என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
- மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதவிர கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி நாளை முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் செல்கிறார்.
இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்!
- தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும்-வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் 'கோல்ட் ரிப்' மருந்து தயாரிக்கப்பட்டது.
- மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.
- கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர் என்று வள்ளலார் கூறினார்.
- சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது என்று வள்ளலார் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார்.
வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார். சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.
ஜாதி,மத,சமய,சாஸ்திர,கோத்திர சண்டையில் ஈடுபட்டு அலைந்து வீணாக அழிவது அழகல்ல என்றார் வள்ளலார்.வருணம், ஆசிரமம், ஆச்சாரம் இவைகள் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார் வள்ளலார்.வேதம், ஆகமம், புராண, இதிகாசம் இவைகள் சொல்கிற நெறிகள் அனைத்தும் சூது என உணர வைத்தாயே என அவர் பாடினார்
'உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே' உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
- சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்ட 12 சிற்பங்களின் தகடுகள் மொத்த எடை 24 கிலோ இதில் 281 கிராம் தங்கம் இருந்தது.
- தற்போது சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு கேரள கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்கும் பணிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. திருவாபரணம் ஆணையரின் தலைமையில், தேவசம் லஞ்ச ஒழிப்பு துறை, சபரிமலை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் தங்க கொல்லர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான வாகனத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்ட 12 சிற்பங்களின் தகடுகள் மொத்த எடை 24 கிலோ இதில் 281 கிராம் தங்கம் இருந்தது. சென்னையில் உள்ள நிறுவனத்தில் புதுப்பிக்கும் பணி செய்தபோது 10 கிராம் தங்கம் புதிதாக முலாம் பூசப்பட்டது. பின்னர், தங்கதகடுகளை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தபோது தகடுகளில் இருந்த தங்கத்தின் எடை 10 கிராம் அதிகரித்து மொத்தம் 291 கிராமாக இருந்தது. இந்த விஷயத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு மறைக்கவோ, மறுக்கவோ எதுவும் இல்லை. அதனால்தான் இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்த தேவசம் போர்டு ஐகோர்ட்டை கேட்டுள்ளது. யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தற்போது சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவை ஐகோர்ட்டு மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டு, வருகிற 17-ந் தேதி துலாமச பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது மீண்டும் நிறுவப்படும். தலைமை அர்ச்சகர் முன்னிலையில் இந்த தங்க தகடுகள் நிறுவப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளது.
- கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
- பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த மாதம் 13-ந்தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
சனிக்கிழமைகள்தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்ட அவர் அதற்கு அடுத்த வாரம் 20-ந்தேதி நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். 3-வது வாரமாக கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இன்னொரு நிர்வாகியான நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு அதுபோன்று இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தார்.
விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீசார் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர். யாரும் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது பற்றி போலீ சார் ஆய்வு செய்தனர்.
அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வைத்து தான் பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதியது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
விஜயின் பிரசார வாகனத்தின் பதிவு எண்களான டி.என்.14ஏ.எஸ்.0277 என்ற எண் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டிரைவர் பெயர் இல்லாமல் வாகன டிரைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
பி.என்.எஸ். 281 என்கிற சட்டப் பிரிவில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்றவர்களின் உயிருக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு அளித்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விஜயின் பிரசார வாகனத்தை இன்றோ அல்லது நாளையோ பறிமுதல் செய்ய உள்ளனர்.
கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை எப்போது பறிமுதல் செய்யலாம் என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கரூர் போலீசார் சென்னை வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னை மாநகர போலீசாரின் உதவியையும் கரூர் போலீசார் நாடி உள்ளனர்.
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டது.
- நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
- பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு, இந்த சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இந்த ரொக்க நடைமுறையால் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதில் வாகனங்கள் கால தாமதத்தை சந்தித்து வந்தன.
இதனைத் தவிர்க்க 'பாஸ்டேக்' கட்டண முறை கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்கள் வெகுநேரம் காத்து நிற்காமல் வேகமாக சென்று வருகின்றன. 'பாஸ்டேக்' நடைமுறைப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டாலும் இன்னும் அது முழுமையாகவில்லை. பல வாகனங்கள் இன்னும் ரொக்கமாகவே பணத்தை செலுத்துகின்றன.
எனவே பாஸ்டேக் நடைமுறையை முழுமையாக்கவும், ரொக்க நடைமுறையை தவிர்த்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த திருத்தத்தின் படி, பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் யு.பி.ஐ. மூலம் செலுத்தினால் கூடுதலாக கால்பங்கு கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும்.
உதாரணமாக, 100 ரூபாய் கட்டணம் என்றால், ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு அது ரூ.200 ஆகும். யு.பி.ஐ.யில் செலுத்துபவர்களுக்கு ரூ.125-ஆக கட்டணம் இருக்கும்.
இந்த புதிய கட்டண நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்மூலம், பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் வருடாந்திர 'பாஸ்' வைத்திருந்தால் அதிக பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுகிறது.
- ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், 7 முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண தள்ளுபடி கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்ததாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது
- போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்
கடந்த 2023-ம் ஆண்டு அக். 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதில் அளித்துள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
67 ஆயிரம் உயிர்களைக்
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்
பரிமாறிக்கொள்வதைப் போல
மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்
முதலில் பாலஸ்தீனத்திற்கு
உணவுப் பாதையைத்
திறந்துவிடுங்கள்
எலும்புக் கூடுகளுக்குள்
உயிர் ஊறட்டும்
கூடாரங்கள் மெல்ல மெல்லக்
குடில்களாகட்டும்
போர் விமானங்கள்
பறந்த வானில்
புறாக்கள் பறக்கட்டும்
சமாதானத்தை முன்னெடுத்த
அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஏற்றுக்கொண்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு
இருவருக்கும்
இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்
உலக நாடுகள் பல
ஒப்புக்கொண்ட வண்ணம்
பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்
"வெள்ளைப் பூக்கள்
உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி
அமைதிக்காக விடிகவே"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.






