என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அதற்கு முன்னரே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்.
    • தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது குறித்து விளக்கினார்.

    இஸ்ரேல் - ஈரான் மோதலுக்குத் தீர்வாக போர் நிறுத்தத்தை முன்மொழியவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீடித்த தீர்வு மூலம் மோதலை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதே தனது முயற்சி" என்று கூறினார்.

    ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்கா இராணுவத்தை அனுப்புமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கு முன்னரே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்; அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற மாட்டார்கள்" என்று எச்சரித்தார்.

    தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார்.

    முன்னதாக, இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் தலைமையகத்தை ஈரான் தாக்கியது.

    மேலும், ஈரான் நான்காவது இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. இந்த விமானம் தப்ரிஸில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.

    • ரொனால்டோ ஜெர்சியை டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
    • இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.

    அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு" என்று ரொனால்டோ எழுதியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. 

    • நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் பிரான்ஸ் அதிபருக்கு தெரியாது
    • இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.

    ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், "விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்" என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • குடியேற்ற கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைதுசெய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 7-ம் தேதி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின் அவர்களை நாடு கடத்தும் முயற்சி துரிதமாக நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி ஒடுக்க முயன்றனர்.

    இதனையடுத்து டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். அப்போது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. எனவே போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டம் மேலும் தீவிரம் அடைவதால் இதனை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் அங்கு ராணுவத்தைக் குவித்துள்ளது.

    பொதுவாக, தேசிய நெருக்கடி ஏற்படும்போதுதான் மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவர். ஆனால் தற்போது மாகாண கவர்னரின் அனுமதியின்றி டிரம்ப் அங்கு ராணுவத்தை நிறுத்தி உள்ளார். இதனை எதிர்த்து கலிபோர்னியா மாகாண கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2வது இடத்தை இழந்தார்.
    • டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் போர்ப்ஸ் நிறுவனம், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ.வும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 407.3 பில்லியன் டாலர்.

    இரண்டாவது இடத்திற்கு ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முன்னேறி உள்ளார். அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வு காரணமாக கூடுதலாக 26 பில்லியன் டாலர் சொத்து கிடைத்தது. இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு 243 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது.

    3வது இடத்தில் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் 239 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார்.

    இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் இம்முறை 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 226 பில்லியன் டாலர் ஆக உள்ளது.

    • ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமரிக்கா மீது ஈரானின் எந்தவொரு பதிலடி தாக்குதலுக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    "ஈரான் எந்த வகையிலும் எங்களைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப்படைகளின் முழு பலமும், வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு உங்கள் மீது பாயும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை காலை, ஈரான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. பரஸ்பர தாக்குதகள் தொடர்வதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற தனது அறிவுரையை கேட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதாவது, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தையும், தெஹ்ரான் அருகே உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் தாக்கியது.

    இதற்கிடையில், அமெரிக்கா உடனான ஆறாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்தது.

    இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரான் குடியிருப்பு கட்டிடத்தைத் தாக்கியதில் 29 குழந்தைகள் உட்பட குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர்.

    இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தொடர அச்சுறுத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்கள் கட்டுப்பாடுடன் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

    இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார். இந்த மோதல், பிராந்தியத்தில் ஒரு பெரிய போராக உருவெடுக்கும் அபாயம் குறித்து சர்வதேச கவலைகளை எழுப்பியுள்ளது.

    • அமெரிக்க ஆயுதப்படைகளின் 250வது ஆண்டு விழா வாஷிங்டனில் நடைபெறுகிறது.
    • "இராஜதந்திர பின்னடைவு" என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

    அமெரிக்க ஆயுதப்படைகளின் 250வது ஆண்டு விழாவிற்காக வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

    "இது தவறானது. எந்த வெளிநாட்டு ராணுவ தலைவர்களும் அழைக்கப்படவில்லை," என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக முனீர் அழைக்கப்பட்டதை, "இராஜதந்திர பின்னடைவு" என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சிதிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 11-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

    பால்கன்-9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவை ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விஞ்ஞானிகள் சரிசெய்ததாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது. இதனால் சுபான்ஷு சுக்லா பயணம் மேற்கொள்ளும் விண்கலம் வரும் 19-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • ஜனநாயக கட்சியின் சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, கவர்னர் டிம்.வால்ஸ் கூறுகையில், மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்கவேண்டும். தாக்குதல் நடத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மின்னசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறினார்.

    • இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
    • இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

    ஆனால் கட்டுப்பாட்டை விமானம் இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் சிறிது தூரம் ஓடியது. இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

    எனினும் இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரன்வேயை விட்டு விலகி புல்தரையில் ஓடி நின்ற விமானத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்.
    • ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று அதிகாலையில் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியறவு செயளாலர் மார்கோ ரூபியோ, "இன்றிரவு, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எடுத்தது.

    ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்.

    இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது.

    அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது" என்று ரூபியோ கூறினார். 

    ×