என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    1960களில் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார். 88 வயதான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:  

    ஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார். இத்தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர்.  

    1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மேன் கதாபாத்திரத்தை ஆடம் வெஸ்ட் ஏற்று நடித்தார். பேட்மேன் கதாபாத்திரம் ஆடம் வெஸ்ட்-ஐ புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது. எனினும் இந்த கதாபாத்திரம் இவரை வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஒத்துழைக்கவில்லை.

    வாஷிங்டன் நகரின் வல்லா வல்லாவில் 1928 ஆம் ஆண்டு பிறந்த ஆடம் வெஸ்ட் இயற்பெயர் வில்லியம் வெஸ்ட் ஆண்டர்சன் ஆகும். நடிப்பு துறையில் கால் பதிக்க தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆடம் வெஸ்ட் தனது மனைவி மார்கெல், ஆறு குழந்தைகள், ஐந்து பேரன், பேத்திகள் மற்றும் இரண்டு பெரிய பேரப்பிளைகளுடன் வசித்து வந்தார்.  
    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.
    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.

    "16 வயதினிலே'' படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "16 வயதினிலே'' படத்தில், மயிலின் (ஸ்ரீதேவி) கன்னத்தில் சப்பாணி (கமலஹாசன்) அறையும் காட்சி முடிந்ததும், "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா'' என்ற பாடல் காட்சி வரும்.

    பாடலுக்கு முன்னால் வரும் அந்த சீனுக்கு, மிïசிக் கம்போஸ் நடந்தது. குறிப்பிட்ட `ஷாட்'டுகளுக்காக போடப்பட்ட இசை, அந்த ஷாட்டுகளில் அமையவில்லை.

    அது கொஞ்சம் முன்னால் போய்விடும். அல்லது அந்த ஷாட் முடிந்து லேட்டாகி விடும். இதை `கண்டக்ட்' செய்து கொண்டிருந்த கோவர்த்தன் சாரிடம், "அண்ணே! நீங்க உள்ளே வாங்க, நானே `கண்டக்ட்' செய்கிறேன்'' என்று உள்ளே போனேன்.

    ஒரு ரிகர்சல் `கண்டக்ட்' செய்தேன். எல்லாம் அதனதன் இடத்தில் உட்கார்ந்தது. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு குஷி.

    டேக் தொடங்கியது.

    கட்... கட்...

    கண்டக்ட் செய்யத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் டப்பிங் தியேட்டரில் உட்கார்ந்திருந்த யாரோ ஒருவர், "கட்! கட்!'' என்றார்.

    நான் திரும்பிப் பார்த்தேன். பாரதி டென்ஷனாகி உள்ளே வந்துவிட்டார்.

    "யாருய்யா கட் சொன்னது?'' என்று பாரதியிடம் கோபமாக கேட்டேன்.

    பாரதிக்கு, அவரது அசிஸ்டெண்ட் யாரோ `கட்' சொன்னது தெரிந்து போயிற்று. அந்த அசிஸ்டெண்ட் யாரென்பதும் தெரிந்து போயிற்று.

    நான் அவரிடம், "எதுக்குய்யா கட் சொன்னே?'' என்று கேட்டேன்.

    அவரோ என்னையும், பாரதியையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு, "டேக்கில் டயலாக் வரலை சார். டயலாக் இல்லாம டேக் எப்படி சார்?'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் அந்தக் கோபத்திலும், எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

    அதாவது ரிகர்சல் பார்க்கும்போது திரையில் டயலாக் போகும். அதோடு இசைக் குழுவினரை வாசிக்க வைத்துப் பார்ப்போம்.

    டேக் போகும்போது அந்த ஸ்கிரீனுக்கு பின் இருக்கும் ஸ்பீக்கரில் டயலாக் வந்தால், அதுவும் மைக்கில் பிக்அப் ஆகி, வாத்தியங்களில் இசை கேட்காமல் போகும் அல்லவா? அதற்காக அதை `கட்' பண்ணி கண்டக்டரின் ஹெட்போனில் மட்டும் கொடுப்பார்கள். அதைத்தான் இவர் டேக்கில் டயலாக்கை கட் பண்ணிவிட்டார்கள் என்று எண்ணி, `கட்' சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது.

    பாரதி அவரைப் பார்த்து, "இங்கே இருக்காதே! உள்ளே போய் உட்கார்!'' என்று உள்ளே அனுப்பி வைத்தார்.

    பிறகு அந்த உதவியாளர் பற்றி பாரதி பேசும்போது, "எக்ஸ்போஸ் பண்ணின பிலிம் டப்பாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திறந்து பார்க்கப் போனவன் இவன்!'' என்று சொல்லி, அதுபற்றி விவரித்தார்.

    படப்பிடிப்பு முடிந்து வந்த பிலிம்கேனை திறந்து, படம் பிடித்த எல்லாக் காட்சிகளும் இருக்கிறதா என்று பார்க்கப்போனவராம் இவர்! நல்லவேளையாக பாரதி இதைப் பார்த்துவிட, பிலிம் ரோல் தப்பியிருக்கிறது.

    இப்படி பாரதியிடம் திட்டு வாங்கியவர் வேறு யாருமல்ல; பிற்காலத்தில் பெரிய டைரக்டராக உயர்ந்த கே.பாக்யராஜ்தான்!

    "16 வயதினிலே'' படம் 15-9-1977-ல் ரிலீசானது.

    வழக்கமாக வரும் படங்களைப் போல இல்லாமல் மாறுபட்டு இருந்ததால், படத்தைப்பற்றி என்ன கருத்து சொல்வது என்று சினிமா வட்டாரத்தினருக்குப் புரியவில்லை.

    கமலஹாசனின் உதவியாளராக இருந்த சேஷு என்பவர் "இந்தப் படம் ஒருவாரம்தான் ஓடும். மிட்லண்ட் தியேட்டரில் படம் பார்க்கும் ஜனங்கள் கிண்டல் செய்கிறார்கள். இது போதாதென்று, டைட்டிலிலேயே சினிமாவுக்குப் பொருத்தம் இல்லாத குரலில் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருக்கிறார். இது ஜனங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது'' என்று படத்தை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

    ஆனால் ஒரு இரும்புக் கதவை ஒரு சாதாரண சோளக் குச்சியால் தகர்த்த மாதிரியாகிவிட்டது. அதாவது "16 வயதினிலே'' படம் இமாலய வெற்றி பெற்றுவிட்டது.

    அதுவரை, ஸ்டூடியோவிலேயே செயற்கையான செட்டுகளில் படங்களை எடுத்துக்கொண்டிருந்த முறையை அடியோடு மாற்றி இப்படத்தை எடுத்திருந்தார், பாரதி.

    விரிந்து கிடந்த அழகான மூலை மூடுக்குகளை கலை நயத்தோடு மக்களுக்கு காட்டி, அவர்களின் இதயங்களில் அழியாத இடம் பிடித்தார்.

    பாரதிராஜாவை, மாபெரும் கலைஞனாக உலகம் ஏற்றுக்கொண்டது.

    இந்தக் காலக்கட்டத்தில் இருந்துதான், திரை உலகில் பெரிய மாற்றங்கள் தொடங்கின. இதை ஒரு புதிய சினிமா வரலாற்றின் தொடக்கம் என்றும் குறிப்பிடலாம்.

    இன்றைய மாற்றங்களுக்கெல்லாம், அன்றே அடிக்கல் நாட்டியவர் பாரதிராஜா. நான் அவரை வெளிப்படையாக புகழ்ந்து இதுபோல் பேசியதே இல்லை. அது பேசப்படாமலே போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், இப்போது சொல்கிறேன்.

    அதே நேரம் இதுபோன்ற முயற்சிகளுக்கு அடித்தளம் இட்டது `அன்னக்கிளி' படம்தான். அந்த அடித்தளம் வேண்டுமானால் சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் அதை இல்லை என்று தள்ளுவதற்கில்லை.

    அன்னக்கிளியில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரும், கிராமத்து மருத்துவச்சியும்தான் நாயகன்- நாயகி.

    இதேபோல் "16 வயதினிலே'' படத்தில் கிராமத்து இளம்பெண், கால்நடை மருத்துவர், சப்பாணி, வெட்டியாக ஊரைச்சுற்றும் இளம் சண்டியர்கள் என சாதாரணமானவர்களே பாத்திரப் படைப்புகள். அதோடு திரையுலகம் சந்தித்திராத திரைக்கதை வடிவமைப்பு. இன்றும் இந்தப் படத்தைப் பார்த்தால் எவருக்கும் சலிப்பு ஏற்படாது.

    இந்தப்படத்தில் அமரன் எழுதி எஸ்.ஜானகி பாடிய "செந்தூரப்பூவே'' பாட்டுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஜானகிக்கு சிறந்த பாடகி என்ற தேசிய விருதை பெற்றுத்தந்தது இந்தப்பாட்டு.

    தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் "கவிக்குயில்'' என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதை கதாநாயகனால் இசைத்துக்காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.

    நாயகனோ அந்த இசையை புல்லாங்குழலில் வாசித்து, பிறகு பாட்டாகவும் பாடிக்காட்டி நாயகியின் மனதில் இடம் பிடிப்பான்.

    இதற்கு ஒரு டிïன் கம்போஸ் செய்தேன். அதைக்கேட்ட பஞ்சு சார், "இதை பாலமுரளிகிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்'' என்று சொன்னார்.

    தொடர்ந்து பாலமுரளிகிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

    `பாலமுரளிகிருஷ்ணா பாடப்போகிறார்' என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது.




    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் கார்த்தி தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் மோதவிருப்பதாக கூறப்படுகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான காற்று வெளியிடை ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்தி தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை படத்திற்கு போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

    பெரும்பாலும் ராஜஸ்தானிலே படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில், சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.



    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படத்தை, தசராவை முன்னிட்டு செப்டம்பர் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே தசரா விடுமுறை நாளில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படமும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள `ஸ்பைடர்' படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தியும் அந்த ரேசில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் ரிமேக் படத்தில் அவருக்கு வில்லனாக தேசிய விருது வென்ற முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    `சரவணன் இருக்க பயமேன்' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் `பெதுவாக என் மனசு தங்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.



    திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `மகேஷின்ட பிரதிகாரம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகை நமீதா பிரமோத் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், உதயநிதிக்கு வில்லனாக நடிக்க தேசிய விருது பெற்ற தமிழின் முன்னணி நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு மறுக்கவில்லை என்றாலும், அதனை உறுதிப்படுத்தவும் இல்லை. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் வில்லன் படத்தில் விஷால் இரண்டு ‘கெட்-அப்’-களில் வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    மோகன்லால் நடிப்பில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாள படம் ‘வில்லன்’.

    இந்த படத்தின் மூலம் விஷால் முதல் முறையாக மலையாள பட உலகில் கால் வைக்கிறார். இதில் விஷாலுக்கு வில்லன் வேடம். தற்போது இந்த படத்தில் தாடி வைத்து கண்ணாடி அணிந்து இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    ‘வில்லன்’ படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். சிறிய வேடத்தில் வந்தாலும் இது முக்கியமான பாத்திரம் என்று கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
    அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் டாம் குரூஸ் - அனபெல்லே வாலிஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மம்மி படத்தின் விமர்சனம்.
    சுமார் 4000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவரின் மனைவி கருவுற்று ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். இதுபிடிக்காத அந்த மன்னனின் மகள், அந்த குழந்தையால் தனது அரியணை வாய்ப்பு போய்விடும் என்று பயந்து மன்னர், ராணி மற்றும் அவர்களது குழந்தையை கொன்று விடுகிறாள். மேலும் தீய சக்திகளை அவள் மீதே ஏவிவிட்டு, தீய சக்திகளின் ராணியாக வேண்டும் என்று எண்ணுகிறாள். தீய சக்திகளின் ராஜாவாக ஒருவரை தேர்வு செய்து, சிவப்பு கல் பதித்த கத்தி மூலமாக அவரை கொண்டு தீய சக்திகளின் ராஜாவாக்க முயற்சிக்கிறாள்.

    இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.



    அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.



    இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.

    இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக  தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.



    இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

    டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.

    அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.



    அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.

    ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.

    மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள `தங்கல்' படத்தின் நாயகி சைரா வாசிம் காஷ்மீரில் நிகழ்ந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் `தங்கல்'. சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் `தங்கல்' படம் தற்போது வரை ரூ.1823 கோடியை வசூல் செய்திருக்கிறது. மேலும் வசூல் சாதனையை படைக்க இருக்கிறது.

    `தங்கல்' படத்தில் சைரா வாசிம், கீதா போகத் என்ற இளம் வீராங்கணையாக நடித்திருந்தார். ஆண்களுடன் குஸ்தி விளையாடும்படியாக அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சைரா, தனது தோழியுடன் நேற்று இரவு தால் ஏரி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். வேகமாக சென்ற அந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஏரியின் சுவரை உடைத்துக் கொண்டு நின்றது. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறிய தகவலின் படி, கார் வேகமாக சென்று ஏரியின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நின்றதாக கூறினர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கார் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரது என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் `காலா' படத்தில் ரஜினியின் மனைவியாக 90-களில் வெற்றிநடை போட்ட நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `காலா'. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா' குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அந்த வகையில் ரஜினியின் முக்கிய வில்லனாக நானா படேகர், அரசியல்வாதி கெட்டப்பில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் `காலா' படத்தில் கரிகாலனின் மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன. மற்றொரு நாயகியான அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார்.
    இரா.சுப்பிரமணியன் இயக்கத்தில் சுரேஷ் சந்திரா - சுனுலட்சுமி நடிப்பில் தப்பு செய்யக்கூடாது என்பதை சொல்லும் ‘சாவி’ படத்தின் முன்னோட்டம்.
    தி ஸ்பார்க் லேண்ட் நிறுவனம் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்கும் படம் ‘சாவி’.

    இயக்குனர் பிரபுசாலமனிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் சந்திரா இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சுனுலட்சுமி நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளா வரவு. இவர்களுடன் ராஜலிங்கம் உதயாபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா, பிரகதீஷ்வரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - சதீஷ் தாயன்பன், ஒளிப்பதிவு - சேகர்ராம், எடிட்டிங் - சுரேஷ்அர்ஸ், கலை - வீராசமர், ஸ்டண்ட் - சுப்ரீம்சுந்தர், நடனம் - விஜிசதீஷ், அபிநயஸ்ரீ, இயக்கம் - இரா.சுப்பிரமணியன். இவர் அபியும் நானும் படத்துக்கு வசனம் எழுதியவர்.



    ‘சாவி’ படம் பற்றி அதன் தயாரிப்பாளரும் நாயகனுமான சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது....

    “சாதாரண மக்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பு செய்தால் நிம்மதி பறிபோய்விடும் என்ற யதார்த்தமான கதை. இதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். இதற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்“ என்றார்.

    இயக்குனர் இரா.சுப்பிரமணியன் கூறும்போது, “நாயகன் சாவி தயாரிக்கும் தொழில் செய்பவர். நாயகி ஒரு கடையில் வேலை பார்க்கிறார். நேர்மையாக வாழும் ஹீரோ வாழ்வில் ஒரு பிரச்சினை வருகிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா என்பது கதை” என்று கூறினார்.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள `தங்கல்' படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஹாங்காங் நாட்டிலும் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த படம் ‘தங்கல்’. கடந்த டிசம்பர் மாதம் வெளியான இப்படம் சீனா தவிர்த்து உலகம் முழுவதும் ரூ. 723 கோடியை வசூல் செய்திருந்தது. இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.512 கோடியை வசூல் செய்திருந்தது.

    இதையடுத்து, டப் செய்யப்பட்டு கடந்த மாதம் சீனா மற்றும் தைவானில் வெளியானது. சீனாவில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் சீனாவில் மட்டும் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.1823 கோடியை வசூல் செய்திருக்கிறது.



    இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் தங்கல் முறியடித்துள்ளது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

    `தங்கல்' படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஹாங் காங் நாட்டிலும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பட விழாவில் பேசியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இதில் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்.இன்ப சேகர் டைரக்டு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். சிவ ரமேஷ்குமார் தயாரித்து உள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, பிரபு சாலமன், விஜய், சுராஜ், அறிவழகன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, “சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர் தமிழ் பட உலகின் இளைய சூப்பர் ஸ்டார்” என்றார்.



    நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது “சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறுவதால் ரஜினிகாந்த் கோபித்துக்கொள்ள மாட்டார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் வளர்ந்து இருக்கிறார்” என்றார். தொடர்ந்து பேசிய பலரும் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்றே அழைத்தனர். இதற்கு பதில் அளித்து சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

    “எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டங்களில் எனக்கு விருப்பம் இல்லை. பட்டங்கள் பெயரை வாயால் சொல்வதற்கு கூட நான் தயாராக இல்லை. தயவு செய்து எனக்கு பட்டப் பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். கடைசிவரை மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.



    எனது நடிப்பு பற்றி விமர்சனங்கள் வரும்போது திருத்திக்கொள்வேன். எனது வாழ்க்கை எப்படி இருந்தது. இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதையெல்லாம் மனதில் வைத்து இருக்கிறேன். எனக்கு என்று ஒரு பாதை வைத்துக்கொண்டு அதில் எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். அது போதும்.

    சினிமாவில் பொதுவாக 30, 40 வயதுவரைதான் வலுவாக காலூன்றி நிற்க முடியும். ஆனால் தம்பிராமையா அந்த வயதையும் தாண்டி நிறைய படங்களில் நடித்து வருவதற்கு அவரது விடா முயற்சியும், உழைப்பும்தான் காரணம். சினிமா துறையில் சுய ஒழுக்கத்தோடு இருந்தால் முன்னேறலாம். ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் எனக்கு நடனம் வரவில்லை. ‘பாடல் நன்றாகத்தானே இருக்கிறது நீ ஏன் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி செய்கிறாய்’ என்று கேலி செய்தனர். இப்போது ஓரளவு நடனம் ஆட கற்று இருக்கிறேன்”.

    இவ்வாறு சிவகார்த்தி கேயன் பேசினார்.
    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட மதனின் ஜாமீன் மனுவை சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு, இந்த வழக்கில் மதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்முருகன், சிறையில் இருந்து வரும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

    ×