என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக! - அருட்பெருஞ் ஜோதியான வள்ளலார்
    X

    கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக! - அருட்பெருஞ் ஜோதியான வள்ளலார்

    • கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர் என்று வள்ளலார் கூறினார்.
    • சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது என்று வள்ளலார் எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.

    வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார்.

    வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார். சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.

    கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.

    ஜாதி,மத,சமய,சாஸ்திர,கோத்திர சண்டையில் ஈடுபட்டு அலைந்து வீணாக அழிவது அழகல்ல என்றார் வள்ளலார்.வருணம், ஆசிரமம், ஆச்சாரம் இவைகள் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார் வள்ளலார்.வேதம், ஆகமம், புராண, இதிகாசம் இவைகள் சொல்கிற நெறிகள் அனைத்தும் சூது என உணர வைத்தாயே என அவர் பாடினார்

    'உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே' உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

    Next Story
    ×