என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    விக்ரம்பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் திரைக்குவந்துள்ள ‘சத்ரியன்’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியுள்ளதை பார்ப்போம்...
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் திரைக்குவந்துள்ள ‘சத்ரியன்’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தள்ளது. இது பற்றி கூறியுள்ள படத்தின் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்....

    நான் ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமானபோது தென் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடே என்னைநல்ல இயக்குநராக அங்கீகரித்து அடையாளம் தந்தது. ‘சத்ரியன்’ படத்துக்கும் அதே ஆதரவு தந்ததற்கு நன்றிகள் பல...

    எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் பாராட்டுகளில் ஒரு முக்கியமான பாராட்டை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


    சந்தர்ப்ப சூழ்நிலை தான் ஒருவரது குணாதிசயத்தை தீர்மானிக்கிறது. அப்படி சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாக இருந்து இப்போது திருந்தி தன் அடையாளங்களை மறைத்து வாழும் ஒரு நல்ல மனிதர் என்னைத்தொடர்பு கொண்டு ‘எங்களுடைய கதையையும், ரவுடியிசத்தில் இருந்து வெளியே வர நினைக்கும் ஒருவனது மனநிலையையும், அவனுக்கு இருக்கும் நெருக்கடிகளையும் அருமையாக உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. ‘ஒரு பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் நல்ல வழிக்கு கொண்டு வரலாம்’ என்ற கதைக்கருவையும் தாய்மார்கள் பாராட்டி வருகிறார்கள்.

    மீண்டும் ஒரு முறை என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவன் தான் என்பதை இந்த வெற்றியின் மூலம் அழுத்தமாக பதியவைத்த ரசிகர்கள், அவர்களிடத்தில் என்னைக் கொண்டு சேர்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
    எனது அப்பா கமல் தான் என் சூப்பர்மேன் என நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...
    சுருதிஹாசன் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். சமீபத்தில் இணைய தளத்தில் சுருதியை பற்றி விமர்சித்தவர்களுக்கு, “யார் கிண்டல் செய்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. சமூக வலைத்தளம் மக்கள் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    அடுத்தவர்களை பற்றி ஏதாவது இதில் சொல்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைத்தளம் தைரியம் அளிக்கிறது. அடுத்தவர்களின் கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. மற்றவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்தால் யாரும் நம் வேலையை செய்ய முடியாது. வீட்டைவிட்டு வெளியே கூட வரமுடியாது” என்று பதில் அளித்து இருந்தார்.

    இப்போது தனக்கு பிடிக்காத, பிடித்த வி‌ஷயங்கள் பற்றி சுருதிஹாசன் இப்படி கூறுகிறார்...


    “எனக்கு ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்காது. ஏனென்றால் அந்த வார்த்தையுடன் நிறைய பிர‌ஷரும் சேர்ந்து வந்துவிடுகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை. என் வாழ்வில் பல சங்கடங்களை கடவுள் அருளால் கடந்து வந்திருக்கிறேன்.

    எனது அப்பா கமல் தான் என் சூப்பர்மேன். ‘சபாஷ்நாயுடு’ படத்தில் அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம். அதில் நான் செய்யும் வேலையில் திருப்தியாக இருப்பது எனக்கு பெருமை. மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது வந்த புதிதில் கடினமாக இருந்தது. இப்போது எனக்கு இதுபற்றி கவலை இல்லை. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது”.
    கவர்ச்சி காட்டச்சொன்னதால் ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த இளம் நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...
    இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி ராதேலா. 23 வயதே ஆன இவர் பல அழகி பட்டங்களை வென்றவர். ‘அப்ராவதா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

    இவரை ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ஊர்வசி ராதேலா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்....

    ‘‘படுகவர்ச்சியாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. உடம்பை காட்டி நடிக்க பிடிக்கவில்லை. குடும்ப பாங்கான வேடம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்’’.

    இந்த இளம் நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர்.
    திரைப்படம் இயக்குவதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் திறமைசாலிகள் என தனுஷ் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...
    தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘3’ படத்திலும், மைத்துனி சவுந்தர்யா இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்திலும் நடித்திருக்கிறார்.

    இந்த நிலையில் சினிமா உலகத்துக்கு வந்தது பற்றி தனுஷ் அளித்த பேட்டியில், “எனக்கு முதலில் சினிமா பற்றி தெரியாது. எனவே இந்த துறைக்கு வரவிரும்பவில்லை. நானாக சினிமாவுக்கு வர விரும்பியதில்லை. குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் வந்தேன்.சில ஆண்டுகள் கழித்து இது தான் என் தொழில். சினிமா தான் எனக்கு என்று கடவுள் எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


    ஐஸ்வர்யா, சவுந்தர்யா இயக்கத்தில் நடித்தது பற்றி தனுசிடம் கேட்டபோது, “இரண்டு பேருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள். கலை நுணுக்கம் அறிந்தவர்கள்” என்று பதில் அளித்திருக்கிறார்.
    அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச அரிசிக்காக ரேசன் கடையில் காத்து நிற்கிறார்கள் என விஜய் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி அரசியல் குறித்து பேசினார்.

    அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் கூறப்பட்டன.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே விவசாயிகள் பிரச்சனையும் நாடு முழுவதும் பெரிதாக உருவெடுத்துள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் விவசாயிகளைப் பற்றி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச அரிசிக்காக ரேசன் கடையில் காத்து நிற்கிறார்கள்.

    நமக்கு 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.

    இப்போது ஆரோக்கியம் இல்லாத உணவுதான் கிடைக்கிறது. இன்று விவசாயிகளை கவனிக்காவிட்டால் அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும்.

    நாம் வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல, அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும்.

    இவ்வாறு விஜய் பேசினார்.
    மாவட்டம் தோறும் பெண்கள் கோர்ட்டு அமைக்க வலியுறுத்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று வரலட்சுமி சந்தித்தார்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளார். இதன் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று வரலட்சுமி சந்தித்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அது பற்றிய விவரங்களை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.



    முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு வரலட்சுமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கான நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு வரலட்சுமி கூறினார்.
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில மொழிப்படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
    லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் கோவை குனியமுத்தூரில் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தவிர பெரிய நடிகர்கள் ஏன் வாய் திறக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிப்படங் களை மத்திய அரசு ஒழிக்க முயற்சிக்கிறது. நான் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவேன்.

    சுவாதி கொலை வழக்கு தொடர்பாக படம் எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை ஆகியவை ஒரே நாளில் வந்துவிட வில்லை. அனைத்து பொருட்களிலும் பல நாட்களாக கலப்படம் நடந்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மக்களை பாதிக்கும் கலப்பட ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் போராட முன்வர வேண்டும்.



    சசிகலா முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று முதலில் சொன்னது நான் தான். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை. பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலத்துக்கு ஏற்றார் போல் இசை பாடுகிறார். அ.தி.மு.க. வில் பல்வேறு அணிகள் உருவாகிவிட்டன. இதற்கு பிரதமர் மோடியின் வித்தைதான் காரணம். ஓ.பன்னீர்செல்வம் முதல் -அமைச்சராக இருக்கும்வரை வாய் திறக்காமல், இப்போது ஜெயலலிதா மரணம்குறித்து பேசுகிறார்.

    கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவுக்கு மு.க.அழகிரி அழைக்கப்பட வில்லை. தி.மு.க.வை வீழ்த்த ஸ்டாலின் ஒருவரே போதும். போயஸ்கார்டனுக்குள் தீபா நுழைந்துள்ளார். இதற்கு பின்னணி உள்ளது. தமிழ்நாட்டை, யாரோ கட்டுப்படுத்த பார்க்கிறார்கள்.

    இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.
    கலைஞர்கள், பாடகர்கள் இல்லை. இசை உலகம் சிதைந்து விட்டது என்று இளையராஜா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள்.

    அவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது:-

    “நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஓலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது இல்லை. அந்த காலகட்டம் முடிந்து போய் விட்டது.

    இதற்கு அர்த்தம் என்னவென்றால், மியூசிக் போடுகிறவர்கள் தற்போது இல்லை. மியூசிக் வாசிக்கிறவர்கள் இல்லை. மியூசிக் பாடுகிறவர்களும் இல்லை. சினிமாவில் கையை காலை ஆட்டுகிற மாதிரி, இசை என்ற பெயரில் சும்மா ஏதோ நடக்கிறது. இங்கு பாடுகிறவர்களும் இனிமேல் பாடப்போவது இல்லை. காரணம் பாடல்களுக்கான டியூன் இல்லை.



    எவ்வளவோ மிகப்பெரிய உயர்ந்த விஷயமாக இந்த இசை இருந்தது. எத்தனை ராகங்கள், எவ்வளவு கலப்புகள், எவ்வளவு வாத்திய கருவிகள், வாசிக்கும் விதங்கள்தான் எத்தனை, எத்தனை உணர்வுகள் எல்லாம் போய்விட்டன. திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சிட்டு வந்த மாதிரி அத்தனையும் சுத்தமாக போய்விட்டன. புருவத்தையும் சேர்த்து எடுத்து விட்டான். புருவத்தை எடுத்த மாதிரி, மொட்டை அடித்த மாதிரி, இப்போது இசை உலகமும், திரையுலகமும் ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் இசை உலகம் சிதைந்து விட்டது.

    இவ்வாறு இளையராஜா பேசினார்.

    பின்னர் இளையராஜாவுடன் ஆரம்பகாலத்தில் இருந்து பணியாற்றியவர்கள், பாடல்களுக்கு இசையமைத்த தங்கள் அனுபவங்களை பற்றி பேசினார்கள்.
    சென்னை தியாகராயநகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது.
    சென்னை தியாகராயநகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான வேலைகள் தொடங்கின. இந்த கட்டிடத்தை சங்கத்துக்கு சொந்தமில்லாத நிலத்திலும் ஆக்கிரமித்து கட்டுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், நடிகர் சங்க நிலம் அளக்கப்பட்டு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரேம், டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், நிரோஷா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

    இந்த கூட்டத்தில், நடிகர் சங்க பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிடம், கோர்ட்டு வழக்கு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் மூலம் கட்டிட வேலைகளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளிகிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்கு கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டுமே.

    ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

    ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாட்டு.

    பாடலைப் பாடியவர், "இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் `ஸகரிக மரினி' என்று ஆரோகணபரமான பிரயோகத்தை - அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாடமாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே'' என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி இது.

    ஓரளவு படங்கள் வந்து, ஓய்வில்லாத வேலைகள் தொடர்ந்தன. இருந்தாலும் நானும், பாஸ்கரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் இருந்து வந்தோம்.

    ரெக்கார்டிங்குக்கு நான், அமர், பாஸ்கர் மூவரும் டாக்சியில்தான் போவோம்.

    ஒருநாள் வீட்டில் இருந்து மூவரும் டாக்சியில் கிளம்பினோம். மந்தைவெளி வழியாக, நந்தனம் மவுண்ட்ரோடு கிராசிங்கில், சிக்னலுக்காக காத்திருந்தோம். காலை 6-30 மணி இருக்கும். அப்போது பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.

    அதில் முன் சீட்டில் சாண்டோ சின்னப்பதேவர் கையை கார் கதவில் வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அப்படியே பக்கத்தில் நின்றிருந்த எங்கள் டாக்சியை கவனித்தார். என்னை பின்சீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டு, "ஏய் கேவலப்படுத்தாதீங்கப்பா'' என்றார்.

    எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொடர்ந்து அவரே பேசினார்.

    "என்னப்பா நீங்க! இவ்வளவு பெரிய பேர் எடுத்திட்டு டாக்சியிலே போறீங்களேப்பா! கேவலப்படுத்தாதீங்க. சீக்கிரமா ஒரு கார் வாங்குங்கப்பா'' என்றார்.

    இதற்குள் சிக்னல் கிடைத்துவிட, "சரிங்க அய்யா'' என்று விடைபெற்றோம்.

    அதற்கும் முதல் வாரம்தான் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கையால் `கலைமாமணி' விருது வாங்கியிருந்தேன்.

    அங்குதான் தேவர் அவர்களிடம் என்னை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    நான்தான் இளையராஜா என்று அவரால் நம்பமுடியவில்லை. என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

    அப்போது பார்த்து நடிகை கே.ஆர்.விஜயா அங்கு வர, "ஏம்மா, இங்க பார்த்தியா? இவருதான் இளையராஜாவாம்மா'' என்று ஆச்சரியப்படும் பாணியில் அறிமுகப்படுத்தினார்.

    கலைமாமணி விருது விழாவில் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எங்களை தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் வணக்கம் போடுபவர்களும், மரியாதை செலுத்தும் அதிகாரிகளுமாய் வந்து போய்க்கொண்டிருந்தாலும் எங்களுடன் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.

    பழகுவதில் அவரது எளிமை கண்டு எனக்குள்ளும் அவரிடம் சகஜமாகப் பேசும் ஆர்வம் எழுந்தது. நானும் சாதாரணமாக, "அண்ணே! உங்ககூட ரெயிலில் வந்தது ரொம்ப ரொம்ப மோசம்ணே'' என்றேன்.

    "ம்... என்ன சொல்றே?'' தனது ஆச்சரியத்தை கேள்விக்குறியாக்கினார் எம்.ஜி.ஆர்.

    "ஆமாண்ணே! அன்னைக்கு மதுரை பாண்டியனில் நீங்க மதுரைக்குப் போனப்போ, அதே வண்டியில் நானும் இருந்தேண்ணே.''

    "ஆமாமா? எனக்கும் சொன்னாங்க'' என்று சொன்ன எம்.ஜி.ஆர், "ஆமா அதுல என்ன மோசம்'' என்று திருப்பிக் கேட்டார்.

    "இல்லண்ணே! நீங்க அந்த ரெயிலில் வர்றது வெளியே தெரிஞ்சு, காலையில் ரெயில் சோழவந்தான் விட்டுக் கிளம்பும்போது, ரசிகர்கள், வண்டி கிளம்பவும் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி உங்களைப் பார்க்க ஆர்வத்தோடு அவங்க செய்த கலாட்டா...''

    நான் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "ம்... ம்... அப்புறமா?'' என்று கேட்டார்.

    "இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவதும், நீங்கள் கையைக் காட்டியவுடன் விட்டு விடுவதுமாக இருந்தார்கள். இப்படி காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு காலை 10 மணிக்குத்தானே மதுரைக்கே வந்து சேர்ந்தது.''

    நான் இப்படிச் சொன்னதும், "ஆமா தம்பி... மக்கள் அவ்வளவு ஆர்வமா இருந்தா நாம என்ன செய்யமுடியும்?'' என்று மக்கள் தன் மீது வைத்திருந்த அன்பை சிலாகித்தபடி சொன்னார் எம்.ஜி.ஆர்.

    இதற்குள் விழா தொடங்கி விட்டது. எம்.ஜி.ஆர். கையால் கலைமாமணி விருது வாங்கினேன்.

    தேவர் அன்றைக்கு என்னைப் பார்த்தவர், இப்போது வாகனப் பயணத்தின்போது மறுபடியுமாக என்னைப் பார்க்கிறார். டாக்சியில் நாங்கள் வருவதைப் பார்த்ததும், சொந்தமாய் கார் வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டார்.

    அடித்தளம் என்று உறுதியாக சொல்லக் காரணம் உண்டு.

    சொந்தக்கார் விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு `நேரம் வரும்போது அமைவது அமையும்' என்று இருந்துவிட்டேன்.

    ஆனால் பாஸ்கரும், அமரும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டார்கள். ஜி.ராமநாதனின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் தம்பி டி.பி.துரைமணி ரிலையன்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கார் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டார்கள்.

    அது டி.எம்.டபிள்ï 3335 என்ற அம்பாசிடர் கார்.

    என் ஆர்மோனியம் பெட்டி போல எனது இன்னொரு உடன் பிறப்பு.

    படங்கள் அதிகமானதால் உதவியாளர் தேவைப்பட்டது. பாஸ்கரின் நண்பர் ஒருவர் வந்தார்.

    இத்தனை காலங்களும் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வந்த என் இளவயது உயிர்த்தோழன் எம்.சுப்பிரமணியன் அவ்வப்போது என்னைப் பார்த்துப்போக வருவதுண்டு.

    அப்படி வந்த ஒரு நாள் அவரிடம், "ஏம்ப்பா! உனக்கு காலேஜில் என்ன சம்பளம்?'' என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பது - சுப்பிரமணியனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். "ஐயாயிரம் ரூபாய் வாங்கறேன். என்னப்பா திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?'' என்று கேட்டார்.

    "அதை நான் தந்தால் என்னிடம் மானேஜராக வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டு விட்டேன்.

    "ஏய்! என்னப்பா இது?''

    "ஆமாப்பா. நாமெல்லாம் ஒண்ணா இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?'' என்றேன்.

    அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது.

    அவர் ஆவடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் புரொபசராக இருந்தார். நான் கேட்டதற்காக வேலையை விட்டுவிட்டு உடனே எங்களிடம் வந்துவிட்டார்.

    தமாசுக்காக அவரை, "என்ன மானேஜர் ரெடியா? போகலாமா? அடுத்து என்ன புரோகிராம்?'' என்று நான், அமர், பாஸ்கர் மூவருமே கிண்டல் செய்வோம்.

    அம்மாவும் வெற்றிலைப்பாக்கு போட்ட வாயோடு கன்னத்தில் கை வைத்தபடி எங்களை ஆச்சரியமாய் பார்ப்பார்கள். அதோடு, "அட போங்கப்பா! உங்களை பண்ணைபுரத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்கு. இப்படியே கடைசிவரை இருங்கப்பா'' என்பார்கள்.

    விக்ரமுக்கு வில்லனாக சாமி-2 படத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றுகூட சொல்லலாம்.

    தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


     
    சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்துக் கொடுத்தபிறகு ‘சாமி-2’ வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாமி-2’ படத்தை சிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘இருமுகன்’ படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    வடசென்னை படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

    தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே வருவதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ‘வடசென்னை’ முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்திய கதையாக உருவாகவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் ஒரு ஜெயில் செட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளனர். படத்தில் இந்த ஜெயில் செட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் மிகவும் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது அமீர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 
    ×