search icon
என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • ரஷியா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் மூன்றாவது ஆண்டாக நடந்து வருகிறது.
    • பேரழிவை சந்தித்தாலும் உக்ரைன் பதில் தாக்குதலால் ரஷியாவுக்கு அழிவை கொடுத்து வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும் பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு ரஷியாவுக்கு அழிவுகளைக் கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் ராணுவம் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து 3 போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர் என்றும், பெல்கோரோடில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெல்கோரோட் கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் பெல்கோரோடில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் வணிக வளாகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.
    • தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

    ரஷியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கியது. அங்கு முதல்முறையாக அதிபர் தேர்தல் 3 நாட்கள் தேர்தல் நடத்தப்படுகிறது. 17-ந்தேதி வரை நடக்கும் தேர்தலில் 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் வீடுகளுக்கே சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முறை முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று தொடங்கிய தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் வாக்குசாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குபெட்டிகள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஓட்டுபதிவு நடந்தது. மேலும் போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

    தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகிலை கரிடோனோவின் கம்யூனிஸ்டு கட்சி, லியோநிட் ஸ்லட்ஸ்கியின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, விளாடிஸ்லா தவன்கோவின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் அவர் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த அதிபர் தேர்தலில் (2018-ம் ஆண்டு ) புதின் 76.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரள மாநிலத்தில் உள்ள ரஷிய சிறப்பு தூதரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • என்ஜின்களில் ஒன்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
    • டேக் ஆஃப் ஆன சமயத்தில் விபத்தில் சிக்கியது.

    15 பேருடன் புறப்பட்ட ரஷிய ராணுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கியது. இல்யூஷின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ என்ற பகுதியில் சென்ற போது, என்ஜினில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.

    "IL-76 ராணுவ போக்குவரத்து விமானம் இவானோவோ பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், ஏழு பயணிகளும் இருந்தனர்," என்று ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சம்பவ இடத்திற்கு ராணுவ குழு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • மாணவர், "வை ஃபை" தொடர்புக்கு உக்ரைனுக்கு ஆதரவாக பெயரிட்டிருந்தது தெரிய வந்தது
    • "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24 அன்று, ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் கடுமையான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்ந்தாலும், 2 வருடங்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது "வை ஃபை" (wi-fi) தொடர்புக்கு, உக்ரைனை ஆதரிக்கும் வகையில் பெயரிட்டிருந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள், மாணவரின் பல்கலைக்கழக தங்குமிடத்தில் சோதனையிட்டனர். அங்கு அவரது கணினியையும் "வை ஃபை" (wi-fi router) கருவியையும் பரிசோதித்ததில் "ஸ்லேவா உக்ரைனி" என அந்த மாணவர் இணைய தொடர்புக்கு பெயரிட்டிருந்தது தெரிய வந்தது.

    "உக்ரைனுக்கு புகழ் சேரட்டும்" (Glory to Ukraine) எனும் பொருள்படும் வகையில் இப்பெயர் இருந்ததால், அவரை ரஷிய காவல்துறை கைது செய்தது.

    வழக்கு விசாரணைக்கு பிறகு, பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்த கூடிய குற்றச்செயலாக இதனை நீதிமன்றம் கருதியது.

    இதையடுத்து, நீதிமன்றம் அந்த மாணவருக்கு 10-நாள் சிறைத்தண்டனை வழங்கியது.

    ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் நடக்கும் போரை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என்றுதான் ரஷியர்கள் அழைக்க வேண்டும் எனும் சூழ்நிலை ரஷியாவில் நிலவுகிறது. மாறாக, "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போரை எதிர்த்தும், உக்ரைனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கருத்து தெரிவித்தும் வந்த நூற்றுக்கணக்கான ரஷியர்கள் அந்நாட்டில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

    • இரு நாடுகளும், தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளன
    • இரு நாடுகளின் அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

    இரு நாடுகளும், ரஷியாவில் வாழும் தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


    அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    அடுத்த 48 மணி நேரத்தில் ரஷியாவில் பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்.

    பலர் ஒன்று கூடும் இடங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    எனவே, ரஷியாவில் வாழும் அமெரிக்க குடிமக்கள், பொதுவெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.


    இதே போன்று இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, 2 வருடங்கள் ஆன நிலையில், ரஷியாவில் ஆபத்து அதிகரித்துள்ளது.

    ரஷியாவில் மக்களுக்கு பாதுகாப்பு உறுதியாக இல்லை.

    எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷியாவிற்கு செல்லும் இங்கிலாந்து நாட்டினருக்கு பயண காப்பீடு ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இரு நாடுகளின் இந்த அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், அமெரிக்காவும், இங்கிலாந்தும், தங்கள் எச்சரிக்கைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.

    • ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
    • ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    ஆனாலும் போரில் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ அமைப்பு தங்களது படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிரீமியா பாலத்தை ஏவுகணை மூலம் தாக்க ஜெர்மனி திட்டமிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கிரீமியா பாலத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஜெர்மனி ராணுவ ஜெனரல்கள் விவாதித்த பதிவு இருப்பதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

    நீண்ட தூர டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்து வது உள்பட கிரிமீயா பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பரிசீலித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

    உக்ரைனில் நேட்டோ ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷியா உறுதியாக நம்புகிறது என்றார்.

    உக்ரைன் போரில் மற்ற நாடுகள், நேட்டோ அமைப்பு தலையிட கூடாது என்று ரஷியா எச்சரித்து வரும் நிலையில் ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது மிகவும் தீவிரமான விஷயம். இதனால் மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே ஆடியோ விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? என்பது எங்களால் உறுதியாக கூற முடியவில்லை" என்றார்.

    • கடந்த சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.
    • மாஸ்கோ தேவாலயத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (47), மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

    சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, நவால்னியின் உடலை ரஷிய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி, தாயார் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்
    • ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

    இன்னும் சில வாரங்களில் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இன்று, ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மேற்கத்திய நாடுகள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது வளர்ச்சியை முடக்க முயன்று வருகின்றன.

    அது மட்டுமல்ல, அவர்கள் நம்மை அழிக்கவும் பார்க்கின்றனர்.

    அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் நமது நாட்டையும் உக்ரைனையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.

    நமக்கிடையே பிளவு ஏற்படுத்தி நம்மை வலிமை குறைந்தவர்களாக உருவாக்க முயல்கின்றனர்.

    பெரும்பாலான ரஷிய மக்கள் உக்ரைனில் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எடுக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.

    ரஷிய குடிமக்கள்தான் நமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

    நமது எதிர்காலம் செல்லும் திசை குடிமக்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.


    அரேபிய நாடுகள் மற்றும் லத்தீன் நாடுகளுடன் நமது உறவை நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.

    நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் துவங்கும்.

    நேட்டோவில் பின்லாந்தும், சுவீடனும் இணைவதால் ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எந்த எதிரி நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் சென்று அழிக்க கூடிய ஆயுதங்கள் நம்மிடையே உள்ளன.

    ரஷியாவை ஆக்கிரமிக்க எவரேனும் முனைந்தால் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்புகள் உருவாகும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார்.
    • உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    மாஸ்கோ:

    ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா குற்றம்சாட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அதிகாரிகள் நவால்னி உடலை ஆர்க்டிக் சிறையிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும்படி அவரது தாயை அச்சுறுத்துகின்றனர். உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    என் கணவரின் உடலை எங்களிடம் கொடுங்கள். நீங்கள் அவர் உயிருடன் இருந்தபோது அவரை சித்ரவதை செய்தீர்கள். இப்போது அவர் இறந்த பிறகும் தொடர்ந்து சித்ரவதை செய்கிறீர்கள். இதன் மூலம் இறந்துபோனவரின் உடலை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வல்லரசு நாடுகளான சீனாவும் வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன
    • ரோல்ஸ்-ராய்ஸ் காரை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆரஸ்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    உலகின் பல நாடுகள் ரஷியாவை எதிர்த்ததால், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டது.

    ஆனால், வல்லரசு நாடுகளான சீனாவும், வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன.


    உக்ரைனுடனான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் பீரங்கிகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வட கொரியா வழங்கி உதவியது.

    கடந்த 2023 செப்டம்பர் மாதம் சிறப்பு விருந்தாளியாக ரஷியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong-un), ரஷிய அதிபர் புதின், ரஷியாவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் (Vostochny Cosmodrome) எனும் ஏவுதளத்தை பார்வையிட அழைத்து சென்றார்.

    அப்போது, புதினின் ஆரஸ் செனட் (Aurus Senat) லிமோசின் ரக காரை கிம், ஆர்வமுடன் பார்வையிட்டார்.

    சொகுசு கார் பிரியரான கிம் ஜான் உன், தனது வாகன நிறுத்துமிடத்தில் பல வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் வட கொரிய அதிபருக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு உயர்ரக சொகுசு காரை பரிசளித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆரஸ் (Aurus) எனப்படும் முழு நீள அதிநவீன சொகுசு கார், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரத்யேக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆரஸ், உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் பேண்டம் (Rolls-Royce Phantom) எனும் மாடலை அடிப்படையாக கொண்டு ரஷியாவில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோல்ஸ்-ராய்ஸை விட ஆரஸ் சற்று நீளம் அதிகமான காராகும்.


    புதின் பரிசளித்திருக்கும் ஆரஸின் புகைப்படங்களோ, அந்த காரில் அவருக்காக செய்யப்பட்டுள்ள பிரத்யேக மாறுதல்கள் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

    வரவிருக்கும் மாதங்களில் ரஷிய அதிபர் புதின், வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளிலிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், சொகுசு கார்கள் உட்பட விலையுயர்ந்த பரிசுகளை வட கொரியாவிற்கு எந்த நாடும் அளிக்க கூடாது எனும் ஐ.நா.வின் உத்தரவை புதின் மீறியுள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியது.

    • ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராக திகழ்ந்தவர் அலெக்சி நவால்னி
    • விஷத்தின் சுவடுகளை அழிக்க முயல்வதாக நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்

    இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).

    புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.


    நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.

    சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    ரசாயன பரிசோதனைக்காக நவால்னியின் உடல் பாதுகாக்கப்படுவதாகவும், 2 வாரங்களுக்கு பிறகுதான் உடலை வழங்க முடியும் என்றும் அவரது தாயாரிடம் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.


    நவால்னியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ரஷிய அரசு சொல்ல மறுத்து வருகிறது.

    இது குறித்து நவால்னியின் மனைவி, யூலியா நவால்னயா (Yulia Navalnaya), "எனது கணவரை ரஷிய அதிபர் புதின் கொன்று விட்டார். அலெக்சியின் உடலில் உள்ள "நோவிசாக்" எனும் நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயகரமான விஷத்தின் தடயம் அவரது உடலில் இருந்து முழுவதுமாக விலகும் வரை உடலை வெளியே வழங்காமல் இருக்க அரசு முயல்கிறது," என குற்றம் சாட்டினார்.

    அலெக்சியின் மரண செய்தி வெளியானதும் அவரது உடலை பெற சிறைச்சாலைக்கு சென்ற அவரது தாயாரையும், வழக்கறிஞரையும், உடலை பார்க்க விடாமல் சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

    அலெக்சி விட்டு சென்ற பணிகளை தொடர போவதாக அவரது மனைவி யூலியா நேற்று உறுதிபட தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நவால்னி உயிரிழந்தார்
    • கணவரை கொன்றவர்களின் முகங்களை உலகிற்கு காட்டுவேன் என்றார் யூலியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி (Alexei Navalny) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.

    கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.

    அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.

    அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.

    போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.

    எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.

    இவ்வாறு யூலியா கூறினார்.

    யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டது.

    ×