என் மலர்
உலகம்
- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது.
- இந்த தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
பெர்லின்:
ஜெர்மனியின் பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு பெரியவர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெற்றது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவரை கைதுசெய்த போலீசார், வேறு யாருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
- விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த திங்கள் கிழமை பதவியேற்றுக்கொண்டார். டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகுவதாக அறிவித்தார்.
அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
ஆனால் எக்ஸ் பக்கத்தில் தனது பதவி விலகலை அறிவித்த விவேக் ராமசாமி, 'எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு அவர் போட்டியிட உள்ளார் என்றும் அதனால் பதவி விலகினார் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் DODGE இன் மற்றொரு தலைவர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை அந்த பதவியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசா பின்னணியில் விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த டிசம்பரில் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்க கலாச்சாரம் சிறப்பானவற்றை விட, அற்பமானவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து [H-1B விசா மூலம்] ஆட்களை வேலைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இது டிரம்பின் குடியரசு கட்சி பெரும்புள்ளிகளிடையேயும், எலான் மஸ்க் தரப்பிலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதையே காரணம் காட்டி டிரம்பிடம் கூறி விவேக் ராமசாமியை எலான் மஸ்க் வெளியேற செய்துள்ளார் என்று அமெரிக்காவின் பிரபல பொலிட்டிக்கோ [politico] இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களை நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- அதிபராக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
- தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு ரஷியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள்தொகை கொண்டுள்ள சீனா உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காவை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது" என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே ரஷியா, சீனாவை டிரம்ப் விமர்சித்துள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு சீனா - ரஷியாவின் உறவுகளை பலப்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக ரஷிய அதிபர் புதின் உடன் நேற்று உரையாற்றியுள்ளார்.
அந்த உரையாடலில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு ரஷியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது
- அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவரது கடந்த 2016-20 ஆட்சிக் காலத்தை போலவே தற்போதும் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் புலம்பெயர்ந்து அங்கு குடியேறியுள்ள பல நாட்டவரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டறிந்து திருப்பி பெறுவதாக இந்திய அரசு டொனால்டு டிரம்பின் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி மற்றும் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது என்றும் நாடு கடத்தப்பட உள்ள அவர்களை இந்திய அரசு சரிபார்த்து திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது.
திங்களன்று தனது பதவியேற்பின்போது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும்.
- ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்ற மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.
அதேபோல் மார்கோ ரூபியோவை ஆஸ்திரேலியா மந்திரி பென்னி வோங், ஜப்பான் மந்திரி இவாயா தகேஷி ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனில் பயனுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பெரியதாக சிந்திப்பது, நிகழ்ச்சி நிரலை ஆழப்படுத்துவது மற்றும் எங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.
இன்றைய சந்திப்பு, நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலகில், குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும் என்பதற்கான தெளிவான செய்தியை அனுப்புகிறது என்றார்.
- 12 தளங்களைக் கொண்ட அந்த ஓட்டல் முழுவதும் தீ பரவியது.
- மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தளங்களைக் கொண்ட அந்த ஓட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்தது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
- அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகல், பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது மன்னிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
மேலும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, எச்-1பி விசா தொடர்பாக நடக்கும் விவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-
எச்-1பி விசா தொடர்பான விவாதத்தின் இரு பக்கங்களையும் நான் விரும்புகிறேன். ஆனால் நம் நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களையும் நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை. நான் என்ஜினீயர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து மட்டங்களில் உள்ளவர்களைப் பற்றியும் பேசுகிறேன்.
திறமையான மக்கள் நம் நாட்டிற்குள் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் எச்-1பி திட்டத்தை நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவேன் என்றார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும். கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி பிப்ரவரி 1-ந்தேதி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
- வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஜனநாயகக் கட்சிகள் தலைமை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறப்புரிமை குடியுரிமையை திரும்பப் பெறும் முயற்சியை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.
இவ்வாறு செய்வதன் மூலம் டிரம்ப்-இன் எதிரிகள் நீதிமன்றத்தில் அவரது நிகழ்ச்சி நிரலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பிறகு, குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்களின் குடியுரிமையை அங்கீகரிக்க மறுக்குமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
கொலம்பியா மாவட்டம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரத்துடன் இணைந்து 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாநிலங்கள், டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை மீறியதாக பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் குடியிரிமை குறித்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் அவரது நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற போராட்டங்களை எதிர்கொள்ள துவங்கியுள்ளது.
டிரம்ப்-இன் உத்தரவுகள் அமலுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிக குழந்தைகளுக்கு முதல் முறையாக குடியுரிமை பெறும் உரிமை மறுக்கப்படும் என்று அட்டார்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளி மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
- பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
- ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காசாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லாரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லாரிகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லாரிகளை விட கணிசமாக அதிகம் ஆகும்.
மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான துணை ஐ.நா. ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் முஹன்னத் ஹாடி நேற்று (செவ்வாய் கிழமை) காசாவில் இருந்து ஜெருசலேமுக்கு திரும்பினார். அப்போது ஐ.நா. செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி, "பாலஸ்தீனியர்கள் தெருக்களில் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவது, சிலர் வீடு திரும்புவது, சிலர் சாலைகளை சுத்தம் செய்ய தொடங்குவதை பார்க்கும் போது கடந்த 35 ஆண்டுகால வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐ.நா. உலக உணவுத் திட்டத்தால் நடத்தப்படும் பொது சமையலறை, பிற இடங்களில் குடும்பங்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர்கள் அனைவரும் மனிதாபிமான உதவி தேவை என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்குச் செல்லவும், வேலை செய்யவும், பணம் சம்பாதிக்கவும் அவர்கள் விரும்புவதாக கூறினார்.
"மனிதாபிமான உதவியைச் சார்ந்து இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை மீண்டும் தொடங்குவது குறித்தும், ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களுக்கு தங்குமிடம், போர்வைகள் மற்றும் புதிய ஆடைகள் தேவைப்படுவது குறித்தும் பேசினர். வரும் நாட்களில் கூடாரங்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
- ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும்.
- பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா வரவில்லை என்றால் ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
"உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷியா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார்" என்று டிரம்ப் கூறினார்.
புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன," என்று தெரிவித்தார்.
- கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது.
- விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பீஜிங்:
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் பென் வெய்கியு (வயது 62). இவர் கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றார். அந்த நேரத்தில் மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை கோர்ட்டு தற்போது நிறைவேற்றி உள்ளது.
- கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர்.
- தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
பொகோடா:
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
அந்தவகையில் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.






