என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- ரிங்கு சிங் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் மற்றொரு வீரரான ரிங்கு சிங் காயம் காரணமாக 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக சிவம் துபே, மற்றும் ரமண்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து இருவரும் இந்திய அணியில் சேர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளனர்.
- ஐசிசி டி20 தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தில் உள்ளார்.
- கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 வீரராக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் ஐசிசி டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முல்தான்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிராக் பிராத்வேட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மோட்டி மட்டுமே நிலைத்து ஆடி அரைசதமடித்தார். அவர் 55 ரன்களில் வெளியேறினார் . வாரிகன் 36 ரன்களும் ரோச் 25 ரன்களும் எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இதன் மூலம் 73 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீத்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி படைத்துள்ளார்.
1952-ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் எந்தவொரு வீரரும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இன்று சொந்த மண்ணான சென்னையில் இன்று இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் படத்தை வருண் சக்கரவர்த்தி அவரது கையில் பச்சை குத்தியுள்ளார். தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜயின் போஸ்-ஐ அவர் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தும் பஞ்சாப் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.
கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 3 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 4 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் அணியான மும்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
இதனால் மும்பை அணி ஜம்மு-காஷ்மீரை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் (4), ரோகித் சர்மா (3), ரகானே (12), ஷ்ரேயாஸ் அய்யர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷர்துல் தாகூர் தாக்குப்பிடித்து 51 ரன்கள் அடிக்க 120 ரன்னில் சுருண்டது.
ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் உமர் நசீர், யுத்விர் சிங் தலா 4 விக்கெட் வீழ்த்தி மும்பையை சுருட்ட முக்கிய காரணமாக இருந்தனர். பின்னர் ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷுபம் கஜுரியா 53 ரன்களும், அபித் முஷ்டாக் 44 ரன்களும் அடிக்க 206 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 26 ரன்னிலும், ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து சொதப்பினர். ரகானே 16 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க 2-வது இன்னிங்சிலும் மும்பை அணி தடுமாறியது. ஆனால் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக தனுஷ் கோட்டியான் 62 ரன்கள் சேர்க்க மும்பை 290 ரன்கள் அடித்தது.

இதனால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரரான ஷுபம் கஜுரியா 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். அபித் முஷ்டாக் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான மும்பை அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடியும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.
- இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), பில் சால்ட்(இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).
- இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி விவரம் பின்வருமாறு:-
லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து), மெலி கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா), சதியா இக்பால் (பாகிஸ்தான்).
- 2011-ல் சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார்.
- அந்த ஆட்டத்திற்குப் பிறகு பல மாதங்கள் அவர் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி லல்லண்டாப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
அப்போது இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி இருந்தார். கேப்டனின் திட்டப்படியே இந்திய அணி இயங்குகிறது.
கபில்தேவ் காலத்தில் அவர் நிகழ்ச்சியை நடத்தினார். சுனில் கவாஸ்கர் காலத்தில் அது அவரது அழைப்பு. முகமது அசாருதீன் பதவி காலத்திலும் அதுதான். அதன்பிறகு தாதா மற்றும் பலர். கண்டிப்பான நிர்வாகி வந்து ஒரு விதியை உருவாக்காத வரை இது தொடரும்.
சதம் அடித்த பிறகு 14 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன். ஒரு சதம் அடித்த பிறகு ஒரு வீரர் கைவிடப்பட்டால் வெளிப்படையான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனக்கு எந்தக் குறிப்பும் இல்லை.
அப்போது அணியில் இருந்த வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்ற டூரில் அவர்கள் ரன் எடுக்கவில்லை. இங்கு நான் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகும், பிளேயிங் லெவன் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போது கைவிடப்பட்ட வீரருக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
- இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் ராக்கி பிளின்டாப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப்
பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.
- முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.






