என் மலர்
உலகம்
- தெற்கு சூடானில் கடந்த 17-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.
- சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
ஜூபா:
சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
இதற்கிடையே, கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன. தெற்கு சூடானில் கடந்த 17ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.
இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி 90 நாள் வரை நீட்டிக்கக் கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- இந்த உத்தரவு அமெரிக்காவில் பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால், "இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது. ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 'அமெரிக்க குடியுரிமை' கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
நண்பர்கள் அல்லது சாலையில் செல்லும் பொது மக்களிடையே 'பிராங்க்' செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பிலிப்பைன்சை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடையில் அமர்ந்து கொண்டு தனது உதடுகள் மீது கம் (பசை) ஒட்டி விளையாடுகிறார். விளையாட்டுத்தனமாக அவர் அந்த செயலை செய்த போது பசை இறுக்கமாக உதடுகளில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த வாலிபர் வாயை திறக்க முயற்சித்த போது அவரால் திறக்க முடியவில்லை.
இதனால் அவர் அழுது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அதைப்பார்த்து அவரது நண்பர்கள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், வாலிபர் உரிய பாடத்தை கற்று கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் என பதிவிட்டார்.
- 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
- புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஏற்பாடு.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1000 ராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பணியில் உள்ள 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
- எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
- டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இதையொட்டி, டொனால்டு டிரம்ப் பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவை ஒட்டி, எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
நாஜி சல்யூட் அடித்தது, தனது மகன் எக்ஸ்-ஐ மேடைக்கு அழைத்து வந்தது என எலான் மஸ்க்-இன் பல்வேறு காரணங்களுக்காக பேசப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் எலான் மஸ்க்-இன் ரகசிய காதலி கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உடன் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஷிவோன் சிலிஸ் டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஷிவோன் மற்றும் எலான் இடையிலான உறவு பற்றி தெளிவான தகவல்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். சமீபத்திய இரவு விருந்தில் கலந்து கொண்ட ஷிவோன் எலிஸ் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
எலான் மஸ்க் மட்டுமின்றி இரவு விருந்தில் கலந்து கொண்ட ஜெஃப் பெசோஸ் மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் லாரென் சான்செஸ், இவாங்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடனும் ஷிவோன் எலிஸ் உரையாடினார். இத்தனை பெரும் நிகழ்வில் ஷிவோன் எலிஸ் பொதுப்படையாக கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பிளாக்-டை நிகழ்வில் ஷிவோன் கலந்து கொண்டார். எனினும், அவர் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்தார். இவரது மகள் அஸ்யூர் எலான் மஸ்க் உடன் நிகழ்வில் தோன்றினார்.
- சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.
மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது.
- மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது.
சியோல்:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கடந்த 29-ந்தேதி தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. விமான சிப்பந்திகள் உள்பட 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓடுதளத்தில் உரசியவாறு அங்கே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது. இந்த விபத்தில் 179 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விமான விபத்துக்கு விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவரும் காரணம் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 179 பேரை உயிரை குடித்த அந்த சுவரை உடனடியாக இடித்து தகர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
- சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்றுவீச்சு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.
மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனால் அந்த நாட்டின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
- கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர்.
- டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றார். வழக்கமாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா என்பது வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பார்வையிடலாம்.
ஆனால் இந்த முறை கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜனாதிபதி பதவி ஏற்பு விழா பாராளுமன்ற கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நேரலையில் பார்க்குமாறு டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அமெரிக்காவில் 2 கோடியே 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு டிரம்ப் முதன் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியை 3 கோடியே 6 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும் நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில், போதைப்பொருள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ரகசிய வலைத்தளமான சில்க் ரோட்டின் நிறுவனர் ரோஸ் உல்ப்ரிசட்டுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ரோஸுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவதில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று ரோசின் தாயாரிடம் கூறினேன். அவரை குற்றவாளியாக்க வேலை செய்தவர்கள், எனக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அனைத்து கூட்டாட்சி பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பவும், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கவும் டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஆரக்கிள், சாப்ட் பேங்க் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்படும் ஒரு புதிய நிறுவனத்தின் மூலம் செயற்கை தொழில் நுட்ப உள்கட்டமைப்பில் 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரத்தில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பு நீக்கப்பட்டது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் ஹாரிசன் பீல்ட்ஸ் கூறுகையில், வலைதளத்தின் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புப் பகுதியை மீண்டும் ஆன்லைனில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சில மாற்றங்களுக்கு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோல் ஸ்பானிஷ் பதிப்பை டிரம்ப் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருகிறது.
- பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது.
புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சம்பவ இடத்தில் தண்ணீர் மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளை தீயில் ஊற்றிக்கொண்டிருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது.
- இதில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டாவோஸ் சென்றுள்ளார்.
டாவோஸ்:
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை நேற்று சந்தித்தார்.
பில்கேட்சுடனான சந்திப்பைத் தவிர, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் AI மையம் நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் நாயுடு செயல்பட்டு வருகிறார்.
யுனிலீவர், பெட்ரோனாஸ், கூகுள் கிளவுட், பெப்சி மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் முதல் மந்திரி நாயுடு சந்திக்க உள்ளார்.
உச்சி மாநாட்டின் இடையில் பில்கேட்ஸ் சந்தித்த இரு இந்திய தலைவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
- லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெய்ரூட்:
ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாதி, தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது.
குடும்ப பிரச்சனையால் இந்தக் கொலை நடந்துள்ளது என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.






