என் மலர்
அமெரிக்கா
- போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
வாஷிங்டன்:
வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்தக் கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானது என தகவல் வெளியானது. அந்தக் கப்பலில் ரஷிய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்
- அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷிய கச்சா எண்ணை விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால் இந்தியா அதிக வரி செலுத்துவதால் அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
- வெனிசுலா எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும்.
- அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையே வெனி சுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அந்நாட்டு எண்ணெய் வளத்தை கையாளுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்சுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வெனிசுலாவில் இருந்து 5 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை அமெரிக்கா வாங்கும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 மில்லியன் (3 கோடி) முதல் 50 மில்லியன் (5 கோடி) பேரல்கள் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். அந்த பணம் என்னால் கட்டுப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த எண்ணெய் வெனிசுலா சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு அமெரிக்கா கப்பல்துறைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்ற டிரம்ப் நினைக்கிறார் என்றும் இதனால் தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என்றும் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்று பந்தயம் காட்டினார்
- வெறும் 96 டாலருக்கு ஒப்பந்தங்களை வாங்கினார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்று ஆன்லைனில் பந்தயம் கட்டிய மர்ம நபர் ஒருவர், ஒரே நாளில் 4,10,000 டாலர் (சுமார் 3.4 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.
Polymarket என்ற பிரபல ஆன்லைன் பந்தய தளத்தில், கடந்த டிசம்பர் 27 அன்று, ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்ற பந்தயத்தின் அடிப்படையில் வெறும் 96 டாலருக்கு பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் ஒப்பந்தங்களை வாங்கினார்.
மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்த செய்தி வெளியானவுடன், அந்த நபர் கட்டிய பந்தயத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது. மதுரோவின் வீழ்ச்சி உறுதி செய்யப்பட்டவுடன், அந்த நபரின் லாபம் 4.10 லட்சம் டாலராக எகிறியது.
அமெரிக்காவின் ராணுவத் திட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்த யாரோ ஒருவர்தான் இப்படிப் பந்தயம் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
- இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வார இறுதி விடுமுறைக்காகச் சின்சினாட்டி வந்திருந்தனர். சின்சினாட்டியின் ஓஹியோ பகுதியில் உள்ள வான்ஸின் வீட்டினருகே நேற்று நள்ளிரவு திடீரென சத்தம் கேட்டது.
அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் உடனே சென்று பார்த்தனர். அப்போது வில்லியம் டிஃபோர் என்பவர் கையில் வைத்திருந்த சுத்தியலால் வீட்டின் ஜன்னல்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கினார்.
வீட்டின் 4 ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த அதிகாரிகளின் வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தினார். இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்து அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
- நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
- மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்கா அழைத்துவரப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகயின் இறக்குமதி செய்வதற்கான சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவு ஏற்படுத்தும் சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மதுரோவும் அவரது மனைவியும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்றத்தில் பேசிய மதுரோ, தான் நிரபராதி என்றும் குற்றமற்றவன் என்றும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
தொடர்ந்து, நான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபர். சர்வதேச சட்டங்களை மீறி, காரகஸில் உள்ள எனது இல்லத்திலேயே வைத்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டேன்.
என்னை ஒரு பயங்கரவாதியைப் போலவும், போதைப்பொருள் கடத்தல்காரனைப் போலவும் சித்தரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் நான் ஒரு கண்ணியமான மனிதன்.
அமெரிக்கா தனது அரசியல் லாபத்திற்காகவும், வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றவும் என் மீது இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது" என்று தெரிவித்தார். மேலும் தானே இன்னும் வெனிசுலாவின் அதிபராக இருக்கிறேன் என மதுரோ நீதிமன்றத்தில் பல முறை வலியுறுத்தினார்.
மேலும் மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். வழக்கின் விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தாக்குதலின்போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை
- சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் ஓஹியோ இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் உள்ள ஜே.டி.வான்ஸின் வீட்டில் நள்ளிரவில் நடந்த தாக்குதலின் போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரும் வீட்டின் உள்ளே நுழையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நள்ளிரவில் வீட்டில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், ஒரு நபர் ஜன்னலை சுத்தியலால் உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றதை ரகசிய சேவை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
- ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார்.
- நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரஷியா விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று எனக்கு உறுதியளித்தார். இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி கூறினார். ஆனால் இந்தியா தொடர்ந்து எண்ணை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ரஷியாவின் எண்ணெய் பிரச்சினையில் உதவா விட்டால், இந்தியா மீது நாங்கள் மேலும் வரிகளை உயர்த்து வோம்" என்று கூறினார்.
மேலும், "பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்" என மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசியுள்ளார்.
ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி டிரம்பிடம் கூறவில்லை என்றும் டிரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கும் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை.
- நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக அதிபராக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது. மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தான் டிரம்ப் இடம் நேரடியாக தொடர்புகொண்டு தான் பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.
இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.
- புதிய அரசு அமையும்வரை வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றார் டிரம்ப் .
- ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
வாஷிங்டன்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இதற்கிடையே, வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் வெனிசுலா அதிபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.
தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்களான ஜிம் மெகவர்ன் மற்றும் ஜேமி ரஸ்கின் தலைமையில், பிரமிளா ஜெயபால், ரஷீதா த்லைப் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ராவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உமர் காலித் விசாரணை ஏதுமின்றி 5 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரானது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற விதியின்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.
விசாரணையைத் தாமதப்படுத்தாமல், சர்வதேசச் சட்டங்களின்படி வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க எம்.பி.க்களும் குரல் கொடுத்துள்ளனர்.
அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சிஏஏ
2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.
ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






