என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
    • அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    ராமேசுவரம்:

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. 

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
    • ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

    கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

     

    மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

     

    ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

     

    எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’.

    புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

    சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

    அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.

    எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

    தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

    இந்த சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா மட்டுமின்றி, பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாகவும் புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    விநாயகர் விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம்' என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    மகாலட்சுமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

    அமுக்தாபரண விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

    ஜேஷ்டா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.

    சஷ்டி - லலிதா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்

    புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். வருமானப் பற்றாக்குறை அகலும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.

    மிதுனம்

    இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

    கடகம்

    குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு.

    சிம்மம்

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துகொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும்.

    கன்னி

    சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் அதிகரிக்க முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். உத்தியோக முயற்சியில் இருந்த தடை அகலும்.

    மகரம்

    கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். நட்பு பகையாகும்.

    கும்பம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவைவிட செலவு இருமடங்காகும். பிறரை நம்பி செயல்பட இயலாது.

    மீனம்

    தொழில் முன்னேற்றத்திற்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-5 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : பூரம் காலை 10.56 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று மகாளய அமாவாசை, கோவில்களில் தர்ப்பணம் செய்வது நன்று, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று சர்வ மகாளய அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று) திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-நம்பிக்கை

    கடகம்-நன்மை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-ஆதாயம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- நற்செய்தி

    மகரம்-ஓய்வு

    கும்பம்-வெற்றி

    மீனம்-சிறப்பு

    • ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்.
    • அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வ அலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

    • மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும்.
    • தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.

    மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்–தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    அதாவது 15 நாட்கள் பித்ருக்களை வழிபட வேண்டியதை மகாளய அமாவாசை குறிக்கிறது. பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து மகாளய அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் பித்ருக்கள் பூலோகத்தில் இருக்கும் காலமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 8- ந்தேதி மகாளயம் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரையிலான 14 நாட்கள் பித்ருக்கள் நம்மை நெருங்கி இருக்கும் மகாளயபட்ச தினங்களாகும்.

    திதி என்னவென்று தெரியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணத்தை மிகவும் சிரத்தையாக செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக செய்தாலே போதும், பித்ருக்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள். மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம். தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்.

    • சஸ்திரஹத பிதுர் மகாளயம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-4 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி நள்ளிரவு 1.02 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : மகம் காலை 9.57 மணி வரை பிறகு பூரம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை பவனி

    இன்று மாத சிவராத்திரி. சஸ்திரஹத பிதுர் மகாளயம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-யோகம்

    கடகம்-விருத்தி

    சிம்மம்-கட்டுப்பாடு

    கன்னி-நற்செயல்

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-கடமை

    தனுசு- பாராட்டு

    மகரம்-பொறுமை

    கும்பம்-வெற்றி

    மீனம்-நிறைவு

    • இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

    நாளை (20-ந்தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை.

    ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.

    இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.

    புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.

    புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.



    புரட்டாசி சனிக் கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.

    புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் வழிபடுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!

    ஆலயத்துக்கு செல்ல இயலாவிட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.

    • பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
    • திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

    திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

    இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    • சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
    • ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.

    குரும்புக்கோட்டை மன்னன் பட்டம் என்ற பெயர் கொண்ட 2-ம் குலோத்துங்கன் திருவ நகரத்தில் பெண் எடுக்க சென்றபோது இருவேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்துக்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி? என பெண் வீட்டார்கள் கேட்க, குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீரங்கரைப் போல அதே மாதிரி கோவிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

    அதன்படி காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இடையே அரங்கன் இருப்பதுபோல திருவதிகையில் கருடன் நதி-தென்பெண்ணையாற்றின் நடுவில் அதிகாபுரியில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 2-ம் குலோத்துங்கனின் திருமணம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

    அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன்பு இந்த இடத்தில் அய்யனார் சிலை இருந்ததாகவும், அவர் காவல் தெய்வமாக வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகாமண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது. மூலவர் ஸ்ரீரங்கன் வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கே பாம்பணையில் பள்ளிகொண்டவந்தாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் அருள் பாலிக்கிறார்.

    சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்த கோவிலில் உள்ள தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மூலவர் சிலை 8 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சாத்துதல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயாசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர்.

    இந்த கோவிலில் உள்ள ஆண்டாள் பல்லவர் கால படைப்பு சத்திரமாய் காட்சி அளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவர், உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மரும் அருள் புரிகின்றனர். கோவிலின் எதிரே திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறும்.

    குழந்தை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீரங்கநாயகியிடம் சகஸ்ர நாம அர்ச்சனையும், பால் பாயசமும் அமுது படைப்பதாய் வேண்டி அவ்வாறே குழந்தை பேறு பெற்றதுடன் தங்கள் நேர்த்தி கடனை செய்கின்றனர். புது வஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரும், ஆறாவமுதம் பொதிந்த கோவில் என்று சிறப்பு பெற்றது இந்த கோவில்.

    தினமும் காலை 7 மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

    • இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
    • மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.

    இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

    மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.

    மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.

    மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

    ×