என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.
    • கடும் பனிபொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிப்பு.

    நியூயார்க்:

    புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் மறுவடிவமாக மாறிவரும் பருவநிலை வளர்ந்த நாடு, ஏழை நாடு என பார்க்காமல் எல்லா நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.


    கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. கான்சாஸ், இண்டியானா, மிசோரி, கென்டக்கி, லுயிஸ்வில்லி உள்ளிட்ட 7 மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

    கான்சாஸ் மற்றும் இண்டியானா மாகாணங்களில் 7.7 அங்குலங்கள் (19.5 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

    கென்டக்கியின் லெக்சிங்டன், பனிப்பொழிவில் சாதனையை படைத்துள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.


    வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான கார்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    வடகிழக்கு கன்சாஸில் உள்ள நெடுஞ்சாலைகள் நடக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேகமாக வெப்பமடையும் ஆர்க்டிக் துருவச் சுழலின் அதிகரிப்பு காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறியுள்ளது.

    • ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது.
    • ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.


    அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.


    மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.


    ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.

    சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.

    • அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு பரிசளித்தார்
    • இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளில் விலை உயர்ந்தது பிரதமர் மோடி அளித்த பரிசுதான் என்று தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

    உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தில் உள்ளது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்த வைரைத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6,232 டாலர் மதிப்புள்ள 'தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும் மோடி பரிசாக அளித்தார்.

     

     

    மொத்தத்தில், அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. 

     

    • 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
    • கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது.

    சிறிய ரக விமானம் ஒன்று வர்த்தக கட்டிடத்தில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் காவல் துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 



    • புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.
    • காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்தவர் ஜிம்மி. மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் யூடியூபில் வீடியோ பதிவிட்டு வருகிறார். யூடியூப் பிரபலமான இவர் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டு சாதனை படைத்துள்ளார். சாகச விளையாட்டு அல்லது ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் விதமாக இவருடைய வீடியோக்கள் அமைந்திருக்கும்.

    ஒரு வீடியோவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து மிஸ்டர் பீஸ்ட் ஆடம்பரம் காட்டுவார். இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தியா பூய்சன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.

    அனைத்திலும் பிரமாண்டம் காட்டும் மிஸ்டர் பீஸ்ட், ஆரவாரம் எதுவுமின்றி காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பதிவு இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.



    • 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது.
    • உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.

    உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.

    இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

    பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும். 

    • 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.

    கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.

    அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் கூறும்போது, ஷாம்ஷத் டின் ஜப்பார் ஒரு பயங்கரவாதி. அவரது வாகனத்தில் ஐ.எஸ் கொடி இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் ராணுவத்தில் ஐ.டி நிபுணராக பணியாற்றினார். அவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

    தற்போது ஹூஸ்டனில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்த தாக்குதலில் ஜப்பாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

    அவர் தனியாக செயல் பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பயங்கர வாத செயலாக கருதி விசாரித்து வருகிறோம் என்றார்.

    இதற்கிடையே ஜப்பார், ஜ,எஸ் அமைப்பில் சேர முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோக்களில் ஜப்பார் தனது விவாகரத்து குறித்து தெரிவித்துள்ளார்.

    அப்போது தனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டதாகவும் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஜ.எஸ் அமைப்பில் இணைய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

    • இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    லாஸ் வேகாஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் தீ பிடித்து வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலீசார் கூறுகையில், தீவிபத்துக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று ஹோட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. அதன் பின்பு, திடீரென பட்டாசு வெடிப்பதைப் போல வெடித்து தீப்பிடித்து எரிகிறது என்று கூறினர்.

    இதற்கு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- டெஸ்லா சைபர்ட்ரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் இது வாகன தீவிபத்துக்கு தொடர்பில்லை என்று கூறி உள்ளார்.

    இதனிடையே, வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

    புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

     

    சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார், மேலும் போலீசார் திருப்பிச் சுட்டனர் என்று CBS செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி குறித்த தகவல் வெளியாகவில்லை.

    சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஆர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும். போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது. 

    • வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள்.

    அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

    • போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்
    • இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.

    ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். எனவே மொத்தம் ஆறு குழந்தைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.

    ஆனலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே இதுநாள்வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 6 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர்.

    ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 10 வருடங்களாக காதலித்து 2014 இல் திருமணம் செய்த இவர்களுக்கு போரில் அகதிகளான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது
    • அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானமும் தனியார் ஜெட் விமானமும் நூலிழையில் மோதாமல் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை, விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் ஜெட் விமானம் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

    மாலை 4:30 மணியளவில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் புறப்பட நகர்ந்து கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் புறப்பட்ட அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.

    ஆனால் தக்க சமயத்தில் எச்சரிக்கையுடன் தனியார் ஜெட் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்களும் நெருங்கிய பரபரப்பான தருணத்தின் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

     கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கொரியாவில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கோரமான விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×