை எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடக்கும் ஆழியாற்றங்கரைக்கு வந்தனர்.

    அங்கு மயான மண்ணில் சயன கோலத்தில் மாசாணியம்மன் உருவம் செய்யப்பட்டு, அதற்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதைதொடர்ந்து அம்மன் அருளாளி அருண் அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் ஆடினார். இந்த பூஜையின் போது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடி அம்மனை தரிசித்தனர்.

    அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியபடி பிடிமண் எடுத்து அம்மன் பட்டு சேலையில் பத்திரப்படுத்தினார்.

    எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற்றங்கரைக்கு சென்றார். அவருடன் பக்தர்கள், முறைதார்களுடன் சென்று ஆற்றில் புனித நீராடினர்.

    தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மாசாணியம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 10.30 மணிக்கு மேல் சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்குகிறார்கள்.

    நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை ஆகியவை நடக்கிறது. 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • 5-ந்தேதி தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
    • 6-ந்தேதி குண்டம் இறங்குதல் நடக்கிறது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயான பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரையில் நடக்கிறது. இந்த பூஜையில் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மயான பூஜைக்காக பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மயான பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சித்திரைத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. 6-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்

    7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    • பிப்ரவரி 3-ந்தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடக்கிறது.
    • 6-ந்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.

    பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர்காரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் கொடியேற்ற விழாவில் பங்கேற்று மாசாணியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று தை அமாவாசை என்பதால் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு இன்று பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு 45 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து விடிய, விடிய பஸ்கள் சென்று கொண்டே இருந்தன. பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவிழா தொடங்கியதை அடுத்து இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், 4-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.

    5-ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 6-ந்தேதி பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில். உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தினந்தோறும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை (21-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடியேற்றத்துக்காக வனப்பகுதியில் இருந்து மரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், முறைதாரர்கள், அம்மன் அருளாளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டில் இருந்து 65 அடி நீளம் உள்ள மூங்கில் மரத்தை கொடிக்கம்பத்துக்கு தேர்வு செய்து வெட்டி எடுத்து வந்தனர்.

    சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் சுமந்து மாசாணியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்த கம்பத்தில் நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.

    இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், 4-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.

    5-ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-ந்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    • கிளி மீது அம்மன் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது.
    • அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து பூக்களை பறித்து போட்டு வழிபடுவது பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலுக்கு இருகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நேற்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    வருடா வருடம் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்போது, மாசாணியம்மன் மடி மற்றும் தலையில் கிளி ஒன்று வந்து அமர்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் அதேபோன்று கோவிலில் சுற்றி திரியும் கிளி நேற்றும் அம்மன் தலையில் அமர்ந்து கொண்டது. கிளி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த பூவை வாயினால் கிள்ளி போட்டது. இந்த காட்சியை பார்ப்பதற்கு அம்மன் மீது கிளி பூ தூவி வழிபாடு செய்வது போல் இருந்தது.

    இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் மாசாணியம்மன் வழிபட்டனர். கிளி மீது அம்மன் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது.

    இதையடுத்து இருகூர், நீலாம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கிளியை பார்ப்பதற்காகவும், அம்மனை தரிசிக்கவும் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அம்மன் மீது அமர்ந்திருக்கும் கிளியை சிலர் துரத்தி பார்த்தனர். ஆனால் கிளி மீண்டும் அங்கேயே வந்து அமர்ந்தது. சத்தமாக சாமி பாடல்களை இசைக்கவிட்டும், பூஜை செய்தபோதும் நகராமல் அங்கேயே இருந்தது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து பூக்களை பறித்து போட்டு வழிபடுவது பார்க்கவே பரவசமாக இருக்கிறது. இந்த கிளியை பலமுறை கோவிலில் இருந்து துரத்தியுள்ளனர். ஆனால் எத்தனை முறை துரத்தினாலும் மீண்டும் மாசாணியம்மனை தேடி கோவிலுக்கு வந்து விடுகிறது என்றனர்.

    • மாசாணி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
    • மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இங்கு பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் உள்ளார். பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் சார்பில் மார்கழி மாதம் 18-ந்தேதி கோவில் முன்பு 7 அடி உயரத்திற்கு உடை முள், கற்றாலை முள் உள்பட பல முட்களை கொண்டு முள்படுக்கை அமைத்து அதில் சாமியார் நாகராணி அம்மையார் நின்றபடியும், சாமியாடியும், முள்படுக்கையில் படுத்தபடி அருள்வாக்கு கூறுவார்.

    இதற்காக கார்த்திகை மாதம் முதல் நாள் விரதம் இருந்து மார்கழி மாதம் 18 வரை 40 நாட்கள் கடும் விரதம் இருப்பார். இந்த முள்படுக்கையின்போது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    இதேபோல் இக்கோவிலில் பங்குனி உற்சவ விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-வது நாள் நாகராணி அம்மையாரும், பக்தர்களும் சேர்ந்து வைகையாற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது மாசாணி அம்மன் சிலை. இந்த சிலையானது 41 அடி நீளத்தில் மாசாணி அம்மன் படுத்த நிலையில் தனியாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபராதனை நடைபெறுவது வழக்கம். இதேபோல் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெறும். மேலும் மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் நடைபெற்ற பின்னர் மாசாணி அம்மனுக்கு சேலைகள் வாங்கி வந்து சிலைகள் மேல் சாத்தி வணங்கி வருகின்றனர்.

    இதைபோல் நூற்றுக்கணக்கான சேலைகள் சிலை மேல் சாத்தப்பட்டுள்ளது. மேலும் தங்களது காணிக்கைளையும் அம்மன் மீது செலுத்துகின்றனர். இதையடுத்து நேற்று அமாவாசையையொட்டி மாசாணி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாரதனைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம் கூறி பூஜைகள் நடைபெற்றது. மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

    ×