என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மகளிர் தினம்"

    • சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகள்.
    • “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் #DravidianModel அரசு!

    உலக மகளிர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி - "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் #DravidianModel அரசு!

    இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.

    மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது.
    • மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை.

    உலக மகளிர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாளில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

    "பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்" என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்!

    "பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டுப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது." என்கிறார் ஆப்ரிக்க மக்களின் விடுதலைக்குப் போராடிய நெல்சன் மண்டேலா!

    "எந்தவொரு நாடு பெண்களை மதிக்கவில்லையோ, அந்த நாடு எக்காலத்திலும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஒரு பறவை ஒரு இறக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பறக்க முடியாது என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்!

    "தையலை உயர்வு செய்" என்கிறார் நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி!

    "மங்கையர் அறிவால் இந்த மாநிலம் உயரும்!" என்கிறார் புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன்!

    'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!' என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

    'பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!' எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

    பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழத்தாயகத்தில் சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனை தமிழ்நாட்டில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.

    ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டு மகளிர் நாளுக்கான மையக்கருத்தாக "எண்ணியல் யுகத்தில் பாலின சமத்துவம்: பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் புதுமை" என்ற முழக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உலகில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்திடாத செயற்கரிய செயலாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தேர்தலில் சரி பாதி இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, உண்மையான பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கான அதிகாரமளித்தல்தான் என்ற உண்மையைச் செயலில் நிறுவியது.

    அது வெறும் சோதனை முயற்சியல்ல, சாதனை முயற்சி என்பதை அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து உலகிற்கு உணர்த்தியது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அந்த சாதனையைத் தொடர்கிறது நாம் தமிழர் கட்சி. இது பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி தரும் சலுகை அல்ல; பெண்களுக்கான உரிமையை பெண்களையே எடுத்துக்கொள்ளச் செய்யும் நம் இனத்திற்கான பெருமை.

    அடிமைத் தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாக, அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிரான இக்கொடுமைகள் ஒழிய பெண்களுக்கு அரசியல் அதிகாரப்பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் அரசோ மாதம் 1000 ரூபாய் தொகையைத் தருவதை மகளிர் உரிமைத் தொகை என்கிறது.

    ஏற்கனவே ஆண்ட கட்சியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிறது. ஒரு நாளைக்கு அரசு வழங்கும் வெறும் 33 ரூபாய் தொகைதான் மகளிர்க்கான உரிமையா? அந்தத் தொகையும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான், வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கிடையாது என்கிறது அரசு. எந்த வேலைக்குச் செல்லும் பெண் வீட்டில் வேலை செய்யாமல் இருக்கிறார்? உண்மையில் அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்த குறைந்தபட்ச தொகையும் பெற தகுதி இல்லை என்பதை எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கிறது அரசு? மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை. மக்கள் தொகையில் சரிபாதி உள்ள 'மகளிர் தொகை'க்கேற்ப சம அதிகாரம் அளிப்பதே உண்மையான மகளிர் உரிமையாகும்.

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல; கட்சி கட்டமைப்பிலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் மண்டலச் செயலாளர் வரை பெண்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குகின்றது நாம் தமிழர் கட்சி. உலகத்திலேயே பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை ஏதோ வீண் பெருமைக்காகச் செய்யவில்லை. இது எங்களின் வரலாற்றுக் கடமை என எண்ணிச் செய்கிறோம்.

    பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தரவேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்ற அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, சட்டங்களை ஆண்களே இயற்றுவது அல்ல பாலின சமத்துவம்; தங்களுக்குத் தேவையான சட்டத்தைத் தாங்களே இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தைப் பெண்களிடம் அளிப்பதுதான் உண்மையான பாலின சமத்துவமாகும். எனவேதான் நாம் தமிழர் கட்சி ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம்! என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து அரசியல் களத்தில் நிற்கிறது. அதன் அடுத்த படிநிலையாக பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய வகையில் பெண்களுக்கெனத் தனிச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி போராடுகின்றது.

    எமக்கு ஒரு பெருங்கனவு உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும், இந்திய பெருநாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சரிபாதி பெண்கள் அமர்ந்து அவைகள் நடைபெற வேண்டும் என்ற பெருங்கனவு எனக்கு உண்டு. அந்த நாள் வருகின்ற நாளே இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் உண்மையான சம உரிமைப்பெற்ற நாளாகும். அதற்கான வரலாற்று வழிதடத்தை நாம் தமிழர் கட்சி தம்முடைய கட்சி கட்டமைப்பு முதல் தேர்தல் வேட்பாளர்கள் வரை சரிபாதி பெண்களை நிறுத்தும் செயல்களால் செப்பனிட்டு வருகிறது.

    ஒரு நாட்டில் வாழும் குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்; எனவே கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு பெறுவது மட்டுமல்ல; அதிகார மையமான அரசியலில் பெண்கள் சம வாய்ப்பை பெற்று சம பங்களிப்பை என்றைக்கு செய்கிறார்களோ அந்த நாள்தான் உண்மையான மகளிர் நாளாக அமையும்.

    அத்தகைய பெருமைமிக்க நாள் விரைவில் மலர்ந்திட உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

    பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! பெண்மையை போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோலி பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • அதில், குடும்ப வன்முறை (Domestic Violence) குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் விராட் கோலி தனது கையில் உள்ள காகிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டுகிறார். அதில், குடும்ப வன்முறை (Domestic Violence) குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த பதிவில், "ஒரு குற்றத்தை பார்த்தும் அமைதியாக இருப்பவன், அந்த குற்றத்தை செய்தவனுக்கு சமமான குற்றவாளி" என்று கோலி தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில், பல பெண்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கே நடந்த குடும்ப வன்முறையை (Domestic Violence) எதிர்த்து பேச முடியாமல் இருப்பார்கள். அவர்கள் பயம், குடும்ப அழுத்தம், சமூகம் போன்ற காரணங்களால் அமைதியாக இருப்பார்கள்.

    அப்போது அந்த வன்முறையை பார்க்கும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் பேசாமல் இருந்தால் அவர்களும் ஒரு வகையில் அந்த குற்றத்திற்கு காரணமாகிவிடுகிறார்கள்.

    குடும்ப வன்முறை நடக்கிறது. பலர் அதை பார்த்தும் எதுவும் பேசவில்லை என்றால் அந்த மௌனம் கூட ஒரு குற்றம்தான்" என்று கோலி தெரிவித்துள்ளார்.

    • சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.
    • துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-

    பெண்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே நிம்மதி இருக்கும், அன்பு இருக்கும். பாதுகாப்பு இருக்கும். நாம் வெறும் வீட்டை பராமரிக்கும் கைகள் மட்டுமல்ல. இந்த சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.

    அரசியலில் பெண்கள் பங்களிப்பு என்பது வெறும் வாக்களிப்பதோடு நின்று விடக்கூடாது. நீங்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

    இன்று சிலர் பொய் பிம்பங்களை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பும், தியாகமும் யாரிடம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது. பா.ம.க.வின் வெற்றியை பெண்களாகிய நாம் உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம்.
    • பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

    உலக மகளிர் தினத்தையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம். அறிவியல் முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையாலும் துணிவாலும் சாதித்து வருவது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் பெரும் ஊக்கமாக உள்ளது. அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் நம் எதிர்காலத்தை இன்னும் நம்பிக்கையுடனும் வளமுடனும் வடிவமைக்கின்றன.

    இந்த சிறப்பான நாளில், ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியாக இணைவோம். பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும்.
    • மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மகளிர் இந்த நாட்டை ஆள வேண்டும். மகளிரை இழிவுப்படுத்திய காலம் சென்று மகளிர் மேம்பாட்டுக்காக மகளிரே முன் வந்து திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படிப்பட்ட காலம் வர வேண்டும்.

    என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். 3 முறை பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்.

    அது நடக்குமா? சாத்தியமா? ஆண்கள் விடுவார்களா? சட்டம் இடம் கொடுக்குமா? என பல கேள்விக்குறிகள் மத்தியில் தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றார்.

    நாளை சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் வரும் கட்சி தொடர்பான வழக்கு குறித்த கேள்விக்கு நல்லபடியாகவே நடக்கும் என்றார்.

    • குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
    • பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.

    உலக மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

    இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும், விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!

    அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.

    பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.

    மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.

    தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம், ஊசுட்டேரி படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அங்கு இலவசமாக படகு சவாரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய லாம்.

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
    • எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே

    உலக மகளிர் தினத்தையொட்டி திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    It's WORTH ! Worth & worth!

    Because women is another EARTH .

    பூமியை நாம்

    பூமா தேவி என்றே அழைக்கிறோம்.

    சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.

    எவனோ even அவன் எமனோ அவனை

    ஈன்றதும் ஒரு பெண்ணே,

    சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !

    Happy WOMEN'S DAY !

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது.
    • வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    உலக மகளிர் தினத்தையொட்டி கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.

    பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    அண்ணா பல்கலை, ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள் என்று தெரிவித்துள்ளார்.

    • நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
    • உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது.

    உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வெல்லும் தமிழ்ப் பெண்களே...

    நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!

    தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

    #IWD #IWD2026 #InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள்.
    • பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இன்று உலக மகளிர் தினம்.

    ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள்.

    ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பள்ளி கல்வியில் முதலிடம் பிடிப்போர் பெண்களாகவே உள்ளனர். கற்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சமூக பங்களிப்பிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இது எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியதோடு பெண்மையின் மாண்பை உயர்த்துவதாகவும் அமைந்தது.

    குறிப்பாக இந்திய அளவில் பெண்கள் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது மும்பையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவுகள். நோயுடன் போராடும் உறவுகளுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ய முதலில் முன்வருவது பெண்கள் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் உறுப்பு தானம் செய்த 986 பேரில் 672 பேர் பெண்கள் என்பதை கண்டறிந்தது.

    இது 68 சதவீதம் ஆகும். அதாவது 10 பேர் உடல் உறுப்பு தானம் செய்தால் அதில் 7 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 35 சதவீதம் பேர் தங்களின் சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலில் ஒன்றை தானம் செய்துள்ளனர்.

    இதில் 33 சதவீதம் பேர் தங்கள் பெற்றோருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு உறுப்பு தானம் செய்துள்ளனர். 30 பேர் குழந்தைகளுக்கும் 2 சதவீதம் பெண்கள் தங்கள் மாமியாருக்கும் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

    குடும்பத்தை தாங்கும் பெண்கள் உடல் உறுப்பு தானத்திலும் முன்னிலை வகிப்பது சமூகத்தில் அவர்களின் பங்கையும், குடும்பத்தின் மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோல இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள். இதுபற்றிய ஆய்வும் தேர்தல் பார்வையாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது.

    இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தேர்தல் நடந்த போது அதில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. காலப்போக்கில் அவர்களும் அரசியலில் பங்கேற்க தொடங்கிய பின்னர், தேர்தலில் வாக்களிக்கும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்போது அவர்கள்தான் பல தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் பெண்கள் 4.4 சதவீதமாக இருந்தனர். இது அடுத்து வந்த தேர்தல்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.

    இதுபோல பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1989-ல் 5.5 சதவீதமாக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 2019-ல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த போது அதில் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    இப்படி சமூகம், குடும்பம், அரசியல் என பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பது பெண் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, இந்தியாவில் உள்ள ஜெயில்களில் பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள சிறைகளில் சுமார் 22,918 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண் கைதிகள் மட்டும் 31.3 சதவீதம் பேர் உள்ளனர்.

    இந்த பெண் கைதிகளுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் போதுமான வசதிகள் சிறைகளில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி சமீபத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. இதில் பெரும்பாலான சிறைகளில் பெண் கைதிகளுக்கு போதுமான சுகாதார வசதிகளும், பாதுகாப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ×