என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்து உள்ளது.
    • வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    சென்னை:

    கோடை காலத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைவதும் ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதும் உண்டு.

    பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவமழை தொடங்கிய உடன் வெயிலின் தாக்கம் பெரும்பாலான மாவட்டங்களில் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை வெயிலின் கோர தாண்டவம் தலை விரித்தாடுகிறது.

    சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்து உள்ளது. மழையால் வெப்பம் தணிந்ததோடு நீர்மட்டமும் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இயல்பை விட 1,2 செல்சியஸ் அதிகரித்தது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.

    தற்போது கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. இயல்பை விட 4 செல்சியஸ் வெப்பம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 2-வது கோடை கோலம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பெரும்பாலான மாவட்டங்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. காலையிலேயே அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர் படிப்படியாக உஷ்ணம் அதிகரித்தது.

    வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். உடலில் இருந்து வியர்வை வெளியேறியதால் சோர்வடைந்தனர்.

    இதற்கிடையே வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்க உள்ளதால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தென் மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமும் மாறி உள்ளதால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து வானிலை அதிகாரி கீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    செப்டம்பர் மாதத்தில் வெப்பம் அதிகரிப்பது என்பது புதிதானது அல்ல. எப்போதாவது இது போன்று நிகழ்வது உண்டு.

    வடமாநிலங்களில் மாறிமாறி காற்றழுத்தம் உருவாகி வருவதால் கடலில் உள்ள ஈரப்பதத்தை முழுவதும் இழுத்து சென்று விட்டது. கடல் காற்றுக்ககு பதிலாக நிலப்பகுதியில் இருந்து காற்று வீசுகிறது.

    சுழற்சி காரணமாக நிலப்பரப்பில் இருந்து காற்று வீசுகிறது. அதனால் ஈரப்பதம் குறைந்தது. தென் மேற்கில் இருந்து காற்று வந்த பிறகு தான் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும்.தற்போதைய நிலவரப்படி 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் குறையும் என்றாலும் அதற்கிடையே புதிய காற்றழுத்தம் உருவாகும் பட்சத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் மின் தேவை உயர்ந்துள்ளது. வீடுகளில் ஏ.சி. பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    காலநிலை மாற்றத்தால் கோடை வெயில் காலத்தை போல தற்போது வெப்பம் சுட்டெரிப்பதால் மின் நுகர்வு கூடி வருகிறது.

    • ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.
    • ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் இயற்கை பேரிடர்கள் அதிகமாக ஏற்பட்ட காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்பதற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்த தேசிய பேரிடர் ஆணையம் ஒன்று இந்திய அளவில் உருவாக்கப்பட்டது.

    2006-ம் ஆண்டு , முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 6 இடங்களில் இந்த தேசிய பேரிடர் மேலாண்மை பட்டாலியன் அமைக்கப்பட்டது. முதல் முதலாக அசாம், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 6 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் 16 இடங்களில் உள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.

    பட்டாலியன் என்றால் 18 குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் 47 தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் இருப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட இந்த பகுதிகளுக்கு ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் இந்த குழுவினர் தான் முதன் முதலாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.

    அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே ஒரு மையம், கேரள மாநிலம் திருச்சூரில் ஆரம்பிக்கப்பட்டது. 3-வது சென்னையில் ஒன்று ஆரம்பிப்பதற்கு உத்தரவிடப்பட்டு அதிவிரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது . இப்போது ராதாபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது நம்முடைய முதலமைச்சர் அனுமதியோடு நமது மாவட்ட கலெக்டர் கடுமையான முயற்சி செய்து இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இதில் 30 வீரர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இந்த பகுதியில் எந்த பிரச்சனையில் ஏற்பட்டாலும் உடனடியாக இவர்கள் அரக்கோணத்தில் இருக்கின்ற அந்த தலைமை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு மீட்பு பணியை செய்வார்கள். மேலும் மாநில பேரிடர் குழு, மாவட்ட அளவிலும் பேரிடர் குழு உள்ளது. அதனுடனும் இணைந்து தேசிய பேரிடர் குழுவினர் செயல்படுவார்கள்.

    ராதாபுரத்தில் பேரிடர் மீட்பு குழு மண்டல மையம் அமைந்துள்ளதற்கு தமிழக அரசு சார்பிலும், இப்பகுதி மக்கள் சார்ரபிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சரும், திருமாவளவனும் நாடகம் ஆடுவதாக மத்திய இணைமந்திரி எல்.முருகன் கூறினார். மது விலக்கு என்பது ஒருகட்சியின் கொள்கை. அவர்கள் மாநாடு நடத்தலாம். அதில் தப்பு இல்லை. மக்கள் விரும்புவர்களே ஆட்சிக்கு வருவார்கள். அந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

    பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது. நிரந்தரமாக தேசிய பேரிடர் மையம் அமைவதற்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
    • மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். ரெயில் மூலம் 13 சிதம்பரம் பக்தர்கள் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் கனகராஜ் (வயது 61), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 24 பேரும், சீர்காழியை சேர்ந்த 2 பேரும் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா செல்ல கடந்த 1-ந் தேதி டெல்லிக்கு சென்றனர்.

    அப்போது அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த 2 பேரும், பெங்களூருவில் வேலைபார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த 2 பேரும் ஆன்மிக பயணத்தில் இணைந்து கொண்டனர். பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் 3-ந் தேதி புறப்பட்டு இமயமலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடந்த 9-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் 30 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். பின்னர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், 30 பேரும் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.

    இதில் கோயம்புத்தூரை சேர்ந்த 2 பேர், பெங்களூரை சேர்ந்த 2 பேர் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த 13 பேர் உள்ள மொத்தம் 17 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    கோவை, பெங்களூரை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விமானத்தில் வந்த சிதம்பரம் பக்தர்கள் 13 பேர் சென்னையில் இருந்து 2 வேன்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    மற்ற 13 பேர் இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை வந்தடைகிறார்கள். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்து செல்கிறார்.

    மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

    பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

    • பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்.
    • தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார்.

    * பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்.

    * சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

    * திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

    * எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

    * தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

    * சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என்று  கேள்வி எழுப்பி உள்ளார்.

    • இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும்.
    • திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.

    கோவை:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தலின்போதே முதல் 100 நாட்களுக்கு பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும். ஆகவே நீங்கள் இந்த அரசை பற்றி எடை போட 100 நாட்கள் போதுமானதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். ஏறக்குறைய இந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழக பா.ஜ.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

    மத்திய மந்திரி நிதின்கட்கரி, சென்னை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்திருந்தார். மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடி ஆனாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கையப்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் நினைத்த வேகத்தில் பணியை செய்ய முடியவில்லை என தெரிவித்து இருந்தார். ரெயில்வே மந்திரியும் இதேபோல கருத்தை தெரிவித்து உள்ளார்.

    இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுதுபார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இந்த திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் சாதி வந்து விடும். அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.

    நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும்.

    தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா என்றால் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற தகுதி இல்லாதவர். நான் காலாவாதியாகிவிட்டேன் என கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு 67 வயது ஆகிறது. அவர் மகன் இறந்ததால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் இதுபோன்று பேசினால் அரசியலில் இருந்து காலாவதியாகி விடுவார். ராகுல்காந்தி பற்றிய நான் தெரிவித்த கருத்துக்காக கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். நான் உண்மையை தான் பேசி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரிய அலேரஹள்ளி பகுதியை சேர்ந்த பாதுஷா என்பவருடைய மகன் சவுகத் அலி (வயது 31).

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்தவரும் அத்தை மகனான முஸ்தபாவுக்கும், சவுகத் அலிக்கும் ஆகிய இருவருக்கும் நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சவுகத்அலி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முஸ்தபாவின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி உள்ளார்.

    இதில் ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார்.

    இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கன்னியம்மாள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளைபோய் இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தன. மர்ம கும்பல் கன்னியம்மாளை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். மோப்பநாய் டைகர் கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது. அங்கிருந்து வாகனத்தில் கொலை கும்பல் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே அவரது இட்லி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள்.
    • இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    சென்னை:

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

    இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! என்று தெரிவித்துள்ளார்.

    • கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
    • மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வர தொடங்கியதால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 76 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அல்லது கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இனிமேல் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    • பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
    • கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பா.ம.க. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.

    பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.

    பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை..

    1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என அவர் கேள்வி எழுப்பினார்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
    • நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).

    இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி (12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    கண்ணன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் கிடங்கில் டீசல் ஏற்றுவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி வடக்கு பைபாஸ் சாலையில் உலகம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், மாரீஸ்வரி, சமீரா, ஆண்டாள் ஆகியோர் மீது மோதியது.

    இதில் கண்ணன் உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான கண்ணன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து தொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நெல்லை பத்தமடையை சேர்ந்த கணேசன் என்ற டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×