என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 16.11.2025 to 22.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- கடகம் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம்.
- கன்னி முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம்.
மேஷம்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி சுக்ரன் பார்வை உள்ளது. லட்சியம் நிறைவேற சில கொள்கைகளை பின்பற்றுவீர்கள். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலமாகும். தொழில் மூலம் நல்ல வருவானம் கிடைக்கும். சுயஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். திருமண தடை அகலும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். 20.11.2025 அன்று அதிகாலை 4.14 முதல் 22.11.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அமாவாசை அன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
ரிஷபம்
விரும்பிய மாற்றங்கள் நிகழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்களுக்கு பிறந்த வீட்டு விசேஷத்திற்கு சீரும் அழைப்பும் வரும். தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுகவும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.22.11.2025 மாலை 4.47 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம்.ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
மிதுனம்
சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் 6-ம் இடத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை புதன் வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.சிலர் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். அரசுப் பணியாளர்கள் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திசையை நோக்கிச் செல்லும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உயர்ந்த வாகன வசதி அமையும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம். ராசியில் உள்ள வக்ர குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயையும் பாக்கியாதிபதி சனிபகவானையும் பார்க்கிறார். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் சர்ச்சைகள் அகலும். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். அரசியல்வாதிகளிடமும், அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். திருமணத்திற்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கலைஞர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். முதியவர்களுக்கு அரசின் உதவித்தொகை, பென்சன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அம்மன் வழிபாட்டால் மேன்மை அடைய முடியும்.
சிம்மம்
லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் தனலாப அதிபதி புதனுடன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அற்புதமான வாரம். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல யோகமான பலனை பெறக்கூடிய நேரம். நிதி நிலையை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். வியாபாரிகள் நல்ல வாய்ப்புகள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்வர். தொழிலாளர்கள் ஆதரவால் உற்பத்தி பெருகி, லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையில் சேரும் அமைப்பு உள்ளது. மதிப்பு மிகுந்த நல்ல சொத்துக்கள் சேரும். புதிய இரண்டு, நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அனைத்து விதமான சாதகமான பலன்களும் சிம்ம ராசியினருக்கு உண்டு. வங்கித் தொழில், ஜோதிடம், புத்தக விற்பனை, ஆலோசனை வழங்கும் கன்சல்டிங் நிறுவனங்கள், காலி மனை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். சிலருக்கு சுகர், பிரஷர், மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகும். தனலட்சுமியை வழிபட தனசேர்க்கை கூடும்.
கன்னி
முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்ப உறவுகளுடன் கருத்து ஒற்றுமை அதிகமாகும். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது கிடைக்கும். சில விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். கண்டகச் சனியினால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும்.பங்குச் சந்தையில் அதிக முதலீடு வைத்து இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெகு நாட்களாக பாதித்த கடன் தொல்லையில் இருந்து மீள தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
துலாம்
இன்னல்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழிலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. அரசுப் பணியாளர்கள் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். தந்தை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதுவார்கள். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். ஶ்ரீ ரங்கநாதரையும் தாயாரையும் வணங்கி வர நலம் பெருகும்.
விருச்சிகம்
தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய், புதனுக்கு குரு பார்வை உள்ளது. சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். பூர்வீக குலத் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். சிலர் வேலையை மாற்றலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்கலாம். குடும்ப சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அழகு ஆடம்பர துணி நகைகள் கிடைக்கும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.
தனுசு
செல்வாக்கு உயரும் வாரம். ராசிக்கு தன ஸ்தான அதிபதி சனியின் பார்வை உள்ளது. வெகு சில நாட்களில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். கார்த்திகை மாதம் சிவனை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.
மகரம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார வக்ர குருவின் சமசப்தம பார்வை உள்ளது. இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். புதிய பொறுப்புகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். வாலிப வயதினர் காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கடந்து வந்த காலங்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மறந்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்வீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
கும்பம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். தன, லாப அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் வக்ர கதியில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சில நேரங்களில் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். வாழ்க்கையை பாதிக்கும் புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்மை தரும். எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டத்தை செயல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு வரும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை தங்களுக்குள்ளே தீர்த்து கொள்தல் நலம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.17.11.2025 அன்று மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிவ வழிபாடு செய்யவும்.
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருபகவான் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். 17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். சிவபுராணம் படித்து சிவ, சக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






