என் மலர்
ராசிபலன்

2025 கார்த்திகை மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
- குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
- பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.






