என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
    • இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.

    துபாயில் நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

    பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதத்தால் 362 ரன்களைக் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் போராடி சதமடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.

    இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
    • ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று யாத்திரை நிறைவடையும் என தெரிவித்தார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் 5.10 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

    ஆளுநர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது என அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும்.

    அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பல்டால், பாகல்காம், நுன்வான் மற்றும் பந்த சவுக் ஸ்ரீநகரிலும் இந்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

    • சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய சபாநாயகர், சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • 2வது அரையிறுதி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடையே லாகூரில் நடைபெற்றது.
    • இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இதற்கிடையே, 2வது அரையிறுதி போட்டி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்றது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் உதவியால் 362 ரன்களை குவித்தது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என 3 வடிவங்களையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் 19,000 ரன்கள் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை எட்டும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றார் .

    இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் (510 இன்னிங்ஸ்கள்) 18,199 ரன்கள் எடுத்துள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.

    மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் 2022, டிசம்பர் 17ல் நடந்த கூட்டத்தில் பேசியபோது வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.

    இதையடுத்து, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ கோர்ட் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினர். டேரில் மிட்சல், கிளென் பிலிப்ஸ் 49 ரன்கள் எடுத்தனர்.

    2வது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.
    • இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் மோதின.

    டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.

    இப்போட்டியில் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வேகமாக ஓடி ரன் எடுப்பதற்காக ஓட்ட பந்தய வீரர் போல பிலிப்ஸ் தயார் நிலையில் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    • இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
    • அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துவரும் எம்எல்ஏ அபு ஆஸ்மி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார்.

    ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப்  பிம்பம் சிதைக்கப்படுகிறது.

    அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.

    இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொந்தளித்தார்.

    இதைத்தொடர்ந்து காவல்நிலையங்களில் அபு அஸ்மி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று தொடங்கிய மகாராஷ்டிர சட்டமன்றக் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அபு அஸ்மி பிரச்சனையை எழுப்பினர்.

    அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு ஆஸ்மியை அவையில் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டு முழு கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார். அபு அஸ்மி கருத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் (மார்ச் 07) வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிளாம்பாக்கம் பேருந்து முனையம்- ரெயில் நிலையம் இடையே மேம்பாலம்.
    • மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    சென்னை நகரில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்- ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் இடையே புறநகர் ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது "நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும். மக்களின் ஆட்சேபனையை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தார்.
    • மாணவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த ள்ளி மாணவன், தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இச்சம்பவத்தில்,உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலையையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×