search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலக மகளிர் தினமான இன்று பெண்மையின் மாண்பை உயர்த்தும் ஆச்சரிய ஆய்வு முடிவுகள்...
    X

    உலக மகளிர் தினமான இன்று பெண்மையின் மாண்பை உயர்த்தும் ஆச்சரிய ஆய்வு முடிவுகள்...

    • இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள்.
    • பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இன்று உலக மகளிர் தினம்.

    ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள்.

    ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பள்ளி கல்வியில் முதலிடம் பிடிப்போர் பெண்களாகவே உள்ளனர். கற்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சமூக பங்களிப்பிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இது எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியதோடு பெண்மையின் மாண்பை உயர்த்துவதாகவும் அமைந்தது.

    குறிப்பாக இந்திய அளவில் பெண்கள் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது மும்பையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவுகள். நோயுடன் போராடும் உறவுகளுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ய முதலில் முன்வருவது பெண்கள் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் உறுப்பு தானம் செய்த 986 பேரில் 672 பேர் பெண்கள் என்பதை கண்டறிந்தது.

    இது 68 சதவீதம் ஆகும். அதாவது 10 பேர் உடல் உறுப்பு தானம் செய்தால் அதில் 7 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 35 சதவீதம் பேர் தங்களின் சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலில் ஒன்றை தானம் செய்துள்ளனர்.

    இதில் 33 சதவீதம் பேர் தங்கள் பெற்றோருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு உறுப்பு தானம் செய்துள்ளனர். 30 பேர் குழந்தைகளுக்கும் 2 சதவீதம் பெண்கள் தங்கள் மாமியாருக்கும் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

    குடும்பத்தை தாங்கும் பெண்கள் உடல் உறுப்பு தானத்திலும் முன்னிலை வகிப்பது சமூகத்தில் அவர்களின் பங்கையும், குடும்பத்தின் மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோல இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள். இதுபற்றிய ஆய்வும் தேர்தல் பார்வையாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது.

    இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தேர்தல் நடந்த போது அதில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. காலப்போக்கில் அவர்களும் அரசியலில் பங்கேற்க தொடங்கிய பின்னர், தேர்தலில் வாக்களிக்கும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்போது அவர்கள்தான் பல தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் பெண்கள் 4.4 சதவீதமாக இருந்தனர். இது அடுத்து வந்த தேர்தல்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.

    இதுபோல பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1989-ல் 5.5 சதவீதமாக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 2019-ல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த போது அதில் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    இப்படி சமூகம், குடும்பம், அரசியல் என பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பது பெண் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, இந்தியாவில் உள்ள ஜெயில்களில் பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள சிறைகளில் சுமார் 22,918 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண் கைதிகள் மட்டும் 31.3 சதவீதம் பேர் உள்ளனர்.

    இந்த பெண் கைதிகளுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் போதுமான வசதிகள் சிறைகளில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி சமீபத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. இதில் பெரும்பாலான சிறைகளில் பெண் கைதிகளுக்கு போதுமான சுகாதார வசதிகளும், பாதுகாப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×