என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.
    • நேர்காணலின்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

    கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.

    இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

    அவர் கூறியதாவது, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும் பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

    கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது.

    ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    பள்ளி மாணவர்கள் பின்னணியில் ஒரு கொலை கதை ராம் அப்துல்லா ஆண்டனி.

    பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராம், அப்துல்லா, ஆண்டனி. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு நாள் ராம், அப்துல்லா, ஆண்டனி ஒன்றிணைந்து தொழிலதிபரான வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர்.

    இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணையை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர 3 பேரையும் கைதும் செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் இவ்வளவு கொரூரமாக இருக்கின்றனர்? தொழிலதிபரின் பேரனை எதற்காக கடத்தி கொலை செய்தனர். சிறுவர்கள் இவ்வாறு மாறியதற்கு காரணம் என்ன என்பது படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தின் கதைக்கு ஏற்ப பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் ஆகியோர் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஜெயவேல் எழுதி இயக்கியுள்ள படம் சுவாரஸ்யமான படமாக்கல் மற்றும் இயல்பான காட்சிகளைக் கொண்டு செல்கிறது. சிறுவர்களின் ஆரம்பக் காட்சிகளில் செய்யும் காட்சிகளை திகிலூட்டுகிறது. சாய் தீனா கவனிக்க வைத்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி உருக்கம்.

    இசை

    படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் புதுமுக இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன்.

    ஒளிப்பதிவு

    கதைக்கு ஏற்ற மேக்கிங் இல்லை. கதையில் சுவாரஸ்யம் இருந்தாலும் மிகவும் சாதாரணமான காட்சிகளாக நகர்கிறது.

    மெஸன்ஜர் ஒரு திகில் மற்றும் பேண்டஸி நிறைந்த படம்.

    நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்" என்ற செய்தி இருக்கிறது. இதை பார்த்து தற்கொலை முயற்சியை கைவிடுகிறார்.

    பின்னர் அந்த பெண் யார் என்பதை தேடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

    இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா? இல்லையா? மெசேஜ் அனுப்பியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஶ்ரீராம் கார்த்திக், தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார். அந்த பெண் யார் என்ற தேடுதலும், காதலிப்பதும் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக லிப் லாக் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

    பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நாம் நிறைய காதல் படங்களை பார்த்து இருப்போம். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. யாரும் சிந்திக்காத கதையை, தனது கற்பனை கலந்து திகில் மற்றும் ஃபேண்டஸி படமாக கொடுத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.  

    இசை

    இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் பால கணேசன் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    படத்தொகுப்பு

    இயக்குனரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்தின் பணியும் பாராட்டும்படி உள்ளது.

    • அஜித்தைக் கண்ட அவரது ரசிகர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர்.
    • கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

    இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது, அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.

    இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் செய்தார். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அஜித்தைக் கண்ட அவரது ரசிகர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நடிகர் அஜித் சினிமாவைத்தாண்டி ரேசிங்கில் பிஸியாக இருக்கக்கூடியவர். ஆனால் கடந்த சில தினங்களாக கோவிலில் சாமி தரிசனம் செய்வது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த நிலையில், ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டை புகைப்படத்திற்கும், நேர்காணலுக்கும் நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் மாதத்திற்கான இதழில் அஜித் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 



    • அபிஷன் ஜீவின்ந்த்- அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

    அதனை தொடர்ந்து, அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவின்ந்த் இன்று கரம் பிடித்தார். சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுமண தம்பதிகளான அபிஷன் ஜீவின்ந்த்- அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.
    • படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

    கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் 'ரெட் லேபிள்'. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.

    கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், 'ரெட் லேபிள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல. ஆனால் புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
    • ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, கடந்த 16-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார். ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார். 



    • ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம்.
    • சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சரத்குமார், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் தனது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'சூர்ய வம்சம்' படம் குறித்த நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.



    அவர் கூறுகையில், ''சூர்ய வம்சம் படம் ரிலீசான சமயத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் வந்து 'என்ன படம் எடுத்துள்ளீர்கள், இது எப்படி ஓடும்?' என்று கேட்டு சென்றார். எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் சூழலில், இவர் இப்படி சொல்லிட்டாரே... என்று யோசித்தேன். சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    என்னை பொறுத்தவரை இன்று வரை தியேட்டர்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படம் என்றால், அது சூர்ய வம்சம் படம் தான். அதை உறுதியாகவே சொல்வேன்'', என்றார்.

    • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது தனது 21 வயதில் உயிர் தியாகம் செய்தார்.
    • அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    நாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருதான 'பரம் வீர் சக்ரா' விருதைப் பெற்ற இளம் வீரரான லெப்டினன்ட் அருண் கேதர்பாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'இக்கிஸ்' என்ற இந்தி படம் உருவாகி உள்ளது.

    1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது தனது 21 வயதில் உயிர் தியாகம் செய்தார். இந்த படம் அருண் கேதர்பாலின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இருக்கும்.

    பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மூத்த மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா இந்த படத்தில் அருண் கேதர்பாலாக நடிக்கிறார்.

    அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் மூத்த நடிகர் தர்மேந்திரா மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படம்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்கிற படமாக உருவாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது.

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ப செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியது உள்பட பிற முக்கிய நிகழ்வுகளும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை கடவுளுக்கு நிகராக மதித்து கொண்டாடுகின்றனர். இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது ஒவ்வொரு சாதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகர்கள்

    பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷிர் கச்சிதமாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பிற கதாப்பாத்திரங்களும் கதைக்கு ஏற்ப நடித்துள்ளனர்.

    இயக்கம்

    இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். படத்தை இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம். திரைக்கதை மீது கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தது.

    ஒளிப்பதிவு

    அகிலன் ஷியாலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    கிஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், கிஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கிஸ் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 'காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, காந்தா படத்தில் இடம்பெற்றுள்ள "கண்மணி நீ" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

    இந்நிலையில், காந்தா படத்தின் மற்றொரு பாடலான 'Rage Of Kantha' இன்று மாலை வெளியாகியுள்ளது.

    ×