என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தன்னுடைய அப்பா நடித்த ‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக் ஆனால் அதில் நடிக்கமாட்டேன் என்று கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
    கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘ரங்கூன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இன்று கவுதம் கார்த்திக் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசும்போது, மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நடிகர்கள் கேமராவின் முன் நடிப்பது மட்டும் நடிப்பல்ல, இன்னும் நிறைய உள்ளது. நான் சிப்பாய், இவன் தந்திரன், ஹரஹர மஹா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.



    இப்போது ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்‘ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் ‘கடல்’.

    ‘ரங்கூன்’ என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும். எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான். அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம் தான். 35 முதல் 40 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தற்போது அப்பா, மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறுத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட். அவர் நடித்ததில் எனக்கு ‘கோகுலத்தில் ஒரு சீதை’ திரைப்படத்தில் வரும் ‘கிரெடிட் கார்ட்‘ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.



    சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன். சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆர்.ஜே. பாலாஜி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் படத்தில் நடித்த டேனியல் ஆகியோர்.

    நான் ஸ்க்ரிப்டை பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன். அப்பா நான் நடித்த ‘கடல்’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை பார்த்துள்ளார். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் அப்பாவை பற்றி சொல்லும் போதுதான் அவரை பற்றி எனக்கு தெரியவருகிறது. அப்பா என்னை தம்பி என்று தான் கூப்பிடுவார். வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் இன்னும் நிறைய கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டாப் நடிகை ஒருவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் மிகவும் நெருக்கமாக சுற்றி வருகிறாராம்.
    தமிழில் முதல் படத்திலேயே உச்சத்தில் சென்றுவிட்ட டாப் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் மேலும் உச்சத்துக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வந்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணைக் கவ்வினார் அந்த டாப் நடிகை.

    தமிழ் திரையுலகம் அவரை கைவிட்டாலும் இந்தி திரையுலகம் அவரை அங்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    டாப் நடிகை நடிக்கும் அந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். இரண்டு பேரில் டாப் நடிகைக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கிறதாம். இதனால், வெகுண்டெழுந்த மற்றொரு நடிகை, டாப் நடிகை தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் தயாரிப்பாளர் டாப் நடிகைக்கான காட்சிகளை அதிகமாக வைக்கச் சொன்னதாகவும் தன்னுடைய காட்சிகளை ரொம்பவும் குறைத்துவிட்டதாகவும் ஒரு புகார் ஒன்றை பாலிவுட் வட்டாரத்தில் பரப்பி விட்டிருக்கிறாராம்.

    ஆனால், டாப் நடிகையோ இந்த புகார்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளாராம்.
    என்னுடைய அப்பா சிறந்த விமர்சகர் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.
    நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.

    படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.



    படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்றார்.

    முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து கிடைத்த சிறிய ஓய்வில் சென்னைக்கு வந்து தன்னுடைய அப்பாவுடன் தங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து லண்டனுக்கு பறந்து சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இறதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.
    இந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக தரையில் கால் படாமலேயே சிம்பு ஆட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்
    சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்து வரும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    யுவன் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து வரிகளில் ‘இரத்தமே ரத்தம்’ என்ற பெயரில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை மையப்படுத்தியே உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.



    இந்த பாடலில் சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்கள் தோளிலேயே நிற்க வைத்து அவர் ஆடுவது போல் படமாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அவர்தான் இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இப்படத்தில் சிம்பு நடிக்கும் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கெட்டப்புகளுக்கான போட்டோக்கள் வெளியாகிவிட்டன. மீதி 2 கெட்டப்புகளை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். அதேபோல், இப்படத்தை இரண்டு பாகமாகவும் திரையிடவுள்ளனர். அதன்படி, முதல்பாகம் வருகிற ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. 
    60 வயது நடிகருக்கு 20 வயது நாயகியை ஜோடியாக போடுவதா? என மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ஆவேசமாக கூறியுள்ளார்.

    பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகை, பின்னர் வளர்ந்த பிறகு அதே நடிகருக்கு ஜோடியாவதும், கொஞ்சம் வயதானால் அந்த ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பதும் சினிமாவில் சாதாரண வி‌ஷயங்கள்.

    இதுபற்றி மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரீமா கல்லிங்கல் கூறும்போது,  ‘‘ஒரு 20 வயது நடிகையை 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார்கள். அதே சமயத்தில் 50 வயது நடிகையை 60 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கச் சொல்கிறார்கள்.


    நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை ஆகியவை நடிகைகளுக்கு மிகக்குறைவாகவே கிடைக்கிறது. மலையாளம் மட்டும் அல்ல மற்ற மொழி திரை உலகிலும் 60 வயது நடிகர்களுக்கு 20 வயது நடிகைகளைத்தான் ஜோடியாக்குகிறார்கள். சில நடிகர்கள் தங்கள் மகளை விட குறைந்த வயதுடைய பெண்களுடன் ஜோடியாக நடிக்கிறார்கள்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமந்தா தன்னுடைய திருமணத்திற்காக 3 மாதங்களுக்குள் படங்களை முடிக்க தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ந்தேதி திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. எனவே செப்டம்பர் மாதத்துக்குள் படங்களை முடித்துக் கொடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளார்.

    சமந்தா தற்போது தமிழில் ‘இரும்புத்திரை’, அநீதி கதைகள் படங்களில் நடித்து வருகிறார். மீதம் உள்ள காட்சிகளை விரைவில் முடித்துக் கொடுக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் படத்தில் சமந்தா தொடர்பான காட்சிகள் படமாகி வருகின்றன.


    அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு இன்னும் சில தினங்கள்தான் இருக்கின்றன. எனவே வருகிற 18-ந் தேதி முதல் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொள்கிறார்.

    இதேபோல் சமந்தா நடிக்கும் அனைத்து படப்பிடிப்பையும் 3 மாதங்களுக்குள் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். சிறிது தாமதம் ஆனாலும் செப்டம்பர் மாதத்துக்குள் தனது படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார். அக்டோபரில் திருமணம் முடிந்த பிறகு 2 மாதம் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு வழக்கம்போல் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டு விவசாயிகள் பற்றியும், அவர்களின் நிலைமை பற்றியும் பேசினார்.
    விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் பேசும்போது,

    “நான் நல்லா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, நாம எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற விவசாயிகள் நல்லா இல்லைங்க. இன்றைக்கு விருது வாங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் அது அவங்க உழைப்புக்கு கிடைச்ச பலன். ஆனா எந்த பலனும் கிடைக்காம இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளை நினைத்தால் கொஞ்சம் வலிக்கிறது.

    உணவு, உடை, இருப்பிடம் இதில் உணவுக்குத்தான் முதலிடத்தை கொடுக்கிறோம். ஆனால் அதைக் கொடுக்கிற விவசாயிக்கு எதையும் கொடுக்கிறது கிடையாது. பசி ஈசியாக தீர்ந்துவிடுவதால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி நினைக்கிறது கிடையாதோ என்று ஒரு எண்ணத் தோன்றுகிறது.



    காசு கொடுத்தால்கூட சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காது என்கிற ஒரு நிலைமை வந்தால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி புரிந்துகொள்வோம். இது அவசியம் என்பதைவிட அவரசமும் கூட. நமக்கு ஏற்கெனவே ஆரோக்கியமில்லாத உணவுகள்தான் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போதுகூட நாம் முழித்துக் கொள்ளாவிட்டால் அடுத்த சந்ததிக்கு இதுகூட கிடைக்காது.

    ஒரு நகைக்கடை அதிபர் வேறொரு நகைக் கடையில் போய் நகை வாங்க மாட்டார். ஒரு ஜவுளிக்கடை அதிபர் மற்றொரு ஜவுளிக்கடையில் போய் துணி எடுக்கமாட்டார். ஆனால், ஒரு விவசாயிதான் ரேஷன்கடையில் வரிசையில் நிற்கிறான் இலவச அரிசிக்காக.

    இந்தியா வல்லரசாகவேண்டும் என்பதெல்லாம் அடுத்ததுதான். முதலில் விவசாயிகள் நன்றாக வாழக்கூடிய அரசாக மாறவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கதை பிடித்து இருந்தால் பெரிய நடிகர், சிறிய நடிகர் வேறுபாடு பார்க்காமல் நடிப்பேன் என்று நடிகை திரிஷா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் தடவையாக புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிரேம்குமார் டைரக்டு செய்கிறார். எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ‘96’ படத்தின் பூஜையும், தொடக்க விழாவும் சென்னை சாலிகிராமத்தில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- பெரிய கதாநாயகியான நீங்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறீர்களே?

    பதில்:- விஜய் சேதுபதி யதார்த்தமாக நடிக்க கூடியவர். அவர் நடித்துள்ள எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

    கேள்வி:- இளம் கதாநாயகர்கள் ஜோடியாக தொடர்ந்து நடிப்பீர்களா?

    பதில்:- நான் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். கதை பிடித்து விட்டால் இளம் கதாநாயகன், மூத்த கதாநாயகன் என்று பார்ப்பது இல்லை. உடனே நடிக்க சம்மதித்து விடுவேன்.

    சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அந்த படங்களில் இளம் கதாநாயகர்கள்தான் என்னுடன் நடித்தார்கள். கதையும் எனது கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தால் புதுமுக கதாநாயகன் புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.



    கேள்வி:- சிவகார்த்திகேயனுடன் எப்போது நடிப்பீர்கள்?

    பதில்:- வாய்ப்பும், கதையும் அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன். எனக்கு பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற வேறுபாடு கிடையாது. கதைகள் மட்டுமே முக்கியம். தொடர்ந்து இளம் கதாநாயகர்கள் மற்றும் மூத்த கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பேன்.

    இவ்வாறு திரிஷா கூறினார்.

    நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:-

    நான் நயன்தாரா, திரிஷா, தமன்னா ஆகிய 3 கதாநாயகிகளின் தீவிர ரசிகன். இவர்களுடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. நயன்தாரா, தமன்னா ஜோடியாக நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

    தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருந்து நான் ரசித்த திரிஷாவுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. 96-ம் ஆண்டு ஒன்றாக படித்த மாணவர்களின் இப்போதையை வாழ்க்கையை பற்றிய படமாக இது தயாராகிறது. காதலர்களுக்கு இலக்கணமாக இந்த படம் இருக்கும்”.

    இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.
    மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘புலிமுருகன்’ படம் தமிழகத்தில் ‘பாகுபலி’க்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகி ரூ.150 கோடி வரை வசூல் சாதனை செய்த படம் ‘புலிமுருகன்’. மோகன்லால் நடிப்பில் இந்த படம் மோகன்லாலில் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமாக அமைந்தது. இந்த படத்தை அதே பெயரில் தமிழில் 30 தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர்.

    மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் என்பவர் தயாரித்திருந்தார். இவரே இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார். இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகி இருந்தது.



    இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார் தற்போது தமிழில் ஆர்.பி.பாலா என்பவர் கதை, வசனம் எழுதியுள்ளார். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படம் வருகிற 16-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது ‘புலிமுருகன்’ என்பதே குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.
    பணமோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் வெளிநாடு செல்ல தானே செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    பிரபல இந்த நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா இருவரும் ‘பெஸ்ட் டீல் டி.வி.’ என்ற சேனலை நிர்வகித்து வந்தனர். இந்த சேனல் மூலம் தனியார் நிறுவனங்களின் பொருளை விளம்பரப்படுத்தி அதை விற்பனை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி பிவண்டியில் உள்ள கான்காவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் அவர்களது சேனல் மூலம் எனது நிறுவனத்தின் படுக்கை விரிப்புகளை விற்றுத்தருவதாக கூறினர். அதன்படி படுக்கை விரிப்புகளை அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குரிய ரூ.24 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் ஜாமீன் கேட்டு தானே செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர்களுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்தது.



    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி புதிதாக மனு ஒன்றை தானே செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் “தொழில் சார்ந்த வேலைகள் காரணமாக ஜூன் 12-ந்தேதியில் (நேற்று) இருந்து ஜூலை 21-ந் தேதிக்குள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டி இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்கவேண்டும்” எனவும் கூறிருந்தனர்.

    இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இருவரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஷில்பா ஷெட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், அவர்களின் பயணம் குறித்து முழுமையான விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்படுவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பது தொழில் ரீதியாக அவர்களை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்றும் தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார். இருப்பினும் அவர்கள் ஜூலை 21-ந் தேதிக்கு மேல் வெளிநாட்டில் தங்கக்கூடாது என தெரிவித்த நீதிபதி, வெளிநாட்டில் அவர்கள் தங்கியிருக்கும் விலாசம், தொலைபேசி எண்கள் போன்றவற்றை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
    அருந்தவராஜா இயக்கத்தில் வாராகி - ஷிவானி நடிப்பில் உருவாகி வரும் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’.

    இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை.

    இந்த படத்தில் நாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - நாககிருஷ்ணன், திரைக்கதை, இயக்கம் - அருந்தவராஜா. இவர் பாலு மகேந்திரா, சேது மாதவன், பாலகுமாரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.



    படம் குறித்து கூறிய வாராகி, “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக் கொருவர் இருஎதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இதில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும் போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.

    இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் டி சிவா, ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினார்கள்.
    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.
    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

    தன் வாழ்க்கைப்பாதையைப் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "எனக்கு கார்த்தி, பவதா, யுவன் என மூன்று குழந்தைகள். அண்ணன் பாஸ்கருக்கு பார்த்தி, வாசுகி, ஹரி என மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிதான சூழலில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் இருப்பது சிரமமாக இருந்ததை பாஸ்கர் உணர்ந்து கொண்டார். இதனால் தனியாக வீடு பார்த்தார்.

    ஒரு வீடு அவருக்கு பிடித்துப்போக, என்னிடம் வந்தார். "ராஜா! நீ வந்து பார்த்து சரி என்று சொன்னால் நான் மாறிக்கொள்கிறேன்'' என்றார்.

    நானும் பார்க்கப்போனேன். பார்த்த வீடு எனக்குப் பிடித்துப்போயிற்று. நான் பாஸ்கரிடம், "வீடு நன்றாக இருக்கிறது. இதில் நான் குடியிருந்து கொள்கிறேன். நீ வேறு வீடு பார்த்துக்கொள்'' என்றேன்.

    பாஸ்கரும், "சரி; நீயே இருந்து கொள். நான் வேறு இடம் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டார்.

    தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அந்த வீடு இருந்தது. வீட்டு எண் 157.

    "வீட்டின் கூட்டுத்தொகை 13 வருகிறது. அதனால் இந்த வீடு வேண்டாம். அதோடு கவியரசர் கண்ணதாசன் இந்த வீட்டில்தான் அவருடைய சினிமாக் கம்பெனியை தொடங்கி பெரும் கடனுக்கு உள்ளானார். அதனால் ராசி இல்லாத இந்த வீட்டுக்குப் போகவேண்டாம்'' என்றார்கள் நண்பர்கள்.

    எனக்கோ வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப்போனதால், அந்த வீட்டுக்கே குடிபெயர்ந்தேன். அம்மா என்னுடனே வந்துவிட்டார்கள்.

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    சினிமாவில் வளர்ந்து வந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்கும் ஆர்வம் இளையராஜாவை விட்டுவிடவில்லை. இதனால் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை கற்க விரும்பினார்.

    அதுபற்றி கூறியதாவது:-

    ஏற்கனவே டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக இசை கற்கும் ஆவல் எனக்குள் நீடித்து வந்தது. புது வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்தார். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருக்கும்போது பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இப்போதோ பெசன்ட் நகர் போய்வரவே அரை மணி நேரமாவது ஆகும்.

    அவரிடம் மறுபடியுமாக என் கற்றல் ஆர்வம் சொன்னபோது, "நீங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நான் சொல்லித்தர தயாராயிருக்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அதைச் சொல்லுங்கள்'' என்றார்.

    எனக்கு இருந்த வேலைகளுக்கிடையே சரியான நேரத்தை எப்படி அமைப்பது என்று யோசித்தேன். அவரோ எந்த நேரமானாலும் பரவாயில்லை என்று சொன்னதால் விடிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.

    எப்போதும் விடிகாலை 4 மணிக்கு நான் எழுந்து பழக்கப்பட்டவன். சமீபகாலமாக அது கொஞ்சம் நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த நேரத்துக்கு மாறினேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத பாடம் அரை மணி நேரமும், பிறகு குளித்து விட்டு 5 மணிக்கு பெசன்ட் நகரில் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீத பாடமும், 6 மணிக்கு உடற்பயிற்சியும், தியானமும், பூஜையுமாக தொடர்ந்தது.

    7 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டூடியோ. இல்லையேல் கம்போசிங். தினசரி இரண்டு பாடல்கள் இருக்கும்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடிய, வீட்டுக்கு வந்து மீண்டும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் பெசன்ட் நகரில் சங்கீதப் பாடம் முடித்துவிட்டு வர இரவு 12 மணி ஆகிவிடும்.

    இந்த அன்றாட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலும் மாற்றமிருக்காது. எங்காவது வெளிïர் கோவிலுக்கு போனால் மட்டுமே மாறும். இந்த வகையில் தினசரி என் தூக்கம் 4 மணி நேரம்தான்.

    ஓரளவே நான் கற்றுக்கொண்ட சங்கீதம், டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஒத்துழைப்பால்தான் எனக்கு சாத்தியமாயிற்று. ஆயினும் அது எனக்கு அந்த அளவேனும் வந்ததே என்பதில் திருப்தியைக் காட்டிலும், அத்தனையையும் கற்றுக்கொள்ள இயலாமையால் ஏற்பட்ட வருத்தமே அதிகம் மேலோங்கி இருந்தது.

    ஜி.கே.வி.யிடம் இருந்தபோது ரெக்கார்டிங் ஓய்வு நேரத்தில், நான் எழுதிய இசைப் பகுதிகளை அங்கிருக்கும் கலைஞர்களை வாசிக்க வைத்துக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.

    அவர்கள் கருத்தை வைத்து, எனது இந்த இசை அணுகுமுறை சினிமா சங்கீதத்துக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

    ஆனால் அதை உபயோகிக்க, தரத்தில் உயர்ந்த ஒரு படம் வரும்போதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நான் கற்றுக்கொண்டவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசித்து, அவ்வப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வரவும் செய்தேன்.

    மேல்நாட்டு இசையில் `கவுண்டர் பாயிண்ட்' என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் `ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும்.

    இதை எனது இரண்டாவது படமான "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்தில் "நான் பேச வந்தேன்'' என்ற பாடலின்போதே தொடங்கிவிட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு டிïன் `ஹம்' செய்ய, எஸ்.ஜானகி வேறு டிïனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.

    இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் அட்வான்ஸ் ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.

    காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலிலும் இந்த யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டிïனை அப்படியே `ரிபீட்' செய்யும் `இமிடேஷன்' என்ற விதிக்குள் அடங்கும்.

    பின்னால் "சிட்டுக்குருவி'' என்ற படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியபோது அதற்கு கம்போஸ் செய்ய நேரமே இல்லாமல் போனது.

    அப்போது "துர்காதேவி'' என்ற படம் சங்கரய்யர் டைரக்ஷனில் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னணி இசை நடந்து கொண்டிருந்ததால் எங்கும் நகர முடியவில்லை.

    இதற்கிடையே சிட்டுக்குருவி படத்துக்கு தேவராஜ் - மோகன் ரெக்கார்டிங்கிற்கு தேதி குறித்துவிட்டார்கள்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடியும். பத்து மணிக்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கம்போஸ் தொடரும். அது முடிய விடிகாலை 3 மணி வரை ஆகிவிடும்.

    அதற்குப் பிறகு 4 மணிக்கு படுப்பதெங்கே? அடுத்த நாள் தொடங்கி விடும்.''
    ×