என் மலர்tooltip icon

    வழிபாடு

    முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான் முத்துக்குமரன்
    X

    முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான் முத்துக்குமரன்

    • திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.
    • கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    'திரு' ரு' என்று சூட்டும் அடைமொழி சிறப்பான "ஊர்களுக்கு சேர்ந்திருப்பதை நீங்கள் பார்த் திருப்பீர்கள். குறிப்பாக திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருமழபாடி, திருத்தணி போன்ற எண்ணற்ற தலங்கள் 'திரு' என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.

    அதேபோல பெருமைக்குரிய நட்சத்திரங்களில் 'திரு' என்ற அடைமொழியுடன் கொண்டாடும் திருநாள் 'திருக்கார்த்திகை' ஆகும். அந்த நாளன்று அபிஷேக, ஆராதனைகள் செய்து முருகப்பெருமானை வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான். கந்தனை நம்பிக்கையோடு வழிபட்டால் கரம் நிரம்பப் பொருள் குவியும்.

    அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் 3.12.2025 (புதன்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் அருள்வழங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். ஆலயம் சார்ந்த மலைகளை வலம் வந்து வழிபட்டாலும் மலை வலத்தால் மகத்துவம் காணலாம். அதற்கு முதல் நாள் 2.12.2025 (செவ்வாய்கிழமை) மாலை 6.06 மணிக்கு மேல் பரணி நட்சத்திரம் தொடங்குகிறது. பாவங்கள் போக்க பரணி தீபம் ஏற்றும் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில்தான்.

    பரணி தீபத்தன்று பிரதோஷமும் வருகின்றது. முருகப்பெருமானின் தந்தையான சிவனையும், உமையவளையும், நந்தியையும் வழிபட வேண்டிய திருநாள் இது. எனவே இல்லத்திலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். இனிய வாழ்வமைய முருகப்பெருமான் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். 'பரணி தரணி ஆளும்' என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, செல்வ வளம், பதவி, பட்டம் ஆகிய அனைத்தும் வந்துசேரும்.

    தீபம் ஏற்றுவதன் மூலம் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள், திருக்கார்த்திகை. அதற்கு முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நாம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுருகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும்.

    மறுநாள் திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜையறையில் முழுமுதற்கடவுள் விநாயகரின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் எல்லாவற்றையும் பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

    அதோடு கந்தனுக்கு பிடித்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்கலாம். செட்டி நாட்டுப் பகுதியில் அப்பத்தை 'கந்தரப்பம்' என்று சிறப்புப் பெயரிட்டு அழைப்பர். அன்றைய தினம் இரவு வரை விரதம் இருந்து வழிபடுவது மிகச் சிறந்த பலனை வழங்கும். அப்படி இயலாதவர்கள் ஒரு நேரமாவது உணவருந்தாமல் விரதம் இருக்கலாம். கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும்.

    இந்த நாளில் ஜோதி வடிவான இறைவனை நினைத்து, சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ள செடிகளில் நட்டுவைத்தால் செடிகள் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை.

    கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். அந்த அடிப்படையில் கார்த்திகைத் திருநாளில் நேர்த்தியாக நாம் வழிபட்டால் பார்த்த இடமெல்லாம் பாராட்டும், புகழும் கிடைக்கும். அதனால் தான் 'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பார்கள்.

    -'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்.

    Next Story
    ×