என் மலர்
உலகம்
- மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
வாஷிங்டன்:
குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு வாஷிங்டனில் இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா சார்பில் மார்கோ ரூபியோ, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் சார்பில் வெளியுறவு மந்திரி டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரியும் கலந்து கொண்டனர்.
- கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
- ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தற்போதைய தொலைபேசி உரையாடல் எதிரொலியாக பிரதமருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஷினவத்ரா கூறுகையில் "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.
நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளார்.
- டிரம்பின் வரி மசோதாவுக்கு எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
- புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், "அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார். ஆனால் EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன். இது எலான் மஸ்க்கிற்கும் தெரியும்.
வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்
- உணவகத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காசா நகரில் உள்ள அல்-பக்கா கபே உணவகத்தில் உணவுக்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் காத்திருந்தனர். அப்போது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 23 பேர் பலியானார்கள். அதேபோல் தெற்கு காசாவில் உணவு தேடி வந்த 11 பேரை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 74 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வரி மற்றும் செலவு மசோதா, வரலாற்றில் மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
- இந்த பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து எலான் மஸ்க் தனது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "வரி மற்றும் செலவு மசோதா, வரலாற்றில் மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த மசோதாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த பூமியில் செய்யும் கடைசி விஷயம் இதுவாக இருந்தால் அடுத்த ஆண்டு தங்கள் முதன்மைத் தேர்தலை இழப்பார்கள்.
இந்த பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும். மக்களுக்கு உண்மையில் ஒரு குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நமது நாட்டிற்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை. அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
ஏற்கனவே அமெரிக்க கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 அணுசக்தி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.
- சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளது.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் 2 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் போர்டோ நிலத்தடி அணு நிலையம் அமைந்துள்ள மலை பகுதியில் பல பணியாளர்கள் இருப்பதை காட்டுகிறது.
மேலும் மலை முகட்டுக்குக் கீழே பல வாகனங்கள் நிலத்தடி அணு நிலைய வளாகத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளது.
- இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
- இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.
பீஜிங்:
சீனாவில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், சீன மந்திரி டோங் ஜூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்ச திட்டங்களை ராஜ்நாத்சிங் பரிந்துரைத்தார்.
இந்த நிலையில் இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம் இரு தரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும். இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
சீனா-இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை சிக்கலானது. அதைத் தீர்க்க நேரம் எடுக்கும். இதில் முன்னேற்றம் என்னவென்றால் இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.
எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோ தலைத் தொடா்ந்து இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பள்ளிகள் திங்களன்று தாக்கப்பட்டன.
- நேதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்ட்டது.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது.
காசா நகரின் அல்-வஹ்தா சாலையில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, அங்கு ஒரு பெரிய வெளியேற்றம் நடத்தப்படுகிறது. 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பள்ளிகள் திங்களன்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
காசாவில் மட்டும், திங்களன்று 85 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்தவர்கள். காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இதற்கிடையில், இந்த வாரம் தொடங்கவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை, நேதன்யாகுவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விசாரணையை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
- காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.
சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.
- உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
- முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்வார்.
ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை "கடவுளின் எதிரிகள்" என்று அறிவித்துள்ளார்.
எனவே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தலைவரையோ அல்லது மர்ஜாவையோ (மத அதிகாரத்தையோ) அல்லது அரசையோ அச்சுறுத்தும் எவரும் கடவுளுக்கு எதிராகப் போரை நடத்துபவர் (முஹாரிப்) என்று அவர் கூறினார்.
ஈரானிய சட்டத்தின் கீழ், முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியவர் ஆவார்.
முஸ்லிம்கள் தங்கள் கடமையை நிறைவேற்றப் போராடும்போது ஏதேனும் கஷ்டங்களையோ அல்லது இழப்புகளையோ சந்தித்தால், அவர்கள் கடவுளின் பாதையில் போராடியதற்கான வெகுமதியைப் பெறுவார்கள் என்றும் ஷிராஸி கூறுகிறார்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த எதிரிகள் தங்கள் வார்த்தைகள் மற்றும் தவறுகளுக்கு வருத்தப்பட வைப்பது அவசியம் என்று 'ஃபத்வா'வில் கூறப்பட்டுள்ளது.
- பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்
- உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் செய்தித்தாள் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பிரதிநிதிகள் சமீபத்தில் சீன நகரமான குன்மிங்கில் சந்தித்தனர். இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் புதிய குழுவின் முக்கிய நோக்கம் என்று செய்தித்தாள் கூறியது.
சார்க் உறுப்பினர்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும்.
இந்த அமைப்பு நிறுவப்பட்டால், அது இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு பெரும்பாலும் செயல்படாமல் இருந்த சார்க்கை மாற்றும். 2014 முதல் சார்க் உச்சிமாநாடு நடத்தப்படவில்லை.
2016 உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.
வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விலகியதால், அந்த உச்சிமாநாடும் ரத்து செய்யப்பட்டது.
- விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
- அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகளின் கூற்றுப்படி, யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 441 விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.






