என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.
    • புதிய அரசு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.

    முந்தைய ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது. மேலும், ரஷியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள டிரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது.

    193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த "விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின. மேலும் 65 பேர் இதில் வாக்களிக்கவில்லை.

    ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தது.

    • தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின்.
    • அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

    அதை தொடர்ந்து கவின் ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படங்களில் நடித்தார். இரண்டு திரைப்படங்களுமே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்து மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். கிஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    கவினின் 6 - வது திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகை யிட்டு பெரியார் ஆதரவு இயக்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சீமான் வீட்டு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியார் பற்றிய சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யும் வகையிலேயே அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்டமிட்டதாக போலீசில் சிக்கியவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நீலாங்கரையில் சீமான் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ), பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

    அதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக புதுக்கோட்டை இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே முழு அளவில் இயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சில வகுப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்.
    • மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ட ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. அம்மன் அர்ஜூனன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை".

    அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.

    இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் திரு. அம்மன் K. அர்ச்சுனன் அவர்களை திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது,

    தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது திர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
    • தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். 'இந்தி படிக்காதே!" என்று யாரையும் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை.

    அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டும் தொடரும். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு.

    ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக கடைபிடித்து வருகிறது தமிழ்நாடு. தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. நேற்று தங்கம் விலை சற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
    • ரஜினியை சந்திக்க வைத்த நண்பன் லோகேஷ்-க்கு நன்றி.

    தமிழ் திரையுலகில் "உறியடி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் குமார். அறிமுகமான படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்கி, நடித்த விஜய் குமார், அதன்பிறகு உறியடி 2, ஃபைட் கிளப் மற்றும் எலெக்ஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த்-இன் தீவிர ரசிகர் என்றும் அவரை பார்த்தே சினிமா மீதான ஈர்ப்பு தனக்குள் வந்ததாக விஜய் குமார் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்ததாக நடிகர் விஜய் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நான் எப்போதும் நினைத்து மகிழும் தருணம். ஒருவழியாக ரஜினிகாந்த் சாரை சகூலி திரைப்பட படப்பிடிப்பின் போது சந்தித்து, அவரிடம் வாழ்த்துக்களை பெற்றேன். லவ் யூ தலைவா. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த நண்பன் லோகேஷ் கனகராஜ்-க்கு மிகப்பெரிய நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.
    • துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற ஆணவச் செருக்குடைய பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    "கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ்முறைகள் என்றாக வேண்டும்" என்கிறார் போறிஞர் அண்ணா. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும். இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுநான் போறிஞர் அண்ணாவின் பார்வை.

    பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய புரட்சித் தலைவி அம்மாவிற்கு என்றென்றும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. அம்மா அவர்களே கூறியிருக்கிறார். "அரசியல் வாலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்துவிட்டு, அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம்," என்று என்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டுப் பேசியவர் புரட்சித் தலைவி அம்மா.

    மேலும் "மிகச் சிறிய பொறுப்புகளில், சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்கி உள்ளார்கள். பின்னர் அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு, இயக்கத்தின்பால் அவர்களுக்குள்ள விசுவாசம், தலைமையிடம் அவர்கள் கொண்டுள்ள பற்று, இவற்றின் காரணமாக அவர்கள் படிப்படியாக உயர்ந்துள்ளார்கள்." என்று அம்மா கூறியிருக்கிறார்கள். அம்மாவின் வாக்கு தெய்வ வாக்கு இதனை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

    ஒரு விதை வளருகிறது என்ற சொன்னால். அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல், அந்த மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற ஆணவச் செருக்குடைய பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சி என்பது நிச்சயம்.

    "எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை" என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அழியிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று.

    "பொறுத்தார் பூமியாள்வார்" என்று சொல்வார்கள். எனவே, 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் வீழும். நய வஞ்சகம் நசுக்கப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருவாடு மீனாகாது. கறந்த பால்மடி புகாது. நய வஞ்சகம் வெற்றி பெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    மறுப்பக்கம் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக அந்த அணி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தான் தோல்வி குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஆம், என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை. யாராக இருந்தாலும் நல்ல போட்டி, கடுமையான போட்டியை பார்க்கவே விரும்புவர். ஆம், நமக்கு நம் சொந்த நாட்டு அணி வெற்றி பெறவே விருப்பம். ஆனால், இன்று நான் இந்தப் போட்டியால் முற்றிலுமாக ஏமாற்றமடைந்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு போட்டி கூட அப்படியில்லை."

    "டாஸ் தவிர்த்து, வேறு எதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? நீங்கள் எங்கள் மனங்களை கூட வெல்லவில்லை. ஆம், போட்டிகளில் நீங்கள் வெற்றி, தோல்வியை சந்திக்கலாம், ஆனால் தோல்விகளிலும் நீங்கள் மனங்களை வெல்லும் சூழல் நிச்சயம் உருவாகும். பாகிஸ்தான் இன்று நீங்கள் அதை கூட செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

    • பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.
    • பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.

    நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.

    நா.த.க. சார்பில் பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * பெரியார் குறித்த விமர்சனம் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எட்டும்.

    * நா.த.க. கொள்கைக்கு எதிராக முன்னுக்குப்பின் முரணாக சீமான் பேசுகிறார்.

    * பெரியாரை தமிழ் தேசியத்துக்கு எதிராக சீமான் முன்னிறுத்துவது பேராபத்து.

    * நா.த.க.வை வீழ்ச்சி பாதையை நோக்கி இழுத்து செல்கிறார் சீமான்.

    * பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.

    சீமானின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஏற்க முடியாததால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ள நிலையில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ×