என் மலர்
உலகம்
- மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டும்ம் என்று கோரியிருந்தார்.
- நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை.
அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். மேலும், ஊழியர்கள் திங்கள் கிழமைக்குள் தங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், ஒருவார கால பணி குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், மஸ்க் கொடுத்த காலக்கெடு அமலில் தான் உள்ளது என்றும் ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடியாது என்று அரசின் மனிதவள துறையாக செயல்படும் நிர்வாக அலுவலகம் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு துறை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் என்னென்ன என்பதை விவரிக்க வேண்டும் என்று நிர்வாக அலுவலகம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய அரசு ஊழியர்களை என்ன செய்வதென்றும் அவற்றை எப்படி ஆய்வு செய்வது என்பது குறித்து நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது.
- தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
- தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ரெனால்ட்ஸ் (வயது 79). அவர் தனது மனைவி பார்பி (75) உடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் குடியேறினார்.
இந்த தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையே தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த தம்பதியினர் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். இதன்மூலம் ஏராளமான பெண்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இருவரும் தற்போது தலிபான்களால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
- அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.
இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.
இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாட்டில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும்
ஆப்கனிஸ்தானில் 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.

'ரேடியோ பேகம்' தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.
தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிக்கையில், 'ரேடியோ பேகம்' செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.
பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
- ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
- எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.
ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(சிஎஸ்யு/சிடியு) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.
நேற்று (பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகலின்படி ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி(ஏ.எப்.டி) 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம் இது.
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
- வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது.
அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடையை வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை அதிபர் டிரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- QR குறியீடுகளை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது
- இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் திடீரென தோன்றிய மர்மமான QR குறியீடுகள் கடந்த சில மாதமாக ஒரு பெரும் புதிராக மக்களை பீதியில் ஆழ்த்தின.
கடந்த டிசம்பரில் அங்கு மர்மமான முறையில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்டிக்கர்களை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது வினோதமான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் மியூனிக்கில் உள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.
சிலர் இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், மற்றவர்கள் இது சில குறும்புக்காரர்களின் செயல் என்றும் கருதினர். கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப், இதை மிகவும் விசித்திரமான சம்பவம் என்றும், இந்த ஸ்டிக்கர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.

கல்லறைகளில் இருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
இறுதியில், ஒரு உள்ளூர் தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.
அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்பட உள்ளது என்பதை அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது.

இந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஆல்ஃபிரட் ஜான்கர் பேசுகையில், எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது, அனைத்து வேலைகளும் முறையாக செய்யப்பட வேண்டும்.
கல்லறைகளைப் பழுதுபார்ப்பதற்கு கற்களை அகற்றி, சுத்தம் செய்து, பின்னர் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று விளக்கினார்.
- அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் போப் பிரான்சிஸ்-க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் போதிலும், நேற்றிரவு முதல் அவருக்கு சுவாச பிரச்சினை மேலும் அதிகரிக்கவில்லை என்று வாடிகன் தெரிவித்து இருக்கிறது. போப் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
- கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது
1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி, 25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.
இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது.
- ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
- இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை எதிர்த்து சண்டையிட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர்.
நான்கு மாதங்கள் வரை தாக்குதல் தொடர்ந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், உயிரிழந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து ஹசன் நஸ்ரல்லாவுக்கு பெய்ரூட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோர் பெய்ரூட்டில் கூடியிருந்தனர். உயிரிழந்த நஸ்ரலாவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில், இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.
இறுதி சடங்கில் பொது மக்கள் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்தும் கோஷங்களை எழுப்பிய நிலையில், போர் விமானங்களின் சத்தத்தால் மக்களின் கோஷங்கள் கேட்க முடியாத நிலை உருவானது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோக்களில் இஸ்ரேல் வான்படைக்கு சொந்தமான நான்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் இறுதி சடங்கு நடைபெற்ற இடத்தின் மேல்பரப்பில் வட்டமடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று ஹசன் நஸ்ரல்லாவுக்கு இறுதி சடங்கு. உலகம் இன்று சிறந்த இடமாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள கேமிலி சமௌன் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், இறுதி சடங்கு தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்த மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
- நைஜீரியாவில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் மோதியது.
- இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
நைஜீரிய நாட்டின் நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அந்த பஸ் முந்த முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
- இதைத் தொடர்ந்து அந்த விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி செல்லும் தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.
காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது.. பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தாலியின் ரோம் நகருக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.
இதுதொடர்பாக, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.






