என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழைய வடைகளையே சுட்ட மோடி... அந்த மாவும் புளிச்சு போச்சு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
- கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது.
- தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மொழிப்போர் வீரர்களே, உங்கள் மூச்சு காற்று தான் இப்போதும் எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் தியாக பிள்ளைகளே, தமிழ்ப் பிள்ளைகளே உங்களை வணங்குகிறேன். மொழிப்போர் தியாகிகளின் பெயரை சொன்னாலே உணர்ச்சி பொங்குகிறது. மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக் காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. ஆனால் அண்ணாவை பார்த்தால் மட்டும் எனக்கே சில நேரம் பொறாமை உண்டு. ஏனென்றால் பெரியாரை போல குருவும், கலைஞரை போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் அண்ணாதான் எல்லா தாயும் தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைப்பாங்க. ஆனால் நம் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணாதான். எனது அரசியல் பயணத்திற்கு உந்து சக்தி காஞ்சி மண்தான். 1972-ல் எனது கையில் அண்ணா சுடரை ஏந்தி ஓடிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.
எப்படியாவது இந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடியாக துடிக்கிறது. நேரடியாக திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்துபோக நாம் என்ன அடிமைகளா?. அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் போராளிகள் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.
டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது. 2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை தோல்வி கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது?.
தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும்; இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் இந்தமுறை வந்தபோது, வழக்கம்போல பழைய வடையைத்தான் சுட்டுட்டு போயிருக்கிறார்; அந்த மாவும் புளிச்சு போச்சு, அதைக் கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காதும் புளிச்சு போச்சு" என்று தெரிவித்தார்.






