என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெல்லிசை மன்னர்"

    அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாக "விஸ்வராகம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

    அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து 'விஸ்வராகம்' என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது.

    • சி.ஆர். சுப்புராம் அவர்கள் இசைக்குழுவில் எம்.எஸ்.வி. வயதையொத்த இளைஞர் டி.கே.ராமமூர்த்தி வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்.
    • முதல் சந்திப்பிலே அவர் மீது எம்.எஸ்.விக்கு ஒரு இனம் புரியாத பந்தம் ஏற்பட்டது.

    2012ல் என்று நினைக்கிறேன்.. என்னுடைய ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சாரும் கலந்து கொண்டார். அவர் ரெம்ப நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது எதேச்சையாக ஒரு வார்த்தை சொன்னார். அதைக்கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது.

    நான் எல்லாவற்றையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்கிறேன்... பேசுகிறேன்... எந்தவொரு விசயத்தை கேட்டாலும் பதறாமல் இருக்கிறேன்... என்ற அளவில் தான் என்னைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் நான் கூட ஒரு காலக்கட்டத்தில் செத்து போய்விடலாமோ என்ற அளவுக்கு வெறுத்து போய் இருக்கிறேன் என்றார்.

    அதை கேட்டதும் எனக்கு எப்படியோ இருந்தது. என்ன சார்.. அப்படி எல்லாமா நினைச்சீங்க? என்று கேட்டேன்.

    ஆமா! அது ஒரு பெரிய கதை என்று தனது இளமைக் கால வாழ்க்கையைப்பற்றி கூறினார். அவரைப்பற்றி பலவித தகவல்களை படித்திருந்த போதிலும் அவர் வாயிலாக கேட்ட போது, எனக்கு அவர் மேல் இருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.

    இசை மேதை எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஒரு உதவியாளராகத்தான் திரையுலக பயணத்தை தொடங்கினார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆர்மோனியம் பெட்டியை துடைக்கிறப் பையனாக, ஒரு ஆபீஸ் பையனாகத்தான் இருந்தார்.

    இசை அமைக்கணும் என்ற ஆசையெல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆனால் சினிமாவில் நடிக்கனும் என்கிற ஆசை இருந்தது. அதற்காகத்தான் சினிமா பீல்டுக்கு வந்தார். ஆனால் ஆர்மோனியத்தை துடைக்கிற வேலைதான் அவருக்கு கிடைத்தது.

    அப்படி இருக்கையில் சினிமா பாடல்களுக்கு இசையமைக்கிறதை நாளும் பொழுதும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். அதனால அவருள்ளும் இசையூற்று பொங்க ஆரம்பித்தது.

    எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஒரு படத்துக்காக 12 பாடல்களை சிரத்தையோடு பண்ணினார். அந்த பன்னிரெண்டு பாடல்களும் ரிஜெக்ட் ஆனது. வேண்டாம் நல்லா இல்லை என்று சொல்லி விட்டார்கள். இதனால் மனம் வெறுத்து போய் உட்கார்ந்திருந்தார்.

    அன்றையதினம் இசைகுழுவினர் எல்லோரும் போனப் பிறகு எம்.எஸ்.வி. ராத்திரியில் ஆர்மோனிய பெட்டியை துடைத்த போது அவராக ஒரு டியூனை அதில் வாசித்தார். அந்த டியூன் எஸ்.எம். சுப்பையா நாயுடு காதில் விழுகிறது. அதை கேட்டதும், பிரமாதம் தம்பி. இந்த டியூனை ஒரு பாடலுக்கு வச்சிக்கலாம் என்று சொன்னார்.

    அப்படியா ஐயா என்று திகைத்த எம்.எஸ்.வி, இந்த டியூனை நான் போட்டதாக சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    சரி..சரி.. நீ போட்டது என்று சொல்லவில்லை. நான் போட்டதாகவே இருக்கட்டும். அந்த பாட்டு இந்த படத்துல வரட்டும் என்றார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. அது மட்டுமல்ல அது மாதிரி எம்.எஸ்.வி. அமைத்த ரெண்டு மூன்று டியூன்களும் அந்த படத்துல இடம்பெற்றது.

    ஒரு கட்டத்தில் அந்த ஸ்டூடியோவை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் அதில் பணிபுரிந்த எல்லோருக்கும் வேலைபறிபோனது.

    எம்.எஸ்.விக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. நமக்கு தெரிஞ்சது இது ஒன்னு தான். இதை விட்டுட்டு எங்கே போறதுன்னு விழித்தார்.

    அப்பதான் சின்ன வயசுல ஒரு தரம் அவங்க அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. குடும்ப கஷ்டத்தால் அவதிப்பட்டபோது "எதுக்கு நம்ம வாழணும்? இந்த உலகத்துல இருக்க வேண்டாம்" என்று அவரது அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

    இப்போது மறுபடியும் அதே நிலைமை ஏற்படவே, நாம எதுக்கு இந்த உலகத்துல இருக்கணும் என்ற கவலையோடு இருந்தார்.

    அந்த சமயத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வியை அழைத்துக் கொண்டு முதலாளியிடம் போனார்.

    நீங்கள் ஸ்டூடியோவை மூடுங்கள்.. எல்லோரையும் வேலையை விட்டு துரத்துங்கள்.. என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க... ஆனால் இவனை மட்டும் விட்டு விடாதீங்க. அவனுக்கு ஏதாவது ஒரு உதவி நிச்சயம் பண்ணித்தான் ஆகனும் என்றார்.

    ஏன் இவனுக்கு என்ன? என்று கேட்டார் முதலாளி.

    உங்க படத்துல எதையெல்லாம் சூப்பர்ஹிட் பாடல்கள் என்று தூக்கிவச்சி கொண்டாடினீங்களோ, அவை எல்லாம் நான் பண்ணினது அல்ல. இந்த பையன் பண்ணினது தான். இந்த பெருமை எல்லாம் அவனுடையதுதான் என்றார்.

    அதோடு மட்டும் நில்லாமல் எம்.எஸ்.வியை கூட்டிட்டு போய் சி.ஆர்.சுப்புராம் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பு தான் எம்.எஸ்.வி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

    சி.ஆர். சுப்புராம் அவர்கள் இசைக் குழுவில் எம்.எஸ்.வி. வயதையொத்த இளைஞர் டி.கே.ராமமூர்த்தி வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். முதல் சந்திப்பிலே அவர் மீது எம்.எஸ்.விக்கு ஒரு இனம் புரியாத பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகினர். இறுக்கமான நட்பு ஏற்பட்டது. அதன்பின்னர் திரையிசையில் இருவரும் மெல்லிசை மன்னர்களாக கொடிகட்டி பறந்தது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.

    காதல் இருக்கும் இடத்திலே தானே ஊடலும் இருக்கும். அதுபோல் நெருங்கிய நண்பர்களான அவர்களிடத்தில் தர்க்கமும் நிறைந்திருந்தது. இசை அமைக்கும் போது ஒருவருக்கு ஒருவர் கடுமையாக வாதிடுவார்களாம். திரைக்குப்பின்னால் அவர்களிடையே நடந்த இந்த விவாதங்களை ஒரு பெரிய புத்தகமாகவே போடலாம் என்கிறார்கள் அவர்களிடம் வேலைப்பார்த்தவர்கள்.

    இசையமைக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு முரணான தர்க்க போராட்டமும் முத்து முத்தான பாடல்களை பிரசவித்து இருக்கிறது.

    அதனால் என்னைக்காவது கம்போசிங்சில் அமைதியான சூழல் இருக்குமானால், "நம்ம ரெண்டு பேரும் அமைதியா சிரிச்சுக்கிட்டே இருக்கோமே... இந்த படத்துல நல்ல பாட்டே வராது போலிருக்கே..." என்று ராமமூர்த்தியிடம் எம்.எஸ்.வி. சொல்லுவாராம்.

    காதலர்கள் மாதிரி கூடலும் ஊடலுமுமாக அவர்கள் திரையிசைப் பயணம் தொடர்ந்து இருக்கிறது. அதனால் காலத்தை வென்று நிற்கும் இனிமையான பாடல்களை அவர்களால் தரமுடிந்தது.

    தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசை நுணுக்கங்களை மிகவும் நேர்த்தியாக புகுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் தான். அது எப்படி நடந்தது தெரியுமா?

    பகல் பொழுதில் பாடல்களுக்கு கம்போசிங் செய்து விட்டு இரவு நேரத்தில் இரண்டு பேரும் சேர்ந்து, சைக்கிளிலோ, பைக்கிலோ சென்னையில் இருக்கும் கிளப்புகளுக்கு சென்று விடுவார்களாம். அங்கு ராக் மியூசிக் எல்லாம் நடக்கும். அதனை உற்று கவனித்து வந்துள்ளார்கள். மேலும் வெஸ்டன் மியூசிக் இசைத்தட்டுகளை வாங்கி வந்து கேட்பார்களாம்.

    ராமமூர்த்தி சாருக்கு வெஸ்டன் மற்றும் கிளாசிக் மியூசிக் தெரியும் என்பதால் அதன் மூலம் நம் செவிகளுக்கு இனிய எத்தனை எத்தனை மேற்கத்திய இசைப் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள்.

    குறிப்பாக பணம் படைத்தவன் படத்தில் வரும் "கண் போன போக்கிலே கால் போகலாமா...? புதிய பறவை படத்தில் இடம்பெற்ற "எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி" என்பன போன்ற பாடல்களை சொல்லலாம்.

    மெல்லிசை மன்னர்களின் பாடல்களில் கோரசை நீங்கள் கவனித்து கேட்டு இருக்கிறீங்களா? அவர்களுக்கு முன்னாடியும் இந்த மாதிரி கோரஸ் கேட்டதில்லை, அவர்களுக்குப் பின்னரும் கோரஸ் அந்த அளவுக்கு இல்லை. அவர்கள் அமைத்த கோரஸ் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கு?

    அதற்கு காரணம் மெல்லிசை மன்னர்கள் காட்டிய தனி அக்கறை. சென்னை வேப்பேரி பகுதியில் அந்த காலத்தில் கோரஸ் சிங்கர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ரெயில்வேயில் வேலை செய்தவர்கள், பள்ளிகளில் மியூசிக் ஆசிரியர்களாக இருந்தவர்கள்.

    அவர்கள் எல்லாம் ஒரே மாதிரி பாடுவதற்கு பயிற்சி எடுத்தவர்கள். அவர்கள் வந்து பாடணும் என்பதற்காக காத்திருப்பார்களாம் மெல்லிசை மன்னர்கள்.

    அவர்கள் வேலையை முடித்துவிட்டு இரவில் தான் கோரஸ் பாட வருவார்களாம். அதுவரையில் பாடல் கம்போஸ் செய்யாமல் காத்திருப்பார்களாம். இதனால் சீனியர் பாடகர்கள், அவர்களுக்காக எங்கள் பகல் பொழுதை எல்லாம் வீணடிக்கீறீர்களே என்று ஆதங்கம் படுவாங்களாம். அவர்கள் வந்து பாடி ரிக்கார்டிங் செய்து முடிக்க நள்ளிரவு ஒரு மணி ரெண்டு மணி ஆகிவிடுமாம். இதனால் பாடகர்கள் சஞ்சலப்படுவார்களாம். ஆனால் அந்த பாடல்கள் சிறப்பாக வெளிவரும் போது அதை கேட்டு பட்ட துயரங்களை எல்லாம் மறந்து விடுவார்களாம்.

    மெல்லிசை மன்னர்களின் உன்னத படைப்பாக போற்றப்படும் பாடல்களில் ஒன்று "எங்கே நிம்மதி..." என்ற பாடல், இந்த பாடலுக்கு ஒரே நேரத்தில் 236 இசைக்கலைஞர்கள் வாசித்துள்ளனர். அந்த படத்தில் பயன்படுத்திய ஹார்மோணி ஸ்டைல் ஒரு சரித்திரம்.

    மெல்லிசை மன்னர்களிடம் இருந்த சிறந்த புரிந்துணர்தல் என்னவென்றால், சிங்கர்களை வழிநடத்தும் பொறுப்பை ராமமூர்த்தி சாரும், ஆர்மோனியத்தை கையாள்வதை எம்.எஸ்.வி சாரும் வைத்துக் கொண்டதுதான். இந்த பரஸ்பர புரிதல் தான் அவர்களுடைய ஆளுமைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    நாம் இன்றைக்கும் வியந்து பார்க்கும் கர்ணன் என்ற காவிய படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. இந்துஸ்தானி இசையில் அமைந்த பாடல்களுக்கு இருவரும் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டதால் இனிமையாக அமைந்தன.

    எம்.எஸ்.வி.யின் ஆர்மோனியத்தில் இருந்து வெளிவரும் டியூனை, ராமமூர்த்தி சார் வயலின் கொண்டு வாசித்து காட்டுவார். அந்த வாசிப்பில் 10 சதவீதத்தை நான் எடுத்து பாடிவிட்டாலே போதும், அந்த பாடல் சூப்பராக வந்து விடும் என்று பி.சுசிலா சொல்லுவாங்களாம்.

    ராமமூர்த்தியின் வயலின் பாடும், அதுபோல் எம்.எஸ்.வி.யின் ஆர்மோனியமும் பாடும். அந்த மாதிரி ஒரு அற்புத காம்பினேசனாக மெல்லிசை மன்னர்கள் இசைத்துறையில் உலா வந்தார்கள்.

    யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பின்னர் அவர்களிடையே பிரிவு ஏற்பட்டது. இசையே உடைந்து விட்டது போல் ஆனது.

    அவர்களின் பிரிவு கவியரசு கண்ணதாசனை மிகவும் வருத்தியது. அதன்பின் எம்.எஸ்.வி. தனியாக இசையமைத்த கலங்கரை விளக்கம் படத்தில் தன்னுடைய ஏக்கத்தை கவியரசு ஒரு பாடலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

    "என்னை மறந்தது ஏன் தென்றலே.. இன்று நீ என் நிலை சொல்லி வா" என்று பாடியிருப்பார்.

    நீங்கள் சேர்ந்து கொள்வதும் பிரிந்து செல்வதும் உங்கள் தனிப்பட்ட விசயம் தான். ஆனால் உங்கள் பிரிவால் வாட போறது இசையும் கவிதையும் தான். என்னுடைய வருத்தத்தை தான் அந்த பாடலில் அப்படி எழுதினேன் என்று ரொம்ப நாளைக்கு அப்புறம் கண்ணதாசன், எம்.எஸ்.வி,யிடம் சொன்னாராம்.

    எப்போதுமே கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்நிலையை மாற்றிக் கொள்ளும் பக்குவம் கொண்டவர் எம்.எஸ்.வி. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் செய்பவர் அல்ல அவர். தன்னுடன் பணிபுரியும் சக கலைஞர்களின் கருத்துகளுக்கும் செவி சாய்ப்பவர். அவர்களின் கருத்துகளையும் ஏற்று பாடல்களை மாற்றி அமைத்ததும் உண்டு. அந்த வகையில் உருவான சில பாடல்கள் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்!

    சுபஸ்ரீ தணிகாசலம்

    தொடர்புக்கு:-

    info@maximuminc.org

    ×