என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    • கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
    • பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்,

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.

    தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.

    தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

    பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 'ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும் (வாக்குறுதி எண்-178)' என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

    உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 சதவீதம் தொகை நூலக வரியாக வசூலிக்கப்பட்டு நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.

    இந்த வகையில் மட்டும் நூலகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது. ஆனால், அதை செய்வதற்குக் கூட தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அனைத்துக் கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்த பஸ்களின் கண்டக்‌டர் பெண்கள் ஆவார்கள்.
    • இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் 'பிங்க்' பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.

    அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    நந்தம்பாக்கம்:

    சென்னை நந்தம்பாக்கத்தில் மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் பணிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.

    * ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும்.

    * பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்.

    * பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது.

    * பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    * பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என தி.மு.க. அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது.

    * பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

    * புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல...

    * கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.

    * அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    * பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்.

    * கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    * இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

    * மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

    * பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

    • குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
    • அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மாட்டார்.

    சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    * குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.

    * பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.

    * அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

    * அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

    • மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் கடந்த 24-ந்தேதி இரவு கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
    • வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.

    77வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் தமிழக அரசின் வாகனம் அணிவகுத்தது.

    தமிழக அரசின் வாகனத்தில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.

    இதேபோல், அசாம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் வாகனங்கள் அணிவகுத்தன.

    மேலும், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுத்தன.

    தமிழ்நாடை தொடர்ந்து, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப் வாகனங்கள் அணிவகுத்தன.

    • இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர்.
    • வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சுரேஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்கு மார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது.

    3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதே போல் கியூ ஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.1000 கோடி என சாதனை படைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    • அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.
    • இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர் நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பரிசு பணத்தை மணியார்டர் மூலம் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வெளியே வந்த கிறிஸ்டோபர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளியவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக பரிசு தொகுப்போடு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.

    அதனை நான் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ரேஷன் கடையில் பெற்றுக்கொண்டேன். தற்போது தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருக்கும் நிலையில் என் வீட்டை போல், நாட்டையும் நான் நேசிப்பதால் அந்த ரொக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.

    ஒவ்வொரு ஆண்டும் அரசு இதுபோன்ற பரிசுத்தொகை வழங்கும்போது அரசின் நிதி சுமையை கருத்தில் கொண்டு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அந்த பணம் மீண்டும் அரசின் கஜானாவுக்கு முறையாக செல்லுமா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது.

    இதனால் இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கறிக்கோழி வளர்ப்போர் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

    இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை-கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோழி வளர்ப்புக் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு சாத்தியக்கூறு இல்லை என கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் (Contract farming on Commercial basis) கோழிப்பண்ணைகள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் பரஸ்பர உடன்பாட்டுடன் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்திடுகின்றனர்.

    இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் பார்வையின் கீழ் வருவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் ஒத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியிலான தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் என்பதால், இந்திய ஒப்பந்ததாரர்கள் சட்டம் 1872- ன் (Indian Contracts act,

    1872) படி சட்ட நடவடிக்கைகளின் மூலமே தீர்வு காண முடியும்.

    இக்காரணங்களால் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான இப்பிரச்சனையை உரிய சட்ட அமைப்பினை நாடி சட்டத்தீர்வு காணும்படி தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோழி வளர்ப்பவர்களின் தொடர் போராட்டத்தால், சந்தையில் கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்க சாத்தியக்கூறு இல்லாத நிலையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.400-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

    முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தான பிறகும் போராட்டத்தை தொடர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது.
    • சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும்.

    இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

    சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது.

    16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.
    • தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

    * புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    * புத்தக வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவு தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * பழமைகளை பொசுக்கி தமிழகத்தை பண்படுத்தியது திராவிட இயக்கம்.

    * புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது.

    * மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.

    * தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    * உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும்.

    * சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும்.

    * செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என்றார். 

    ×