என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.
- இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆறுதல் வெற்றியாக அமையும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேச அணிக்கும் இதுதான் கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரண்டு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமையும்.
இந்த போட்டிக்கான டாஸ் 2 மணிக்கு சுண்டப்பட வேண்டும். ஆனால் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தின் அவுட்-பீல்டு மோசமான நிலையில் உள்ளதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதே மைதானத்தில் விளையாட இருந்தன. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- மார்ச் 10-ந்தேதி வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
வக்பு வாரியங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, வக்பு வாரியங்களுக்கு 9.4 லட்சம் ஏக்கர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்கள் பெயரில் இருப்பது தெரிய வந்தது.
வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத 2 நபா்களை உறுப்பினா்களாக இடம்பெற செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஆய்வு செய்தது. அப்போது 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மார்ச் 10-ந்தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டும் முழுமையான விசாரணை மேற் கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.
- செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டும் முழுமையான விசாரணை மேற் கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனிவழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை இணைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13-ந் தேதிக்குள் பதில் அளிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
- இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
- நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்கும் முயற்சி என்று சாட்டியுள்ளது.
ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா. தான் ஐஐடி ராஞ்சி மாணவர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் இருந்தபோது ஹேக்கிங் மூலம் யாரோ ஆபாசப் படத்தை ஒளிபரப்பினர் என்ற குற்றச்சாட்டை சாம் பிட்ரோடா முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "பிப்ரவரி 22 அன்று, 'இந்தக் கொந்தளிப்பான காலங்களில் காந்தியின் பொருத்தம்' என்ற தலைப்பில் (ஜார்கண்ட் மாநிலம்) ராஞ்சி IIT- யை சேர்ந்த பல நூறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் ஹேக் செய்து ஆபாசப் படங்களை காட்டத் தொடங்கினார். இதனால் மீட்டிங் பாதியில் நின்றது. இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. ராஞ்சியில் ஐஐடி இல்லை, எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
ராஞ்சியில் ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) உள்ளது. ஆனால் சாம் பிட்ரோடாவை எந்த மாநாட்டு-கருத்தரங்கிற்கும் நேரில் அல்லது ஆன்லைன் விரிவுரை வழங்க அழைக்கவில்லை என்பதையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்க முயன்ற ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் சாம் பிட்ரோடா அதற்கு பொறுப்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார் சீமான்.
- எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
சென்னை:
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இருப்பினும் சீமான், இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த சீமான், சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
இந்த நிலையில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிழித்தனர்.
- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 2-வது நாளான நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அவர்கள் அம்பேத்கர் படத்துடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க் கட்சி தலைவருமான அதிஷி கூறியதாவது:-
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். சபாநாயகரின் உத்தரவின் பேரில் எங்களை சட்டமன்ற வளாகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
நாங்கள் (ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்) சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளோம். எனவே சட்டசபை வளாகத்தில் நுழைய கூட அனுமதிக்கமாட்டோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை. எங்களை எப்படி தடுக்க முடியும்? சபாநாயகரிடம் பேச முயற்சித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சதீஷ் உபத்யாய் கூறும் போது, 'சபை சட்டப்படி இயங்கும் எதிர்க்கட்சி கள் அவையில் கூச்சல், குழப்பங்களையும் ஏற்படுத்தினால் சபாநாயகர் ஒரு முடிவை எடுப்பார். சபாநாயகர் எடுக்கும் முடிவு இறுதியானது என்றார்.
- மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது.
- நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று ஓசூர் வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது, மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மறு சீரமைப்பு குறித்து பேசுபவர்களை நம்ப முடியாது. இப்போது பேசுவார்கள், பிறகு இதனை விட்டுவிடுவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை நிலைப்பாடு அல்ல அவ்வப்போது பேசுவார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது. ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை. இந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்கிறார்கள்.
இதனால் நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
அதேபோலத்தான் தொகுதி மறு சீரமைப்பு என்பது, தேர்தலில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அதில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டும்தான் இந்த வாக்கு எந்திரத்தை வைத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஊழலில் மோசமான நாடாக உள்ளது. மற்ற உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜப்பான் தயாரித்து வருகிறது. அந்த நாடே வாக்கு எந்திரத்தை வைத்துக் கொள்வதில்லை.
அமெரிக்காவில் மனித கழிவுகளை எந்திரத்தில் அள்ளுகிறார்கள், வாக்கை வாக்கு சீட்டில் போடுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனை அல்ல வைக்கிறார்கள், எந்திரத்தில் வாக்களிக்கிறார்கள்.
டிஜிட்டல் என்று கூறிவிட்டு 42 நாட்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெட்டிகள் முடங்கி கிடந்தது. ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியுமா. அதுபோன்ற மாறுதல்கள் செய்ய வேண்டும். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பதவியில் இருக்கும் போது இன்னொரு பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல்களை நீக்க வேண்டும். அது தேவையில்லாதது.
மாறாக இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றியாளர் என அறிவிக்க வேண்டும். மீதியுள்ள காலத்தில் மக்கள் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு, தமிழ்நாடு என்றாலே வெறுப்பாக உள்ளது. காமராஜர், அண்ணா, இவர்களுக்கு பிறகு அரசியல் நேர்மை, தூய்மை இறந்து விட்டது. கருணாநிதி முதல்வரான பிறகு, தமிழகத்தில் தீய அரசியல் ஆட்சி தொடங்கி விட்டது.
சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
- அதிமுக-வைக் கண்டாலே ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கவிருந்த கழக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆறுமுகம், கழக மகளிர் அணி இணைச் செயலாளர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மரகதம் குமரவேல், பல்வேறு கழக நிர்வாகிகளையும் மற்றும் தொண்டர்களையும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறையால் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
அஇஅதிமுக-வைக் கண்டாலே இந்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும் , சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம்.
பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், ஆறுமுகம் , மரகதம் குமரவேல், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது.
- பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்று வாய்ப்பை இந்திய அணி உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி வருகிற மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
முன்னதாக கடந்த 23-ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இதையடுத்து இரு அணிகள் மோதும் போட்டிக்காக இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற வீரர்கள் அனைவரும் பயிற்சி செய்த நிலையில், ரோகித் சர்மா மட்டும் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த சோஹம் தேசாய் மேற்பார்வையில் ஓட்டப் பயிற்சி (ஜாகிங்) செய்ததாக தெரிகிறது. மேலும், அப்போதும் கூட அவர் உடல் இயல்பான அளவுக்கு அசையவில்லை என்று கூறப்படுகிறது.
தொடரின் இரு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை என்று தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
- மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார்.
சென்னை:
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.
- 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
- இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.
இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.
ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாங்கும் திறன்:
அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு:
இந்தியாவில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருவதைப் போல பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கவில்லை என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் பொருள் ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்து வரும் வேலையில் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. .இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 34 சதவீதத்தை வைத்திருந்தனர். இன்று அதே 10 சதவீத மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

அதேசமயம், நாட்டின் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானம் 22.2 சதவீதத்திலிருந்து வெறும் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாவும் மாறியுள்ளனர்.
நசுங்கும் நடுத்தர வர்க்கம்:
பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது, அதாவது அவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. மக்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் வருமானம் அப்படியே உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை நிறுவியுள்ளது.
- ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
- சமீபத்தில் இதன் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் மகன் ஆகாஷ் ஜெகன்நாத். திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 'தல்வார்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இதன் ஆடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் 'தல்வார்' அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

தல்வார் திரைப்படத்தை பான்-இந்தியன் படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவுபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படம் ரசிகர்களுக்கு தலைசிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்குனர் காசி பரசுராம் இயக்கியுள்ளார் என்று வார்னிக் ஸ்டூடியோஸ்-இன் தயாரிப்பு பிரிவு தலைவர் ஜானி பாஷா தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு கேசவ கிரண் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் காசி மேற்கொள்ள, ஒளிப்பதிவு பணிகளை திரிலோக் சித்து மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






