என் மலர்tooltip icon

    உலகம்

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
    • நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம்.
    • ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.

    இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இந்தியாவில் 'அபய்ராய்' தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேத் முதல் இந்தியாவில் Abhayrab என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளன.

    போலியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். எனவே, அவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.

    மேலும், 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் இந்தியாவில் Abhayrab தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். 

    • "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
    • தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    நாம் ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ள நிலையில் இந்தாண்டு மண்ணை விட்டு மறைந்த ஆனால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதன்படி உலகெங்கிலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களின் தொகுப்பை காலவரிசைப்படி இங்கு பார்ப்போம். 

    ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்

    தனது அரிய வகை ரத்த பிளாஸ்மா தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), கடந்த பிப்ரவரி 17, 2025 அன்று காலமானார்.

    "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது 18 வயது முதல் 81 வயது வரை சுமார் 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

    இவரது ரத்தத்தில் இருந்த 'Anti-D' என்ற அரிய வகை ஆன்டிபாடி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது.

    2022 வரை உலகிலேயே அதிக பிளாஸ்மா தானம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்த ஹாரிசன், உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் பெற்றோரின் பார்வையில் ஒரு ஹீரோ ஆவார்.

    ஆகா கான் 

    இஸ்லாமின் ஷியா இஸ்மாயிலி பிரிவின் தலைவரான ஆகா கானும் (IV) இந்த ஆண்டு காலமானார். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல நற்காரியங்களை செய்த அவர் பிப்ரவரி 4 தனது 88வது வயதில் காலமானார்.  

     

    பழம்பெரும் பேட்மேன்

    ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், 'பேட்மேன்' கதாபாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான வால் கில்மர் (65), நிமோனியா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 1, 2025 அன்று காலமானார்.

    1984-ல் 'டாப் சீக்ரெட்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'பேட்மேன் ஃபாரெவர்' மற்றும் டாம் குரூஸுடன் 'டாப் கன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

    2014-ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்த நிலையில், தற்போது நிமோனியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான கஸ்தூரிரங்கன் (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஏப்ரல் 25, 2025 அன்று பெங்களூருவில் காலமானார்.

    1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

    ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

    இந்தியாவின் Tiger Man.. வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர்

    "இந்தியாவின் புலி மனிதன்" (Tiger Man of India) என்று போற்றப்படும் பிரபல வனவிலங்கு ஆர்வலர் வால்மிக் தாப்பர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக மே 31, 2025 அன்று டெல்லியில் காலமானார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் பாதுகாப்புக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1988-ல் ரந்தம்போர் அறக்கட்டளையை நிறுவி புலி வேட்டையைத் தடுக்கவும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் போராடினார்.

    வனவிலங்குகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்ட பல அரசு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

    10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை.. மனிதநேய மருத்துவர் ரத்தினம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் (96), வயது முதிர்வு காரணமாக ஜூன் 7, 2025 அன்று காலமானார்.

    1959-ல் தனது மருத்துவப் பணியைத் தொடங்கிய இவர், ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கும், பின்னர் தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்து வந்ததால், மக்கள் மத்தியில் "பத்து ரூபாய் மருத்துவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான டியோகோ ஜோட்டா (28), ஸ்பெயினில் கடந்த ஜூலை 3 நடந்த கார் விபத்தில் தனது சகோதரருடன் உயிரிழந்தது கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய ஜோட்டாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும். ரொனால்டோ அவரது மறைவுக்கு உருக்கான இரங்கலை தெரிவித்திருந்தார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பௌஜா சிங்

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான பௌஜா சிங் (114), கடந்த ஜூலை 14, 2025 அன்று பஞ்சாபில் நடந்த சாலை விபத்தில் காலமானார்.

    தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்று அழைக்கப்படும் இவர், தனது 89-வது வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கி உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.

    மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன்

    உலகின் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் (71), மாரடைப்பு காரணமாக ஜூலை 24, 2025 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் காலமானார்.

    90-களில் மல்யுத்தப் போட்டிகளை உலக அளவில் பிரபலமாக்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. தனது கம்பீரமான தோற்றம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் தேசபக்தி மிக்க விளம்பரங்கள் மூலம் '90ஸ் கிட்ஸ்'களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    உலகெங்கும் மக்களின் அன்பைப் பெற்ற நீதிபதி ஃபிராங் கேப்ரியோ

    அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88), கணையப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 21, 2025 அன்று காலமானார்.

    "Caught in Providence" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற இவர், போக்குவரத்து விதிகளை மீறியவர்களை விசாரிக்கும்போது காட்டிய அதீத மனிதாபிமானத்தால் உலகின் மிகவும் கனிவான நீதிபதி என்று போற்றப்பட்டார்.

    தண்டனை வழங்குவது மட்டுமே நீதியல்ல, குற்றம் செய்தவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கருணை காட்டுவதும் நீதியே என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இவர்.

     

    ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி

    ரெடி-டு-வேர் ஃபேஷனில் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி, இந்த ஆண்டு செப்டம்பரில் தனது 91 வயதில் காலமானார்.

    கொரோனா போராளி பீலா வெங்கடேசன்

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் கடந்த செப்டம்பர் 25 அன்று காலமானார்.


    ஜேன் குடால்

    உலகப் புகழ்பெற்ற சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் இந்த ஆண்டு அக்டோபர் 1, தனது 91வது வயதில் காலமானார். தனது 60 ஆண்டுகால ஆய்வின் மூலம், சிம்பன்சிகளின் புத்திசாலித்தனத்தை அவர் நிரூபித்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

     இந்திய விளம்பரங்களின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே

    இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவான் என்று போற்றப்படும் பியூஷ் பாண்டே (70), உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று காலமானார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'ஓகில்வி' (Ogilvy) நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஃபெவிகால், காட்பரி, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற 90-களின் மறக்க முடியாத பல ஐகானிக் விளம்பரங்களை உருவாக்கியவர். விளம்பர உலகில் இந்தியத் தன்மையையும், நகைச்சுவையையும் புகுத்திய இவரது சிறந்த பணிக்காக 2016-ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    தாய்லாந்தின் ராஜமாதா

    தாய்லாந்து நாட்டின் ராஜமாதா சிரிகிட், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று தனது 93-வது வயதில் காலமானார். தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான இவர், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.

    ரத்தத் தொற்று காரணமாகப் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரது உயிர் பிரிந்தது. தாய்லாந்தில் இவரது பிறந்தநாள் 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்துஜா சாம்ராஜ்யத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா (85), நவம்பர் 3, 2025 அன்று லண்டனில் காலமானார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இரண்டாமவரான இவர், 2023-ல் தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் இந்துஜாவின் மறைவுக்குப் பிறகு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    அசோக் லேலண்ட் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்துஜா குழுமத்தை ஆட்டோமொபைல், வங்கி, தொழில்நுட்பம் என 11 துறைகளில் விரிவுபடுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், இவரது குடும்பம் பிரிட்டனின் மிகவும் செல்வந்தக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன்

    டிஎன்ஏவின் (DNA) 'இரட்டை ஹெலிக்ஸ்' கட்டமைப்பைக் கண்டறிந்த உலகப்புகழ் பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97), நவம்பர் 6, 2025 அன்று நியூயார்க்கில் காலமானார்.

    1953-ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து இவர் வெளியிட்ட டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த ஆய்வு, உயிரினங்களின் பரம்பரைத் தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியதுடன், நவீன மருத்துவ மற்றும் தடயவியல் அறிவியலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

    இந்த வரலாற்றுச் சாதனைக்காக 1962-ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனை உருவாக்கிய ஜாம்பவான் டான் மெக்ராத்

    உலகப்புகழ் பெற்ற 'தி சிம்ப்சன்ஸ்' (The Simpsons) கார்ட்டூன் தொடரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான டான் மெக்ராத் (61), பக்கவாத பாதிப்பு காரணமாக நவம்பர் 14, 2025 அன்று காலமானார்.

    1997-ல் வெளியான 'ஹோமர்'ஸ் போபியா' (Homer's Phobia) என்ற புகழ்பெற்ற எபிசோடுக்காக இவர் 'எம்மி' விருது வென்றவர்.

    90-களில் தொடங்கி இன்றுவரை உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இத்தொடரின் வளர்ச்சிக்கு மெக்ராத்தின் எழுத்துக்கள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

    ஈரோடு தமிழன்பன் - ஈடுசெய்ய முடியாத இழப்பு

    தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் (92), வயது மூப்பு காரணமாக நவம்பர் 22, 2025 அன்று காலமானார்.

    மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர், பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய பெருமைக்குரியவர்.

    செய்தி வாசிப்பாளர், பேராசிரியர் எனப் பல தளங்களில் பணியாற்றிய இவர், 'சாகித்ய அகாதெமி', 'கலைமாமணி' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    துல்சா படுகொலை: அமெரிக்க நிறவெறியின் சாட்சி

    அமெரிக்க வரலாற்றின் கருப்பு அத்தியாயமான 1921-ம் ஆண்டு 'துல்சா' (Tulsa) இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களில் மிக மூத்தவரான வயோலா பிளெட்சர் (111), நவம்பர் 24, 2025 அன்று காலமானார்.

    தனது 7-வது வயதில் அரங்கேறிய அந்த கோரமான வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டதையும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையும் நேரில் கண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்த நீதிக்காகப் போராடினார். நிறவெறியின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துரைத்த சாட்சியாக பிளெட்சர் திகழ்ந்தார்.

    சென்னையின் பறவை மனிதர் ஜோசப் சேகர்

    சென்னையின் "பறவை மனிதர்" என்று அன்போடு அழைக்கப்படும் ஜோசப் சேகர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக டிசம்பர் 10, 2025 அன்று காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனது வீட்டின் மாடியில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை ஒரு தவமாகவே செய்து வந்தார்.

    தொடக்கத்தில் "கேமரா ஹவுஸ் சேகர்" என்று அறியப்பட்ட இவர், பின்னாளில் பல்லாயிரக்கணக்கான கிளிகளுடனான தனது பிணைப்பால் "பறவை மனிதர்" என்று உலகப் புகழ் பெற்றார்.

    பதவியை உதறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல்  

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 11, 2025 அன்று மகாராஷ்டிராவின் லத்தூரில் காலமானார்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக உயரமான சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்:

    உலகின் மிக உயரமான சிலையான, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் "ஒற்றுமை சிலை"யை (Statue of Unity) வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வி. சுதார் (100), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 17, 2025 அன்று காலமானார்.

    மகாராஷ்டிராவின் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது அபாரத் திறமையால் இந்தியாவின் தலைசிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது அரிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.    

    • பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 விமானங்கள் தாமதமாகி உள்ளன. நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

    நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக ‘ராஸ்காஸ்மோஸ்’ உள்ளது.
    • நிலாவில் அணுமின் நிலையத்தை அமைக்க ராஸ்காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக 'ராஸ்காஸ்மோஸ்' உள்ளது. 2036-ம் ஆண்டுக்குள் பூமியின் இயற்கையான துணைக்கோளான நிலாவில் அணுமின் நிலையத்தை அமைக்க ராஸ்காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அடித்தளமாக இருக்கும் என ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

    • ஐ.எஸ். அமைப்பை வேரறுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ராணுவத்தினர் அந்த நாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    ஈராக்கில் தனிநாடு கோரி போராடி வரும் ஐ.எஸ். அமைப்பு உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த ஐ.எஸ். அமைப்பை வேரறுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புத்தாண்டு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அந்தநாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அந்த நாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 115 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • மலேசியாவில் 2009 முதல் 2018 வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக்.
    • இவர்மீது பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில், 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக் (72). இவர் தன் பதவிக்காலத்தில், 1 எம்.டி.பி. எனப்படும், 'ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

    இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

    • மிஷிமா நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
    • இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர் நேற்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய ஊழியரை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஷியா- உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி.
    • 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்து, விவாதம் நடைபெற்று வருகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புளோரிடாவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் பாதுகாப்பை உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டிரம்பின் பரிந்துரையில் 90 சதவீதம் தயாராகிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

    • டமாஸ்கஸ் தேவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
    • தற்போது வெள்ளிக்கிழமை தொழுகையை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஏராளமானோர் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்தனர்.

    சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலவைட் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிரியாவில் இஸ்லாமிஸ்ட் அதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடந்த 2வது பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இமாம் அலி பின் அபி தலிப் மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சிரியாவின் உள்நாட்டுப் போரின்போது, ஹோம்ஸ் நகரம் கடுமையான மதவாத வன்முறையை எதிர்கொண்டது.

    • 11.1 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல்.
    • சீனாவை தூண்டும் எந்தவொரு செயலுக்கும் உறுதியா பதிலடி கொடுக்கப்படும் என சீனா உறுதி.

    தைவானுக்கு 11.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சீனாவை ஆத்திரமூட்டச் செய்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா அதிரடி தடை விதித்துள்ளது.

    அத்துடன் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தைவான் விவகாரத்தில் சீனாவை தூண்டிவிடும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    தைவான் சீனாவின் பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 அமெரிக்க ராணுவம் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் 10 சீனியர் நிர்வாகிகள் ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.

    • இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார்.
    • இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப்பட்டதையடுத்து போராட்டம்- வன்முறை வெடித்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமான மாணவர்கள் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.

    இதையடுத்து இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார். மேலும் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ராஜ்பாரி மாவட்டம் பாங்ஷா பகுதியில் 29 வயதான அம்ரித் மொண்டல் என்ற சாம்ராட் என்பவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டார்.

    இதற்கிடையே அம்ரித் மொண்டல் கொலைக்கு மதம் காரணம் அல்ல என்று வங்காளதேச இடைக்கால அரசு தெரிவித்து உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவம் மதம் தொடர்பானது அல்ல என்றும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்பு டையது என்றும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே போலீசார் கூறும்போது,"அம்ரித் மொண்டல் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவர் சாம்ராட் பஹினி என்ற குற்ற கும்பலின் தலைவராக செயல்பட்டார்.

    அவர் தனது சொந்த கிராமமான ஹொசென் டங்காவில் ஒருவரது வீட்டுக்கு தனது கூட்டாளி களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது கிராமத்தினர் திரண்டு வந்து அக்கும்பலை தாக்கினர். இதில் அம்ரித் மொண்டல் மட்டும் கிராம மக்களிடம் சிக்கி கொண் டார். அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். போலீசார் அங்கு சென்று அம்ரித் மொண்டலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன "என்றனர்.

    ×