என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் பிரான்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்சின் பெஞ்சமின் பொன்சி-ஹ்யூஜஸ் ஹெர்பர்ட் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி-போலந்தின் ஜேன் ஜிலன்ஸ்கி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
- பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்று திரும்பியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 249 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்லி மாதேவரே 61 ரன்னும், சிக்கந்தர் ராசா 58 ரன்னும் எடுத்தனர்.
அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்து இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.
- முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
- இரண்டாவது கட்டமாக 116 இந்தியர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
சண்டிகர்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.
அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இன்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையம், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
- முதலில் ஆடிய உ.பி. வாரிர்யஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்னும், உமா சேத்ரி 24 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், டாடின், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.
ஹர்லீன் தியோல், டாடின் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிபெற வைத்தது.
இறுதியில், குஜராத் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்லீன் தியோல் 34 ரன்னும், டாடின் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் 8 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் பிரான்ஸ் வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 7-6 (7-4), 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல.
- எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.
கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.
மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு. வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு" என்று பதிவிட்டுள்ளார்.
- இது படிப்புக்காக கொடுக்கின்ற நன்கொடையில் பண்ண இடம் கிடையாது.
- நன்கொடையா வர ஒவ்வொரு காசும், படிப்புக்கும், படிப்பு சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியே ஆயுதம் , கல்வியே கேடயம். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட , இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.
எந்த குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்று ஆசை பட்டோம். 20 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த இடம் கிடச்சிருக்கு.
இது படிப்புக்காக கொடுக்கின்ற நன்கொடையில் பண்ண இடம் கிடையாது. இது நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு. எனக்கு இருக்க வருமானத்தின் மூலமா பண்ண கட்டிடம்தான் இது.

நன்கொடையா வர ஒவ்வொரு காசும், படிப்புக்கும், படிப்பு சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. 10 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு நாங்கள் 700 மாணர்களிடம் மட்டும் தான் அவர்களுடைய வாழ்க்கையை தொட முடிகிறது. மாற்ற முடிகிறது. இன்னும் நிறைய அன்பு தேவைப்படுகிறது. பணம் மட்டும் இல்லாமல் உங்கள் அனைவருடைய நேரம் தேவைப்படுகிறது.
அகரம் இத்தனை ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றால் அது தன்னார்வலர்களால் தான்.
இவ்வாறு கூறினார்.
- விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள வெப் தொடர் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'.
- ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'மார்கோ'
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'காதலிக்க நேரமில்லை'
ரவிமோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை'. கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் இளம் தலைமுறைகளின் காதல், குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு அதனை சுற்றியுள்ள சிக்கல்களை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
'மார்கோ'
ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'மார்கோ'. ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஹாலிவுட் தரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக உருவானது மார்கோ திரைப்படம். இந்நிலையில் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
'தூம் தாம்'
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் யாமி கவுதம் நடித்துள்ள படம் தூம் தாம். ரிஷப் சேத் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார், லோகேஷ் தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேசவ் தார் இசையமைத்துள்ளார். சண்டையும் காதலும் கலந்த ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'
விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள வெப் தொடர் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'. இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மொத்தம் 25 எபிசோடுகளை கொண்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடர் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. முதல் மூன்று எபிசோடுகளை வெளியிட்டுள்ளன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புது எபிசோடுகள் வரும் என தெரிவித்துள்ளனர்.
'கோப்ரா காய்' சீசன் 6
ஹேடன் ஷ்லோஸ்பெர்க், ஜோஷ் ஹீல்ட் மற்றும் ஜான் ஹர்விட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொடர் 'கோப்ரா காய்' . இந்த தொடர் 6 அத்தியாயங்களை கொண்டது. அதில் 5 அத்தியாயங்களை நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இந்த தொடரின் 6 வது அத்தியாயத்தின் 3 பாகம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தற்காப்பு கலையான கராத்தே கலையை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
'மனோராஜ்யம்'
மனோராஜ்யம் என்பது ஒரு மலையாளத் திரைப்படம். ரஷீத் பரக்கல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கோவிந்த் பத்மசூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு குடும்பத் திரைப்படமாகும். இந்த படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'மை ஃபால்ட் லண்டன்'
மை பால்ட் லண்டன், என்பது ரொமாண்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமாகும். இந்த படத்தை டானி கிர்ட்வுட் மற்றும் சார்லோட் பாஸ்லர் இயக்கியுள்ளர். இப்படத்திற்கான கதையை மெலிசா ஆஸ்போர்ன் எழுதியுள்ளார். இது 2023-ம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான 'மை பால்ட்' படத்தின் தழுவலாகும். இப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.
- பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.
இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.
இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.
கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.
- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
- மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை அணிகள் மோதும் முதல் போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணி 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசயதற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






