என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"

    • வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.
    • பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

    "நம்முடைய நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள், என்னென்னவோ கனவுகள் கண்டார்கள்... இந்த ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணங்கள்தான் சிதைந்து போயிருக்கிறது. நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி. நம்முடைய இந்திய நாட்டையும் - தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் கூட்டணி. 

    பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இந்திய நாடு, இதுவரை காப்பாற்றி வைத்து வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் செயலை, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது; எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது; எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் - ஒரு மொழி - ஒரு பண்பாடு - ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும். மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

    மதச்சார்பின்மை - சோசலிசம் - சமநீதி - சமூகநீதி - பொதுவுடைமை - பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது. இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல - அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில், அனைவரும் குறிப்பிட்ட நாம் எச்சரிக்கையாகவும் - கவனமாகவும் இருக்க வேண்டும்!

    ஏன் என்றால், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் - N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் - அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.

    அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி , அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை. ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது. பா.ஜ.க.வின் கிளை அமைப்பு. அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி அவர்கள், மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது! ஆனால் பழனிசாமி அவர்கள், 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

    எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்... போதை மருந்து கடத்தலா? பா.ஜ.க. ஆளும் குஜராத்தைப் பாருங்கள்! குற்றச்சம்பவங்களா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தைப் பாருங்கள்! மாநிலமே பற்றி எரிவதை பார்க்க வேண்டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரைப் பாருங்கள்! இன்னும் சொல்கிறேன்... பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களாக, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே எந்த மாநிலம் என்று சொல்கிறதே... உத்தரப்பிரதேசம் - ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநிலங்கள் மட்டும்தானா? அடுத்த மூன்று இடங்களில் இருப்பது யார்? பீகார் - ஒடிசா - மகாராஷ்டிரா! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. இதுதான் டப்பா எஞ்சினின் லட்சணம்!

    நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் இன்றைக்குச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிகமான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது! இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்!

    அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் - சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்! கருத்துக்கணிப்புகள் - கருத்துத்திணிப்புகள் அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம். மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! தோழமைக் கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாகப் பரப்புரைகளைத் தொடங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கிறேன்.

    தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி - "பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்" என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக!" என தெரிவித்தார்.

    • தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார்.
    • ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.

    சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

    "'எல்லாருக்கும் எல்லாம்' எனும் சமத்துவச் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்களின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, உரையாற்றுவதை, எனக்குக் கிடைத்த பெருமையாக எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

    கம்யூனிசம் என்பது, ஒரு உணர்வு! மனிதர்கள் அனைவருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு! அந்த உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, செங்கொடியை ஏந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை. இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களும் நூற்றாண்டைக் கடந்திருக்கிறார். இது எந்த இயக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சாதனை.

    நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும், தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாக நான் மனதார வாழ்த்துகிறேன்.

    திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு. அதனால்தான், திராவிட இயக்கக் கொடிகளில் சிவப்பு இருக்கிறது; திராவிட முன்னேற்றக் கழக கொடியிலும் சரிபாதியாக சிவப்பு இருக்கிறது. நம்முடைய கொள்கைகளில், அரசியல் வழிமுறைகளில், சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், நம்முடைய பொது இலக்கு சமத்துவச் சமுதாயம்தான். 

    அதனால்தான், இந்த மேடையில், தோழமைக் கட்சியினர் அத்தனை பேரும், இந்த நூற்றாண்டு ஆலமரத்தை வாழ்த்த ஒன்று கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமைதான், இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கு நிலைபெற வேண்டும்; அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள நட்பு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இது நூறாண்டு காலமாகத் தொடரும் நட்பு. தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார். அனைத்திற்கும் மேல், எனக்கு ஸ்டாலின் என்று பெயரும் வைத்தார். எனக்குள்ளும் அந்த உணர்வு ஓடுவதால்தான், உங்களில் ஒருவனாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

    இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிராவயலில், உத்தமர் காந்தி - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்திருக்கும் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். அதேபோன்று, தொடர்ந்து, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, வரும் 6-ஆம் நாள் திறந்து வைக்க இருக்கிறேன். இவ்வாறு, உங்களில் ஒருவனாக நானும் - என்னில் பாதியாக நீங்களும் இருப்பதால்தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.

    நமக்குள் இருக்கும் நட்பு என்பது, தேர்தல் அரசியலை கடந்த நட்பு. சாதியவாதம் - வகுப்புவாதம் - பெரும்பான்மை வாதம் – எதேச்சாதிகார வாதம் என்று, மக்களை ஒடுக்கும் அத்தனைக்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமை, நம்முடைய தோழமை.  நான் உறுதியாக சொல்கிறேன்... இந்தத் தோழமைதான், பாசிசத்தை ஒழிக்கும் - வீழ்த்தும். இந்தத் தோழமைதான், எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், மதவாதத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், சர்வாதிகாரத்தை வீழ்த்தும்!" எனப் பேசினார். 

    • தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது
    • மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும்

    பெரிதும் எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் – அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள் – பெண்கள் – விவசாயிகள் - விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.

    அதுமட்டுமின்றி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்ட போதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு நிதிப்பகிர்வு சதவீதம் இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரியவருகிறது. இதன் மூலம் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி இதர ஒப்பிடத்தக்க மாநிலங்களைக் காட்டிலும் ஆண்டிற்குச் சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை, இன்று 16-ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

    அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சீரமைப்பில் மாநிலங்களுக்கான நிதி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கத்தக்கது.

    ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு கோரியிருந்த 3,112 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்த வேளையில், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தையே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சி என்றே தோன்றுகிறது.

    அதேபோன்று, பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். அதேபோல், ஊரகப் பகுதிகளுக்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 35,832 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்து, தற்போது 32,500 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

    இதைவிட மிகப்பெரிய ஏமாற்றம் என்னவெனில், மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட PM Internship Scheme திட்டத்திற்கென 10,831 கோடி ரூபாயைச் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, ஆனால் தற்போது 2025-2026-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில், வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம், இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

    இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாகச் செயல்படுத்திய போதிலும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காத நிதி 3,112 கோடி ரூபாய் நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு எனப் புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.

    வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை.

    மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!" என்று தெரிவித்துள்ளார். 

    • எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 

    • நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல்.
    • அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு' இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  

    "தஞ்சை என்பது திராவிட இயக்கத்தின் கோட்டை. சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல. பெண் விடுதலைதான் நமது அடிப்படை. சாதியால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்று நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்தத்தான் உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம்.

    முதலமைச்சராக எனது முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். ஸ்டாலின் பேருந்து எனவே மக்கள் அதற்கு பெயர்வைத்துள்ளனர். அதுதான் அந்தத் திட்டத்திற்கான வெற்றி. புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலத்திட்டங்களை பெண்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

    பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. மகளிர்தான் எப்போதும் பவர்ஹவுஸ். பெண்களையும், இளைஞர்களையும்தான் நான் அதிகம் நம்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை அடித்துச் சொல்கிறேன். 

    பிரதமர் மணிப்பூரை மறந்துவிட்டார். 260 மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரை ஆட்சிசெய்தது பாஜகதான். டபுள் என்ஜின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?

    பாஜக ஆளும் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்குள் போதைப் பொருள் பரவுகிறதென ஆதாரப்பூர்வமாக வெளிவரும் செய்தியை பிரதமர் படிப்பதில்லையா? தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, பிரதமர் பில்டப் கொடுத்திருக்கிறார். அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைவரும், ஒன்றிய விசாரணை ஆணையத்தில் சிக்கி, அந்த வாஷிங் மிஷின் நம்மையும் வெளுக்காதோ எனும் நட்பாசையில் இருக்கிறார்கள்.

    இதே கூட்டணி 2019 மற்றும் 2021ல் தோல்வியுற்றது. பின்னர் 2024ஆம் ஆண்டு இரண்டு தனித்தனியாக பிரிந்து பிறகு சேர்ந்துக்கொள்ளலாம் என மறைமுக கூட்டணியில் வந்தனர். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும், உங்களுக்கு கெட் அவுட் தான் என தமிழ்நாடு மக்கள் சொல்லிவிட்டனர். தற்போது மீண்டும் உடைந்ததை ஒட்டிக்கொண்டு புதிதாக என்.டி.ஏ. என வந்திருக்கிறார்கள்.

    அதிமுக-பாஜக கூட்டணி ஒரு கட்டாயக் கூட்டணி. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. இந்த அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கான பதிலடியை தமிழ்நாடு மக்கள் தருவார்கள்.

    நடக்கப்போகும் தேர்தல், என்.டி.ஏ. Vs மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் கிடையாது. நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல். நான் என்னைவிட அதிகம் நம்புவது தமிழ்நாட்டு மக்களைத்தான். நாங்கள் உங்களை எப்போதும் சந்திக்க வேண்டும். நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணைநிற்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்". என தெரிவித்தார். 

    • தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.
    • பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

    அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் மோடியுடன் இருப்பவர் சாதா பழனிசாமி அல்ல, தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், 'பிரதமர் தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக'... வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியன் தெரியும் பழனிசாமி அவர்களே... ஒருமுறையாவது நிமிர்ந்து பாருங்கள் அப்போதுதான் சூரியன் தெரியும், அதனின் வெப்பமும் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.

    பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம். டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைவணங்காது; தீ பரவட்டும்" அவர் கூறினார்.

    • கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது.
    • தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

    அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மொழிப்போர் வீரர்களே, உங்கள் மூச்சு காற்று தான் இப்போதும் எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் தியாக பிள்ளைகளே, தமிழ்ப் பிள்ளைகளே உங்களை வணங்குகிறேன். மொழிப்போர் தியாகிகளின் பெயரை சொன்னாலே உணர்ச்சி பொங்குகிறது. மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக் காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

    வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. ஆனால் அண்ணாவை பார்த்தால் மட்டும் எனக்கே சில நேரம் பொறாமை உண்டு. ஏனென்றால் பெரியாரை போல குருவும், கலைஞரை போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் அண்ணாதான் எல்லா தாயும் தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைப்பாங்க. ஆனால் நம் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணாதான். எனது அரசியல் பயணத்திற்கு உந்து சக்தி காஞ்சி மண்தான். 1972-ல் எனது கையில் அண்ணா சுடரை ஏந்தி ஓடிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.

    எப்படியாவது இந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடியாக துடிக்கிறது. நேரடியாக திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்துபோக நாம் என்ன அடிமைகளா?. அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் போராளிகள் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.

    டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது. 2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை தோல்வி கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது?.

    தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும்; இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் இந்தமுறை வந்தபோது, வழக்கம்போல பழைய வடையைத்தான் சுட்டுட்டு போயிருக்கிறார்; அந்த மாவும் புளிச்சு போச்சு, அதைக் கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காதும் புளிச்சு போச்சு" என்று தெரிவித்தார்.

    • நீட் தேர்வை, தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறது.
    • துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும்

    துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

    அக்கடிதத்தில், "தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறதென்றும், மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் அச்சங்கள் இன்று உண்மையாகிவிட்டன என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறதென்று தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    நாங்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது போல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், 12,000 எம்.பி.பி.எஸ் இடங்களுக்குப் போட்டியிட 1.40 இலட்சம் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையற்ற செலவு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளித் தேர்வுகளில் காட்டும் செயல்திறனைப் பயனற்றதாக்கிவிட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சாடியுள்ளார். இந்தத் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ள அவர், தமிழ்நாட்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், இந்த இடங்களுக்குச் சேர விரும்பும் இலட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை விட மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும், இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு பெரும் அநீதியாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உலகளவில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமோ அல்லது அதில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலமோ கல்வித்தகுதி வரையறுக்கப்படுகிறது என்றும், ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல என்றும், இது நீட் தேர்வை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கானோர் நீட் பயிற்சியை நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் ஏழைக் குடும்பங்களின் செலவில் நீட் பயிற்சி மையங்கள் நன்றாக இலாபம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான தகுதியாக நீட் (NEET) மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தகுதி மதிப்பெண்கள் (cut-offs) படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு இணையாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால், இது மாணவர்களின் தரம் குறித்த வாதத்தை முற்றிலும் அர்த்தமற்றதாக்குகிறது என்பதைச் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்தச் சூழலில், துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும் என்பதும், இந்தச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்கி வைக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறும் தேசிய துணை மருத்துவ ஆணையத்திற்கு (NCAHP) அறிவுறுத்தவேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விஷயத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் விரைவான தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என சட்ட பேரவையில் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

      இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      • பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது
      • பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்

      செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தே.ஜ.கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், "பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

      இதற்கு, பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், 

      "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களை விமர்சிக்கிறீர்கள்.

      குஜராத்,  மகாராஷ்டிரா, உத்தர் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible என்ஜின் கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் ..

      தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள். நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே...... தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

      • பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது
      • ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

      2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.  இதில், "பாஜக - தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

      இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

      "மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

      தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும், உங்களின் துரோகங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு_தலைகுனியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

      • 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்
      • இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது

      மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

      அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

      தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

      தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர சமூகத்தினருக்கு கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் கட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும். அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

      எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறுவதைத் தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

      ×