என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் சாதனை: திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் சாதனை.
- கடனை நீங்கள்தான் கட்ட வேண்டும். கூடுதல் வரி போட்டுதான் கட்ட வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம் தேர்தல் எழுச்சிப் பயணத்தில் இன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கந்தம்பாளையம், அந்தியூர்- பவானி பிரதான சாலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது:-
இது விவசாயிகள் வாழும் பகுதி, எனக்குப் பரிட்சயமான தொகுதி. எனது அம்மா இந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு நிறைய பேரை தெரியும், என்னுடைய ஊர் 20 கிலோ மீட்டரில் இருக்கும் சிலுவம்பாளையம். எனவே, எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை எளிதாக சந்திக்கலாம். நானும் விவசாயி, உழைக்கும் வர்க்கம்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட அதிமுக அரசு துணை நிற்கும். அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை இரண்டுமுறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம்.
இங்கு செங்கல் சூளை நிறைய இருக்கின்றன. திமுக ஆட்சியில் நெருக்கடி இருக்கிறது, அதிமுக ஆட்சியில் நெருக்கடி நீக்கப்படும். மணியாட்சி திட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற முதல்கட்டப் பணி துவங்க நிதி ஒதுக்கினோம், திமுக ஆட்சி அதை கிடப்பில் போட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிப்பதற்குத் தேவையான நீர் கிடைக்கச் செய்வோம்.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வுக்கும் திமுகவும் போட்டி என்று ஸ்டாலின் பேசுகிறார். இது தமிழகத்தில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல். முதல்வருக்கு அதுகூட தெரியவில்லை. பொம்மை முதல்வர் நாட்டை ஆள்கிறார். அதிமுக ஆட்சி மீது ஒரு குறை கூட சொல்ல முடியவில்லை. அப்படி ஒரு சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.
இந்த ஆட்சி வறட்சி, புயல், கொரோனா எதையுமே சந்திக்கவில்லை. வருவாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்திருக்கிறது. அப்படி கூடுதல் வருமானம் வந்தும் கடனை வாங்குகின்றனர். 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் சாதனை. கடனை நீங்கள்தான் கட்ட வேண்டும். கூடுதல் வரி போட்டுதான் கட்ட வேண்டும். ஒருபக்கம் வருமானம் அதிகம், ஒருபக்கம் கடன் வாங்குகிறார். அப்படி என்ன திட்டம் கொடுத்தீங்க?
இப்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ஸ்டாலின் சொல்கிறார், மக்களிடம் செல்வாக்கு இழந்ததால் கொடுக்கிறார். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் குடும்ப அட்டைக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு எங்களோடு இருக்கிறது தேவையான நிதியை பெறுவோம்.
உரிமைத் தொகை பற்றி பேசுகிறார் ஸ்டாலின், இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் கொடுத்தார். நான் சட்டமன்றத்தில் பேசினேன். 28 மாதமாகிவிட்டது, இன்னமும் கொடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை கொடுத்ததால், எங்கள் அழுத்தம் காரணமாகக் கொடுத்தார். பெண்களின் கஷ்டத்தை பார்த்துக் கொடுக்கவில்லை, பெண்கள் ஓட்டு தேவை என்பதற்காகவே கொடுக்கிறார். அதிமுக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாகத்தான் கொடுத்தார்.
திமுக அரசில் எல்லா துறைகளிலும் ஊழல். நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஊழலை அமலாக்கத்துறை ஆதாரத்தோடு கண்டுபிடித்து 3 முறை எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி கடிதம் அனுப்பியது. அதிமுக வழக்குப்போட்டது. இன்னும் 2 வாரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும். அமைச்சர் இங்கே இருப்பாரா அல்லது உள்ளே இருப்பாரா என்று பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
நம்மாளுங்க யாரும் குடிக்காதீர்கள். திமுககாரன் குடிக்கிறான் என்றால் குடித்துவிட்டுப் போகட்டும். அவங்க ஆளுங்கிட்டே வசூல் பண்ணி கொள்ளையடிக்கும் ஆட்சி திமுக ஆட்சி. அமலாக்கத்துறையே இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வருகிறது. ஊழல் இல்லாத துறையே இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






